BREAKING NEWS
Search

தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

jaya-assembly

சென்னை: தனித் ‘தமிழீழம்’ நாடு அமைப்பது தொடர்பாக இலங்கை தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டசபையில் தொடரும் மாணவர்கள் போராட்டம் பற்றி சிறப்பு விவாதம் நடைபெற்றது. பின்னர் சட்டசபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அவர் முன்மொழிந்த தீர்மானத்தில்,

தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல், எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எஜமானனாக இல்லாமல், உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை என்றார் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணா பொன்மொழிக்கேற்ப, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்;

இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க் குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்;

தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்;

ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்தினை சட்டசபை ஒரு மனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

-என்வழி செய்திகள்




13 thoughts on “தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

  1. குமரன்

    பாராட்டப் பட வேண்டிய தீர்மானம்.

    நமது இந்திய அரசின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் உள்ள சோனியா காந்தி ராஜபக்சேவுடன் சேர்ந்தே இனப் படுகொலையை நிகழ்த்தியவர்.

    கூட்டு சதிகாரர்களும் கொலைகாரர்களும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பார்களா?

    அமெரிக்காவின் நீர்த்துப் போன தீர்மானத்தை இந்த்யாவுடன் கலந்து ஆலோசித்தே செய்தோம் என்று அமெரிக்கவே ஒப்புக்கொண்டுவிட்டது.

    ஆக இந்தியா எந்த அளவுக்கு இலங்கைக்கு இனப்படுகொலையிலும் அதை மறைப்பதிலும் உதவியிருக்கிறது என்பது தெரிந்து விட்டது.

    காங்கிரஸ் என்ற கட்சியே தமிழ்நாட்டில் தலை வைத்துப் படுக்காத படி விரட்டி அடிக்க வேண்டும்.

  2. Kumar

    காவேரி தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிட வைத்தது போல,இந்த தீர்மானமும் மக்களிடம் மிக பெரும் வரவேற்பையும்,நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளன.மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.தமிழ் இழம் என்று பேசி கொண்டு தனது வியாபாரமான IPL கிரிக்கெட் அணியில் இலங்கை வீரர்களை வைத்துள்ளது போல் கருணாநிதி செய்யும் அணைத்து தில்லு முள்ளும் மக்களிடம் சென்றுள்ளன.மிக பெரிய தீர்மானத்தை மிக தெரியமாக முதல்வர் நிறைவேற்றி உள்ளார்.

  3. srikanth1974

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி.

  4. enkaruthu

    இது கலைஞர் காங்கிரஸ் எதிர்ப்பை காட்டியவுடன் எங்கே நாம் போர் என்றால் மக்கள் சாவத்தனே செய்வார்கள் என்ற சொன்ன இவர் இன்று நாம் என்ன சொன்னாலும் மத்திய அரசு ஒன்றும் செய்யாது அதனால் நாம் ஒரு என்னமோ இலங்கை தமிழர்களுக்காக ஆதரவாக இருக்கும்படி ஒரு சீன் காட்டுவோம் என்பதுதான் இந்த தீர்மானம்.

    உண்மையாலுமே இங்கே வரும் நண்பர்களை கேட்கிறேன் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் உண்மையாலுமே இந்த இலங்கை தமிழர்கள் விஷயத்தில் முதல்வர் அவர்கள் அக்கறை காட்டுகிறதா அல்லது கலைஞரை எப்படியாவது துரோகி என்று காட்ட விளைகிறதா. கொஞ்சம் நாள் முன்பு வரை இந்த ஜெயாவின் ஆதரவாளர்கள் திடிரென்று சமஸ்கிருதம் வெறுத்து பொய் தமிழ் மீது பாசம் காட்ட வேண்டிய அவசியம் என்ன. எல்லாம் அரசியல்.

  5. தினகர்

    “கொஞ்சம் நாள் முன்பு வரை இந்த ஜெயாவின் ஆதரவாளர்கள் திடிரென்று சமஸ்கிருதம் வெறுத்து பொய் தமிழ் மீது பாசம் காட்ட வேண்டிய அவசியம் என்ன. எல்லாம் அரசியல்.”

    வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்குமல்லவா!. அதே தான் இந்த விவகாரத்திலும். எல்லாமும் இலக்கை நோக்கித்தான் என்று உங்களுக்கும் தெரியும். ஊரில் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அதனால் நன்மை விளைந்தால் அது நல்லதே, வரவேற்கத்தக்கதே!

  6. Krishna

    கருணாநிதியை துரோகி என்று காட்டுவதற்கு ஜெயலலிதா எந்த முயற்சியும் செய்யவேண்டியதில்லை. ஜெயலலிதாவுக்கு எந்த சிரமமும் வைக்காமல் அந்த வேலையை கருணாநிதியின் குடும்பத்தாரே பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு பக்கம் கருணாநிதி இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். ஆனால் அவர் பேரனோ இலங்கைக்கு தான் அதிக அளவில் விமானங்களை விடுகிறார். அதே போல் இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும் என்று சொல்லுகிறார். இன்னொரு பக்கம் அவர் பேரன் இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுக்கிறார். இலங்கை ராணுவத்துக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் கேட்கக்கூடும். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வெறும் கிரிக்கெட் வீரர்களாக மட்டும் இருந்திருந்தால் அவர்களை ஏலத்தில் எடுப்பதில் தவறு இல்லை – ஆனால் அவர்களோ இலங்கை ராணுவத்தின் கௌரவ உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதுவும் எந்த ராணுவம்? லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து நம் நாட்டின் மீனவர்களை தாக்கி, சிலரை கொலையும் செய்த அதே ராணுவம்.

    Charity Begins from home என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இவர் முதலில் இவர் குடும்பத்தாரை இலங்கையை புறக்கணிக்க சொல்லட்டும். பிறகு இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று மத்திய அரசுக்கு அறிவுரை சொல்லட்டும். ஒரு வேளை இவர் குடும்பத்தார் இவர் பேச்சை கேட்க மாட்டார்கள் என்றால் மத்திய அரசு மட்டும் எப்படி கேட்கும் அல்லது இவரது வார்த்தைக்கு எப்படி தான் மதிப்பு கொடுக்கும்?

  7. Jude

    தீர்மானம் தீய்ந்து போகும் வரை வெற்றுத் தீர்மானமாக இருக்குமேயன்றி ஒருபோதும் தீர்வாக இருக்கப்போவதில்லை என்று நமக்கே தெரிந்த விடயம் அம்மையாருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

  8. குமரன்

    என்கருத்து அவர்களின் மீள்வருகைக்கு மனமார்ந்த வரவேற்பு!

    சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் எந்தப் போட்டியும் இல்லை, இருக்கவும் முடியாது, ஏனெனில், சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் ஒரு லட்சம் பேரிடம் (அல்லது அதற்கும் குறைவாகவே ) மட்டுமே உள்ளது.

    தமிழோ உலகெங்கும் பலகோடிக்கணக்கான (குறைந்த பட்சம் ஒன்பது கோடிப்பேரால்) பேசப்படுகிறது.

    எனவே, இவை இரண்டையுமொப்பிட்டு இல்லாத எதிரியை இருப்பதாகக் காட்டி தமிழ்தான் எனது மூச்சு என்று பசப்பி, பல லட்சம் அப்பாவித் தமிழர்களை வான்வழித்தாக்குதலில் ராஜபக்சே இனப்படுகொலை செய்து கொன்று குவிக்கும் அதே காலத்தில், ……

    இங்கே உண்ணாவிரதம் என்று ஆறுமணி நேர நாடகம் நடத்தி,

    தில்லியில் அந்த இனப்படுகொலைக்கு ராணுவம், உளவுத்துறை, நிதியுதவி, பன்னாட்டு ஆதரவு, தூதரக ஆதரவு, ஐ.நா, உலக மனித உரிமை கவுன்சில் என்று எல்லா வகையிலும் முழுமையான ஆதரவு தந்த சோனியாவின் காலடியை வருடி, மத்தியில் தனது குடும்பத்துக்கு மந்திரி பதவிகளைப் பெற்று, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொள்ளையடித்து ….

    வாய்க்கு வாய் சொக்கத்தங்கம், தியாகத் திருவிளக்கு, அன்னை என்றெல்லாம் தமிழர்களைக் கொன்றுகுவித்த இனப்படுகொலையாளி சோனியாவை வர்ணித்து மகிழ்ந்த கருணானிதியை ….

    இன்னார் என்று அடையாளம் காண ஜெயா வரவேண்டும் என்று நீங்கள் சொலவது மனச் சாட்சியுடனா?

  9. குமரன்

    இன்றும் கருணாநிதி சொல்வது என்ன?

    நான் மத்திய அரசின் ஆதரவை விலக்கியதால் ஈழத் தமிழருக்கு என்ன நன்மை விளைந்து விட்டது ? என்று அவரே கேட்கிறார்!!!!

    அதை மக்கள் நன்கு உணர்ந்துதான் இருக்கிறார்கள்.

    2009 இல் விலக்கி இருந்தால் லட்சக் கணக்கான பேர் உயிர்ப்பலி ஆகி இருக்காது. அப்படியே ஆகி இருந்தாலும், தமிழக மக்கள் எழுச்சியில் மத்திய அரசு கவிழ்ந்திருக்கும்.

    தமிழ்நாட்டில் சொக்கத் தங்கம் தியாகத் திருவிளக்கு அன்னை சோனியாவின் அடியை வருடும் எவரும் காலடி எடுத்து வைக்க முடியாமல் போய் இருக்கும்.

    இனப்படுகொலையாளி சோனியாவும் அவரது காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் நுளைய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

    என்ன? கருணாநிதி குடும்பம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் சம்பாதித்திருக்க முடியாது.

    அதனால்தானே லட்சக் கணக்கானோர் செத்த்துப் பத்து நாளுக்குள் , அவர்கள் பிணங்களும் புதைக்கப்படாத நிலையில் கருணாநிதி குடும்பத்தார் மத்திய அரசில் பதவி ஏற்றனர்?

  10. குமரன்

    சோனியாவுக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவு என்ன?

    கருணாநிதி குடும்பத்தார் பல்லாயிரம் கோடி ஊழல் செய்து கொள்ளை….
    சோனியா குடும்பத்தார் – ராஜபக்சே குடும்பத்தார் கூட்டாக லட்சக் கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்களை இனப்படுகொலை …. செய்தனர்.

    இது புரியாத யாரும் இப்போது இல்லை. இது நடக்கவில்லை என்பவர்கள் பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று சொல்வதற்கு ஒப்பானவர்களே.

  11. குமரன்

    உழைச்சு சம்பாதித்த சொத்தில் வாங்கிய வெளிநாட்டுக் கார்களால் மட்டுமே 45 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடத்திய குடும்பம், தமிழுக்காகவே வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள் என்று போலி வேஷம் போடுகிறார்கள்.

  12. குமரன்

    அண்மைச் செய்தி
    ///மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை மயிலை மாங்கொல்லையில் நடக்க இருப்பதாக, தமிழக காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்தக் கூட்டத்திற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமை வகிக்கிறார். மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சிறப்புரை நிகழ்த்துகிறார் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது, காங்கிரசார் நடத்திய தாக்குதல் தொடர்பாக, மாவட்ட வாரியாக காங்கிரஸ் நடத்தக் கூடிய பொதுக்கூட்டங்களில், மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்த சிலர் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
    சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, நாளை மாலை சென்னை மயிலை மாங்கொல்லையில் நடக்க இருந்த பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், ரத்து செய்யப்படுவதாக, ஞானதேசிகன் நேற்று தெரிவித்தார்.///

    சொக்கத் தங்கமாம்! தியாகத் திருவிளக்காம்! அன்னையாம்!

  13. குமரன்

    சொக்கத் தங்கம், தியாகத் திருவிளக்கு, அன்னை சோனியா குடும்பத்துக்கும், அவர்களது அடிவருடிகளுக்கும் ….

    இலங்கைதான் முக்கியம் தமிழ்னாட்டில் இருக்கும் தமிழர்கள் அல்ல!!!!

    இவர்களைத் தமிழ்னாட்டில் நுழைய விடலாமா?

    ////தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்தில், “தனி ஈழம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர்களிடம் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்” எனவும், “இந்தியா, இலங்கையை நட்பு நாடு என கூறுவதை நிறுத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தப்பட்டது.

    இது தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த சல்மான் குர்ஷித், “இந்த பிரச்சனை (இலங்கையுடன் உறவு), மத்திய அரசுக்கு முக்கியமானது. மாநில அரசு கொண்டுவந்தது போன்ற தீர்மானத்தை நாம் (மத்திய அரசு) ஏற்றுக்கொள்ள தேவையில்லை” என்று கூறியுள்ளார்.////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *