BREAKING NEWS
Search

மீண்டும் அதிமுக? – என்னத்த சொல்றது! – பாக்யராஜ்

மீண்டும் அதிமுக? – பாக்யராஜ் பதில்!

சென்னை: தன் கலையுலக வாரிசு என எம்ஜிஆராலேயே அறிவிக்கப்பட்ட இயக்குநர் கே பாக்யராஜ் மீண்டும் அதிமுகவில் சேரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் 1970, 80களில் முன்னணி நடிகராக இருந்தவர் பாக்யராஜ். ஏராளமான படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக இருந்தார்.

1989-ல் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவங்கி முழு நேர அரசியலில் குதித்தார். ஆனால் அரசியல், சினிமா இரண்டிலுமே அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

எனவே கட்சியை கலைத்தார். சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தினார். அரசியலில் ஒதுங்கியிருந்தாலும், அதிமுக அனுதாபியாக மட்டும் தொடர்ந்தார். 2006 ஏப்ரல் 5-ந் தேதி தி.மு.க.வில் இணைந்தார்.

தற்போது அக்கட்சியில் நட்சத்திர பேச்சாளர் இவர்தான். இவரது பேச்சைக் கேட்க எக்கச்சக்க கூட்டம். கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் பக்குவமான, யாரையும் முகம் சுளிக்க வைக்காத அளவுக்கு நாகரீகமாக பேசியவர் பாக்யராஜ்தான்.

ஆனால் சமீப காலமாக பாக்யராஜுக்கும் தி.மு.க. தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அ.தி.மு.க.வில் சேர அவர் முடிவு செய்துள்ளதாக இன்று செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து கே பாக்யராஜிடம் என்வழி சார்பில் பேசினோம்.

அவர் கூறுகையில், “நேற்று யாரோ இப்படி எழுதிவிட்டிருக்கிறார்கள். இதிலிருந்து தொடர்ந்து போன்கால்கள். இது அடிப்படையில்லாத வதந்தி. இதற்கு என்ன அபிப்பிராயம் சொல்றதுன்னே தெரியல… இப்போது அப்படி எந்தத் திட்டமும் இல்ல,” என்றார்.

அதிமுகவைச் சேர்ந்த சிலரே இப்படியொரு செய்தியை பத்திரிகைகளுக்கு கசியவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில்தான், விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் இப்ராகிம் ராவுத்தர் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் அதிமுகவில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *