BREAKING NEWS
Search

‘சூப்பர் ஸ்டார் பட்டத்தை எடுத்திட முடியுமா?’ – கலைப்புலி தாணுவைக் கேட்ட இயக்குநர்!!

‘சூப்பர் ஸ்டார் பட்டத்தை எடுத்திட முடியுமா?’ – கலைப்புலி தாணுவைக் கேட்ட இயக்குநர்!!

சிவாஜி 3 டி படத்தின் ட்ரைலர் வெளியீட்டின்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, தினமலர் நிருபர் கேட்ட கேள்விதான் கடந்த இரு வாரங்களாக பத்திரிகை – மீடியாவின் கட்டுரைகளுக்கு தலைப்பாக மாறிவிட்டது.

அந்தக் கேள்வி:

ரஜினி சார்… ப்ளாக் அன்ட் ஒயிட் காலத்திலும் நீங்க இருந்தீங்க, கலர் படம் வந்த காலத்திலும் நீங்கதான்… அடுத்து 3 டி படங்கள் காலத்திலும் நீங்கதான் இருக்கீங்க. எந்த நடிகருக்கும் இல்லாத பெரிய பாக்கியம் இது. இதை எப்படி உணருகிறீர்கள்! (சக நிருபர்களின் கைத்தட்டல்…)

அதற்கு ரஜினி தந்த பதில்: அது கடவுளின் ஆசீர்வாதம்… நான் அதிர்ஷ்டசாலி.. வேறென்ன சொல்ல…

-அந்த பிரஸ்மீட் கட்டுரைக்கு அந்தக் கேள்வியையே தலைப்பாக நாம் வைத்திருந்தோம்.

இப்போது வட இந்திய மீடியா முழுக்க கட்டுரையே, ‘சினிமாவின் நான்கு வடிவங்களிலும் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.

அதில் துளிகூட மிகைப்படுத்தல் இல்லை. 100 சதவீதம் உண்மைதான்!

அபூர்வராகங்களில் சின்ன வேடத்தில் அறிமுகமானாலும், அதற்கடுத்த படம் மூன்று முடிச்சில் அவர்தான் நாயகன். வில்லத்தனம் கலந்த நாயகன். ஸ்டைலில் வெளுத்து வாங்கியிருப்பார்! அதன் பிறகு, அவர்கள் உள்பட சில படங்களில் நடித்தவர், பைரவியில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்!

அன்றைக்கு அமரர் எம்ஜிஆர் முதல்வர். திரையுலகை விட்டு அப்போது விலகவில்லை. அடுத்தபடம் நடிப்பார் என்று பேசிக் கொண்டிருந்தனர். சிவாஜி மிகப் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த நேரம். இன்னொரு பக்கம் கமலும் பெரிய நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார்.

கறுப்பு வெள்ளையில்...

சமீபத்தில் கலைப்புலி தாணுவை நாம் சந்தித்தபோது, ரஜினி கறுப்பு வெள்ளை காலத்தில் சூப்பர் ஸ்டார் ஆனதை இப்படி வர்ணிக்கிறார்:

பைரவிக்கு நான்தான் விநியோகஸ்தர். ரஜினியுடன் அப்போதே தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கம். அண்ணாசாலையின் பிரதான பகுதியில் பைரவி படத்துக்கு பிரமாண்ட கட் அவுட் வைத்தேன். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டிருந்தேன். பத்திரிகையிலும் அப்படித்தான் பெரிய சைஸில் விளம்பரம் கொடுத்தேன்.

அடுத்த நாளே பதறியடித்துக் கொண்டு அலுவலகத்துக்கு வந்தனர் இயக்குநர் எம் பாஸ்கரும் தயாரிப்பாளர் கலைஞானமும்.

“என்ன தாணு.. புரட்சித் தலைவர், நடிகர் திலகமெல்லாம் இருக்கும்போது இப்படி ஒரு பட்டப்பெயர் வச்சிட்டீங்க. தயவு செய்து அதை எடுத்துடுங்க..அவங்க ஏதும் தப்பா நினைச்சிடப் போறாங்க..,” என்றனர்.

“சரிண்ணே, எடுத்திடறேன்,” என்று கூறிவிட்டு, அடுத்த நாள் தந்தியில் ‘இந்தியாவின் மெகா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்’ என்று விளம்பரம் கொடுத்தேன். அதற்குப் பிறகு யாரும் என்னிடம் ஆலோசனை கூறவில்லை. மூன்றாவது நாளிலிருந்து சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டுதான் விளம்பரம் கொடுத்தேன். இன்று வரை அந்தப் பட்டப் பெயர் அவர் ஒருவருக்கு மட்டும்தான். இனியும் யாருக்கும் பொருந்தாது,” என்றார்.

வண்ணத்தில்…

ரஜினி நடித்த முதல் வண்ணப்படம் 16 வயதினிலே. ஆனால் அவர் முழுமையான கதாநாயகனாக நடித்த முதல் வண்ணப்படம் முள்ளும் மலரும். ஸ்டைலில், வசூலில் மட்டுமல்ல… நடிப்பில் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க ஆரம்பித்தார். அதுவும் பைரவி வெளிவந்த ஆண்டுதான்.1978-ல் மட்டும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ரஜினி மொத்தம் 21 படங்கள் நடித்திருந்தார். அது ஒரு பெரிய சாதனை!

“ரஜினிக்கு மிக முக்கியமான காலகட்டம் அது. அசுரத்தனமான உழைப்பை கொட்டி தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் அந்த ஆண்டு. அதற்கு அடுத்த ஆண்டு, ரஜினி மிகப் பெரிய ஆக்ஷன் சூப்பர் ஸ்டாராக தன்னை உயர்த்திக் கொண்டார். அப்போதுதான் பில்லா, ஜானி, முரட்டுக்காளை என மெகா ஹிட் படங்கள் அவருக்கு அமைந்தன… தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அவர்தான் என்ற நிலை உருவானது,” என்கிறார் ரஜினிக்கு அந்தஸ்து நிலைக்கக் காரணமான இயக்குநர் எஸ்பி முத்துராமன்.

3 டியில்…

ரஜினி படத்தை 3 டியில் எடுக்க வேண்டும் என முதலில் திட்டமிட்டவர்கள் தேவர் பிலிம்ஸ். அப்போது மைடியர் குட்டிச்சாத்தான் வந்து, எங்கும் 3 டி என்ற பேச்சுதான். ஆனால் அந்த சமயத்தில் தமிழ், இந்தி என பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார் ரஜினி. உடனே விஜயகாந்தை வைத்து அன்னை பூமி என்ற 3 டி படத்தை வெளியிட்டனர் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தினர்.

அந்தப் படத்தின் தோல்வியோடு 3 டி பற்றிய பேச்சு அடங்கிவிட்டது. மீண்டும் சில ஆண்டுகளுக்கு முன் அவதார் வந்தபோதுதான் 3 டியில் படமெடுக்கும் ஆசை எல்லோரையும் தொற்றிக் கொண்டது. தமிழில் முழுக்க முழுக்க 3 டியில் தயாரான படம் என்றால், எதுவும் இல்லை எனலாம். சில மாதங்களுக்கு முன்பு வந்த அம்புலியில் கூட சில காட்சிகள்தான் 3 டியில் இருந்தன. மற்றவை 2டிதான்.

இந்த நிலையில் 2007-ல் வெளியாகி சக்கைபோடு போட்ட ரஜினியின் சிவாஜி – தி பாஸ் படத்தை, முழுமையாக 3 டிக்கு மாற்றியுள்ளனர். இதற்காக 400 கலைஞர்கள், ரூ 16 கோடி முதலீடு என மெகா முயற்சியில் இறங்கியுள்ள ஏவிஎம் நிறுவனம், அதில் வெற்றியும் கண்டுவிட்டது.

சிவாஜி 3 டியுடன் மோதுவதா என இப்போதே பல ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் ஒதுங்கி நிற்க, ரஜினியே பெருந்தன்மையுடன், யார் படத்தோடும் மோத வேண்டாம்… முன்கூட்டி வெளியிடுங்கள். வளரும் நடிகர்கள் படத்துக்கு வழிவிடுங்கள் என்று கூறும் அளவுக்கு இந்தப் படம் கலக்கலாக வந்திருக்கிறது.

சினிமாவின் எதிர்காலம் 3 டி படங்கள்தான் என்று ரஜினியே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அனிமேஷன்..

ரஜினியின் அடுத்த படம் கோச்சடையான். இதுவும் 3 டி படம்தான். அனிமேஷனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக வெளிநாட்டு ஊடகங்களால் வர்ணிக்கப்படும் அளவுக்கு உயர்ந்த தொழில் நுட்பத்தில் தயாராகிறது. அனிமேஷன் என்று தெரியாத அளவு நிஜமாகக் காட்சிதர வைக்கும் தொழில்நுட்பம் இது.

இந்திய திரையுலகில் பெரும் மாறுதல்களுக்கு இந்தப் படம் வித்திடும் என்ற எதிர்ப்பார்ப்புடன் கோச்சடையானை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் திரையுலகினர்.

“தமிழ் சினிமா என்றல்ல.. உலக சினிமா என்று பார்த்தால் கூட, சினிமாவின் அத்தனை வடிவங்களிலும் உச்ச நட்சத்திரமாகவே வெற்றிக் கொடி நாட்டிய பெருமை ரஜினி சாருக்குதான் உண்டு. அந்த வகையில், அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயரைச் சூட்ட ஆண்டவன் என்னை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவே கருதுகிறேன். சினிமாவின் அடுத்தடுத்த வடிவங்களிலும் அவர் உச்ச நட்சத்திரமாகவே தொடர வேண்டும் என்பது என்னைப் போன்ற அவரது நலம் விரும்பிகளின் ஆசை.. வாழ்த்து!” என்றார் கலைப்புலி தாணு.


-என்வழி ஸ்பெஷல்
6 thoughts on “‘சூப்பர் ஸ்டார் பட்டத்தை எடுத்திட முடியுமா?’ – கலைப்புலி தாணுவைக் கேட்ட இயக்குநர்!!

 1. Shakthi

  எம்ஜிஆரும் சிவாஜியும் ஆட்சேபணை சொல்லவில்லை என்றாலும், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் எப்படியெல்லாம் சீன் போட்டிருக்கிறார்கள்!

 2. srikanth

  இந்திய சினிமாவிற்கு அசத்தலான அடைமொழியை [superstar ] என்ற பட்டத்தை நம் தலைவருக்கு சூட்டிய திரு.தாணு அவர்களுக்கு நன்றி.மேலும் நம் தலைவரின் இன்றைய புகழுக்கும் ,இன்றைய வளர்சிக்கும் ,என்றென்றும் பொருத்தமான [யுக நாயகன்] என்ற பட்டத்தை நீங்களே சூட்டவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.சூட்டுவீர்களா

 3. deen_uk

  குறை கூறுவதாக நினைக்க வேண்டாம் வினோ அண்ணா…
  /// யார் படத்தோடும் மோத வேண்டும்… முன்கூட்டி வெளியிடுங்கள். /// என்பது ”யார் படத்தோடும் மோத வேண்டாம் ..படத்தை முன்கூட்டி வெளியிடுங்கள் ”என நமது ரசிக நண்பர்கள் மற்றும் பொது வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்றாலும்,அதை சற்று திருத்தி வெளியிடலாமே என்ற எனது கருத்தை நமது தளத்தின் ரசிக,வாசகன் என்ற உரிமையில் வேண்டிக்கொள்கிறேன்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்..
  ____________
  எழுத்துப் பிழை. திருத்திவிட்டேன். நன்றி நண்பரே!
  -வினோ

 4. srikanth

  ஹல்லோ வினோ சார் என்பெயர் ஸ்ரீகாந்த் நான் இந்த வலைத்தளத்திற்கு புதிய வாசகன் .நான் அவ்வபொழுது தெரிவிக்கும் கருத்துக்கு தாங்களின் பதில் கருத்தை எதிர் பார்கிறேன் .நன்றி வினோ சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *