BREAKING NEWS
Search

காவியத் தலைவன் விமர்சனம்

காவியத் தலைவன் விமர்சனம்

kt-2

டிப்பு: சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர், தம்பி ராமையா, சிங்கம்புலி, அனைகா சோதி

ஒளிப்பதிவு: நீரவ் ஷா

கலை: சந்தானம்

எடிட்டிங்: பிரவீண்

கதை, வசனம்: ஜெயமோகன்

இயக்கம் : ஜி வசந்த பாலன்

வரலாற்று நிகழ்வுகளைப் படமாக்கும்போது, அதை அப்படியே சொல்லும் அல்லது குறைந்தபட்ச சமரசங்களோடு சொல்லும் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் இல்லாதவர்கள், உண்மைச் சம்பவங்களையும் வாழ்ந்து மறைந்த மனிதர்களையும் பற்றி தவறாகப் பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இது நமது கருத்து மட்டுமல்ல, வசந்த பாலன் போன்ற இயக்குநர்களுக்கான வேண்டுகோளும்கூட.

காவியத் தலைவன் கதையை கிட்டத்தட்ட முழுமையாகவே தருகிறோம். காரணம் அடுத்தடுத்த திருப்பங்களோ, அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்ற குறைந்தபட்ச சுவாரஸ்யமோ இல்லாததால்!

சுதந்திரத்துக்கு முந்தைய முப்பதுகள் காலகட்டம். நாடகங்களே மக்களின் பிரதான பொழுதுபோக்கு என்ற நிலை. நாசர் நடத்தி வரும் புகழ்பெற்ற சிவதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் வந்து சேர்கிறார்கள் கோமதி நாயகம் பிள்ளையும் (பிருத்விராஜ்) காளியப்பாவும் (சித்தார்த்). பாய்ஸ் கம்பெனியாக இருந்தாலும், பிழைக்க வழியின்றி தாயுடன் வரும் வடிவாம்பாளையும் (வேதிகா) குழுவில் சேர்த்துக் கொள்கிறார் நாசர்.

குழுவில் பல விதங்களிலும் தன்னை விட, காளிக்கு கிடைக்கும் முக்கியத்துவம், நாசரின் பரிபூரண அன்பும் ஆசியும் காளிக்கே கிடைப்பதையெல்லாம் பார்த்து உள்ளுக்குள் வெதும்பும் கோமதிநாயகம், ஒரு கட்டத்தில் அதை நாசரிடம் கேட்டுவிடுகிறார். அதற்கு நாசர் சொல்லும் பதில் அவனைச் சமாதானமாக்கவில்லை.

ஒரு நாள், நாசரின் கடுமை பிடிக்காமல் குழுவிலிருந்து வெளியேறுகிறார் ராஜபார்ட் பைரவன் (பொன்வண்ணன்). அந்த ராஜபார்ட் வேடம் தனக்குத்தான் என்று கோமதி நம்பிக் கொண்டிருக்க, நாசரோ காளிக்கு வாய்ப்புத் தருகிறார். இது கோமதியின் கோபத்தை கொளுந்துவிட வைக்கிறது.

நாடகம் போடப் போன இடத்தில், அந்த ஊர் ஜமீன்தாரின் மகள் ரங்கம்மாவுக்கும் (அனைகா) சித்தார்த்துக்கும் காதல். இதை நேரம் பார்த்து நாசரிடம் கோமதி போட்டுக் கொடுக்க, அதீத கோபம் கொள்ளும் நாசர் சித்தார்த்தைப் புரட்டியெடுத்து, இனி ஒப்பனையே போடக் கூடாது, நாடக மேடை ஏறக் கூடாது என சாபமிட்டு, ஒதுக்கி வைக்கிறார். அந்த நிகழ்வுக்குப் பிறகு ஊரிலிருக்கக் கூடாது என முடிவெடுத்து சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஊருக்குப் போகிறார்கள்.

காளி தன்னை ஏமாற்றிவிட்ட சோகம், வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கும் நெருக்கடி காரணமாக அடுத்த சில தினங்களில் வயிற்றில் குழந்தையுடன் ரங்கம்மா தற்கொலை செய்து கொள்கிறாள். தகவல் அறிந்ததும், வேதனையில் வெறிபிடித்து, குருவான நாசரையே சபிக்கிறான் காளி. மண்ணை வாரி அவன் தூற்றிய அடுத்த கணம் நாசர் பக்கவாதத்தில் விழுகிறார். அப்படியே செத்துப் போகிறார். நாடகக் குழு மொத்தமாக கோமதியின் கைக்கு வருகிறது.

kt-1

ஒரு பெண்ணின் மரணத்துக்கு மட்டுமல்ல, குருவின் மரணத்துக்கே காரணமானவன் என்று கூறி காளியை அடித்து விரட்டிவிட்டு, நாடகக் குழுவோடு வெளியூர், வெளிநாடுகளுக்குப் போய் வெற்றிகளைக் குவிக்கிறது சிவதாஸ் நாடகக் குழு. காளி காணாமல் போகிறான்.

5 ஆண்டுகளுக்குப் பின் திரும்பி மதுரைக்கு வருகிறது நாடகக் குழு. வந்த இடத்தில் விஷக் காய்ச்சலால் கோமதி நாயகம் படுக்கையில் விழ, வேறு ராஜபார்ட்டைத் தேட வேண்டிய நெருக்கடி. அப்போது மீண்டும் காளியைக் கண்டுபிடிக்கிறார்கள். அவனைப் பார்த்த மாத்திரத்தில் மீண்டும் கோமதியின் கோபமும் பொறாமையும் தலைதூக்குகிறது. கிடைக்கிற தருணத்தையெல்லாம் காளியைப் பழிவாங்கவே தந்திரமாகப் பயன்படுத்துகிறான் கோமதி. கூடவே இருந்தாலும் வடிவாம்பாளின் மனம் வேறு காளியின் பக்கமே இருப்பது அந்த கோபத்தில் இன்னும் கூடை நெருப்பைக் கொட்டுகிறது.

இந்த உள்பகை, பொறாமைத் தீக்கு கடைசியில் யார் பலியாகிறார் என்பதை, கொஞ்சம் கற்பனையான சுதந்திரப் போராட்ட காட்சிகளையெல்லாம் காட்டி சுற்றி வளைத்து முடித்திருக்கிறார் வசந்த பாலன்.

நாசர் மட்டுமே மிக இயல்பாக நடித்திருக்கிறார். அவர் கிட்டத்தட்ட சங்கரதாஸ் சுவாமிகளாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுகூடச் சொல்லலாம்.

அவரைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மற்ற அனைவருமே மகா செயற்கையாக நடித்துள்ளனர்.

சித்தார்த்தும் பிருத்விராஜும் நாங்கள் என்னமாய் நடிக்கிறோம் பாருங்கள் என்பது மாதிரிதான் நடித்துள்ளனர். இருவருமே மனதில் ஒட்டவில்லை. இவர்களில் யாரை காவியத் தலைவனாக ஏற்பது?

வேதிகா பொம்மை மாதிரி வருகிறார், போகிறார்… கேபி சுந்தராம்பாள் கதாபாத்திரத்தை இப்படியா வடிவமைப்பார்கள். கேபி சுந்தராம்பாளின் நிஜ கதையை அப்படியே எடுத்திருந்தால் கூட  மகா சுவாரஸ்யமான படமாக வந்திருக்குமே!

இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. க்ளைமாக்சிலோ, சீக்கிரம் சுட்டுட்டுப் போங்கய்யா என்று ரசிகர்களே குரல் கொடுக்கும் அளவுக்கு ஜவ்வு..

ஒரு நாடகக்காரனை ஜமீன்தார் வீட்டுப் பெண் காதலிப்பதும், ஏதோ க்ளப்புக்குப் போவதுபோல, சர்வ சுதந்திரமாய் வீட்டுக்குப் போய், சரசமாடி அந்தப் பெண்ணை கர்ப்பிணியாக்குவதும்… சர்வ கட்டுப்பெட்டித்தனமான அந்தக் காலத்தில் சாத்தியமா?

ஜமீன்தார் பெண்ணாக வரும் அனைகாவை எந்த அடிப்படையில் ஹீரோயினாக்கினார் இயக்குநர் என்பது மட்டும் புரியவே இல்லை.

தம்பி ராமையா வழக்கம் போல. சிங்கம்புலி, மன்சூர் அலிகான், பொன்வண்ணன், குயிலி என ஏகப்பட்ட பாத்திரங்கள்.  ஆனால் இவர்கள் யாருமே கவரவில்லை. ஒரு பிரபல நாடகக் குழு என்றால் அதற்குள் எத்தனை நகைச்சுவை, சுவாரஸ்யமான சம்பவங்கள் இருந்திருக்கும். அவை எதுவுமே இதில் பதிவு செய்யப்படவில்லை.

பின்பகுதியில் வந்த சுதந்திரப் போராட்ட சம்பவங்கள் கற்பனை – செயற்கைத்தனமானவை. மதுரையில் இப்படியொரு சம்பவம் நடந்ததாக தமிழக வரலாற்றில் எங்குமே பதிவில்லை. சுதந்திரப் போராட்டத்தை கற்பனையாகச் சித்தரிப்பது, சினிமாவில் பதிவு செய்வது எவ்வளவு பெரிய அபத்தம்.

kt3

இதில் தமிழகத்தில் விடுதலைப் போராட்ட உணர்வே இல்லை என்ற வசனம் வேறு. இந்தப் படத்தின் கதை நிகழும் முப்பதுகளுக்கு, எண்பதாண்டுகளுக்கு முன்பே விடுதலை முழக்கத்தை சிப்பாய் கலகம் என்ற பெயரில் எழுப்பியது இந்த தமிழ்  நாட்டு மண்ணான வேலூர்தான் என்ற உண்மை கூட தெரியவில்லை. மருது சகோதரர்கள் வரலாறும், ஊமைத்துரை வரலாறும் தெரியாமல் ஜெயமோகனை மட்டும் நம்பினால் இப்படித்தான் தப்புத் தப்பாக எடுக்க வேண்டி வரும்.

இந்தப் படத்தின் முக்கிய பலவீனங்களில் ஒன்று ஜெயமோகனின் வசனங்கள்.

ஏஆர் ரஹ்மானின் இசையை எந்த ரகத்தில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. அதைவிட, இப்படியொரு கதைக்கு அவரை ஏன் தேர்வு செய்தார் வசந்த பாலன் என்பதும் புரியவில்லை. அந்தக் கால நாடக இசையின் துவக்கமும், அடி நாதமும் ஆர்மோனியம்தான். அந்த ஆர்மோனிய இசை ஒரு காட்சியில் கூட இல்லை. நவீன வாத்தியங்கள் முழங்க ஏய் சண்டிக் குதிர என்று பாட்டுப் போட்டிருக்கிறார். பின்னணி இசை, நாடகக் காட்சிகளுக்கான இசை என எங்குமே இம்மியளவு உயிர்ப்பில்லை! யாருமில்லா தனியரங்கில் என்ற ஒரு பாடல் மட்டும் தேறுகிறது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு நேர்த்தி. ஆனால் டி சந்தானத்தின் கலை இயக்கம் மகா செயற்கை. அந்தக் காலத்தில் ஏதுய்யா இந்த மாதிரி செட்டும், டிஜிட்டல் ஓவியங்களும்..!

வசந்த பாலன் நல்ல படம் தரவேண்டும் என்ற ஆவல் உள்ளவர். அந்த ஆவல், ஆர்வக் கோளாறாகி தவறான கூட்டணியில் போய் முடிகிறது. அரவான் வழியில் அடுத்து காவியத் தலைவன்.

வினோ
2 thoughts on “காவியத் தலைவன் விமர்சனம்

  1. siva

    சரியான விமர்சனம். நாடக கலைஞன் கதைக்கு ராஜபார்ட் ரங்கதுரையை அடிக்க படமில்லை. இசை,நடிப்பு,வசனங்கள்,கதை அத்தனையும் அருமை. இது பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் முடிந்த படம் தான் கா.த

  2. Ravi

    விமர்சனம் அருமையாக இருந்தது.
    ரகுமான் ஒரு மோசமான தேர்வு. ஹார்மோனிய பெட்டி என்ன என்றே தெரியவில்லை அவருக்கு.
    காமெடியைச் சேர்க்கவே இல்லை இயக்குனர். சீரியஸா படம் எடுக்கிறாராம்…!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *