BREAKING NEWS
Search

கபாலியைத் தராத கடுப்பு… விநியோகஸ்தர்களைத் தூண்டிவிடுகிறாரா திருப்பூர் சுப்ரமணியன்?

Thalaivar in Kabali1

ஜினியின் கபாலி படம் வெளியான நாளிலிருந்து முதல் பத்து நாட்கள் தாறுமாறான விலைக்கு விற்கப்பட்டன டிக்கெட்டுகள். விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் ஏகத்துக்கும் அள்ளினார்கள் வசூலை.

‘ஆஹா.. இதான்யா படம்… வசூல் குவிஞ்சிருச்சி… 300 கோடியைத் தாண்டியது…. 500 கோடி தாண்டியது’ என சமூக வலைத் தளங்களில் பதிவும் செய்தார்கள் பல தியேட்டர்காரர்கள். குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் உரிமையாளர், படம் வெளியாகி நான்கு நாட்கள் தாண்டிய பிறகும் நெடுஞ்சாலை வரி க்யூவில் ரசிகர்கள் காத்திருக்கும் அதிசயம் கபாலிக்குதான் நடந்தது… தலைவர் தலைவர்தான் என்றெல்லாம் ட்வீட்டினார்.

படம் வெளியாகி 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்துவிட்டனர் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்கள். இதே குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் ஓனர் ஜனவரி மாதம் போட்ட ட்வீட்டில் கபாலி லாபமில்லை என்றார் கூசாமல். ரசிகர்கள் கடுப்பாகத் திட்ட ஆரம்பித்ததும் ‘சிலருக்கு லாபமில்லையாம்’ என்றார்.

அடுத்து ரஜினி படங்களால் பெரிதாக சம்பாதித்து செட்டிலான திருப்பூர் சுப்பிரமணியம், நீண்ட ஆடியோ பதிவு வெளியிட்டு, அதில் ஏழெட்டுப் பெரிய படங்களை நஷ்டம் என்று கூறி, அதில் கபாலியையும் சேர்த்திருந்தார்.

உடனவே மதுரை மற்றும் தென்னாற்காடு விநியோகஸ்தர்கள், மணிவர்மா மற்றும் செல்வகுமார் காட்டமாக ஒரு மறுப்பு தெரிவித்தனர். ‘கடவுள் சாட்சியாக, கபாலியால் பெரிய லாபம் கிடைத்தது. அது ஒரு பிரமாண்ட வெற்றிப் படம். ஏன் ரஜினியையும் தாணுவையும் வம்புக்கு இழுக்கிறீர்கள் என்று கேட்க, ‘அப்படியா… உங்களுக்கு லாபம் கிடைத்திருந்தால் மகிழ்ச்சிதான்…’ என்று ஜகா வாங்கினார் திருப்பூரார்.

இப்போது, சேலம் விநியோகஸ்தர் ‘கபாலி நஷ்டம்’ என ஆரம்பித்துள்ளார்.

இத்தனை நாள் எங்கே போயிருந்தார் இந்த விநியோகஸ்தர்? இப்படிப்பட்ட நபர்கள், தனிப்பட்ட விரோதம் – தூண்டுதல் காரணமாக திரைத் துறையின் அழிவுக்குத் துணை போகின்றனர்? என கொந்தளிக்கின்றனர் திரையுலகில். காரணம், நடக்கிற அரசியல் அப்படி!

உண்மையில் என்ன நடந்தது.. நடக்கிறது?

கபாலி படத்தின் கோவை விநியோக உரிமையைக் கேட்டு வந்தவர் திருப்பூர் சுப்பிரமணியன்.

லிங்கா பட பஞ்சாயத்தில் அதிகமாக அடிபட்டது இவர் பெயர். லிங்கா பஞ்சாயத்தில் இவர் செய்த உள்ளடி வேலைகள் குறித்து இன்னொரு கட்டுரையே எழுதலாம் எனும் அளவுக்கு ஏகப்பட்ட புகார்கள் இவர் மீது.

லிங்கா பட நஷ்ட ஈட்டுப் பஞ்சாயத்து நடந்த போது, நூறு பேர் கொண்ட சபையில் எல்லோரும் மெச்ச வேண்டும் என்பதற்காக, ”லிங்கா நஷ்டத்தின் ஒரு பகுதியை நானே செட்டில் செய்து விடுகிறேன்… ரஜினி சார் மூலம் நிறைய சம்பாதித்தவன் நான்.. அவருக்காக இதைச் செய்கிறேன்,’ என்று வெளியில் கூறிய இவர், பின்னர் ரஜினிக்கு போன் போட்டு, “சார், உங்களுக்காக நான் இவ்வளவு கட்டியுள்ளேன்… எனக்கு அதைத் திரும்பக் கொடுங்க” என்று நிற்க, அதிர்ச்சியடைந்த ரஜினி, ‘ஆளாளுக்கு இப்படிக் கிளம்பினால் எப்படி?”, நண்பர்களிடம் சங்கடப்பட்டதெல்லாம் வெளியில் தெரியாதது!

கபாலி கோவை ஏரியா உரிமையை தாணுவிடம திருப்பூர் சுப்பிரமணியன் கேட்டது வெறும் ரூ 5 கோடிக்கு. ஆனால் தாணு தரவில்லை. தானே கோவை ஏரியாவில் வெளியிட்டு இருமடங்கு வசூல் பார்த்தார். இதில் மகா கடுப்பு திருப்பூர் சுப்பிரமணியனுக்கு என்கிறார்கள்.

இந்தக் கசப்பை மனதில் வைத்து, படத்தை தனது அரங்குகளில் முதலில் போட மறுத்தவர், வேறு வழியின்றி திரையிட்டார். அதுவும் ஜூலை 22 காலை வரை உறுதி செய்யாமல் இருந்து, கடைசி நேரத்தில் வெளியிட்டார்.

முதல் நாளில் இவரது அரங்குகளில் (ஸ்ரீசக்தி காம்ப்ளெக்ஸ்) ரூ 200-க்கு கபாலி டிக்கெட் விற்றிருக்கிறார்கள். ஆனால் அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து இரண்டு தினங்கள் ஒரு டிக்கெட் விலை ரூ 500 விற்றதாகச் சொல்கிறார் திருப்பூர் பகுதி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர்.

கோவை உரிமை கிடைக்காத கோபம், படத்துக்குக் கிடைத்த ஏக வசூல் இரண்டையும் பார்த்த பிறகுதான், இப்படிப் புலம்ப ஆரம்பித்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியன் என்கிறார்கள் பிற விநியோகஸ்தர்கள்.

கபாலியால் நஷ்டம் என்று முதலில் கூறியவர் திருப்பூர் சுப்பிரமணியன்தான். படத்தை எடுத்து விநியோகித்து லாபம் பார்த்த மூன்றுபேர் இதை மறுத்ததும், பின் வாங்கிய திருப்பூர் சுப்பிரமணியம், இப்போது தனக்கு ஆதரவாக, தன்னிடம் ஃபைனான்ஸ் பெறும் சிலரை விட்டு நஷ்டப் புகார் வாசிக்க வைப்பதாகவும் கூறுகிறார்கள்.

“தாணு மீதான தனிப்பட்ட கோபத்தை, கபாலி மற்றும் ரஜினி எதிராகத் திருப்பப் பார்க்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன். அது எடுபடவில்லை என்றதும் தனக்கு வேண்டியவர்களைத் தூண்டிவிடுகிறார். ஃபெடரேஷன் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு, அதில் உறுப்பினராகக் கூட இல்லாத திருப்பூர் சுப்பிரமணியன் ஏகப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.

இவருக்குச் சொந்தமாக சில அரங்குகள் உள்ளன. அத்தோடு நிற்கவில்லை. கிட்டத்தட்ட கோவை மண்டலத்தில் இருக்கும் அனைத்து திரையரங்குகளுமே இவரது கையில்தான். இந்த தியேட்டர்காரர்களைக் கையில் வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களை இவர் மிரட்டுகிறார்… அடிமாட்டு விலைக்கு படங்களைக் கேட்கிறார்… தராவிட்டால் அறிவிக்கப்படாத ரெட் என்ற மிரட்டலைக் கையாள்கிறார்.. அதுமட்டுமல்ல, இவர் மூலம் ஒப்பந்தம் செய்யும் 70 அரங்குகளுக்கும் க்யூபில் கமிஷன் பெறுகிறார், ஆன்லைன் புக்கிங் என்ற பெயரில் டிக்கெட்டுக்கு 35 ரூபாய் வரை இவருக்குப் போகிறது,” என்கிறார்கள் பெயர் குறிப்பிட விரும்பாத சில தயாரிப்பாளர்கள்.

“பூரா விநியோகஸ்தரும் கதறுகிறார்கள் என்று இவர் வாட்ஸ்ஆப்பில் சொல்கிறாரே… அப்படி யார் கதறினார்கள்? இவர் குறிப்பிடும் விநியோகஸ்தர் அமைப்பின் தேர்தலிலேயே தோற்றுப் போனவர்தான் திருப்பூர் சுப்ரமணியன். கபாலி வெற்றியை ஜீரணிக்க முடியாமல், தான் சொல்லும் குற்றச்சாட்டுக்கு அதிக பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்கா இவர் ரஜினி, கபாலி, தாணு பெயர்களைப் பயன்படுத்தினார். அது அம்பலமாகிவிட்டதால், சேலம் விநியோகஸ்தர் மூலம் நஷ்டப் புகார் வாசித்துக் காட்டுகிறார்… உண்மையில் சேலம் விநியோக உரிமை வாங்கியவர்கள் மூன்று பேர். இப்போது குற்றம்சாட்டும் சேலம் நந்தா மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆள் பிடித்துத் தருபவர். திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கொடுக்கல் வாங்கல் வைத்திருப்பவர். படம் வாங்கிய இன்னும் இருவர் இருக்கிறார்களே… அவர்கள் எங்கே?” என்கிறார்கள் கபாலியால் லாபம் பார்த்த விநியோகஸ்தர்கள்.

-என்வழி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *