BREAKING NEWS
Search

இந்தக் கதையை முதல்வர் யாருக்கு சொல்கிறார் புரிகிறதா?

உப்பு போட்ட பால்… பட்டப் பகலில் விளக்கு… – ஜெ சொன்ன கதை

நாமக்கல்: திருமணங்கள், கட்சிக் கூட்டங்கள், நலத்திட்ட உதவி விழாக்கள் என எங்கு போனாலும் ஒரு கதை சொல்வது முதல்வர் ஜெ வழக்கம். அந்த வகையில் அவர் இன்று சொன்ன ஒரு கதை:

இல்லற வாழ்வு என்பது இரு ஆன்மாக்களின், மனங்களின், உணர்வுகளின், முழுமையான இணைப்பு. இந்த இல்லற வாழ்வு இனிமையாக இருக்க வேண்டுமென்றால், கணவன் என்ன நினைக்கிறானோ அதை மனைவி ஏற்றுக் கொள்ள வேண்டும்; மனைவி என்ன நினைக்கிறாளோ அதை கணவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதை கபீர்தாசர் என்கிற ஒரு மிகப்பெரிய ஆன்மீகவாதியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தின் மூலம் நான் விளக்க விரும்புகிறேன்.

ஒருநாள் கபீர்தாசர் இல்லத்தில் ஏகப்பட்ட பக்தர்கள். எல்லோரும் அவரிடம் ஆன்மீகச் சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கபீர்தாசர்.

நண்பகல் 12 மணிக்கு எல்லோரும் போய்விட்டனர். ஆனால், ஒருவர் மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தார். உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கபீர்தாசர் கேட்டார். அதற்கு பதில் சொல்லத் தயங்கினார் அந்த மனிதர்.

உடனே கபீர்தாசர், உங்கள் முகத்தில் காணப்படுகிற அறிகுறிகளைப் பார்த்தால், உங்களுடைய இல்வாழ்க்கை இன்பமாக இல்லை என்று தோன்றுகிறது; அப்படித்தானே? என்று கேட்டார்.

அப்படித்தாங்க. என்னுடைய மனைவியும், நானும் சந்தோஷமாக குடும்பம் நடத்தவில்லை; எப்பொழுதும் சண்டைதான். நான் என்ன சொன்னாலும், அவள் கேட்பதில்லை. எதிர்த்து பேசுகிறாள். கோபப்படுகிறாள். ஆத்திரப்படுகிறாள். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை என்றார், அந்த மனிதர்.

உடனே கபீர்தாசர், இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க. யோசனை செய்து பதில் சொல்கிறேன்”, என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர், ஒரு பெரிய நூல் கண்டை எடுத்து வந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார்.

நூல் கண்டில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்து எடுத்தார். அப்போது, மனைவியை கூப்பிட்டு விளக்கை ஏற்றி எடுத்து வா என்று சொன்னார். அந்த அம்மையாரும் ஒரு விளக்கை ஏற்றி எடுத்து வந்து அவர் பக்கத்திலே வைத்தார்.

இவ்வளவு வெளிச்சம் இருக்கும் போது, கபீர்தாசர் தான் விவரம் இல்லாமல் விளக்கு கொண்டு வரச் சொன்னால், அந்த அம்மையாரும் விளக்கு கொண்டு வருகிறாரே என்று நினைத்து, திகைத்துப் போனார் அந்த மனிதர்.

சிறிது நேரம் கழித்து, அந்த அம்மையார் இரண்டு டம்ளர்களில் பாலை எடுத்துக் கொண்டு வந்து, அவர்கள் முன்பு வைத்தார். பாலை குடிக்க ஆரம்பித்த அந்த மனிதரின் முகம் சுருங்க ஆரம்பித்தது. பாலை அவரால் குடிக்க முடியவில்லை. ஏனெனில், கபீர்தாசரின் மனைவி தவறுதலாக பாலில் சர்க்கரைக்கு பதிலாக, உப்பை போட்டிருந்தார்.

உடனே அந்த பக்தர், கபீர்தாசரைக் கவனித்தார். கபீர்தாசரோ, கிடுகிடுவென்று பாலை குடித்தார். பாலை குடித்து முடிக்கும் தருவாயில், அவரது மனைவி சமையல் கட்டிலிருந்து கொண்டே, பாலுக்கு சர்க்கரை சரியா இருக்கிறதா? என்று கேட்டார்.

இதற்கு கபீர்தாசர், சரியாக இருக்கிறது என்று சொன்னார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் கபீர்தாசரை நெடுஞ்சாண்கிடையாக வணங்கினார். உடனே கபீர்தாசர், அந்த மனிதரைப் பார்த்து என்னவோ கேட்க வேண்டும் என்று கூறினாயே? என்று கேட்டார்.

அதற்கு அந்த மனிதர் ஒன்றும் கேட்க வேண்டாம் அய்யா. நண்பகலில் நீங்கள் விளக்கேற்றி வைக்கச் சொல்கிறீர்கள். உங்கள் மனைவியும் விளக்கேற்றி வைக்கிறார். உப்பு போட்ட பாலில் சர்க்கரை சரியாக இருக்கிறதா என்றால் சரியாக இருக்கிறது என்று நீங்கள் பதில் கூறுகிறீர்கள். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

அதாவது, கணவனை மாற்ற வேண்டும் என்று மனைவி நினைக்காமலும்; மனைவியை மாற்ற வேண்டும் என்று கணவன் நினைக்காமலும்; ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டால், இல்லற வாழ்வு அமைதியாக, இனிமையாக, சொர்க்கம் போல் இருக்கும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துரைக்கிறது.

-நாமக்கல்லைச் சேர்ந்த அமைச்சர் தங்கமணியின் மகன் திருமணத்தில் முதல்வர் ஜெயலலலிதா சொன்ன கதை இது.

யாருக்குப் புரிகிறதோ இல்லையோ… தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும்… ‘அம்மா’ காலில் நெஞ்சாண்கிடையாக விழத் தயாராகுங்கப்பா!!

-என்வழி செய்திகள்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *