BREAKING NEWS
Search

காதலில் சொதப்புவது எப்படி? – விமர்சனம்

காதலில் சொதப்புவது எப்படி? – விமர்சனம்

கொஞ்சமும் எதிர்பாராத கோடை மழை முகத்திலடித்த மாதிரி ஒரு படம். அதுவும் காதல் தோல்வி என்ற சமாச்சாரத்தை முதல் காட்சி தொடங்கி கடைசி காட்சி வரை போரடிக்காமல், 2 மணிநேரம் சொல்லியிருக்கும் புதிய இயக்குர் பாலாஜி மோகன் சின்னதாய் ஆச்சர்யப்படுத்துகிறார்.

பெரிய லாஜிக், அதிரடித் திருப்பங்கள், கனமான காட்சிகள்… ம்ஹூம்.. அதையெல்லாம் தூக்கி தூர வையுங்கள் என்பது போல, ரொம்ப லேசான திரைக்கதை. ஆனால் சற்று தூக்கலான காமெடியால் அத்தனை காட்சிகளையும் விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள் இளைஞர்கள்.

அர்ஜுனும் (சித்தார்த்) அவன் கல்லூரித் தோழி பார்வதியும் (அமலா) நண்பர்களாக அறிமுகமாகி, காதலில் விழுந்து, அதைச் சொல்ல முடியாமல் சொதப்பி, ஒழிவழியாக காதலர்களாகிறார்கள். ஆனால் காதலைப் பற்றி இருவருக்கும் உள்ள பார்வைகள் வேறு. அந்த பேதமே அவர்கள் காதலை சொதப்புகிறது. இவர்களைச் சேர்த்து வைக்க ஒருவர் முயல, நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது.

இடையில் பல காதல்கள்… ஒவ்வொன்றும் ஒரு ரகம், ஒவ்வொரு ஜோடிக்கும் புது முடிவு. அதில் விவாகரத்து வரை போகும் அமலாவின் அப்பா சுரேஷ் – அம்மா சுரேகா வாணியின் பிரிவு, கூடல் இன்னொரு சுவாரஸ்யம்.

காதல் என்பது மேட் பார் ஈச் அதர் சமாச்சாரமில்லை… பொருந்தாத துணையாக வந்தாலும் அவரை நமக்குப் பொருத்தமாக ஆக்கிக் கொள்வதில்தான் காதலுக்கு வெற்றி கிடைக்கிறது என்ற மெஸேஜுடன் படம் முடிகிறது.

கைமாறிய காதலி தரும் பார்ட்டிக்குப் போய், அந்த புதிய காதலுக்கு வேட்டு வைக்கும் காதலன், அண்ணன் என்று கூறி பிரிந்து போகும் பெண்ணை விடாமல் காதலிக்கத் துரத்தும் காதலன் என ஏகப்பட்ட கிளைக்கதைகள் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் அழகான தொடர்பைத் தந்து சுவாரஸ்யப்படுத்தியதில் பாலாஜி மோகன் ஜெயித்திருக்கிறார்.

காதலில் சொதப்புவது எப்படி என்ற தனது 10 நிமிட குறும் படத்தை 2 மணி நேரத்துக்கு ‘இழுத்திருக்கும்’ திறமை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான்!

சித்தார்த் ஆரம்பத்தில் ஓட்டைச் சட்டியில் நண்டை விட்ட மாதிரி லொட லொடவென பேசிக் கொண்டே இருப்பது கடுப்படித்தாலும், அவராகப் போய் ஒவ்வொரு முறையும் அமலாவிடம் வாயைக் கொடுத்து மனசைப் புண்ணாக்கிக் கொண்டு வரும் காட்சிகளில் குபுக்கென்று சிரிப்பு.


இந்தப் படம் மூலம் இன்னும் நான்கைந்து தோல்விகளைத் தாங்கும் அளவு ஸ்ட்ராங்காகிவிட்டார் அமலா. ஆரம்பத்தில் பார்க்க சுமாராகத்தான் தெரிகிறார்… படம் முடிவதற்குள் ஒவ்வொருவருக்கும் காதலி மாதிரி நெருக்கமாகிவிடுகிறார். காதல் செய்யும் மாயமப்பா…

அர்ஜுன், சிவா, ஷ்யாம், பூஜா, ஸ்ரீரஞ்சனி என நிறையப் பேர் வருகிறார்கள். கதைக்குள் கச்சிதமாக பொருந்தி நிற்பதால் இவர்கள் நடிகர்களாக தனித்துத் தெரியவில்லை!

தமனின் இசை துள்ளல். நீரவ்ஷாவின் அளவான ஒளிப்பதிவும், சுரேஷின் கச்சித எடிட்டிங்கும் படத்தை இன்றைய டேஸ்டுக்கு ஏற்ப மாற்றியிருக்கின்றன.

படம் முடிந்து வெளியில் வந்த பிறகு இரண்டு நடுவயசுக்காரர்கள், ‘இப்படிக் கூட காதலிக்கலாமா… போய்யா லைஃபே போச்சு’ என்று புலம்பிக் கொண்டே சென்றதைக் கேட்க முடிந்தது.

படத்தின் ‘தியேட்டர் விசிட்டி’லேயே இயக்குநர் பாலாஜி மோகனுக்கு எக்கச்சக்க கதைகள் கிடைத்திருக்கும் போலிருக்கிறது!

காதலிக்கும் ஐடியாவிலிருப்பவர்கள், காதலிப்பவர்கள், காதலில் சொதப்பியவர்கள்… பார்க்கலாம்!

-வினோ

என்வழி ஸ்பெஷல்
4 thoughts on “காதலில் சொதப்புவது எப்படி? – விமர்சனம்

 1. M Senthil

  (Ayya…. Tamilla typa yedhachum software irundha sollunga …. please. NHM not working in my laptop )

  to me also un able to type in tamil. i cant express exactly what i feel.

  pls vino..
  ____________
  என்வழி கமெண்ட் பாக்ஸை பயன்படுத்தி, தமிழில் எழுதலாம். முயற்சி செய்து பாருங்கள்.
  -என்வழி

 2. Manoharan

  நேற்று நான் இரண்டாவது முறை பார்த்தேன். என் பக்கத்தில் ஒரு 60 வது பெரியவர் தனியாக வந்து அமர்ந்திருந்தார். கட்சிக்கு காட்சி அவர் கைதட்டி ரசித்த விதம் ஆச்சரியம். டீன் ஏஜ் காதலையும் கல்லூரி காட்சிகளையும் தாங்கி வரும் ஒரு படத்துக்கு பெரியவர்கள் தரும் இப்படிப்பட்ட வரவேற்ப்பை நான் இப்போதுதான் பார்க்கிறேன். இது இளவயது காதல் என்பதைவிட ஆண் ,பெண் என்கிற Gender related ஆக இருப்பதால் எல்லோரும் ரசிக்க முடிகிறது. காதலில் சொதப்பிக் கொண்டிருப்பவர்கள் இந்த படத்தை பார்த்தால் மீண்டும் சேரும் வாய்ப்பு மிக அதிகம்.
  வினோ சொல்வது போல் படம் முடியும் போது அமலாபாலை காதலித்துவிட்டு வந்த மாதிரி இருக்கிறது. நிச்சயம் பார்த்து சிரித்து சந்திக்கவேண்டிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *