BREAKING NEWS
Search

தமிழக மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வேன்.. எதைக் கண்டும் அஞ்சப்போவதில்லை! – ஜெயலலிதா

தமிழக மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வேன்.. எதைக் கண்டும் அஞ்சப்போவதில்லை! –  ஜெயலலிதா  

jaya_happy_1
சென்னை: தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை. மனம் தளரப்போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை அரசியல் வாழ்வில் நுழைந்த நாளில் இருந்து உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் பேரியக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உன்னையே நீ அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும்’’ என்று இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். என்னிடம் பெற்றுக்கொண்ட சத்தியத்தை இதயத்தில் ஏற்று நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து அந்த பாதையிலேயே என்னுடைய பயணம் அமையும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சி; என் உயிரினும் மேலான எனது அருமை கழக உடன்பிறப்புகளின் நலன்; எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், உயர்வு, இவை தான் என் இதயத்தில் என்றைக்கும் நான் பதித்து வைத்திருக்கும் இலக்குகள். இந்த பாதையில் என்னுடைய பயணம் நடைபெறும் போது ஏற்படுகின்ற இன்னல்களை பற்றியோ, துயரங்களை பற்றியோ, சோதனைகளை பற்றியோ, வேதனைகளை பற்றியோ நான் சிறிதும் கவலைப்படுவதில்லை. இந்த துயரங்கள் ஏற்படுத்துகின்ற வலி எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதைத் தாங்கிக்கொள்கின்ற மனப்பக்குவத்தை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் என்றைக்கும் நான் உழைப்பேன்; எந்த தியாகத்தையும் மேற்கொள்வேன் என்ற உறுதியை நான் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என் வாழ்வில் எத்தனையோ சோதனைகளை நான் சந்தித்து வந்திருக்கிறேன். அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறேன். உங்கள் அன்பும், தமிழக மக்களின் பேராதரவும் எனக்கு இருக்கும் வரையில் எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை; மனம் தளரப்போவதில்லை.

என் மீது பேரன்பு கொண்டுள்ள பல லட்சக்கணக்கான தாய்மார்களும், பொதுமக்களும், ஆதரவாளர்களும், தோழமை கட்சியினரும், மாணவ, மாணவியர்களும், என் உயிரினும் மேலான எனது அருமை கழக உடன்பிறப்புகளும், நான் சோதனையில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதற்காக திருக்கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும், பிற இடங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்துள்ள விவரங்களையும், நேர்த்தி கடன் செலுத்தியுள்ள விவரங்களையும் அறிந்து நெகிழ்ச்சி அடைகிறேன்.

என் மீது பாசமும், பற்றும் கொண்டுள்ள தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

-என்வழி
4 thoughts on “தமிழக மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வேன்.. எதைக் கண்டும் அஞ்சப்போவதில்லை! – ஜெயலலிதா

 1. Elango

  தன் வினை தன்னை சுடும் … ஓட்டப்பம் வீட்டை சுடும் ..!

  ஆனால் M G R கட்டிய வீட்டையும் சேர்த்து சுடுவது தான் இங்கே வருந்த தக்க விஷயம்!

 2. குமரன்

  இளங்கோ

  ///ஆனால் M G R கட்டிய வீட்டையும் சேர்த்து சுடுவது தான் இங்கே வருந்த தக்க விஷயம்!///

  சூப்பர்!

  ஊழல் பெருச்சாளிகள் எவரானாலும் அரசியலை விட்டு விலக்கப் பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஊழல் குற்றவாளிகள் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கத் தடை, எந்த எம்.எல்.எ, எம்.பி., அமைச்சர், முதலமைச்சர் பதவியும் வகிக்கத் தடை, அத்துடன் ஏற்கனவே இருக்கும் பதவிகளில் இருந்து நீக்கம் என்ற உத்தரவைப் பிறப்பித்தது.

  இத்தனையும் அனுபவித்த ஜெயா, இந்த அசிங்கத்தை மறைக்கவே அவரது கட்சியினர் ஆர்ப்பாட்ட அரசியல், திசை திருப்பும் அரசியல் செய்து வருகின்றனர். இது இன்னமும் அறிவுஜீவிகளான பத்திரிகையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் புரியாதது விந்தை .

  ஜெயா, கருணாநிதியை விட வைகோவும், விஜயகாந்தும் ஆயிரம் மடங்கு மேலானவர்கள்.

 3. குமரன்

  தமிழ் நாட்டில் ஆவின் பால் விற்பனை விலையை ஒரே எட்டில் பத்து ரூபாய் உயர்த்தி மாபெரும் தியாகத்தைச் செய்த “இதய தெய்வம்” “அம்மா” அவர்கள் ஊழல் வழக்கிலிருந்து விடுதலை ஆக வேண்டி “இதய தெய்வத்தின்” கட் அவுட்டுக்குப் பாலபிஷேகம் செய்வோம். ஏழைத் தொண்டன் மட்டும் பெற்றோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு உயிர்த் தியாகம் செய்யட்டும்.

  “இதய தெய்வத்தின்” தியாகத்தின் அடுத்த கட்டமாக மின்கட்டணத்தையும் வருகின்ற நவம்பர் 15 தேதிக்கு உயர்த்தி அறிவிக்க “அம்மா” அடிமைகள் தயாராக உள்ளனர். அடுத்த முறை முதல்வர் பன்னீரும் மற்ற மூன்று மூத்த அமைச்சர்களும் போயஸ் தோட்டம் வந்து போன மறுநாள் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

  பா.ஜ.க. தமிழ் நாட்டில் கால் ஊன்றிவிடுமோ என்ற கவலையில் அனைவரும் “கழகக் காவல் தெய்வத்தை” ஆதரிக்கக் கோருகிறோம்.

 4. குமரன்

  இன்று சகாயம் தலைமையில் உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கிரானைட் ஊழல் விசாரணைக் குழுவைச் செயல் பட விடாமல் தடுத்து வருவதற்குக் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், அதற்காகத் தமிழக அரசுக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தது!

  ஒரு மாநில அரசு, உயர் நீதிமன்ற அரசின் உத்தரவை மதிக்காததற்கு அபராதம் விதிக்கப்படுவது என்பது வெட்கக் கேடு.

  இதற்கு அதிமுகவினர் உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கண்டபடி சனியனே, முண்டமே என்று திட்டி எத்தனை போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்று பார்ப்போம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *