BREAKING NEWS
Search

600 படங்களில் நடித்த காகா ராதாகிருஷ்ணன் மரணம்!

மூத்த நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்!

டிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்தது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார்.

இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் அதிகரித்து, மாலை 3-30 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.

காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் 6 வயதிலிருந்து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் நடித்தார்.

மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

மாயி படத்தில் அவரும் வடிவேலுவும் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் பேசப்பட்டவை.

அவரது சொந்த ஊர் திண்டுக்கல். ஆனால் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் வளர்ந்தார்.

இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் விசாலாட்சி. இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். 2-வது மனைவி பெயர் சாரதாம்பாள். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். 16 பேரன் பேத்திகள் உள்ளனர்.

காகா ராதாகிருஷ்ணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராயநகர் சிங்காரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் தகனம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறுகிறது.

காகா பெயர் வந்த காரணம்…

அவரது பெயருடன் ‘காகா’ என் என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பது குறித்து ஒரு ப்ளாஷ்பேக்.

இந்த ப்ளாஷ்பேக்கை சொன்னவரும் ராதாகிருஷ்ணன்தான். இறப்பதற்கு கொஞ்ச காலத்துக்கு முன்பு ஒரு பேட்டியின்போது அவரிடம், உங்கள் பெயருடன் காகா என்ற பெயர் வந்தது எப்படி? என்று கேட்டிருந்தார்கள்.

அதற்கு அவர் அளித்த பதிலில், “மங்கையர்க்கரசி’ படத்தில் ஒரு டயலாக் வரும். மதுரம்மா (டிஏ மதுரம்) என்கிட்ட ‘நீ அரசாங்கத்துல போய் எப்படியாவது, காக்கா பிடிச்சாவது வேலைல சேர்ந்துடு’ன்னு சொல்லுவாங்க.

உடனே நான் அம்மா சொல்லிட்டாங்களேன்னு, ஒரு காக்காவப் புடிச்சுகிட்டுப் போய் வேலை கேட்பேன். வேலை கிடைக்காது. திரும்பி வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொல்லுவேன். நீ சொன்ன மாதிரியே காக்காவப் புடிச்சுக்கிட்டு போய் வேலை கேட்டேன், அப்பவும் கிடைக்கலம்மா. இங்க பாரு காக்கா’ன்னு சொல்லுவேன். அந்த காமெடி அப்போ ரொம்ப பேசப்பட்டது. அதிலிருந்துதான் காக்கா ராதாகிருஷ்ணன்னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சாங்க…” என்றார்.

காகா ராதாகிருஷ்ணன் தன் இறுதிக்காலத்திலும் கூட படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். அதற்கு முக்கிய காரணம், கமல்ஹாஸன். அவர்தான் தனது தேவர்மகன் படத்தில், நடிகர் திலகம் சிவாஜியின் தம்பி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை காகா ராதாகிருஷ்ணனுக்கு வழங்கி, அவரது அடுத்த ரவுண்டைத் தொடங்கி வைத்தார்.

-என்வழி செய்திகள்
2 thoughts on “600 படங்களில் நடித்த காகா ராதாகிருஷ்ணன் மரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *