BREAKING NEWS
Search

கபிலின் இந்த சாதனையை கிரிக்கெட் வாரியம் மறந்திருக்கலாம்…. கிரிக்கெட் ரசிகனால் மறக்கமுடியுமா?

கேப்டன் கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை – இன்றோடு வருஷம் 29 ஆச்சு!


பெங்களூர்: இந்திய கிரிக்கெட்டை உலகம் முதல்முறையாக ஆச்சர்யத்தோடும் நம்ப முடியாமலும் திகைப்புடன் பார்த்தது 1983-ம் ஆண்டு, இதே ஜூன் 25-ம் தேதிதான்!

இதே நாளில்தான், 1983ம் ஆண்டுதான் முதல் முறையாக ‘ஹரியானா சிங்கம்’ கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய ‘மகா சிங்கம்’ மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றோம்.

உலகின் மிகச் சிறந்த கேப்டனிடம் தோற்றதில் வருத்தமில்லை என விவியன் ரிச்சர்ட்ஸ் கபிலுக்கு புகழாரம் சூட்டிய நாள் இது.

இந்திய அணி கபில் தலைமையில் உலகக் கோப்பையில் ஆடப் புறப்பட்ட போது, முதல் ரவுண்டில் ஒன்றிரண்டு வெற்றிகளையாவது பெறுகிறார்களா பார்ப்போம்… என்றுதான் பத்திரிகைகள் கமெண்ட் அடித்தன.

ஆனால் யாருமே எதிர்பாராத வெற்றியைப் பறித்தனர் இந்திய வீரர்கள் கபில்தேவ் தலைமையில். அந்த ஜூன் 25-ம் தேதி இரவு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கே அளவே இல்லை… உறக்கமற்ற அந்த தினத்தில் கிராமங்களில் கூட இனிப்பு கொடுத்து மக்கள் மகிழ்ந்ததை இப்போது நினைத்தாலும் இனிக்கிறது!

டேவிட்டுககும், கோலியாத்துக்கும் இடையிலான சண்டை என்றுதான் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி இடையிலான அந்த உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியை வர்ணித்தார்கள். காரணம்,  அப்போது இந்தியா கிரிக்கெட்டில் ஒரு டேவிட்டைப் போல சாதாரணமாகத்தான் இருந்தது. கபில்தேவ், கிர்மானி, அமர்நாத், காவஸ்கர் என சில பர்மார்கள்தான் இருந்தனர். மற்றவர்கள் Seasonal performersதான்.

ஆனால் மேற்கு இந்தியத் தீவுகளோ இரண்டு முறை தொடர்ந்து உலக சாம்பியன். எல்லோருமே ஜாம்பவான் வீரர்கள். வேகப்பந்து வேதாளங்கள். மட்டையைப் பிடித்தால் ரன் மெஷின்கள்.
அது 3வது உலகக் கோப்பையாகும். முதல் இரு கோப்பைகளையும் மேற்கு இந்தியத் தீவுகள் வென்றிருந்ததால்,  3வது முறையும் ஹாட்ரிக் அடித்து அசைக்க முடியாத சாம்பியனாகப் போகிறார்கள் என்றுதான் உலகம் முடிவு செய்திருந்தது. அன்றைக்கு பெட் இந்தியா 1 : மேற்கிந்திய தீவுகள் 9!

3வது உலகக் கோப்பைக்கு புரூடென்ஷியல் கோப்பை என பெயரிட்டிருந்தனர்.

இங்கிலாந்தில் நடந்த இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டன. 27 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியும் 60 ஓவர்கள் ஆட வேண்டும் அன்றைக்கு.

இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் கேப்டன் கிளைவ் லாயிட் டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. மேற்கு இந்தியத் தீவுகளின் அதிவேக பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.

இந்தியத் தரப்பில் முதல் ஆளாக அவுட்டானவர் சுனில் கவாஸ்கர். வெறும் 2 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார். ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் ஆகியோரின் வேகத்துக்கு முன் இந்திய வீரர்கள் திக்கித் திணறினர்.

இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக ரன்கள் எடுத்தவர் ஸ்ரீகாந்த் (38). அவ்வளவுதான் இந்தியா, எங்கே கோப்பையை வெல்லப் போகிறது என்றுதான் அத்தனை பேரும் நினைத்திருந்தனர்.

மைதானத்தில் ஃபீல்டிங் செய்ய வந்த காவஸ்கர், தன் சகாக்களிடம், “நாம பைனல் வந்ததே பெரிய விஷயம். மேட்ச் ரொம்ப சீக்கிரம் முடிஞ்சிடும். வந்ததுக்கு உருப்படியா ஷாப்பிங் போகலாம்,” என்றாராம்.

கபிலின் நம்பிக்கை

ஆனால் அதற்கு முன்பே ட்ரெஸ்ஸிங் ரூமில் கபில் சொன்னது: “183 ரன்களுக்குள் அவர்களால் நம்மைக் கட்டுப்படுத்த முடிகிறதென்றால், அவர்களை அதற்கும் குறைந்த ரன்களில் நம்மால் வீழ்த்த முடியாதா… முயற்சிப்போம். நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். நமக்கு இழக்க எதுவுமில்லை. ஆனால் முயன்றால் உலகக்கோப்பை இருக்கிறது!”

கபில் நம்பிக்கைதான் கடைசியில் ஜெயித்தது. இந்தியாவின் பந்து வீச்சை மிக அழகாக திட்டமிட்டு பயன்படுத்தினார் கபில் தேவ். பல்வீந்தர் சிங் சந்துவுடன் அவர் பந்து வீச்சைத் தொடங்கினார். சந்துவின் பந்து ஸ்டம்புகளை பறக்க வைக்க, ஒரே ரன்னில் வெளியேறினார் கிரீனிட்ஜ்.

கபில் முகத்தில் உற்சாகம். இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். டெஸ்மன்ட் ஹெய்ன்ஸுடன் அடுத்து ஜோடி சேர்ந்தார் ரன் மிஷின் ரிச்சர்ட்ஸ். ரன்கள் கொட்ட ஆரம்பித்தது. அப்போதுதான் தன் துருப்புச்சீட்டான மதன்லாலை களமிறக்கினார் கபில். கைமேல் பலன். பின்னியிடம் கேட்ச் கொடுத்து 13 ரன்களில் ஹெய்ன்ஸ் வெளியேறினார்.

ஆனால் ரிச்சர்ட்ஸ் அசராமல் அடித்துக் கொண்டிருந்தார். மதன்லாலின் ஒரு பந்தை அவர் ஓங்கியடிக்க அது உயரே உயரே பறந்தது. எங்கிருந்தோ ஓடி வந்தார் கபில்தேவ். கிட்டத்தட்ட 20 யார்டுகள் அவர் ஓடிவந்து அந்தப் பந்தை கைகளுக்குள் சிறைப்படுத்த, லார்ட்ஸ் மைதானமே அலறியது. நம்பவே முடியாமல் கபிலைப் பார்த்தபடி வெளியேறினார் ரிச்சர்ட்ஸ்.

கபிலின் தலைமைத்துவமும், அந்த கேட்சும் மேட்சைப் பறித்துவிட்டது என பின்ன ரிச்சர்ட்ஸ் சொன்னது இதனால்தான்!

இந்திய அணியின் Dream ball bowler எனப்பட்ட ரோஜர் பின்னியை அடுத்து கொண்டு வந்தார் கபில். மேற்கிந்தியத் தீவுகளின் கிளைவ் லாயிடை 8 ரன்களில் வீழ்த்தினார் பின்னி. அந்தக் கேட்சையும் கபில்தான் பிடித்தார்.

பின்னர் வந்தார் அமர்நாத். அவரது பந்துவீசும் முறை வேடிக்கையாக இருக்கும். பெயரே ஸ்லோ மீடியம்பேஸ். ஆனால் அந்த பந்துவீச்சு ஒரு ஜாலத்தையே நிகழ்த்தியது. அவர் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை சாய்க்க, ஆன்டி ராபர்ட்ஸை கபில் வீழ்த்தினார்.

இறுதி விக்கெட்டையும் அமர்நாத் வீழ்த்த, 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. உலகக் கோப்பையைத் தாங்கியபடி லார்ட்ஸ் மாடத்திலிருந்து கபிலும் அவரது அணியினரும் வெற்றிப் புன்னகை பூத்தனர். ஷாம்பெய்ன் மழை பொழிந்தது!

இந்தப் போட்டியில் ஒவ்வொரு வீரரும் தங்களால் முடிந்த அளவு சிறப்பான பங்களிப்பை உண்மையாக அளித்திருந்தனர்.

குறிப்பாக ஆல்ரவுண்டர்களின் திறமை…

கபில் 15 ரன்கள் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள். பந்துவீச்சில் அத்தனை சிக்கனம். 11 ஓவர்கள் வீசினார். அதில் 4 மெய்டன்கள். 21 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இரண்டு கேட்ச்கள்.

அமர்நாத் 80 பந்துகளில் 28 ரன்கள். 7 ஓவர்கள் பந்துவீசி 12 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மதன்லால் 27 பந்துகளில் 17 ரன்கள். 12 ஓவர்கள் பந்து வீசி 31 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கோப்பை இந்தியாவுக்குக் கிடைக்க கபிலின் பங்களிப்பே பிரதானமாக இருந்தது. அதற்கு முன்பு நடந்த காலிறுதிக்கு முந்தைய போட்டியில் ஜிம்பாப்வேயை ஒற்றை ஆளாக நின்று கபில் வீழ்த்தியது நினைவிருக்கலாம். ஒரு பக்கம் 5 விக்கெட் வீழந்த நிலையில், கபில் தன்னந்தனியாக போராடி அவுட்டாகாமல் 175 ரன்களைக் குவித்தது அடுத்த நான்காண்டுகளுக்கு உலக சாதனையாக இருந்தது!

இப்படி கிரிக்கெட் உலகில் கபில் தேவ் தலைமையில் இந்தியா தனது கவுரவத்தைப் பெற்ற நாள் இது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு உலகக் கோப்பையை இந்தியா வென்றாலும், முதல் வெற்றி எப்போதுமே ஸ்பெஷல்.

நிச்சயம் இந்திய ரசிகர்களுக்கு இது பொன்னாள் – கபில் தேவ் போன்ற ஜாம்பவான்களை கிரிக்கெட் வாரியம் அவமானப்படுத்தினாலும், உண்மையான ரசிகர்கள் அவரைக் கொண்டாட வேண்டிய நாள்!

-என்வழி கிரிக்கெட்
11 thoughts on “கபிலின் இந்த சாதனையை கிரிக்கெட் வாரியம் மறந்திருக்கலாம்…. கிரிக்கெட் ரசிகனால் மறக்கமுடியுமா?

 1. devaraj

  The one and only true sportsman(from cricket) the country has seen.
  He is hard working, commited and sincere.
  He vwas not after money or fame, only they chased him.
  Compare this True Son of India, with current so called sons – like Sachin .
  It is because of Kapils ICL(Indian cricket league along with Zee) , BCCI took this a money spinning oppurtunity and formed IPL. What a shameful act.
  THe worst part is Jaalras like Sunny Gavaskar , Satri all keeping quiet.
  Any true INDIAN need not be told about Kapil, we always will adore you.
  cheers
  Dev.

 2. குமரன்

  மிகச் சிறந்த பதிவு.

  கபிலுக்கு உரிய கவுரவம் தரப் படவில்லை என்று நான் வருந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் வந்த ஆறுதல் இது.

  சென்ற வாரம் லார்ட்ஸ் மைதானத்துக்குச் சென்று பார்த்தேன். அங்கே உள்ள அருங்காட்சி அரங்கில் கபில், வெங்க்சர்க்கார், பிஷன்சிங் பேடி ஆகியோரின் உருவப் படங்களை ஆயில் கேன்வாசில் அருமையாக வரைந்து வைத்திருந்தனர். கபிலின் அருகே இருந்த கண்ணாடிப் பேழையில் புரூடென்ஷியல் கோப்பையும் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்தபோது அவருக்கு உரிய மதிப்பை லார்ட்ஸ் மைதானம் தருகிறதே என்று மகிழ்ந்தேன்.

  கபில் கொண்டுவந்த போட்டிகளின் மாதிரியில் அமைந்ததே ஐ.பி.எல். போட்டிகள். அவரது முயற்சிகளை முறியடிக்க கிரிக்கெட் சங்கம் அவரது ஐடியாவையே காப்பி அடித்தது வேடிக்கையான வேதனை.

 3. a.mohan

  I Seconds Mr.Devraj words.it’s 100% true.Kapil ji is all time great and he is only reason & symbol for Today’s Indian Criket status.

 4. enkaruthu

  ஏற்கனவே கபிலை பற்றி ஒரு கமெண்ட் போட்டிருப்பேன்.நான் ஒரு கிரிக்கெட் பிளேயர் அதுவும் பவுலர்.என் ஆஸ்தான குருவே கபில்தான்.இந்தியா ஒரு பங்களாதேஷ் நிலைமையில் இருந்த பொழுதே அதுவும் எந்த ஒரு தொழில்நுட்பம் இல்லாத காலத்திலையே உலக கோப்பையை வாங்கி கொடுத்த சாம்பியன் கபில் .வினோ சார் உங்களுக்கே தெரியும் என்றும் பச்சோந்திபோல் இல்லாமல் தப்புன்னா தப்பு என்று அது இந்திய கிரிக்கெட் வாரியமே ஆனாலும் என்று கபில் போல் சொல்பவர்களுக்கு, இந்த ஊழல் நாட்டில் என்ன பெயர் கிடைக்கும் என்று. இந்த நாட்டில் எந்த துறையை இருந்தாலும் தனக்கு ஏற்றபடி வலைபவர்களுக்குதான் அந்த துறை சப்போர்ட் செய்கிறது.அந்த காலத்தில் கபிலின் ஆதிக்கத்தை இவர் விளம்பரத்தில் நடித்த பூஸ்ட் நிறுவனத்திடமிருந்தே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

 5. manmathan

  அருமையான பதிவு. hats off to envazhi…. உங்கள் வழி தனி வழி என நிருபித்து விட்டீர்கள்.

  தேவராஜ் அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்… இன்றைய ரசிகர்களுக்கு கபில்தேவின் சுயநலமற்ற ஆட்ட திறன், தலைமை பண்பு, டீம் ஸ்பிரிட் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் கிரிக்கெட்டின் அசுர வளர்ச்சிக்கு கபில்தேவே முக்கிய காரணம். வளர்க கபிலின் புகழ்….

 6. Amdan

  கபில் தேவ் அன்று போராடி உலக கிண்ணத்தை வாங்கி கொடுத்தார் , ஆனால் இன்று வாங்கிய கிண்ணமோ வீரர்களின் திறமைக்கு கிடைத்த கிண்ணம் அல்ல , மாறாக அரசியல் பலம் மற்றும் பண பலத்தால் விலை கொடுத்து வாங்கப்பட்டது, சர்வதிகாரி மகிந்த ராஜபக்ஷவின் தலையீட்டினால் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டது. இது முழு கிரிக்கெட் உலகிற்குமே தெரியும். கனவான்களின் விளையாட்டு இன்று காடையர்களின் கைகளுக்குள் போய் விட்டது வருத்தமளிக்கின்றது.

 7. Shakthi

  வினோ

  மிக மிக ரசித்துப் படித்த கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் நீங்கள் சேர்க்க வேண்டிய ஒரு விஷயம்.

  அந்த வேர்ல்ட் கப் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ஒருவர் கபில் (8 மாட்சுகளில் 303 ரன்கள்). 12 விக்கெட்டுகள், 13 காட்ச்கள். அதிக ஓவர்கள் பந்து வீசியவரும் அவரே!

  திரு குமரன் அவர்கள் எழுதியதைப் படித்தபோது கண்கள் கலங்கின. கபில் என்ற ஒரு பெரும் சாதனையாளனுக்கு லார்ட்ஸில் சிறப்பு செய்திருக்கிறார்கள். ஆனால் அவரது சொந்த மாநில மைதானமான மொஹாலியில், வைக்கப்பட்டிருந்த கபிலின் ஆயில் பெயின்டிங், அவரது கையெழுத்திட்ட படங்கள், மைதான உள்பக்கத்தில் இருந்த கபிலின் மிகப்பெரிய கேரிகேச்சர் கட்அவுட் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டனர் கிரிக்கெட் வாரியத்தினர்.

  உலகக் கோப்பையை ஜெயித்தபோது தனக்குக் கிடைத்த நினைவுப் பரிசுகளைக் கூட கபில், இந்த மைதான காட்சியகத்தில்தான் வைத்திருந்தாராம். ஆனால் இப்போது பார்த்தால், அவற்றில் எதுவும் இல்லை.

  ஆனால் சரித்திரத்தில் இடம்பெற்ற சாதனை வீரருக்கு இந்த அவமானங்களே வெகுமதிகள் என்று இந்த முட்டாள்கள் கூட்டம் (நன்றி – அமர்நாத்) புரிந்து கொள்ளவில்லை!

 8. enkaruthu

  //அந்த வேர்ல்ட் கப் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ஒருவர் கபில் (8 மாட்சுகளில் 303 ரன்கள்). 12 விக்கெட்டுகள், 13 காட்ச்கள். அதிக ஓவர்கள் பந்து வீசியவரும் அவரே!//

  அது மட்டுமா ஜிம்பாப்வே உடனான போட்டியில் கபில் அடித்த 175 ரன்கள்.4 பாலுக்கு ஒரு ரன் அடிக்கும் அந்த காலத்திலேயே இவ்வளவு மிக பெரிய ஸ்கோர்.அந்த ரெகார்டை முறியடிக்கவே பல வருஷம் ஆயிற்று.

 9. Mariappan .S

  உங்கள் கட்டுரையை கபில் படித்தால் நிச்சயம் சந்தொஷபடுவார். நன்றி வினோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *