BREAKING NEWS
Search

பணம் மட்டும் வாழ்க்கையல்ல… பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது! – ஜெ

பணம் மட்டும் வாழ்க்கையல்ல… பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது! – ஜெ

கொடநாடு : பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியும் என்பதும் தவறு, என்றார் முதல்வர் ஜெயலலிதா.

கொடநாட்டில் பாங்க் ஆப் இந்தியாவின் கோடநாடு காட்சிமுனை ஏ.டி.எம். மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஈளாடா கிளை ஆகியவற்றை திறந்து வைத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை:

1906 ஆம் ஆண்டு, 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் 50 பணியாளர்களுடன் தனியாரால் துவங்கப்பட்ட பாங்க் ஆப் இந்தியா இன்று இந்தியாவில் 4,041 கிளைகளையும், வெளிநாடுகளில் 34 கிளைகளையும் கொண்டு மகத்தான மக்கள் பணி ஆற்றி வருகிறது.

1989 ஆம் ஆண்டிலேயே ஏ.டி.எம். வசதியுடன் கூடிய கணினிமயம் ஆக்கப்பட்ட கிளையை துவக்கிய பெருமை இந்த பாங்க் ஆப் இந்தியாவிற்கு உண்டு. இந்திய நாட்டிற்கு வெளியே முதன் முதலாக 1946 ஆம் ஆண்டு லண்டனில் வங்கிக் கிளையை துவக்கிய பெருமையும், 1974 ஆம் ஆண்டு முதன் முதலாக ஐரோப்பிய நாட்டில் வங்கிக் கிளையை துவக்கிய பெருமையும் இந்த வங்கிக்கு உண்டு.  மொத்தத்தில் அலுவல் ரீதியாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் பாங்க் ஆப் இந்தியா பிரதான இடத்தை வகிக்கிறது.

இந்த வங்கியின் மூலம் இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்குத் தேவையானவற்றை பெற வேண்டும், சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும்.

சேமிப்பு முக்கியம்…

“சிறு துளி பெரு வெள்ளம்”, “சிறுகக் கட்டி பெருக வாழ்”  போன்றவை சிறுசேமிப்பின் இன்றியமையாமையை விளக்குகின்றன. “பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது வள்ளுவரின் வாக்கு. பொருளைப் பெறாவிட்டால் பட்டறையில் இரும்பு படுவது போன்று துன்பப்பட வேண்டும் என்பதை உணர்ந்து இங்குள்ள மக்கள் எல்லாம் சேமிப்பில் ஈடுபட வேண்டும்.

ஒரு மலையிலிருந்து பெருக்கெடுத்தோடும் ஆறு, பயனில்லாத இடங்கள் வழியாக பாய்ந்து கடலில் கலப்பதால் யாருக்கும் எவ்வித பலனும் இல்லை. அந்நீர் அணைகளில் தேக்கப்பட்டு, வாய்க்கால் வழியாக, வயல்களுக்குப் பாய்ந்தால் பயிர் செழிக்கும், உயிர்கள் வாழ வழிவகை ஏற்படும்.

அது போல, ஒரு மனிதன் தன் உழைப்பினால் ஈட்டிய பணத்தை தனக்கும் தன் நாட்டிற்கும் பயன்பட சேமித்தல் அவசியம். சிறுசேமிப்பின் மூலம் பணம் வீணாகாமல் பெருகுவதோடு, வட்டியும் கிடைக்கிறது; பணம், பாதுகாப்பாகவும் இருக்கிறது. இந்த சேமிக்கும் பழக்கம் சிக்கனத்தை வளர்ப்பதோடு, எதிர்பாராச் செலவுகளுக்கும் கைகொடுக்கிறது. நாம் சேமிக்கும் பணம் நாட்டின் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த சேமிப்பினை இப்பகுதி மக்கள் எல்லாம், வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வங்கியில் பணத்தை சேமித்து, அதன் பயன்களை, நீங்கள் அடைய வேண்டும். இது மட்டுமல்லாமல், விவசாயக் கடன், வணிகக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், வீட்டு வசதிக் கடன் ஆகியவற்றையும், இந்த வங்கியிடமிருந்து பெற்று, உங்களுடைய வாழ்க்கையை, நீங்கள் எல்லாம், வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பணமே வாழ்க்கையல்ல…

அதே சமயத்தில், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பணத்தை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் பெற்றுவிட இயலாது. பணத்தால் பெற இயலாதவையும் இந்த உலகத்திலே உண்டு. பணத்தால் நல்ல கட்டில், மெத்தை, தலையணை ஆகியவற்றை வாங்க இயலும். ஆனால் அவை மட்டுமே நமக்கு தூக்கத்தை கொடுக்காது. பணத்தால் சிறந்த சத்தான உணவு வகைகளை வாங்க இயலும். ஆனால் பணம் பசியை ஏற்படுத்தாது. நோய்வாய்ப்பட்டால், அதனை சரி செய்வதற்கு மருந்து மாத்திரைகளை பணத்தால் வாங்க இயலும்.  அழகு சாதனைங்களை பணத்தால் வாங்க இயலும். ஆனால், பணத்தால் உடல் ஆரோக்கியத்தை பெற இயலாது.

எனவே, பணத்துடன் கூடிய நல்ல மனமும் வேண்டும். அதுவே எப்பொழுதும் நமக்கு நல்ல மகிழ்ச்சியை தரும்.

ஒரு கதை…

ஓர் ஊரில் வசதி படைத்த பள்ளிச் சிறுமி ஒருத்தி தனது தந்தையுடன் விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்றாள். அங்கு தனக்கு பிடித்த விளையாட்டுப் பொம்மைகளை அவள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

அந்தச் சமயத்தில், தனது அருகில் வசதி குறைந்த ஏழைச் சிறுமி ஒருத்தி, விலை குறைந்த பொம்மைகளை, ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து, தனது தந்தையை நோக்குவதையும்; அந்த பொம்மைக்குரிய பணம் தன்னிடம் இல்லை என அவளது தந்தை தலையாட்டுவதையும்; இதனால் அந்த ஏழைச் சிறுமியின் முகம் வாட்டம் அடைவதையும் கடைசியாக ஒரு சாதாரண பொம்மையை எடுத்துக் கொண்ட ஏழைச் சிறுமியின் முகத்தையும் கவனித்தாள் பணக்காரச் சிறுமி.

இதனைக் கண்டு மனம் நெகிழ்ந்த பணக்காரச் சிறுமி தனக்கு வேண்டிய விளையாட்டுப் பொருட்களை எடுத்துக் கொண்டதுடன் அந்த ஏழைச் சிறுமி ஏக்கத்துடன் பார்த்து திருப்பி வைத்துவிட்ட பொம்மைகளையும் எடுத்துக் கொண்டாள். பின்னர், பணம் செலுத்தும் இடத்தில் அதற்கான பணத்தைக் கொடுத்த பணக்காரச் சிறுமி, கடைக்காரரிடம் ஏதோ ரகசியமாக கூறினாள்.

ஒரு சாதாரண பொம்மைக்கான பணத்தை ஏழைச் சிறுமி கடைக்காரரிடம் செலுத்தியவுடன் கடைக்காரர் அந்த சிறுமியிடம், “இன்று 500-ஆவது வாடிக்கையாளருக்கு, நாங்கள் பரிசு ஒன்றை தர முடிவு செய்திருக்கிறோம். நீ தான் அந்த 500-ஆவது வாடிக்கையாளர்” எனக் கூறி, பணக்காரச் சிறுமி விலை கொடுத்திருந்த பொம்மைகளை ஏழைச் சிறுமிக்கு வழங்கினார்.

இதில் ஏழைச் சிறுமிக்கு, ஏற்பட்ட சந்தோஷத்தை பார்த்து மன மகிழ்ச்சியுடன், மன நிறைவுடன் அந்த பணக்காரச் சிறுமி கடையை விட்டுச் சென்று தனது காரில் ஏறிக் கொண்டாள். பணம் கொடுத்து தான் வாங்கிய விளையாட்டுப் பொருட்களினால் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட, அதிக மகிழ்ச்சியை அந்த ஏழைச் சிறுமியின் சிரிப்பில் கண்டாள் பணக்காரச் சிறுமி. பிறருக்கு கொடுத்து உதவுவது தான், நமக்கு உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

இது போன்ற உண்மையான மகிழ்ச்சியை வாடிக்கையாளர்கள் மனதில் ஏற்படுத்தும் பணியில் வங்கிகள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வங்கி அதிகாரிகள், இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறும் வகையில் குறைந்த வட்டியில் அதிக தவணை முறையில் அவர்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்க வேண்டும். இதே போன்று, கடன் பெறுவோரும், வாங்கிய கடனை, தவறாமல் திரும்பச் செலுத்தி, மேலும் பல பயன்களை வங்கி மூலம் பெற வேண்டும்.

இந்தக் கொடுக்கல் – வாங்கலில் இரு சாராரும் தங்கள் மனசாட்சிக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

இன்னும் ஒரு கதை…

ஒருத்தர், விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டார். பயிற்சி முடிந்து தனியாக விமானம் ஓட்ட வேண்டிய கட்டத்தில் பாரசூட் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

அதனால் இவர் ஒரு கடைக்குப் போனார். “ஒரு நல்ல பாரசூட் கொடுங்க”, என்று கடைக்காரரிடம் கேட்டார். கடைக்காரர் பாரசூட்டை அவரிடம் கொடுத்தார். அந்தப் பாரசூட்டை வாங்கிய நபர்,  “ஐயா, நான் இதை வாங்கிக் கொண்டு போகிறேன். நல்லதாக இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இரு முறை பார்த்துத் தந்தால், நலமாக இருக்கும். ஒருக்கால் நான் மேலே இருந்து குதிக்கும் போது  இந்தப் பாரசூட் வேலை செய்யவில்லை என்றால் பிரச்சனையாகி விடும் அல்லவா?” என்று கூறினார்.

உடனே அந்தக் கடைக்காரர், அவரைப் பார்த்து, “சார், அதைப் பற்றி நீங்கள் கொஞ்சம் கூட கவலைப்படாதீர்கள். அப்படி நீங்கள் குதிக்கிற போது, இந்த பாரசூட், சரியாக விரியவில்லை என்று சொன்னால் உடனே திருப்பி எடுத்துக் கொண்டு வாங்க.. நான் வேறு ஒன்றை மாற்றித் தருகிறேன்” என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னார்.

இது எப்பேர்பட்ட மனசாட்சி! பாரசூட் விரியவில்லை என்றால், அத்துடன் விமான ஓட்டியின் கதையே முடிந்துவிடும். உயிர் பிரிந்துவிடும்.  பின்னர் எப்படி அவர் கடைக்குச் சென்று வேறு பாரசூட்டை வாங்க முடியும்?  இதுவா மனசாட்சி?

மனசாட்சியுடன் நடந்துக்கங்க…

இது போல் இல்லாமல் உண்மையான மனசாட்சியுடன் வங்கி அதிகாரிகளும், வங்கி வாடிக்கையாளர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை ஆகியவை வங்கிகள் மூலமாகவே தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசுக்கு வரிகள் மற்றும் இதர இனங்கள் மூலம் வர வேண்டிய வருமானம் வங்கிகள் மூலமாகவே பெறப்படுகிறது.

எனது அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் வங்கிகளில் பெருமளவில் வணிக நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. வங்கிகளும், ஏற்றத்தாழ்வற்ற, சமதர்ம சமுதாயம் அமைப்பதற்காக பாடுபடும் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயம், தொழில், வணிகம், சிறுதொழில், பொருளாதாரம் முதலியன செழிக்கும் வண்ணமும், மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும் வண்ணமும், இந்த வங்கியின் பணிகள் அமைய வேண்டும்,” என்றார்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் பங்கேற்றனர்.

-என்வழி செய்திகள்
6 thoughts on “பணம் மட்டும் வாழ்க்கையல்ல… பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது! – ஜெ

 1. மு. செந்தில் குமார்

  எனெக்கென்னவோ ஜெயலலிதாவின் கதையும் அதை அவர் சொல்லும் பாங்கும் பிடித்திருக்கிறது.

 2. மிஸ்டர் பாவலன்

  //எனெக்கென்னவோ ஜெயலலிதாவின் கதையும் அதை அவர் சொல்லும் பாங்கும் பிடித்திருக்கிறது.// (மு. செந்தில்குமார்)

  முதல்வரின் இரு கதைகளையும் படித்ததும் கண்கள் குளமாகியது.

  முதல்வரின் புத்திகூர்மையும், கதை சொல்லும் பாங்கும் அருமை, அருமை!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 3. sudhkar

  அருமை நல்ல இருக்கு ..பணம் மட்டும் வாழ்கை என்று நினைத்த முதல்வருக்கு ..இந்த கதை பொருந்தும் ….

 4. venkt

  அருமை நல்ல இருக்கு ..பணம் மட்டும் வாழ்கை என்று நினைத்த முதல்வருக்கு ..இந்த கதை பொருந்தும் ….
  சூப்பர்……………………………………………………………….

 5. venkt

  பார்த்து பாவலன் நீங்க குளத்துல விழுந்திட போறீங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *