BREAKING NEWS
Search

ஆறு வாரங்களில் 4வது முறை பெட்ரோல் விலை உயர்வு… ஜெயலலிதா கண்டனம்

ஆறு வாரங்களில் 4வது முறை பெட்ரோல் விலை உயர்வு…  ஜெயலலிதா கண்டனம்

Petrol-price

சென்னை: ஏழை, எளிய நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பெட்ரோல் விலையை உயர்த்திக் கொண்டே செல்வது நியாயமற்ற செயல், என முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு வாரங்களில் நான்காவது முறையாக பெட்ரோல் விலை ரூ 1.95 காசு உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் 1–ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், ஜூன் 16–ந்தேதி 2 ரூபாயும், ஜூன் 29–ந்தேதி ஒரு ரூபாய் 82 காசுகளும் உயர்ந்தது. இப்போது 4–வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 73.60 ஆக உயர்ந்துவிட்டது.

இந்த விலை உயர்வைக் கண்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நாட்டின் பொருளாதாரம் நலிந்து கொண்டு வருவதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதற்கான காரணிகளை களைய நடவடிக்கை எடுத்து, அதன் மூலம் பெட்ரோலியப் பொருட்களின் விலையை அடிக்கடி உயர்த்தாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்காமல், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதை மத்திய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது “வேலியே பயிரை மேய்ந்தால் விளைவதெப்படி?” என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.

பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 82 காசு உயர்த்தி 15 நாட்களே ஆகியுள்ள நிலையில், மீண்டும் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 55 காசு என்று உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்களின் எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது.
jayalalitha
கிராமப்புற மக்கள் தங்கள் தொழிலை சிறப்புற மேற்கொள்ள இரு சக்கர வாகனங்கள் பெருமளவில் துணை புரிகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு இரு சக்கர வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர். அலுவலகங்களுக்கு செல்லும் மொத்த நபர்களில் 50 விழுக்காடு நபர்கள் இரு சக்கர வாகனங்களையே பயன்படுத்துகின்றனர்.

இப்படி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இருக்கும் இரு சக்கர வாகனங்களின் எரிபொருளான பெட்ரோலின் விலையை மாதத்திற்கு இரு முறை உயர்த்திக் கொண்டே செல்வது நியாயமற்ற செயல். ஆண்டிற்கு 24 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதை சாமானிய மக்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதை சிந்தித்து அதற்கேற்ப மத்திய அரசு செயல்பட வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யாமல், இந்த விலை நிர்ணய அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்து அந்த நிறுவனங்கள் விலையை ஏற்ற அனுமதித்திருப்பது வேதனைக்குரியது. எண்ணெய் நிறுவனங்களைப் பொறுத்தவரை, தங்களுடைய லாப நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

எனவே, எண்ணெய் நிறுவனங்கள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலை கொள்ளாமல், மனம் போன போக்கில் பெட்ரோலின் விலையை உயர்த்திக் கொண்டு வருகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்ற பழமொழிக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரவும், வாகனக் கட்டணங்கள் உயரவும் வழிவகுக்கும். இதன் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் மேலும் சீரழியும். நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் அறிந்து அதற்கேற்ப செயல்படும் அரசைத் தான் மக்கள் நல்ல அரசு என்பர்.

ஆனால், இதற்கு முற்றிலும் முரணாக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மக்களை தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருக்கிறது, இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“ஆட்சியினால் ஏற்படும் நன்மை தீமைகளை அன்றாடம் ஆராய்ந்து, அவற்றிக்கேற்ப நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வரிகளை சுட்டிக் காட்டி, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தற்போதைய விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், இனி வருங்காலங்களில் பெட்ரோல் விலை உயராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *