BREAKING NEWS
Search

மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா!

மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா!

Jayalalithaa

சென்னை: அத்தனை கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி 6வது முறையாக தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

தமிழக சட்டப் பேரவைக்கு கடந்த மே 16-ம் தேதி நடந்த தேர்தலின் முடிவுகள் இன்று காலையிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் திமுகதான் முன்னிலைப் பெற்று வந்தது. ஆனால் அரை மணி நேரத்துக்குப் பிறகு நிலைமை அதிமுகவுக்கு சாதகமாக மாறியது.

அதே நேரம் திமுகவும் ரொம்ப பின்தங்கி இருக்கவில்லை. அந்தக் கட்சியும் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் தொகுதிகளைப் பெற்று வந்தது.

முதல்வர் ஜெயலலிதா ஆர்கே நகர் தொகுதியில் 97218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

13வது முறையாக தேர்தலில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி 121473 வாக்குகள் பெற்று திருவாரூர் தொகுதியில் வெற்றிப் பெற்றார். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார் (68366).

இறுதியில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றிப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து 98 தொகுதிகளில் வென்றுள்ளன. இவற்றில் 89 இடங்களில் திமுக தனித்து வென்றவை.

கடந்த முறை வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்த திமுக, இந்த முறை 89 எம்எல்ஏக்களுடன் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக  சட்டமன்றத்துக்குள் நுழைகிறது.

மூன்றாவது அணியாகப் பார்க்கப்பட்ட தேமுதிக, தமாகா உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. பல இடங்களில் மூன்றாவது நான்காவது இடங்களையே அக்கட்சி பிடித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட திருமாவளவன் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மட்டுமல்ல, பல அரசியல் ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடலூரில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் 12497 வாக்குகளை மட்டுமே பெற்று 5-வது இடத்தைப் பிடித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பெண்ணாகரத்தில் 19730 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனால் இவரைத்தான் அத்தனை கருத்துக் கணிப்புகளிலும் வெற்றி வேட்பாளர் என்று கூறி வந்தனர்.

2016- சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள்:

அதிமுக – 134

திமுக – 89

காங்கிரஸ் – 8

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 1

அரவங்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த இரு தொகுதிகளிலும் அதிமுகவே வெல்லும் வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.

-என்வழி




3 thoughts on “மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா!

  1. anbudan ravi

    நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று எடுத்துகொள்வோம். மகிழ்ச்சி.

  2. srikanth1974

    மாதர்குல மாணிக்கம், தங்கத் தாரகை புரட்சித் தலைவி மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!.

  3. Elango

    தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் என்றாவது ஓரு நாள் தர்மம் வெல்லும்!

    கேப்டன் விஜயகாந்த்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *