BREAKING NEWS
Search

அதிமுக ஆட்சி – ஒரு ஆண்டு கழிந்தது! – பகுதி-1

அதிமுக ஆட்சி – ஒரு ஆண்டு கழிந்தது! – பகுதி-1


மே 13, 2101… சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்த நாள்!

ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம். இதற்கு ஜெயலலிதா ஒதுக்கிய தொகை மட்டுமே ரூ 25 கோடி என்கிறது அதிகாரப்பூர்வ தகவல்.

முன்பெல்லாம் ஒரு புதிய அரசு அமைந்த உடன் பிரதான எதிர்க்கட்சியாகவே இருந்தாலும், ‘100 நாட்கள் அல்லது 6 மாத காலம் வரை ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்யப் போவதில்லை’ என்பார்கள்.

காரணம், அரசின் நிலைமையைப் புரிந்து நடவடிக்கை மேற்கொள்ள, புதிய திட்டங்களை அறிவிக்க இந்த கால அவகாசம் புதிய அரசுக்குத் தேவை என்பதால். ஆனால் ஜெயலலிதா அரசுக்கு இந்த வரைமுறையெல்லாம் பொருந்தாது என்பது பொதுவான கருத்து. அவருக்கு அரசின் நிலவரம் புரியாமல் இல்லை. வந்த வேகத்தில் அவர் எடுத்த நடவடிக்கை அல்லது வெளியிட்ட அறிவிப்புகளைப் பார்த்தவர்களுக்கு, ஜெயலலிதா எந்த அளவு Pre planned ஆக இருந்தார் என்பது புரியும்.

ஆனால், இன்றோ, ஜெயலலிதாவை குறைந்தது மூன்றாண்டுகள் வரை விமர்சிக்கவே கூடாது என்கிறது சோ உள்ளிட்ட ஜால்ரா கோஷ்டி. மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் அவரால் எந்த நடவடிக்கையையும் திடமாக மேற்கொள்ள முடியுமாம் (உலகிலேயே மிகப்பெரிய கத்துக்குட்டி ஜெ என்று சொல்ல வருகிறார்களோ!!)

இருக்கட்டும்…

ஜெயலலிதாவின் இந்த ஒரு ஆண்டு ஆட்சி எப்படி? (சாதனை என்ன என்று மட்டும் யாரும் கேட்டுவிட வேண்டாம். பாவம், சசி கும்பலின் உள்ளடி குழப்பத்தை சரிபண்ணி வழிக்குக் கொண்டுவரவே 5 ஆண்டுகள் பத்தாது!)

சமீபத்தில் ஜூனியர் விகடன் ஜெயலலிதா ஆட்சியின் முதல் ஆண்டை மக்கள் மன்றத்துக்குப் போய் எடைபோட்டிருந்தது. அதில் ரொம்ப திக்கித் திணறி (பிட் அடித்து) ஜெயலலிதாவுக்கு பாஸ் மார்க் போட்டிருந்தது!

நம்மைப் பொறுத்தவரை, அரசியல், விருப்பு வெறுப்பு அனைத்துக்கும் அப்பால் நின்று, ஜெயலலிதா ஆட்சியில் தினம் தினம் செத்து சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண குடிமகனாக சொல்கிறோம்… இந்த ஒரு ஆண்டில் அவர் பெற்றுள்ள மதிப்பென் பூஜ்யம்… 0!

இதைச் சொல்வதால் நாம்  என்னமோ திமுக அனுதாபி என்றோ, ஜெயலலிதாவுக்கு ஆகாதவர் என்றோ எண்ணிக் கொள்ள வேண்டாம். ஜெயலலிதாவைத் திட்டுபவர்கள் எல்லாம் திமுக அனுதாபி என்பது, ‘மஞ்சள் சேலை கட்டினவளெல்லாம் என் பொண்டாட்டி’ என்பதற்கு சமம்.

உண்மையிலேயே கடந்த 13.05.2011 முதல் 13.05.2012 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஏதாவது உருப்படியாக செய்திருக்கிறதா… யோசித்துப் பாருங்கள். ம்ஹூம்… ஒரு விஷயம் கூட தேறாது.

ஜெயலலிதா வெளியிட்டதெல்லாம் வெற்று அறிவிப்புகள். வெறும் வார்த்தை வயிற்றை நிறைக்காதே!

கடந்த தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கு எதிராக ஜெயலலிதா கையில் எடுத்த முக்கிய அஸ்திரம்… மின்வெட்டு. பாவம், ஜெ ஆதரவாளர்களுக்கு இன்று இதைப் பேசுவதே கூட எட்டிக்காயை விட கசப்பானதாக இருக்கலாம்.

ஆனால், உண்மை என்ன?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த மூன்றே மாதங்களில் மின்வெட்டு என்பதே இல்லாமல் செய்து விடுவோம் என்று தமிழகமெங்கும் முழங்கி வலம் வந்தார் ஜெயலலிதா.  ‘அம்மா சொல்வதைச் செய்வார்… போடுங்கள் ஓட்டை’ என்று காது கிழியும் அளவுக்கு ஜால்ரா அடித்தனர் அவரது அடிப்பொடிகளாகத் திகழும் சில பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும்.

நடந்ததை நாடே அறியும்.

தொழில் மாவட்டங்களான கோவை, ஈரோட்டில் 3 முதல் 4 மணி நேரம் மின்வெட்டு நிலவியது திமுக ஆட்சியில். சென்னை மற்றும் புற நகர்களில் 1 மணி நேரம். அதுவும் கோடையில் மட்டுமே. மழைக் காலங்களில் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தனர்.

இன்றோ.. இந்த நிமிடம் வரையில் மின்வெட்டு நீங்கவில்லை. காற்றாலை மின்சாரம் வந்துவிட்டதாக சட்டசபையில் குதித்துக் கொண்டிருந்த போதும், கிராமங்களில் பகலில் 8 மணி நேர மின்வெட்டும், இரவில் 2 மணி நேர மின்வெட்டும் அமலில் உள்ளது. நமது கிராமியம் சார்ந்த தொழில்கள் அடியோடு முடங்கிப் போயுள்ளன. விவசாயம் என்பதே பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலை. உண்மை நிலையை வெளியே சொன்னால் இன்னும் பிரச்சினையாகிவிடுமோ என அச்சப்பட்டு அமைதி காக்கும் அளவுக்கு கேவலம்.

டாஸ்மாக் கொடி பறக்குது…

டாஸ்மாக் மூலம் அரசே மது விற்பனை செய்வதுதான் தமிழகத்தின் அத்தனை பிரச்சினைக்கும் சர்வரோக நிவாரணி என ஜெயலலிதா மிகத் தீவிரமாக நம்புகிறார்.

மது விற்பனையை அரசே எடுத்து நடத்துவதால், இந்தத் துறையில் தனியார் முதலைகள் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்று பார்த்தால், அவர்களுக்கு சற்றும் சளைக்காத அளவுக்கு தரமற்ற மது வகைகளை, பெரும் விலைக்கு விற்று லாபம் பார்க்கிறது ஜெயலலிதா அரசு.

இன்னொரு பக்கம், மது தயாரிப்பு தொழிற்சாலைகள் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துவிட்டன. கிட்டத்தட்ட மாவட்டம் தோறும் மது தயாரிப்பு நிலையங்கள் அல்லது மது நிரப்பும் கூடங்கள். அத்தனையும் பெரும் பணக்காரர்களுக்கு அல்லது ஆட்சி மேலிடத்துடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமானவை.

டாஸ்மாக்குக்கு வரும் ரூ 20 ஆயிரம் கோடி என்பது எத்தனை லட்சம் குடும்பங்களின் வாழ்க்கையை அடித்து பிடுங்கப்படும் பணம் என்பதை எண்ணிப்பார்க்கக் கூட யாரும் விரும்பவில்லை.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாத அரசு, டாஸ்மாக்கில் நாளொடு மாற்றம் கொண்டுவந்து வசூல் ராஜாவாகத் திகழ்கிறது.

உள்ளூர் சரக்கு போரடிக்கிறதா…? இதோ, வெளிநாட்டு சரக்கு… உள்ளூர் பீர்கள் வேண்டாமா…? நாங்கள் வரவழைக்கிறோம் வெளிநாட்டு பீர்… பீர் ஜில்லென்று கிடைக்கவில்லையா… கவலை வேண்டாம் கடைக்குக் கடை ஃப்ரிட்ஜ் தருகிறோம்… உயர்ந்த விலை சரக்கை மொத்தமாக வாங்குகிறீர்களா… உங்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர்.. வீட்டுக்கே வந்து டோர் டெலிவரி செய்கிறோம்…

-இப்படி மகா சுறுசுறுப்பாக நடக்கிறது சீமைச்சாராய வியாபாரம். தமிழகத்தில் வேறு எந்தத் துறையிலும் இத்தனை வேகம் இல்லை. மக்களின் பணத்தைப் பிடுங்க, டிலைட் ஷாப், டீலக்ஸ் ஷாப் என்ற பெயர்களில் இன்னும் காஸ்ட்லி ஐட்டங்களை இறக்கப் போகிறது ஜெ அரசு. இதுபோதாதென்று திருவிழா சமயமென்றால் ஆற்றங்கரைகளிலும், தோப்புகளிலும் ஆறாய் ஓடும் கள்ளச் சாராயம்.

ஒரு காலத்தில் இலைமறை காயாக குடித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று தெருவுக்குத் தெரு மூலையில் நின்றபடி, ஏதோ குளிர்பானம் அருந்துவதைப் போல குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

கிராமங்களில் குடிக்காத இளைஞர்களை இன்று பார்க்கவே முடியவில்லை.
இம்மாதிரி செயல்களை தட்டிக் கேட்கும் மனநிலைகூட மற்றவர்களுக்குப் போய்விட்டது. காரணம், அவர்கள் தெருவில் செய்வதை, இவர்கள் வீட்டில் செய்யப் போகிறார்கள்.

குடிப்பதெல்லாம் இந்த காலத்தில் ஒரு குற்றமா என்ற எண்ணத்தை தமிழக மக்களிடையே திமுக – அதிமுக அரசுகள் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்படுத்தி வந்தன.

இந்த ஓராண்டில் குடிப்பது நமது தேசிய கடமை என்ற நிலைக்கு மக்களைத் தயார்ப்படுத்தியுள்ளது ஜெயலலிதா அரசு. அதாவது திமுக ஆட்சித்

இதை வளர்ச்சி, சாதனை என்றெல்லாம் சொல்லி விளம்பரப்படுத்திக் கொள்வது எத்தனை கேவலம்!!

சட்டமன்றம்.. ஜெயலலிதாவுக்குப் பிடித்த 110-ம், மக்களுக்கு அவர் விரும்பிப் போடும் 111-ம்!

ஜெயலலிதா ஆட்சிக் காலம் என்றால் மட்டும் சட்டமன்றத்துக்கு அலுவல் பளு குறைவு. பட்ஜெட் உரைகூட சுருக்கமாகத்தான் இருக்கும்.

காரணம் 110 விதியின் கீழ், என்று கூறிவிட்டு அவர் அறிவிப்பு மழையாகப் பொழிவார். இந்த அறிவிப்புகளில் எத்தனை முழுமையாக நிறைவேறின என்பது அதைப் படித்தவருக்கே வெளிச்சம்! எத்தனைப் பேர் இதையெல்லாம் கவனத்தில் வைத்து கேள்வி கேட்கப் போகிறார்கள் அல்லது எழுதி கிழிக்கப் போகிறார்கள் என்ற அசாத்திய நம்பிக்கைதான் இதற்கு முக்கிய காரணம்.

எதிர்த்துப் பேசவோ, கேள்வி எழுப்பவோ ஆளே இருக்கக் கூடாது இந்த மன்றத்தில். எப்போதும் அவர் கேட்க விரும்புவது புகழுரைகளே. அந்த மனநிலையை ரொம்ப தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் ஆவரது கட்சிக்காரர்களும், சில கூட்டணிக் கட்சியினரும், கிடைக்கிற கேப்பிலெல்லாம் அம்மா பாமாலை பாட, புளகாங்கிதத்துடன், இப்படியல்லவா எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும் என்று வாய்விட்டுப் பாராட்டி மகிழ்கிறார் முதல்வர்!

எந்தத் துறைக்கு யார் அமைச்சர்?

கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல், எந்த இணையதளம் அல்லது நாளிதழையும் பார்க்காமல், இந்தத் துறைக்கு இன்னார்தான் அமைச்சர் என்று பட்டென்று உங்களால் சொல்ல முடியுமா… முடிந்தால் பெரிய சாதனைதான்!

நம்பகத் தன்மையோ, வகிக்கும் பதவிக்கான கல்வியறிவோ இல்லாதவர்களை அமைச்சர்களாக்கியுள்ள ஜெயலலிதா, அவர்கள் மூலம் எதைச் சாதிக்கப் போகிறார்? அமைச்சர்களாக குறைந்தபட்ச தகுதிதான் என்ன? யார் நன்றாகக் காலில் விழுகிறார் என்பதா… அல்லது போயஸ் தோட்ட சமையலறை அரசியலில் நல்ல தேர்ச்சி இருக்க வேண்டுமா?

இருக்கும் 33 அமைச்சர்களுக்கும் (முதல்வர் உள்பட) துறை ரீதியான முன்னேற்றம் குறித்து ஒரு தேர்வு வைத்தால், யாராவது ஒற்றை இலக்கத்தைத் தாண்டி மதிப்பெண் பெறுவார்களா (நூற்றுக்குதான்!)…

குற்றங்கள் நடக்காத நாள் எது.. ஆந்திராவுக்குப் போனவர்கள் வெகேஷனுக்கு வந்து திருடுகிறார்களோ?

நான் முதல்வராகப் பதவி ஏற்றேன் என்று கேள்விப்பட்டவுடன் திருடர்களும் கொள்ளையர்களும் எங்கோ ஆந்திரா பக்கம் போய்விட்டார்களாம் என்று மிகுந்த எக்காளத்துடன் ஜெயலலிதா அறிவித்த அடுத்த நாளிலிருந்தே ஆரம்பித்துவிட்டன கொள்ளைகளும் கொலைகளும். இன்றைய தேதிக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் மிக மோசமான காலகட்டம் என்றால் ஜெயலலிதாவின் இந்த ஓராண்டுதான்.

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து மிகப் பெரிய வங்கிக் கொள்ளைகள் மற்றும் நகைக்கடை கொள்ளைகள். இந்த வங்கிக் கொள்ளைகளை கண்டுபிடிப்பதாகக் கூறி போலீஸ் செய்த என்கவுன்டர் கொலைகளில் இன்னும் கூட நியாயம் கிடைக்கவில்லை!

சென்னை கீழ்கட்டளை அருகே வங்கிக் கொள்ளை நடந்த அன்று மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 37 கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன!

இன்றும் கூட நகைக் கடை கொள்ளை, அடகுக் கடை கொள்ளை, வீடுபுகுந்து நகைகள் பறிப்பு, ரொக்கம் பறிப்பு என தொடர்கிறது.

போலீஸ் – கொள்ளையர் இடையே நிலவும இணக்கமான சூழல்தான் சட்டம் ஒழுங்கைக் காப்பதில் உள்ள மிகப்பெரிய சவால். இந்த சவால் ஜெயலலிதாவுக்குப் புரிந்திருந்தும், போலீசாரை கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் இருப்பதுதான் பெரிய ஆபத்தாக உள்ளது.

தெளிவற்ற, உறுதியற்ற முதல்வர்…

ஜெயலலிதா என்றதுமே உறுதியானவர், தைரியமானவர், தெளிவாக முடிவெடுக்கக் கூடியவர் என்ற இமேஜை அவரது ஆதரவாளர்கள் கடந்த காலங்களில் உருவாக்கி வைத்துள்ளனர்.

அந்த இமேஜைக் கூட தானே தூள்தூளாக்கிக் கொண்டார் இந்த ஓராண்டில் ஜெயலலிதா.

ராஜீவ் கொலை வழக்கில், அப்பாவிகள் மூவர் கழுத்துக்கு தூக்குக் கயிறு தயாராக உள்ளது. இவர்களைக் காக்க வேண்டும் என வைகோ, சீமான், நெடுமாறன் போன்ற உணர்வாளர்கள் எழுப்பிய குரல்களை முதலில் ஏற்று, சட்டப் பேரவையில் தீர்மானமும் கொண்டு வந்த முதல்வர், அடுத்தடுத்து அடித்த பல்டிகள் நகைப்புக்குள்ளாகிவிட்டது அவரது நிலைப்பாட்டை.

கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினையில் ஆரம்பத்தில் ஜெயலலிதா விட்ட வீராவேச அறிக்கைகள், மக்களுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் எனது அரசு அனுமதிக்காது என அவர் மத்திய அரசுக்கு விட்ட சவால்களைப் பார்த்து புளகாங்கிதமடைந்து, அவரைப் போற்ற ஆரம்பித்துவிட்டன, அவரை விமர்சித்து வந்த ஒருசில பத்திரிகைகளும். ஆனால் அடுத்த சில தினங்களில் அடித்தார் பாருங்கள்… அது அபார பல்டி! அதிலும் போராட்டக்காரர்களைப் பணிய வைக்க அவர் தனது போலீசைப் பயன்படுத்திய முறை, கோத்தபாய தோத்தான் போங்கள்!!

-தொடரும்…
38 thoughts on “அதிமுக ஆட்சி – ஒரு ஆண்டு கழிந்தது! – பகுதி-1

 1. தினகர்

  “ஜெயலலிதாவைத் திட்டுபவர்கள் எல்லாம் திமுக அனுதாபி என்பது, ‘மஞ்சள் சேலை கட்டினவளெல்லாம் என் பொண்டாட்டி’ என்பதற்கு சமம்.”

  ரொம்ப சரியாகச் சொன்னீர்கள். ஜெ.வை திட்டுபவர்கள் பெரும்பாலும் சொந்த அனுபவத்தில் பட்ட அவஸ்தைகளால் தான்.

  அவர் போயஸ் தோட்டத்திலிருந்து கிளம்பி, ஏர்ப்போர்ட், சிறுதாவூர் என்று போவதற்காக, பல நாட்கள் வேளச்சேரி ரோடு. கோட்டூர்புரம் சிக்னல், தேனாம்பேட்டை சிக்னல் என்று ட்ராபிக்கில் வண்டியை நிறுத்தி விட்டு மணிக்கணக்காக காத்து கிடந்தது இந்த ஜென்மத்தில் மறக்காது..

  இப்போ பஸ் டிக்கெட்டுக்கு காசு எடுக்கும் போதெல்லாம் வாயாற, மனசார திட்டுற மக்கள் எல்லாம் திமுகவினராகிவிட முடியுமா?

 2. தினகர்

  ” ஜெயலலிதாவை குறைந்தது மூன்றாண்டுகள் வரை விமர்சிக்கவே கூடாது என்கிறது சோ உள்ளிட்ட ஜால்ரா கோஷ்டி. மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் அவரால் எந்த நடவடிக்கையையும் திடமாக மேற்கொள்ள முடியுமாம் (உலகிலேயே மிகப்பெரிய கத்துக்குட்டி ஜெ என்று சொல்ல வருகிறார்களோ!!)”

  மூன்றாண்டுகள் என்ன ஐந்தாண்டுகளே இவர்கள் எடுத்துக் கொள்ளட்டுமே.. ஐந்தாண்டுகள் முடிந்ததும் மக்களே ’விட்டு விளாசப்’ போகிறார்கள். அப்புறம் இவர்கள் விமரிசித்து என்ன ஆகப்போகிறது..?

 3. HOTLINKSIN.Com

  சமீபகாலமாக தொடர்ந்து விபத்துகளாகவே நடக்கிறதே… அது ஏன்…?
  ……………..
  ராட்டினம் விமர்சனம்
  http://www.hotlinksin.com/story.php?id=11197
  “டர்ட்டி பிக்ச்சரில் ” நான் நடிக்க மாட்டேன்!!நயன்தாரா
  http://www.hotlinksin.com/story.php?id=11235

 4. Tamil Magan

  தமிழக வரலாற்றில் மிக மோசமான ஆட்சி என கல்வெட்டுகளில் பொறித்து வைக்க வேண்டிய ஆட்சி இது.

 5. Krishna

  இப்படிப்பட்ட ஆட்சியை திமுக குடும்ப ஊடகங்களைத் தவிர மற்ற ஊடகங்கள் எல்லாம் ஏன் போற்றுகின்றன என்று சொன்னால் நன்றாக இருக்கும். இவரை வழக்கமாக எதிர்க்கும் ஊடகங்கள் கூட செய்த அளவுகளில் திருப்தி இருக்கிறது ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஏன் தலையங்கங்கள் எழுதுகின்றன?

 6. Sada

  ஜெயா ஆட்சி ஒழிந்தால்தான் தmizh நாடு உருப்படும்..

 7. Rangasamy

  ஜெயலலிதாவின் இந்த ௫ ஆண்டு முடிஞ்சதும், மக்களை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாதுன்னு ரஜினிகாந்த் உணர்வர். அதுக்காகத்தான் இந்த காட்சிகளை ஆண்டவன் அரங்கேதறான்.

 8. Vel

  தி மு க ஆச்சியில் irunthathu தான் இப்போ தொடர்கிறது…
  Nothing new happened in ADMK government… it is not right to criticize jayalalitha’s govt
  1. Madhu virapanai same as DMK Govt….
  2. Sattam Olungu No difference … Even in DMK govt same situation…
  3. Don’t simply support Rajiv Gandhi’s murderers…
  4. Even in DMK Govt power cut was there… in one year magic cannot be done… She to done have any other choice to improve the power situation.. only possibility she had is Kudankulam.. she utilized it.. thats all…
  Simply by sitting outside you should not critize….CM சீட்ல உக்காந்து பாத்தாதான் தெரியும் …
  ஒரு வருஷத்துல magic போட்டாதான் தமிழ்நாட்டை மாத்த முடியும் …

 9. enkaruthu

  அருமையான கட்டுரை சார்(என் கல்லூரியில் கூட ஓபி அடிக்காத வாத்தியாரைதான் சார் என்ற கூப்பிடுவேன்) . கொஞ்ச நாள் கிடைத்து இன்றுதான் நமது தளத்தை பார்த்து ஒரு கமெண்ட் போட்டு விட்டு வருகிறேன் என்ன இந்த பதிவை நான் முன்பே படித்திருந்தால் நான் keyboard கூட ஒரு உத்தம் செய்ய வேண்டிய இருந்திருக்காது .நான் கூட ஒருமுறை நாம் ஏன் இணையதளத்தை திறந்தாலே என்வழியை பார்கிறேன் என்று நினைத்திருக்கிறேன் அதற்க்கு இந்த பதிவை பார்த்தவுடன் எனக்கு தெளிவு கிடைத்துவிட்டது.அதற்க்கு ஒரே காரணம்தான் நீங்களும் நானும் சாதாரண மக்களின் கோணத்தில் இருந்து சிந்திப்பதுதான் சார்.

 10. தினகர்

  “மற்ற ஊடகங்கள் எல்லாம் ஏன் போற்றுகின்றன என்று சொன்னால் நன்றாக இருக்கும்”

  உங்களுக்கு தெரிந்தால் சொல்ல வேண்டியது தானே? யார் தடுக்கிறார்கள். பக்கா அம்மா ஆதரவாளரான உங்களாலே சொல்ல முடியவில்லை என்றால் சாதனை எதுவுமே இல்லை என்பது தெளிவாக தெரிகிறதே..

 11. anbudan ravi

  $$$$$ ஒரு ஆண்டு கழிந்தது என்று சொல்வதைவிட, ஒரு ஆண்டு கிழிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்….கிழிந்தது மக்களின் வாழ்க்கையும் அவர்களின் பைகளும். விலை ஏற்றத்தால் நடுத்தர / வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் படும் பாடு மிகப்பெரும் வேதனை. சுட்டெரிக்கும் அனல் கக்கும் வெய்யிலில் மின்சாரம் இல்லாமல் இரவில் தூக்கம் இல்லாமல் மக்கள் படும் பாடு அதை விட கொடுமை. நிலைமை சரியாகும்வரை பொறுத்திருங்கள் என்று சொல்கிறார்கள்…ஆனால் அதுவரை உயிரோடு இருப்பார்களா? குளிரூட்டப்பட்ட அறையில் உட்க்கார்ந்துகொண்டு பேசுபவர்களுக்கு மக்களின் அழுகுரல் எங்கே கேட்கப்போகிறது $$$$$

  அன்புடன் ரவி.

 12. மிஸ்டர் பாவலன்

  ///இப்படிப்பட்ட ஆட்சியை திமுக குடும்ப ஊடகங்களைத் தவிர மற்ற
  ஊடகங்கள் எல்லாம் ஏன் போற்றுகின்றன என்று சொன்னால் நன்றாக
  இருக்கும்.////

  தினமலர், துக்ளக் பத்திரிகைகள் ரொம்ப காலமாகவே “நமது எம்.ஜி.ஆர்”
  ரேஞ்சுக்கிற்கு அ.தி.மு.க. ஆதரவு பத்திரிகைகளாக மாறி விட்டன.
  இவற்றின் கருத்துக்களை “நடுநிலை கருத்துகள்” ஆக ஏற்க முடியாது.
  இன்னும் சொல்லப் போனால் சென்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைப்பதற்கே சோ நிறைய பணியாற்றினார் என்பது தேர்தல் முடிந்த
  பிறகு தான் வெளியானது.

  /// இவரை வழக்கமாக எதிர்க்கும் ஊடகங்கள் கூட செய்த அளவுகளில்
  திருப்தி இருக்கிறது ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று
  ஏன் தலையங்கங்கள் எழுதுகின்றன?///

  ஊடகங்களை விடுங்கள்! சமச்சீர் கல்வி, புத்தகங்கள் தருதல், நக்கீரன்
  விவகாரம் (எல்லாம் நினைவிற்கு இல்லை!) போன்றவற்றில்
  நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு தமிழக அரசு உள்ளானது. தி.மு.க.
  அரசு வெளியிட்ட புத்தகங்களில் குறை இருந்தாலும் சீர் திருத்தி
  தாமதத்தைக் குறைத்திருந்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்க
  மாட்டார்கள். பல இடங்களில் புத்தகங்கள் தாமதாகக் கிடைத்து ஒரு ஆண்டு
  கல்வியை குறைந்த மாதங்களிலேயே படித்து முடிக்க வேண்டிய அவதி
  சிறு பிள்ளைகளுக்கு ஏற்பட்டது. முதல்வர் நன்கு படித்து rank வாங்கியவர்.
  அவர் இதைப் பொறுப்பான முறையில் ego பார்க்காமல் நடந்து
  கொண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. நானும் இந்த வலையில் அரசிற்கு
  எதிராக தீர்ப்புக்கள் வந்த போதெல்லாம் “நீதிக்குத் தலைவணங்கு” என்று
  பதில் எழுதி வந்திருக்கிறேன்.

  மின்வெட்டு பற்றாக்குறையை சரியான முறையில் முதல்வர்
  எதிர்கொள்ளவில்லை என்பது என் கருத்து. மத்திய அரசு போதுமான
  ஆதரவு தரவில்லை என்பதும் உண்மை. (முதல்வர் பிரதமருக்கு எழுதிய
  கடிதத்தின் link நானே முன்பு கொடுத்திருக்கிறேன்). கூடங்குளம்
  விவகாரத்தில் கலைஞர் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்த போதிலும்
  போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக முதலில் நடந்து கொண்டு, பின்னர்
  இடைத் தேர்தல் முடிந்ததும் உடனே அதை அமுல் படுத்த ஒப்புக்
  கொண்டார். துக்ளக் உட்பட பல ஊடகங்களில் இது விமர்சிக்கப்பட்டது.
  மின்வெட்டுப் பிரச்சினையை மூன்று மாதங்களில் தீர்க்க முடியாது,
  இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றால் அவ்வாறு ‘வாக்குறுதி’ கொடுத்திருக்க
  வேண்டாம் என்று தான் நான் நினைக்கிறேன்.

  திருநெல்வேலி அருகில் தலித் போராட்டம், போலீஸ் அடக்குமுறை
  என்றெல்லாம் படித்தேன். அவற்றையும் பொறுப்பாக நடந்து
  கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

  முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முதல்வரின் நடவடிக்கைகள்
  மிகவும் பாராட்டத் தக்கவை. மாணவர்களுக்கு கணினி, புதிய சீருடை
  போன்றவை ஆரோக்கியமானது. Term-system for school kids மிக நல்ல
  திட்டம். Medical insurance scheme நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.

  Mono rail மிகவும் விமர்சிக்கப்பட்டது. பாம்பேயில் மோனோ ரயில்
  விரைவில் அறிமுகப் படுத்த இருக்கிறது. இவை சுற்றுப்புற மாசைக்
  குறைக்கும் (pollution free) என்பதால் இவற்றைப் பாராட்டுகிறேன்.
  நடைமுறைச் சிக்கல், profit போன்றவை தனியாக ஆராயப்பட
  வேண்டியவை.

  சில ஊடகங்கள் என்றும் ஆளும் கட்சியை எதிர்க்க பயப்படுகின்றன.
  ‘என் வழி’ ஒரு விதிவிலக்காக இருக்கலாம். அவ்வாறு எதிர்க்கவில்லை
  என்பதால் ஆட்சி திருப்திகரமாக இருக்கிறது என சொல்ல முடியாது.
  சராசரி மக்களுடன் நான் பழகுவதால் பால் விலை உயர்வு, பேருந்து
  உயர்வு, மின்வெட்டு பாதிப்பு, சமச்சீர் குளறுபடி இவற்றால் மக்கள்
  பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதே உண்மை. அடுத்த தேர்தலுக்கு சில
  வருடங்கள் இருப்பதாலும், இனி சில வருடங்களுக்கு விலை உயர்வு
  இல்லை என்ற நிலை இருந்தாலும், அதிருப்தி குறைய வாய்ப்பிருக்கிறது.
  மாநில பொருளாதார நிலை, வளர்ச்சித் திட்டங்கள், ஊழல் களைதல்,
  நிர்வாக சீர்திருத்தங்கள் நல்ல நிலையில் நடந்தால் முதல்வருக்கு நல்ல
  பெயர் கிடைக்கலாம்.

  நான் முன்பு அ.தி.மு.க. ஆதரவு நிலையில் இருந்தாலும், இப்போது
  கட்சி சார்பை, விட்டு விட்டேன். Issue based support என்பது போல் ஒரு
  பிரச்சினைக்கு அரசு எடுக்கும் முடிவை ஒட்டி ஆதரவு தருவதாக
  உள்ளேன். அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை எல்லாம் ஆதரித்து
  எழுத நாம் அவர்கள் கட்சிக் காரர்கள் அல்ல என்பதையும் என் வலை
  நண்பர்களுக்கு நான் நினைவுபடுத்துகிறேன்.

  நடக்கும் அரசிற்கு ‘marks” போட நான் விரும்பவில்லை. அரசின்
  செயல்பாடுகள் சிறப்பாக நடக்க என் வாழ்த்துக்களும், ஒத்துழைப்பும் உண்டு.

  -==== மிஸ்டர் பாவலன் ===-

 13. குமரன்

  ///Simply by sitting outside you should not critize….CM சீட்ல உக்காந்து பாத்தாதான் தெரியும் …
  ஒரு வருஷத்துல magic போட்டாதான் தமிழ்நாட்டை மாத்த முடியும் …///

  என்ன சொல்ல வருகிறீர்கள்? முதல்வன் படம் மாதிரி வினோவை ஒருநாள் CM சீட்டில் உட்கார்ந்து பார்க்கவேண்டும் என்றா சொல்கிறீர்கள்? செய்து பார்க்கலாம்தான்.

 14. தினகர்

  ’பாவலன்’ வேடம் கலைத்து, விஞ்ஞானியான உங்கள் அடிமனதிலிருந்து வந்துள்ள கருத்துக்களுக்கு பாராட்டுக்கள்.. 🙂

 15. குமரன்

  ///அவர் இதைப் பொறுப்பான முறையில் ego பார்க்காமல் நடந்து
  கொண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. ///
  ஜெயாவைப் பொறுத்த மட்டில் எந்த விஷயமானாலும் தனக்கு மிஞ்சித்தான் எதுவுமே. அதாவது ஈகோ இல்லாமல் எதுவும் இல்லை.

  எம்.ஜி.ஆர் படப்பாடலை கொஞ்சம் மாற்றி …

  நானில்லாமல் நீ இல்லை.
  தானே எவரும் நிலைப்பதில்லை.
  எனக்கென நான் இருக்கின்றேன்
  என்றும் என்னை நினைக்கின்றேன்

  என்று எழுதலாம்.

  விரும்பினால் மிஸ்டர் பாவலன் தொடரலாம் ….

 16. குமரன்

  தினகர்

  மிஸ்டர் பாவலன் ஆரம்பத்தில் கிண்டலாகவே அதிமுக பற்றி எழுதிவந்தார். நம்மவர்களே அவரை உசுப்பி உசுப்பி, அவரே எதிர்பார்க்காமல் அதிமுக ஆதரவு நிலையை எடுக்க ஆரம்பித்தார். சில சமயம் தீவிர திமுக ஆதரவாளர்களை சும்மா வெறுப்பேற்றவே இப்படி எழுதுகிறாரோ என்று கூட நான் நினைத்தேன்.

 17. மிஸ்டர் பாவலன்

  ///மிஸ்டர் பாவலன் ஆரம்பத்தில் கிண்டலாகவே
  அதிமுக பற்றி எழுதிவந்தார். /// (குமரன்)

  ரவி பெர்னார்டு பதிவுகளை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.
  வினோ மிகவும் சிறப்பாக படங்களைக் கொடுத்து எனது
  சாதாரண பதிவுகளுக்கு புகழ் சேர்த்துக் கொடுத்தார்.
  ரவி பெர்னார்டு பிரபு தேவா பேட்டி, மூப்பனார் பேட்டி எனக்கு
  மிகவும் பிடித்து இருந்தது. எனது busy deadlines work-ல்
  ஜெயா டி.வி. பார்ப்பதை நிறுத்தி விட்டேன். செய்திகளை
  ஊடகங்கள் மூலமாக படிக்கிறேன். இதில் ஊடகங்கள்
  biased ஆக இருப்பதால் ஒரு தரப்பு வாதம் மட்டும் அல்லாது
  பல தரப்பு வாதங்களும் படித்தால் நலம். கூடங்குளம் பற்றி
  நான் ஆரம்பத்தில் பல பதிவுகள் எழுதி இருந்தாலும் ‘சவுக்கு’
  தளத்தில் ஞானி என்பர் எழுதிய பதிவு ஒரு eye-opener ஆக
  இருந்தது. நாம் நிறைய வாசிக்க வேண்டும் என்பதே என்
  வேண்டுகோள். மதுரையில் என் பள்ளி நாட்களில் மார்க்சிஸ்ட்
  தோழர்கள் நடத்தி வந்த மினி-நூலகங்களிற்கு சென்றதுண்டு.
  கயிற்றில் பத்திரிகைகள், செய்தித்தாள்கள் தொங்கும். அவற்றை
  படித்து விட்டு மடிப்புக் குலையாமல் அதே கயிற்றில் போட்டு விட
  வேண்டும். பின் கல்லூரி நாட்களில் செல்பில் இருக்கும் அத்தனை
  நூல்களையும் படித்த நினைவுண்டு. இப்பொழுது ஆன்மீக நெறியில்
  செல்கிறேன். தினகர் குறிப்பிடுவது போன்ற விஞ்ஞானி நான்
  அல்ல. நிறைகுறை உடைய சாதாரண மனிதன் நான். வாழும்
  நாட்களை பயனுள்ளதாக நண்பர்களுடன் வாழ விரும்புகிறேன்.
  எனது கருத்துக்கள் யாரையும் புண்படுத்துவதாக இருந்தால் அவற்றை
  பண்படுத்துவதாக உள்ளேன்.

  “யாதும் ஊரே யாவரும் கேளிர்”.

  -=== மிஸ்டர் பாவலன் ===

 18. மிஸ்டர் பாவலன்

  -==== மலரும் நினைவுகள் ===

  எனது பழைய பதிவுகள் – வினோவின் படங்கள், முகவுரை – அருமை!!

  ரவி பெர்னார்டு, பிரபு தேவா கற்பனைப் பேட்டி:
  மின் இணைப்பு: http://po.st/lxnlGE

  ரவி பெர்னார்டு, மூப்பனார் கற்பனைப் பேட்டி:
  மின் இணைப்பு: http://po.st/zBgUYB

  நண்பர்களே, என்னால் தலைகீழாக நின்றாலும் இப்படிப் பட்ட
  பதிவுகளை இனிமேல் எழுத முடியாது. அந்தக் காலத்தில்
  மனதில் பட்டதை நையாண்டி செய்து எழுதி இருந்தேன்.
  அமெரிக்காவில் “Saturday Night Live” என ஒரு programme-ல்
  இது போன்ற satire skits சகஜமாக வரும். இந்தக் கட்டுரைகளோடு
  கீழே உள்ள comments பகுதியையும் படித்துப் பாருங்கள்! நன்றி!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 19. Krishna

  //உங்களுக்கு தெரிந்தால் சொல்ல வேண்டியது தானே? யார் தடுக்கிறார்கள். பக்கா அம்மா ஆதரவாளரான உங்களாலே சொல்ல முடியவில்லை என்றால் சாதனை எதுவுமே இல்லை என்பது தெளிவாக தெரிகிறதே..//

  எனக்கு ஏன் தெரிய வேண்டும், நானா அவர்களை அப்படி எழுதச் சொன்னேன்? அவர்கள் பாராட்டுகிறார்கள் என்றால் அவர்கள் இந்த ஆட்சி பாராட்டுக்குரியது என்று கருதுகிறார்கள்.

  //சில ஊடகங்கள் என்றும் ஆளும் கட்சியை எதிர்க்க பயப்படுகின்றன.//
  மற்ற ஊடகங்கள் வேண்டுமானாலும் பயப்படலாம், ஆனால் ஹிந்து, new indian express போன்றவை பயப்படாது, அவற்றை பயமுறுத்தவும் முடியாது. அவர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கே பயந்ததில்லை. ஒரு வேளை இந்த அரசு அவர்களை மிரட்டி இருந்தால் அவர்கள் வீம்புக்காகவாவது இந்த ஆட்சியை கண்டித்திருப்பார்கள். new indian express கூட பாரபட்சம் என்று சிலர் சொல்லலாம் – ஆனால் ஹிந்து பத்திரிகை அப்படியல்ல. அவர்களுக்கு பாஜக மற்றும் ஜெயலலிதாவை அறவே பிடிக்காது. அதிலும் ஜெயலலிதா ஒரு சிறு துரும்பை நகர்த்தினால் கூட வரிந்து கட்டிக்கொண்டு கண்டிப்பார்கள். கடந்த ஜெ ஆட்சியின் போதே போலீஸ் ஹிந்து அலுவலகத்திற்கு நுழைந்த போது அதை வீரமாக எதிர்கொண்டு ஹிந்து ராம் ஆங்கில தொலைக்காட்சிகளில் அவரை கடுமையாக விமர்சித்தார். அந்த அடக்குமுறையை எதிர்த்து சித்தார்த் வரதராஜன் என்பவர் கடுமையாக கட்டுரை எழுதியிருந்தார். அந்த சித்தார்த் வரதராஜன் தான் இப்பொழுது ஹிந்து பத்திரிகையை நடத்துகிறார். அவர் தலையங்கத்தில் “தலைமை செயலக இட மாற்றம், அண்ணா நூலக இடமாற்றம் கண்டனத்துக்குரியது. சமச்சீர் கல்வியிலும் பாட புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டதில் காலதாமதத்தை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் substandard பாடத்தை நீக்க முற்பட்டது பாராட்டுக்குரியது, vision-2023 மற்றும் நில ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலங்களை உரியவருக்கு திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுத்தது போன்றவை பாராட்டுக்குரியது. முதல்வர் ஜெயலலிதா இன்னும் உத்வேகமாக செயல்பட்டால் நல்ல முதல்வர் என்ற பெயரை எடுப்பார்” என்று அந்த தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது.

  ஆக பாவலன் அவர்களே, ஊடகங்களை குறைவாக எடை போடாதீர்கள். அவர்கள் தான் ஒரு அரசின் தலைஎழுத்தை முக்கால் வாசி நிர்ணயிக்கிறார்கள். போபோர்ஸ் ஊழல், வளர்ப்பு மகன் திருமணம், டான்சி ஊழல், அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ், 2G ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன் வெல்த் ஊழல், எடியூரப்பா ஊழல், கடந்த திமுக ஆட்சியின் சினிமா அபகரிப்பு, நில அபகரிப்பு என்று எதை எடுத்தாலும் கட்சி பாகுபாடு பார்க்காமல் மக்களிடம் ஒரு opinion உருவாக காரணமாக இருப்பார்கள். அவர்கள் இதுவரை இந்த அரசுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் பாதகமாக எதையும் சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வரும் ஆண்டுகளில் இந்த அரசு எதையாவது பயங்கரமாக செய்து மக்களிடம் மிகப் பெரிய அளவில் நெகடிவ் தாக்கத்தை ஏற்ப்படுத்தினால் மட்டும் தான் மக்களுக்கு எரிச்சல் வரும், மற்றபடி விலை ஏற்றம் என்பதெல்லாம் ஒரு அதிருப்தி அளவில் தான் இருக்கும், ஏனெனில் விலை ஏற்றம் என்பது இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டுகளில் இருந்து மக்களுக்கு பழக்கப்பட்டது தான். இன்னும் 4 ஆண்டுகளில் இந்த புதிய விலையே மக்களின் மனதில் பதிந்து விடும். ஆக இது நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.
  __________________

  கிருஷ்ணா..

  போதும் முடியல. இந்து,எக்ஸ்பிரஸ் பற்றியெல்லாம் நீங்கள் தரும் சான்றிதழ்கள் அந்த நிர்வாகங்களையே வெட்கித் தலைகுனிய வைக்கும். எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. ஜெயலலிதாவை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதில் ஓ பன்னீர்செல்வம் கூட உங்களிடம் தோற்றுப் போவார்.
  -வினோ

 20. மிஸ்டர் பாவலன்

  ///ஆக பாவலன் அவர்களே, ஊடகங்களை குறைவாக எடை போடாதீர்கள்.
  அவர்கள் தான் ஒரு அரசின் தலைஎழுத்தை முக்கால் வாசி
  நிர்ணயிக்கிறார்கள். /// (கிருஷ்ணா)

  ஒரு அரசின் தலையெழுத்தை நிர்ணயிப்பது மக்களே! ஊடகங்கள் அல்ல!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 21. Shunmugam

  //கிருஷ்ணா..
  போதும் முடியல. இந்து,எக்ஸ்பிரஸ் பற்றியெல்லாம் நீங்கள் தரும் சான்றிதழ்கள் அந்த நிர்வாகங்களையே வெட்கித் தலைகுனிய வைக்கும். எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. ஜெயலலிதாவை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதில் ஓ பன்னீர்செல்வம் கூட உங்களிடம் தோற்றுப் போவார்.
  -வினோ//

  நன்றி வினோ!!!!
  எத்தனையோ முறை இவரின்(கிருஷ்ணா) கமெண்ட் ஜெயா புராணமாக இருக்கும்பொழுது எரிச்சல் வந்ததுண்டு. என்னைப் போல் பலருக்கும் கோபம் கூட வந்ததுண்டு. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வேலையை செய்து கொண்டு இருக்கிறார் இவர்.
  நீங்கள் கொடுத்த பதில் நல்ல நெத்தியடி!!!

 22. Krishna

  வினோ அவர்களே, அவர்கள் எழுதிய கருத்துகளுக்கு அவர்கள் வெட்கி தலை குனியும் அளவுக்கு அவர்கள் தங்கள் நாளேடுகளை நடத்தவில்லை. 160 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க ஹிந்துவும் 70 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க indian express ஏடுகளைப் பற்றியும் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதிலும் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. அவர்கள் இந்த ஆட்சியை கண்டித்திருந்தால் நானும் அதையே தான் மேற்கோள் காட்டியிருக்கப் போகிறேன்.
  _________________

  எத்தனை ஆண்டுகள் குப்பை கொட்டினார்கள் என்பது பத்திரிகைகளின் தரத்துக்கும் நடுநிலைக்கும் அளவு கோலாகிவிட முடியாது கிருஷ்ணா. நீங்கள் குறிப்பிடுகிற பத்திரிகைகளின் லட்சணங்களை உள்ளிருந்து பார்த்து, சலித்து, நொந்து வெளியேறிய கூட்டத்தைச் சேர்ந்த ஒருவனாகச் சொல்கிறேன்.

  இன்னொன்று… ஜெயாவை எதிர்த்தே ஆக வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லைதான். ஆனால் அதற்காக ‘நேற்று வெயில் 43 டிகிரி’ என்றால், ‘பார்த்தீர்களா… முன்பு கருணாநிதி ஆட்சியில் 44 டிகிரி.. அம்மா வந்ததால் 1 டிகிரி குறைந்தது’ என்கிற அளவுக்கு அபத்தமான ஆதரவுக் கருத்துக்கள் தேவையா?

  பப்ளிசிட்டிக்கா ஜெ அரசு ஒதுக்கிய ரூ 25 கோடியில் பங்கு பெற்ற அந்த பெரும் பத்திரிகைகள் வேறு எப்படி எழுதுவார்கள் என எதிர்ப்பார்க்கிறீர்கள்?

  -வினோ

 23. Ganesh Shankar

  //தினமலர், துக்ளக் பத்திரிகைகள் ரொம்ப காலமாகவே “நமது எம்.ஜி.ஆர்”
  ரேஞ்சுக்கிற்கு அ.தி.மு.க. ஆதரவு பத்திரிகைகளாக மாறி விட்டன.
  இவற்றின் கருத்துக்களை “நடுநிலை கருத்துகள்” ஆக ஏற்க முடியாது.
  இன்னும் சொல்லப் போனால் சென்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைப்பதற்கே சோ நிறைய பணியாற்றினார் என்பது தேர்தல் முடிந்த
  பிறகு தான் வெளியானது.//(பாவலன்)

  தினமலரை பற்றி எனக்கு அவளவாக தெரியாது.சில வருடங்களாக தான் படித்து வருகிறேன்.
  ஆனால்,கொஞ்சம் அவர்கள் முக்கியமான செய்திகளில் போடும் வாசகம் கொஞ்சம் பரபரப்பு தூண்டுவது போல் தெரிகிறது.இது நல்லது இல்லை என்று தான் தோன்றுகிறது.
  ஆனால், “நமது எம்.ஜி.ஆர்” ரேஞ்சுக்கிற்கு அ.தி.மு.க. ஆதரவு பத்திரிகைகளாக மாறி விட்டன என்பது ஏற்கும்படியாக இல்லை.
  எனக்கு தினமலரை பற்றி முழுவதுமாக தெரியாவிட்டாலும்,”Issue based support” என்பதை தான் துக்ளக் பின்பற்றி வந்திருகிறது.நீங்கள் அந்த பத்திரிகையை நன்றாக பின்தொடர்ந்தால் அது புரியும்.
  மற்றபடி,சில இடங்களிலும்,சில ஊடங்களில் பெயர் அடி படுவதை வைத்து சொன்னால்,அவசரத்தில் சொல்லுவது போல் ஆகி விடும்.
  இவ்வளவு ஏன்,1996-இல் தி.மு.க,மூப்பனார் கூட்டணி அமைப்பதற்கே சோ பணியாற்றினார்.அதுவும்,தேர்தலுக்கு பிறகு தான் தெரிந்தது.
  அப்போதைய நிலைமையில் அது தான் சரி,அது தான் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று சமீபத்தில் கூட கூறி இருக்கிறார்.
  ஆகவே இப்போது மட்டும் இல்லை,அப்போதும் அவர் பணியாற்றி இருக்கிறார்.
  ஏன்,சமீப காலத்தில் பழ.கருப்பையா ஒரு முறை கருணாநிதியை தாக்கி எழுதி இருந்தார்.அதே பதிவில்,உடனே அதற்கு நேர் மாறாக அவ்விடயத்தில் கருணாநிதியை தாங்கி எழுதி இருந்தார்.
  போன வருடம் சட்ட மன்றத்தில் நிறைவேறபட்ட தீர்மானத்தில்,சிலவற்றை கடுமையாகவே தாக்கி எழுதி இருந்தார்.
  இன்னும் கூட பல உதாரணங்கள் சொல்லலாம்.
  கூடங்குளம் மட்டும் இல்லை,இன்னும் பல விடயங்களில் அவர் இந்த ஆட்சியின் நிலைபாட்டை எதிர்த்தும் இருக்கிறார்.
  ஒரு நிகழ்வில்,இது இதனால் நன்மை பயக்கும்,இதனால் நன்மை பயக்காது என்று கூறுவதை பொறுத்து நாம் எவ்வாறு என்று எடுத்து கொள்ளலாம்.
  கருத்து வேறுபாடுகள் இருப்பதும்,கருத்து சிலருடன் ஒத்துப்போவதும் சகஜம் தான்.
  அதற்காக,கருத்து சார்ந்த காரணமும்,தெளிவான விளக்கமும் இருக்கும் போது,ஒருவருடைய கருத்தோடு ஒத்துபோவதனலோ,மாற்றாக இருபதனலோ “நடுநிலை இல்லை” என்று கூறமுடியாது.

  // Issue based support என்பது போல் ஒரு
  பிரச்சினைக்கு அரசு எடுக்கும் முடிவை ஒட்டி ஆதரவு தருவதாக
  உள்ளேன். அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை எல்லாம் ஆதரித்து
  எழுத நாம் அவர்கள் கட்சிக் காரர்கள் அல்ல என்பதையும் என் வலை
  நண்பர்களுக்கு நான் நினைவுபடுத்துகிறேன்.//(பாவலன்)

  கண்டிப்பாக,இது சரி தான்.முன்பே நான் ஒரு முறை கூறி இருப்பது போல அரசு ஆள்வது யாராக இருந்தாலும் சரி,அவர்கள் ஒரு கருவி அவ்வளவு தான்.அரசின் நிலைப்பாட்டில் அதனால் ஏற்படும் நன்மை,தீமையை பொறுத்து விருப்பு,வெறுப்பு இன்றி தான் நமது கருத்து அமைய வேண்டும்.அது தான் நடுநிலை.

  தி ஹிந்து நாளிதழின் பெயர் அடிபட்டதினால் ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.N.Ram அவர்கள்,2G விடயத்தில் காரண,காரியமில்லாமல் ஒன்றும் இல்லை என்று எழுதி இருந்தார்கள்.அது,என் என்று புரியவில்லை.அதே நேரத்தில் ஆதர்ஷ் ஊழல்,காமன் வெல்த் ஊழலில் வேறு மாதிரியாக சொல்லி இருந்தார்கள்,இப்படிபட்ட ஒரு பெரும் ஊழலில் இவ்வாறு நடந்து கொண்டது வியப்பாக தான் இருக்கிறது.கண்ணை மூடிக் கொண்டு கருணாநிதியை ஆதரிப்பதை அவர்கள் விடுவதாக இல்லை.
  எனக்கு கடுமையான கருத்து வேறுபாடுகள் உண்டு தி ஹிந்துவிடம். ஆனால்,இவ்வளவு தூரம் இரு வேறு நிலை பாட்டை அவர்கள் எடுத்தது,அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று தெரிகிறது.மேலும்,சமீப காலங்களில் ஒரு பரபரப்பு வேண்டி செய்தி வெளியிடுகிறார்கள்.

  ஆனால்,எக்ஸ்பிரஸ் நன்றாக தான் வெளியிடுகிறார்கள்.

 24. மிஸ்டர் பாவலன்

  ///அரசு ஆள்வது யாராக இருந்தாலும் சரி,அவர்கள் ஒரு கருவி அவ்வளவு
  தான்.அரசின் நிலைப்பாட்டில் அதனால் ஏற்படும் நன்மை,தீமையை
  பொறுத்து விருப்பு,வெறுப்பு இன்றி தான் நமது கருத்து அமைய
  வேண்டும்.அது தான் நடுநிலை./// (கணேஷ் ஷங்கர்)

  மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். மிக்க நன்றி!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 25. enkaruthu

  //நான் முன்பு அ.தி.மு.க. ஆதரவு நிலையில் இருந்தாலும், இப்போது
  கட்சி சார்பை, விட்டு விட்டேன். Issue based support என்பது போல் ஒரு
  பிரச்சினைக்கு அரசு எடுக்கும் முடிவை ஒட்டி ஆதரவு தருவதாக
  உள்ளேன். அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை எல்லாம் ஆதரித்து
  எழுத நாம் அவர்கள் கட்சிக் காரர்கள் அல்ல என்பதையும் என் வலை
  நண்பர்களுக்கு நான் நினைவுபடுத்துகிறேன்.//

  என்கருத்தை ஈகோ இல்லாமல் ஏற்று கொண்டதற்கு ரொம்ப நன்றி மிஸ்டர் பாவலன்(நான் இன்றுதான் உங்களை மிஸ்டர் என்று நெஞ்சில் இருந்து அழைக்கிறேன்).நண்பர்களே இப்பொழுது பாவலன் மற்றும் நான் முன்பு சொன்னதுபோல் யார் தப்பு செய்தாலும் அதை கண்டிக்கவேண்டும்.இவர் நம் நண்பரா ,நம் ஜாதியா,நம் ஊரை சேர்ந்தவரா என்றெல்லாம் பார்க்காமல் அவர் தவறு செய்தால் நாம் கண்டிக்கவேண்டும்.ஏனென்றால் யார் தவறு செய்தாலும் பாதிக்கபடுவது அந்த கோஷ்டியை சேர்ந்தவர்கள் அல்ல வெகுஜனமான நாம்தான்.உண்மையாலுமே குமரன் மற்றும் பாவலன் கருத்துகளை பார்த்து சந்தோஷபடுகிறேன்.எனகென்ன ஒரு ஆசை என்றால் எதையும் எதிர்பார்க்காமல் கருத்துகளை போடும் இந்த தளம் அனைத்து தமிழ் மக்கள் படிக்கும் தளமாக மாறினால் நல்லாயிருக்கும் .ஒரு தலைவர் ரசிகனாக நான் இந்த தளத்தை பார்த்து பெருமை படுகிறேன்.

 26. மிஸ்டர் பாவலன்

  ///உண்மையாலுமே குமரன் மற்றும் பாவலன் கருத்துகளை பார்த்து சந்தோஷபடுகிறேன்./// (என் கருத்து)

  குமரன் இந்த வலையில் சிறப்பாக எழுதி வருகிறார். அவரது பணி
  தொடர நானும் வாழ்த்துகிறேன். ஆனால் “மற்றும் பாவலன்” என்பதை
  நான் மறுக்கிறேன். ஏதோ காமெடியாக எழுத நான் அவ்வப்போது
  முயற்சி எடுத்தாலும் பெரிய விஷயம் அவ்வளவாக இருக்காது. எனது
  நண்பர்களே இதை ஏற்றுக் கொள்வார்கள். “வந்தார், பேசினார், சென்றார்”
  என்பது போல் தான் “என் வழி”யில் நான் எழுதும் கருத்துக்கள்.
  “ஆசை அறுமின்” என்ற இரண்டு சொல்லை வைத்து குமரன் ஒரு பெரிய
  பதிவை இன்று செய்தார். அவ்வாறு “எடுத்துக் கொடுக்கும்” பணியை
  நான் செய்து வருகிறேன்!

  ///ஒரு தலைவர் ரசிகனாக நான் இந்த தளத்தை பார்த்து
  பெருமை படுகிறேன்./// (என் கருத்து)

  உண்மை !

  கிருஷ்ணனுக்காக ஒரு தகவல் தருகிறேன். முன்பு இந்த வலையில்
  நான் அன்னா ஹசாரேயின் தீவிர ஆதரவாளனாக இருந்தேன். வினோவின்
  கட்டுரைகளுக்கு கடுமையான பதில் தாக்கல் செய்தேன். இப்போது
  கிருஷ்ணன்-வினோ exchange ஒன்றும் இல்லை என்று சொல்லும்
  அளவிற்கு காரசாரமாக விவகாரம் முற்றி, நான் வலையில் எழுதுவதையே
  நிறுத்தி இருந்தேன். பின்பு பல நாள், பல மாதங்கள் கழிந்து, அனைவரிடமும்
  பேசி விசாரித்த போது “அது ஒரு பெரிய fraud group ஆச்சே!” என்றெல்லாம்
  பதில் வந்தது. கேஜ்ரிவால், கிரண் பேடி பற்றி பல தகவல் தெரிந்து
  கொண்டேன். ஆக நாம் ஒரு நிலை எடுத்து விட்டால், அந்த நிலையை
  மாற்றிக் கொள்வதற்கு நாளாகிறது. “ஊடகங்கள் வாயிலாக நாம்
  செய்திகளை அறிந்து கொள்ளும் போது, தவறான ஊடகங்கள் மூலம்
  நாம் தவறான செய்திகளை மனதில் ஏற்றி, ஏதேதோ மனப்பிம்பங்களை
  நாம் ஏற்றிக் கொள்கிறோம். அது மாற வெகு நாளாகிறது.”

  நண்பர் கிருஷ்ணன் ஒரு நிலை எடுத்திருக்கிறார். ஒரு நாள் அது மாறும்
  என்ற நம்பிக்கை – என் அனுபவத்தின் மூலம் – எனக்கு இருக்கிறது.

  -=== மிஸ்டர் பாவலன் ===

 27. enkaruthu

  //ஆனால் ஹிந்து, new indian express போன்றவை பயப்படாது, அவற்றை பயமுறுத்தவும் முடியாது. அவர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கே பயந்ததில்லை. //

  கிருஷ்ணா அவர்களே பழைய இந்தியாவில் எல்லாம்தான் நேர்மையாக இருந்தது.காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியும் இப்பொழுது உள்ள காங்கிரஸ் கட்சியும் நேர்மையில் ஒன்று என்று கூறிவிடமுடியுமா.நானும் ஒரு 15 வருடங்களாக அனைத்து பத்திரிக்கைகளையும் படித்து வருகிறேன்.ஆரம்பத்தில் அவர்கள் போட்ட எல்லாத்தையும் நம்பிகொண்டிருந்தேன் ஆனால் நாளாக நாளாக இவர்கள் போடும் கருத்துக்கள் ஒரு சார்பாக எழுதுவதை உணர்ந்தேன்.அதனால் நான் என்ன செய்வேன் என்றால் ஒரு விஷயம் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்வதர்க்கு ஒரு கட்சிக்கு சார்பு நிலை எதிர்ப்பு நிலை என்று உள்ள அனைத்து பத்திரிக்கைகளையும் படிக்க ஆரம்பித்தேன்.அதில் போட்ட விசயங்களை மக்களிடம் பேசி அவர்கள் என்ன நினைகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வேன்.அப்பொழுதுதான் தெரிந்தது தமிழ் நாட்டு மக்கள் எவ்வளவு புத்திசாலி என்று.இதை வைத்து நான் ஒன்று சொல்கிறேன் புதுகோட்டை தேர்தலில் admk தான் ஜெய்க்கும்.ஏனென்றால் எதிர்க்கட்சி சேர்ந்தவரை ஜெயிக்க வைத்தால் நம் ஊருக்கு ஆளுங்கட்சி ஒன்றும் செய்யது என்று மக்கள் நினைக்கும் குணம்தான்.

  கிருஷ்ணா அவர்களே வினோ அவர்கள் எனக்கு தெரிந்து நான் sslc படுக்கும்பொழுது வந்த மாலை முரசு காலத்தில் இருந்தே பத்திரிகையாளராக பணி புரிந்தவர்(சார் உங்கள் நேர்மைதான் உங்களை popular ஆக்கவில்லையோ ). அதனால் பத்திரிகை உலகில் நடக்கும் அனைத்து விசயங்களும் இவர் அறிவார்.கிருஷ்ணா அவர்களே நேர்மையாக பேச நீங்கள் என்றும் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும் அது “கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்”.

 28. தேவராஜன்

  //முன்பு இந்த வலையில் நான் அன்னா ஹசாரேயின் தீவிர ஆதரவாளனாக இருந்தேன். வினோவின் கட்டுரைகளுக்கு கடுமையான பதில் தாக்கல் செய்தேன். இப்போது கிருஷ்ணன்-வினோ exchange ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு காரசாரமாக விவகாரம் முற்றி, நான் வலையில் எழுதுவதையே நிறுத்தி இருந்தேன். பின்பு பல நாள், பல மாதங்கள் கழிந்து, அனைவரிடமும் பேசி விசாரித்த போது “அது ஒரு பெரிய fraud group ஆச்சே!” என்றெல்லாம் பதில் வந்தது. கேஜ்ரிவால், கிரண் பேடி பற்றி பல தகவல் தெரிந்து கொண்டேன். ஆக நாம் ஒரு நிலை எடுத்து விட்டால், அந்த நிலையை மாற்றிக் கொள்வதற்கு நாளாகிறது. “ஊடகங்கள் வாயிலாக நாம்
  செய்திகளை அறிந்து கொள்ளும் போது, தவறான ஊடகங்கள் மூலம்
  நாம் தவறான செய்திகளை மனதில் ஏற்றி, ஏதேதோ மனப்பிம்பங்களை
  நாம் ஏற்றிக் கொள்கிறோம். அது மாற வெகு நாளாகிறது.”//

  -சிறப்பான கருத்துப் பதிவு மிஸ்டர் பாவலன்.

  இந்த நிலைப்பாடுதான் உங்களைப் போன்ற அறிஞர்களுக்கு சிறப்பு சேர்க்கும். இதை தாங்கள் முன்பே அறிவித்திருந்தால், நான் உணர்ச்சி வசப்பட்டு தங்களை திட்ட வேண்டிய நிலைக்கு வந்திருக்க மாட்டேன். அதற்காக இப்போது தங்களிடம் வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன். தவறான நிலைப்பாட்டை உணர்ந்து, அதை ஒப்புக் கொள்வதில் வீம்பு காட்டாமல்,

  சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
  துலையல்லார் கண்ணும் கொளல்.

  -என்ற குறள்வழி நடந்து, இங்கே வெளிப்படையாக மனதிலுள்ளதை எழுதி தங்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

  இதைப் போல கருத்துப் பரிமாற்றம் எந்த வலையிலாவது நடக்குமா, அது சாத்தியம்தானா என்று தெரியவில்லை. இங்கு தொடர்ந்து கருத்துப் பதிவது எனக்கு பெருமையாக உள்ளது.

 29. Ganesh Shankar

  //நண்பர் கிருஷ்ணன் ஒரு நிலை எடுத்திருக்கிறார். ஒரு நாள் அது மாறும்
  என்ற நம்பிக்கை – என் அனுபவத்தின் மூலம் – எனக்கு இருக்கிறது.//(பாவலன்)

  மிக நன்று.
  ஆனால்,இது நண்பர் கிருஷ்ணன் மட்டும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.
  இந்த தளத்தின் எந்த ஒரு பதிவை பதிபவர்களுகும்,அதற்கு கருத்து கூறும் நம் போன்றவர்களுக்கும் கூட இது பொருந்தும்.
  ஏன் கிருஷ்ணன் கூறுவதில் பல சமயங்களில் உண்மை இருந்து,நாம் சொல்லுவதில் கூட பல நேரங்களில் அதை புரிந்து கொள்ளாமல் போகலாம்.
  கண்டிப்பாக,அனுபவத்தின் மூலம் நாம் நம்மை மாற்றிக்கொள்ளும் சூழ்நிலையாக கூட அது இருக்கலாம்.

  ////முன்பு இந்த வலையில் நான் அன்னா ஹசாரேயின் தீவிர ஆதரவாளனாக இருந்தேன். வினோவின் கட்டுரைகளுக்கு கடுமையான பதில் தாக்கல் செய்தேன். இப்போது கிருஷ்ணன்-வினோ exchange ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு காரசாரமாக விவகாரம் முற்றி, நான் வலையில் எழுதுவதையே நிறுத்தி இருந்தேன். பின்பு பல நாள், பல மாதங்கள் கழிந்து, அனைவரிடமும் பேசி விசாரித்த போது “அது ஒரு பெரிய fraud group ஆச்சே!” என்றெல்லாம் பதில் வந்தது. //(பாவலன்)

  மிக நன்று.
  உங்களுடைய பெருந்தன்மை இதில் தெரிகிறது.தன்னம்பிக்கை இருப்பவர்கள் தான்,இதை போன்று ஒத்து கொள்வார்கள்.
  மற்றவர்களாக இருந்தால் ஏதோ ஏதோ சொல்லலி மழுப்புவார்கள்.

 30. குமரன்

  கணேஷ் ஷங்கர் கருத்துடன் நான் உடன்படுகிறேன். கிருஷ்ணாவின் சில கருத்துக்கள் என்னையும் (!) கூட சிந்திக்க வைக்கின்றன. கருத்துப் பரிமாற்றங்கள் எப்போதும் நமக்கு உண்மை நிலையை உணரவைக்கும்.

 31. தினகர்

  “பப்ளிசிட்டிக்கா ஜெ அரசு ஒதுக்கிய ரூ 25 கோடியில் பங்கு பெற்ற அந்த பெரும் பத்திரிகைகள் வேறு எப்படி எழுதுவார்கள் என எதிர்ப்பார்க்கிறீர்கள்?”

  அதனால், இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்குன்னு பூசி மெழுகி எழுதியிருக்கிறார்கள்

 32. மிஸ்டர் பாவலன்

  ///ஆனால்,இது நண்பர் கிருஷ்ணன் மட்டும் பொருந்தும் என்று
  சொல்ல முடியாது. இந்த தளத்தின் எந்த ஒரு பதிவை
  பதிபவர்களுகும்,அதற்கு கருத்து கூறும் நம் போன்றவர்களுக்கும்
  கூட இது பொருந்தும். /// (கணேஷ் ஷங்கர்)

  சிறப்பான எழுத்தாற்றல் உங்களிடம் இருக்கிறது. You are 100% correct.
  My comments were not meant for Mr. Krishna only – applicable to all.
  I kindly request Mr. Krishna & other friends not to take my views personally.
  குறைந்த நேரத்தில் எழுதும் போது அவ்வாறு எழுதி விட்டேன்!

  ///உங்களுடைய பெருந்தன்மை இதில் தெரிகிறது./// (கணேஷ் ஷங்கர்)

  மனதில் பட்டதை எழுதி விடுவது என் வழக்கம். நான் எழுதியதன்
  நோக்கம் – கிருஷ்ணா மற்ற நண்பர்கள் – எதையும் ஆழ்ந்து யோசித்து
  பலரிடம் விசாரித்து, வேண்டிய field work செய்து பின் ஒரு நிலைக்கு
  (view/stand) வருவது நல்லது. வினோ ஒரு பத்திரிகையாளர் என்பதால்
  கிருஷ்ணா குறிப்பிட்ட ஆங்கிலப் பத்திரிகைகள் பற்றிய சில
  உள் விவகாரங்கள், நேர்மை போன்றவை field work காரணமாக அவருக்கு
  அதிகம் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அதை அப்படியே கிருஷ்ணா
  ஏற்கவேண்டியதில்லை. Benefit of doubt கொடுத்தால் நல்லது. ஹிந்து ,
  சேகர் குப்தா வெளியிடும் எக்ஸ்பிரஸ் பற்றி டாக்டர் சுப்பிரமணியம்
  சுவாமி கடுமையாக எழுதி இருக்கிறார். அவர், JJ – ஒரே அணியில்
  இருப்பது போல் தான் தெரிகிறது. அதையும் கிருஷ்ணா consider
  செய்யலாம். Request is: To have an open mind & not to reject contrary views
  at once. ஹிந்து, எக்ஸ்பிரஸ் பற்றி நான் எந்த கருத்தும் வெளியிடாததற்கு
  காரணம் இவற்றை எல்லாம் படிக்க எனக்க அவகாசம் இல்லை என்பதே!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 33. தினகர்

  “ஊடகங்கள் வாயிலாக நாம் செய்திகளை அறிந்து கொள்ளும் போது, தவறான ஊடகங்கள் மூலம் நாம் தவறான செய்திகளை மனதில் ஏற்றி, ஏதேதோ மனப்பிம்பங்களை நாம் ஏற்றிக் கொள்கிறோம். அது மாற வெகு நாளாகிறது.”

  ”இந்த நிலைப்பாடுதான் உங்களைப் போன்ற அறிஞர்களுக்கு சிறப்பு சேர்க்கும். இதை தாங்கள் முன்பே அறிவித்திருந்தால், நான் உணர்ச்சி வசப்பட்டு தங்களை திட்ட வேண்டிய நிலைக்கு வந்திருக்க மாட்டேன். அதற்காக இப்போது தங்களிடம் வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன். தவறான நிலைப்பாட்டை உணர்ந்து, அதை ஒப்புக் கொள்வதில் வீம்பு காட்டாமல்,

  சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
  துலையல்லார் கண்ணும் கொளல்.

  -என்ற குறள்வழி நடந்து, இங்கே வெளிப்படையாக மனதிலுள்ளதை எழுதி தங்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.”

  அன்னா ஹசாரே கூட்டத்தை புரிந்து கொண்டதற்காக அல்ல, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக மாற்றிக்கொண்ட நேர்மைக்காக, துணிச்சலுக்காக பாவலனுக்கு பாராட்டுக்கள். அன்னா ஹசாரே கூட்டம் போல் இன்று வருவார்கள், நாளையும் வருவார்கள். ஆனால் நேர்மையும் துணிச்சலும் நம்மைப்போன்றவர்களுக்கு வந்து விட்டால் அவர்கள் அனைவரும் காணாமல் போய்விடுவார்கள்.

  தேவராஜனின் பாராட்டுகளும் சாதாரணமானவை அல்ல. ஒருவரிடம் காரசாரமாக விவாதம் செய்து விட்டோம் என்பதற்காக அவர் நமக்கு விரோதி அல்லஎன்பதை அழுத்தம் திருத்தமாக தேவராஜனின் கருத்துக்கள் பதிவு செய்துள்ளன.

  என் வழியில் ஒரு புதிய சரித்திரத்தை ஆரம்பித்து வைத்துள்ள பாவலனுக்கும், தேவராஜனுக்கும் நன்றி.. வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் நண்பர்களே.. அது தான் நம் தேசத்தின் அடி நாதமும் கூட.

 34. மிஸ்டர் பாவலன்

  ஒரு சிறிய விஷயத்தை நண்பர்கள் பெரிது படுத்துவது போல்
  தோன்றுகிறது. வழிநடை பிரயாணத்தின் போது ஒரு போர்டை
  யாரோ திருப்பி வைத்து விட தவறாக 3 கிலோமீட்டர் நடந்து,
  பின்பு பலரையும் விசாரித்து, திரும்பவும் வழி தவறி, எங்கோ சுற்றி
  வந்த வழியே வந்து..பின்பு போர்டு இருக்கும் இடத்தை அடைந்து..
  “நம்மைப் போல் இன்னொருவர் தவறாக நடந்து வழி மாறி,
  நேரத்தை வீணடிக்கக் கூடாது” என நாம் அந்த directions போர்டை
  சரியாக மாட்டி வைப்பது எப்படி ஒரு சாதாரண விஷயமோ,
  அதைத் தான் கிருஷ்ணாவிற்காக எடுத்துச் சொன்னேன்.
  கணேஷ் ஷங்கர் சொன்னது போல் இவ்வாறு போர்டை திருத்தி
  வைப்பது கிருஷ்ணா மட்டும் அல்லாது, நமக்கே அடுத்த தடவை
  அதே இடம் வழி நடையாக வரும் போது பயன்படும்! நன்றி!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 35. குமரன்

  ///Request is: To have an open mind & not to reject contrary views at once. ////

  சரியான பாதை. இந்தப் பாதையில் அனைவரும் பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்.

  /// ஹிந்து, எக்ஸ்பிரஸ் பற்றி நான் எந்த கருத்தும் வெளியிடாததற்கு
  காரணம் இவற்றை எல்லாம் படிக்க எனக்க அவகாசம் இல்லை என்பதே!//

  மிஸ்டர் பாவலன் ஹிந்து, எக்ஸ்பிரஸ் இவற்றை விடவும் என்வழிக்குத் தரும் முக்கியத்துவம் தெரிகிறது. நன்றி!

 36. மிஸ்டர் பாவலன்

  ///மிஸ்டர் பாவலன் ஹிந்து, எக்ஸ்பிரஸ் இவற்றை விடவும் என்வழிக்குத் தரும் முக்கியத்துவம் தெரிகிறது. நன்றி!///

  இது தமிழுக்கும், நட்புக்கும் நான் தரும் மரியாதை.

  நேற்று தேவராஜன் எழுதிய பதிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது.
  அது பழைய காலத்து சிவாஜி-ஜெமினி படங்களை நினைவுபடுத்தியது.
  அந்தப் படங்கள் பார்க்கும் போது உணர்ச்சி மிகுதியில் தியேட்டரில் சிலர்
  அழுவதும் உண்டு! நகைச்சுவை என்பதை மட்டும் குறியாக இருந்த நான்
  மாற்றிக் கொண்டு விட்டதால் என் வழியில் நவரசங்களையும் இப்போது
  காண முடிகிறது 🙂

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 37. Krishna

  ஊடகங்களை புறம் தள்ளிவிட்டு பார்த்தால் கூட திமுகவின் வாக்கு வங்கி சரியத்தொடங்கியிருக்கிறது என்பது 2006-ல் மற்றும் 2011 தேர்தல்களில் இருந்து தெரிகிறது. 1996-ல் திமுக பெற்ற வெற்றி போல் 2006 – ல் பெற முடியவில்லை என்பது தான் இதற்கு சாட்சி. இவ்வளவுக்கும் 2006-ல் அதிமுகவுக்கு வைகோ கட்சியைத் தவிர வேறு பெரிய கட்சிகள் எதனுடனும் கூட்டணி இல்லை. ஆனால் திமுகவோ காங்கிரஸ், இரு கம்யுனிஸ்டுகள் பாமக மற்றும் முஸ்லிம் லீகுடன் கூட்டணி வைத்தது. சுமார் 140 தொகுதிகளில் போட்டியிட்டது. 2006 ஏப்ரலில் இலவச கலர் டிவி என்று அவர்கள் அறிவித்தது கிராமப்புறங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது – ஏனெனில் கிராமத்து மக்கள் பெரும்பாலும் பஞ்சாயத்து அலுவலகங்களில் டிவி பார்த்து பழக்கப்பட்டவர்கள். இதையும் மீறி திமுகவுக்கு வெறும் 93 இடங்களே கிடைத்தன. இவ்வளவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 சீட்டையும் அள்ளினார்கள்.
  ஆளும் கட்சிக்கு எப்பொழுது கடுமையாக ஒரு தோல்வி வரும் என்றால் அரசியல் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லாத மக்களுக்கே கோபம் வரும் அளவுக்கு நிகழ்வுகள் நடந்தால் தான் அப்படி சாத்தியாமாகும். உதாரணங்கள் – 1995 – வளர்ப்பு மகன் திருமணம், 1997 – பாண்டியன், சேரன் மற்றும் ஆலப்புழை விரைவு ரயில்களில் ஒரே நாளில் குண்டு வெடிப்பு, 1998 – கோவை குண்டு வெடிப்பு, 2002 – ரேஷன் கடைகளில் H முத்திரை, 2003 – அரசு ஊழியர்கள் கூண்டோடு நீக்கம், கடந்த ஆட்சியில் நடந்த அபரிமிதமான நில மோசடிகள் போன்றவை. இப்பொழுதைய ஆட்சி 5 ஆண்டுகளில் நன்மையும் செய்யவில்லை, தீமையும் செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் தொங்கு சட்டசபை போன்று வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

 38. மிஸ்டர் பாவலன்

  ///ஊடகங்களை புறம் தள்ளிவிட்டு பார்த்தால் கூட திமுகவின் வாக்கு வங்கி
  சரியத்தொடங்கியிருக்கிறது என்பது 2006-ல் மற்றும் 2011 தேர்தல்களில்
  இருந்து தெரிகிறது. /// (கிருஷ்ணா)

  “அ.தி.மு.க-வின் ஒரு ஆண்டு ஆட்சி எப்படி இருக்கிறது?” என்ற கேள்விக்கு
  தி.மு.க.வின் வாக்கு வங்கி பற்றிய கருத்துடன் தொடங்கும் உங்கள் பதிவு
  அ.தி.மு.க. கட்சிக்காரர்கள் பேச்சு போலவே உள்ளது. வாக்கு வங்கி கணக்கு
  என்பது அரசியல்வாதிகள் போடும் கணக்கு என்பதே உண்மை.

  -==== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *