BREAKING NEWS
Search

நிபந்தனை ஜாமினில் ஜெயலலிதா விடுதலை!

நிபந்தனை ஜாமினில் ஜெயலலிதா விடுதலை!

1866585

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, ஜெயலலிதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று ஜெயலலிதா ஜாமின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.

ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஃபாலி நரிமன் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.

ஜாமினில் விடப்பட்டால் ஜெயலலிதா எங்கும் செல்ல மாட்டார் என்றும், சட்டத்தை பெரிதும் மதிப்பார் என்றும் நாரிமன் உறுதி கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்பிரமணிய சாமி கூறிய கருத்துகளை நீதிபதிகள் ஏற்கவில்லை.

ஆரம்பத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்குவதில் நீதிபதிகள் தயக்கம் காட்டினர். ஆனால் வழக்கறிஞர் பாலி நாரிமன் எடுத்து வைத்த வாதம் மற்றும் உறுதியைத் தொடர்ந்து, ஜெயலலிதாவை ஜாமினில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜெயலலிதா ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்தனர்.

போயஸ் கார்டன் மற்றும் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமின் மனுக்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களுக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டனர்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *