BREAKING NEWS
Search

ஜாமினில் விடுதலையானார் ஜெயலலிதா… பெங்களூரிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார்!

ஜாமினில் விடுதலையானார் ஜெயலலிதா… பெங்களூரிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார்!

release-jaya

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி 22 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று மாலை ஜாமீனில் விடுதலையானார்.

தனி விமானம் மூலம் சென்னைக்கு வரும் அவரை வரவேற்க பல்லாயிரக்கணக்கானோர் சென்னை விமான நிலையத்திலிருந்து போயஸ் கார்டன் வரை கொட்டும் மழையில் காத்திருந்தனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.100 கோடி அபராதத்தை கடந்த மாதம் 27–ந்தேதி விதித்தது. இதையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். அவரை ஜாமினில் விடுதலை செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுத்தது.

இதையடுத்து ஜெயலலிதா ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். நேற்று அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தத்து தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டது.

jaya-release2
இந்த உத்தரவால் ஜெயலலிதாவின் 21 நாள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது. ஜெயலலிதா விடுதலை ஆகிறார் என்ற தகவல் பரவியதும் தமிழ்நாடு முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தீபாவளி கொண்டாட்டத்தை மிஞ்சும் வகையில் பட்டாசுகள் வெடித்து அ.தி.மு.க.வினர் மகிழ்ந்தனர். உச்சநீதிமன்றத்தில் பிற்பகல் 12.25 மணிக்கெல்லாம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், அந்த உத்தரவை பெற்று வந்து மாலையே ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டு விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சட்ட நடைமுறைகளால் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் ஜெயலலிதா நேற்று மாலை பெங்களூர் சிறையிலிருந்து விடுதலை ஆக முடியவில்லை.

இந்த சட்ட நடைமுறைகள் நேற்று மதியத்துக்குப் பிறகே வேகமாக நடந்தன. எனவே அ.தி.மு.க. வக்கீல்கள், உச்ச நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு நகலை கொண்டு வந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா நேற்று மாலை 5.45 மணி வரை காத்திருந்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் மாலை 5 மணியுடன் முடிந்த பிறகும் கூட அவர் சிறிது நேரம் கூடுதலாக காத்திருந்தார். ஆனால் அ.தி.மு.க. வக்கீல்கள் நேற்று மாலை 6 மணிக்குப் பிறகே பெங்களூர் வந்து சேர்ந்தனர். இதனால் ஜெயலலிதாவால் நேற்றே விடுதலை பெற முடியவில்லை.

இதையடுத்து ஜெயலலிதாவுக்கு 2 நபர் ஜாமீன் உத்தரவாதம் எனப்படும் பிணைத்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் ஏதேனும் சிக்கல் வந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு தடவைக்கு பல தடவை, ஆவணங்கள் சரிபார்த்து வைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று பகல் 11 மணிக்கு பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் கூடியது. அங்கு நீதிபதி குன்ஹாவிடம் அ.தி.மு.க. வக்கீல்கள், நவநீத கிருஷ்ணன், குமார், அசோகன், மணிசங்கர் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதற்கான உச்ச நீதிமன்ற உத்தரவைக் காட்டினார்கள்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி குன்ஹா 2 நபர் ஜாமீன் உத்தரவாதத்தை ஆய்வு செய்தார். ஜெயலலிதாவுக்கு குணஜோதி, பரத் ஆகிய இருவரும் ஜாமீன் உத்தரவாதம் வழங்கினார்கள். அவர்கள் இருவரும் தலா ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஜாமீன் உத்தரவாதமாக அளித்தனர். சசிகலாவுக்கு லட்சுமிபதி, ராஜு ஆகிய இருவரும் தலா ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்தை ஜாமீன் உத்தரவாதமாக கொடுத்தனர்.

அது போல சுதாகரனுக்காக லோகேஷ், அன்பம்மாள் ஆகியோரும், இளவரசிக்காக புகழேந்தி, ராஜேந்திரன் ஆகியோரும் தலா ரூ.1 கோடி சொத்துக்களை ஜாமீன் உத்தரவாதமாக கொடுத்தனர். 8 பேரும் கொடுத்த சொத்து ஆவணங்களை நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹா ஆய்வு செய்தார்.

jaya-release-3
ஜாமீன் உத்தரவாதம் கொடுத்த 8 பேரிடமும் அவர், இந்த ரூ.1 கோடி சொத்துக்கள் எப்படி வாங்கப்பட்டது? அந்த சொத்துக்கள் பூர்வீகமாக உள்ளவைதானா என்று விசாரித்தார். அதற்கு 8 பேரும் உரிய பதில் அளித்தனர். அதில் நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹாவுக்கு திருப்தி ஏற்பட்டது. ரூ. 8 கோடி மதிப்புள்ள சொத்து ஜாமீன் உத்தரவாதத்தை அவர் ஏற்றுக் கொண்டார். பிறகு அவர் ஜெயலலிதாவை ஜெயிலில் இருந்து விடுவிக்கலாம் என்பதற்கான விடுதலை உத்தரவில் கையெழுத்திட்டு வழங்கினார்.

அவரது உத்தரவு 11.35 மணிக்கு ‘‘டைப்’’ செய்யக் கொடுக்கப்பட்டது. இதற்கு மட்டும் சற்று நேரமானது. இந்த உத்தரவுடன் நீதிமன்ற ஊழியர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு புறப்பட்டு வந்தார். சிறைச்சாலை அதிகாரிகளிடம் உத்தரவு வழங்கப்பட்ட பின் பிற்பகல் 3.15 மணிக்கு ஜெயலலிதா சிறையிலிருந்து விடுதலையானார்.

விவிஐபி பாதுகாப்புடன்

ஜெயலலிதா ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் அவர் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கமாண்டோ பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க, ஒரு விவிஐபிக்கே உரிய முக்கியத்துவத்துடன் ஜெயலலிதா கார் மூலம் பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையத்திற்கு வந்தார்.

அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சிறிய விமானத்தில் ஏறி அவர் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். ஜெயலலிதாவுடன் அதே விமானத்தில் சசிகலா, இளவரசி, டாக்டர் சிவக்குமார், உதவியாளர்கள் பூங்குன்றன், ராணி, போலீஸ் அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள்சாமி ஆகியோரும் பயணித்தனர்.

jayalalitha-banner354-600

ஜெயலலிதா வெளியே வந்து காரில் ஏறி புறப்பட்டதும், வழிநெடுக திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். பெங்களூர் முழுவதும் ஜெயலலிதாவை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

சென்னையில்…

இதேபோல், ஜெயலலிதாவை உற்சாகத்துடன் வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இன்று காலை முதலே அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டுவிட்டனர். மற்ற மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் அ.தி.மு.க.வினர் சென்னைக்கு திரண்டு வந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டன் வழிநெடுக நின்றனர்.

ஜெயலலிதா வரும் போது மேள–தாளம் முழங்க வரவேற்பு கொடுக்கும் வகையில் அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே திரண்டுள்ளனர். சென்னை விமான நிலையத்திலிருந்து போயஸ் தோட்டம் வரை அதிமுகவினர், பொதுமக்கள் வரிசையாக நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

என்வழி




One thought on “ஜாமினில் விடுதலையானார் ஜெயலலிதா… பெங்களூரிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார்!

  1. s venkatesan, nigeria

    வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்கள் நிலைமை படுகேவலம். கொள்ளை அடிப்பது எல்லா மாநிலத்திலும் நடக்கிறது ஆனால் அவர் என்னமோ சுதந்திர போராட்ட தியாகி போல மொட்டை அடிப்பது, ரோட்டில் புரண்டு அழுவது, கதறி கதறி அழுது டிவிக்கு பேட்டி அளிப்பது, தவறான தீர்ப்பு என்று விமர்சிப்பது, தீ குளிப்பது என்று செய்வதால் மற்ற மாநிலத்தவர் எல்லாம் தமிழர்களை கிண்டல் கேலி செய்வது அதிகமாக இருக்கிறது. மேலும் தமிழர்கள் நாகரீகத்தில் பின் தங்கியவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *