BREAKING NEWS
Search

ஜெ பேட்ஜ் அணிந்த 1006 ஜோடிகளுக்கு திருமணம்: ஆடு-மாடு கதை சொல்லி ஜெ அறிவுரை!

மாலையுடன் ஜெ பேட்ஜ் அணிந்த 1006 ஜோடிகளுக்கு திருமணம்: ஆடு-மாடு கதை சொல்லி ஜெ அறிவுரை!

சென்னை: திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் மாலையுடன் தன் உருவம் பொறித்த பேட்ஜ்களை அணிந்து நின்ற 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த முதல்வர் ஜெயலலிதா, அவர்களுக்கு சுவாரஸ்யமான ஆடு-மாடு கதையை அறிவுரையாகக் கூறினார்.

சென்னை அருகே திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் இந்த மெகா திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பின்னர் பேசிய அவர், தனது வழக்கப்படி ஆடு மாடு கதை ஒன்றைச் சொன்னார்.

ஜெயலலிதா சொன்ன கதை:

ஓர் ஊரில் வேலைவெட்டி இல்லாமல் ஒருவன் இருந்தான். அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். மனைவியும் வந்து சேர்ந்தாள். ஒரு நாள் மனைவி, தனது கணவனைப் பார்த்து, “சும்மாவே உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்களே? சம்பாதிக்கிற வழியைப் பாருங்கள்” என்றாள்.

உடனே கணவன், “அது பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தேன். ஒரு அருமையான திட்டம் எனது மனதில் உதித்துவிட்டது” என்று கூறினான். “என்ன திட்டம்?” என்று ஆவலோடு கேட்டாள் மனைவி.

“ஓர் ஆட்டுக்குட்டி வாங்கப் போகிறேன்” என்றான் கணவன்.
“சரி” என்றாள் மனைவி.

“அதற்கான பணத்தை நீ தான் உன் அப்பாவிடம் கடனாக வாங்கித் தர வேண்டும்.  நான் மானஸ்தன். எனக்கு ஒன்றும் இனாமாக வேண்டாம். கடன் கொடுத்தால் போதும்” என்றான்.

“ஆட்டுக்குட்டியை வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றாள் மனைவி. அதற்கு கணவன், “அந்தக் குட்டி வளரும்.  பிறகு நிறைய குட்டிகள் போடும்” என்றான். “பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள் மனைவி.

“அதையெல்லாம் சந்தையிலே கொண்டு போய் விற்றுவிட்டு, அந்தக் காசுக்கு ஒரு பசு மாடு வாங்குவேன்” என்றான் கணவன். “அது எதற்கு?” என்று கேட்டாள் மனைவி.

“பசு மாடு நிறைய பால் கொடுக்கும். அதைக் கொண்டு போய் பால் பண்ணையிலே கொடுத்தால் நிறைய காசு கிடைக்கும். பாலையும் விற்கலாம், நாமும் காபி சாப்பிடலாம்; உடல் நலம் இல்லாத எனது தந்தைக்கு குடிக்க பால் கொடுக்கலாம்,” என்றான் கணவன்.

உடனே மனைவி, “அடுத்த தெருவில் இருக்கும் எங்க அம்மா வீட்டிற்கும் கொஞ்சம் பால் கொடுத்தனுப்பலாம்” என்றாள்.

உடனே, கணவனுக்கு கோபம் வந்துவிட்டது. “அது எப்படி? உங்க அம்மா வீட்டுக்கு எதற்காக கொடுக்கணும்? அதெல்லாம் முடியாது.” என்றான்.

இந்த இடத்தில் சண்டை ஆரம்பமாகிவிட்டது. இரண்டு பேரும் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள்.

கடுமையாக சண்டை நடப்பதை அறிந்து, பக்கத்து வீட்டுக்காரன் ஓடி வந்தான்.  இவர்கள் இருவரும் வாங்காத மாட்டிற்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.

இருப்பினும், சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் – மனைவியைப் பார்த்து, “உன் மாடு என் தோட்டத்தில் மேய்ந்து பயிரை எல்லாம் நாசப்படுத்திவிட்டது. பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.  நீ நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்,” என்று கூறினான்.

இதைக் கேட்டு அரண்டு போன கணவன், பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்து, “நான் இன்னும் மாடே வாங்கவில்லை.  உனக்கு தோட்டமே இல்லை. மாடு எப்படி உன் தோட்டத்தில் மேயும்? என்ன உளர்றே?” என்று கேட்டான்.

உடனே பக்கத்து வீட்டுக்காரன், “நீ தான் உளறுகிறாய். மாடே வாங்காமல் எப்படி உன் மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு பால் கொடுத்தனுப்ப முடியுமோ; அதே போலத்தான் அந்த மாடு, இல்லாத என் தோட்டத்திலும் மேய்ந்தது” என்றான்.

அப்போதுதான் கணவனுக்கு புத்தி வந்தது. அர்த்தமே இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோமே, என்பதை உணர்ந்தான். இல்லாத விஷயத்திற்கு சண்டை போட்டுக் கொண்டு, இல்லறத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிற மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதைத் தான் இக்கதை நமக்கு உணர்த்துகிறது.

காலையில் சவால் .. மாலையில் ஜகா…

வாழ்க்கையே ஒரு சவால் தான். அதுவும் திருமண வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்ததுதான். இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் துணிவையும், தெளிவையும் நீங்கள் பெற வேண்டும். சவால்களை எதிர்கொள்வதிலிருந்து விலகி ஓடும் மனிதர்களை விட எதிர்த்து நின்று போராடும் மனிதர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். சவால்களை கண்டு அஞ்சுபவர்களை சமூகம் கண்டு கொள்வதில்லை.  சவால்களை துணிச்சலுடன் சந்திக்கும் நபரைத்தான் சமூகம் வரவேற்கும்.

ஆனால், காலையிலே மேடையில் சவால் விட்டுப் பேசி, மாலையிலே “ஜகா” வாங்குபவர்களை சவடால் பேர்வழிகள் என்றுதான் உலகம் சொல்லும்.

சந்திக்க வேண்டிய சவால்களை அடையாளம் கண்டு, அவற்றை துணிவுடன் எதிர்கொள்ள நீங்கள் முடிவெடுத்துவிட்டால், அதற்கான வழிமுறைகள் தானாக தோன்றும். துன்பங்களை கண்டு துவண்டுவிடும் கோழைத்தனத்தை விட எதிர்த்துப் போராடும் துணிவே நம்மை வாழ வைக்கிறது. இதைப் புரிந்து கொண்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதைத் தெரிவித்து;  நெஞ்சார வாழ்த்துகிறேன்,” என்றார் ஜெயலலிதா.

-என்வழி செய்திகள்




7 thoughts on “ஜெ பேட்ஜ் அணிந்த 1006 ஜோடிகளுக்கு திருமணம்: ஆடு-மாடு கதை சொல்லி ஜெ அறிவுரை!

  1. தினகர்

    என்னது ”1006 ஜெ பேட்ஜ் அணிந்த ஆடு மாடுகளுக்கு திருமணமா?”. ஒ ஸாரி பேட்ஜ் அணிந்தவர்களின் திருமணத்தில் ஆடு-மாடு கதையா? வேற கதையே இல்லையா என்ன?.1006 பேர்களயும் சிம்பாலிக்கா சொன்னது போல் தான் தெரிகிறது. 🙂

    இதில் எத்தனை ஜெ.வுக்காகவும், அங்கே கொடுக்கப்பட்ட சன்மானத்திற்ககாவும் மீண்டும் தாலி கட்டியவர்களோ..? செய்த்திதாள்களில் சீக்கிரம் குட்டு வெளிப்பட்டு விடுமே..

    நல்ல ஜோடிகள் நன்றாக வாழட்டும்….

  2. பாவலன்

    ///ஆனால், காலையிலே மேடையில் சவால் விட்டுப் பேசி, மாலையிலே “ஜகா” வாங்குபவர்களை சவடால் பேர்வழிகள் என்றுதான் உலகம் சொல்லும்./// (முதல்வர் ஜெயலலிதா)

    மறைமுகமாக ஒரு மூத்த தலைவரைத் தாக்குவது போல் உள்ளதே!!

    -பாவலன்

  3. Krishna

    //மறைமுகமாக ஒரு மூத்த தலைவரைத் தாக்குவது போல் உள்ளதே!!//

    பெட்ரோல் விலை ஏற்றத்தை எதிர்த்து கூட்டணியிலிருந்து விலக தயங்க மாட்டோம் என்று சூளுரைத்து கட்சி தொண்டர்களின் கை தட்டலை வாங்கினார். ஆனால் இது போன்று பேசினால் நாங்கள் முதுகில் தான் தட்டுவோம் என்று டில்லியிலிருந்து மிரட்டல் வந்திருக்கும். அதனால் தான் இந்த ஜகா. இதை வடிவேலு பாணியில் சொல்வதென்றால் “பி கேர்புல் – என்னை சொன்னேன்”

  4. சேனா

    //ஆனால், காலையிலே மேடையில் சவால் விட்டுப் பேசி, மாலையிலே “ஜகா” வாங்குபவர்களை சவடால் பேர்வழிகள் என்றுதான் உலகம் சொல்லும்.//

    -அது எப்படி வெக்கமே இல்லாம இப்படி பேச முடியுது. அதையும் சிலரால் ரசிக்க முடியுது?

    உலகத்திலேயே ஜெயலலிதாவைப் போல வாய் சவடால் பேர்வழி ஒருவரைப் பார்க்க முடியுமா? தினமும் கண்ணாடி முன் நின்று அவர் பேசிக் கொள்ள வேண்டிய வஜனமாச்சே இது!!

    மக்கள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கும் இந்த கேவலமான சூழலில் என் ஆட்சியில் பாலும் தேனும் ஓடுது. உலகத்திலேயே என் அரசுக்கு இணையானதில்லை என கூச்சநாச்சமின்றி அறிக்கைவிடும் இந்த வாய்சவடால் வெற்றுப்பேர்வழிக்கும் கூஜாக்கள் இருப்பதுதான் மாநிலத்தின் இந்த கேவல நிலைக்குக் காரணம். முதலில் மக்கள் விரோத தீய சக்தியான ஜெயலலிதா ஆட்சியை விமர்சிக்கக் கத்துக்கங்கப்பா. ஓய்ஞ்சு போய் உட்காந்திருப்பவன் எந்திரிச்ச பிறகு பார்த்துக்கலாம்!

  5. enkaruthu

    ///மறைமுகமாக ஒரு மூத்த தலைவரைத் தாக்குவது போல் உள்ளதே!!//
    இப்பொழுது நடக்கும் ஜெயாவின் வேட்பாளரான சங்கமாவின் கூத்தை பார்த்தால் பாவலன் அவர்களே நீங்கள் சொன்னது இப்ப இருக்கும் முதல்வருக்கும் பொருந்தும்தானே.

  6. குமரன்

    ///ஓய்ஞ்சு போய் உட்கார்ந்திருப்பவன் எந்திரிச்ச பிறகு பார்த்துக்கலாம் !///

    சேனா, Super punch!

  7. குமரன்

    ///ஒரு நாள் மனைவி, தனது கணவனைப் பார்த்து, “சும்மாவே உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்களே? சம்பாதிக்கிற வழியைப் பாருங்கள்” என்றாள்.

    உடனே கணவன், “அது பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தேன். ஒரு அருமையான திட்டம் எனது மனதில் உதித்துவிட்டது” என்று கூறினான். “என்ன திட்டம்?” என்று ஆவலோடு கேட்டாள் மனைவி.///

    ஒரு கற்பனை: இப்படிச் சொன்னால் சரியாக இருக்குமோ?

    “அதிமுகவிலோ திமுகவிலோ சேரப் போகிறேன்” என்றான் கணவன்.!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *