BREAKING NEWS
Search

‘முதல்வர் மகள்’ செய்தி விவகாரம்: ஜூனியர் விகடன் மீது மூன்றாவது அவதூறு வழக்கு!

‘முதல்வர் மகள்’ செய்தி விவகாரம்: ஜூனியர் விகடன் மீது மூன்றாவது அவதூறு வழக்கு!

சென்னை: முதல்வர் மகள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகை ஜூனியர் விகடன் மீது 2 கிரிமினல் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதா பதவிக்கு வந்த பின் ஜூவி மீது போடப்படும் மூன்றாவது வழக்கு இது.

சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், மாநகர குற்றவியல் அரசு வக்கீல் ஜெகன் தாக்கல் செய்துள்ள செய்துள்ள 2 மனுக்களில் கூறியிருப்பதாவது:

வாரம் இருமுறை வெளியாகும் ஜுனியர் விகடன் பத்திரிகை, 11.7.2012 தேதியிட்ட இதழில், ‘துப்பட்டாவுக்குள் மறையும் ஜெயில் மகள்’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில், ‘முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக்கொள்ளும் பிரியா மகாலட்சுமியை மோசடி வழக்கில் கைது செய்திருந்த போதிலும், மீடியாக்களில் பார்வையில் இருந்து போலீசார் அவரை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன?’ என்று செய்தி வெளியாகியிருந்தது.

அதேபோல, 8.7.2012 தேதியன்று வெளியான இதழில், `என் கைதுக்கு காரணம் சசிகலா’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த 2 செய்திகளும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கிரிமினல் அவதூறு குற்றமாகும். பிரியா மகாலட்சுமி என்பவர் முதல்வர் மகள் இல்லை என்று நன்கு தெரிந்திருந்தும், உள்நோக்கத்துடன், உண்மை சிறிதும் இல்லாத இந்த செய்தியை வெளியிடப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் முதல்வருக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே அந்த பத்திரிகையின் ஆசிரியர் ரா.கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ். மாதவன், பிரியா மகாலட்சுமி, நிருபர்கள் ராஜா திருவேங்கடம், ராமேஷ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜுனியர் விகடன் பத்திரிகை மீது கடந்த மாதம் ஒரு அவதூறு வழக்கை முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்ன கதை அது?

தன்னை முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்றும், ஸ்ரீரங்கத்தில் 1986-ம் ஆண்டு பிறந்ததாகவும் கூறிக் கொள்ளும் ப்ரியா மகாலட்சுமி என்பவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது வழக்கை தமயந்தி என்பவர் நடத்தி வருகிறார்.

முதல்வர் மகள் என்று கூறிக் கொண்டு பலரிடம் மோசடி செய்ததாக ப்ரியா மகாலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ப்ரியா மகாலட்சுமி என்ன சொல்லியிருக்கிறார்.. ஓவர் டு ஜூவி…

“எங்க மம்மி அவங்கதான். நான் பொறந்ததுமே எங்க மம்மி தனியா ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து விஜயானு ஒருத்தங்ககிட்ட கொடுத்து என்னை வளர்க்கச் சொல்லிட்டாங்க. என்னை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வெச்சாங்க. ஊட்டியில ஒரு காலேஜ்லதான் எம்.பி.ஏ. படிச்சேன். எங்க மம்மி என்கூட ரெகுலரா போன்ல பேசுவாங்க. அவங்களுக்கு எப்போ என்னைப் பார்க்கணும்னு தோணுதோ, அப்போ அவங்களுக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் மூலமா சொல்லி அனுப்புவாங்க. அவங்க சொல்லி அனுப்பும் இடத்துக்கு நான் போவேன். மம்மியைப் போலவே எனக்கு அரசியலுக்கு வரணும்னு ஆசை. அதை மம்மிகிட்டயும் சொல்லி இருக்கேன். அதுக்கு மம்மி, ‘வெய்ட் பண்ணு’னு சொல்வாங்க. ஆனாலும் அரசியல்ல பின்னால் இருந்து என்ன செய்ய முடியுமோ, அதை எல்லாம் நான் செஞ்சிட்டுதான் இருந்தேன். எங்க மம்மி பண்ற அரசியலே எனக்குப் பிடிக்காது.  ‘இதை இப்படி பண்ணக் கூடாது மம்மி’னு நானே அவங்களுக்குப் பலதடவை  சொல்லி இருக்கேன். எங்க மம்மியைத்தான் எல்லோரும் போல்டுனு சொல்லுவாங்க. ஆனா எங்க மம்மி, ‘என்னைவிட நீதான் போல்டான பொண்ணு’னு சொல்லுவாங்க.

நான் யாரையும் ஏமாத்திப் பணம் பறிக்கலை. எங்ககிட்ட இல்லாத பணமா சொல்லுங்க..? போலீஸ் திடீர்னு வந்து ஏதோ விசாரிக்கணும்னுதான் கூட்டிட்டுப் போனாங்க. ஸ்டேஷன்ல  என்கிட்ட மூணு மணி நேரம் ஏதேதோ கேள்வி கேட்டாங்க. என்னை ரொம்ப வல்கரா திட்டினாங்க. நான் யாருன்னு சொன்ன பிறகும் காவல் நிலையத்துல எனக்கு இந்த கதின்னா, சாதாரணப் மக்களுக்கு என்ன மரியாதை இருக்கும் சொல்லுங்க? இதை எல்லாம் மம்மிகிட்ட சொல்லணும்.

எங்க மம்மிக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லாமத்தான் இருந்தது. வெளியில போன சசிகலா எப்போ கார்டனுக்குள்ள திரும்ப வந்தாங்களோ, அப்பவே எல்லாப் பிரச்னையும் ஆரம்பமாயிடுச்சு. நான் எங்க மம்மிகூட சேர்ந்துட்டா, அவங்களைக் கழட்டி விட்டுருவாங்களோனு சசி கலாவுக்குப் பயம். அதனாலதான் என்னை ஒழிச்சுக் கட்டத் திட்டம் போட்டிருக்காங்க. அவங்க போட்ட சதித்திட்டத்துலதான் நான் இப்போ கம்பி எண்ணிட்டு இருக்கேன். இப்போ நடக்குற விஷயம் எல்லாம் எங்க மம்மிக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனாலும், அவங்க அமைதியா இருக்காங்க. நான் சொல்றது எதுவும் பொய் இல்லை. வேணும்னா… டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கட்டும். இனி நான் வெளியில வந்த பிறகுதான் ஒரு நிஜப்போர் ஆரம்பிக்கப் போகுது.

என்னை வளர்த்த ஒரே காரணத்துக்காக விஜயா அம்மாவையும் ஜெயில்ல பிடிச்சுப் போட்டிருக்காங்க. இது எல்லாம் நியாயமா சொல்லுங்க… எல்லாமே அந்த சசிகலா செய்யும் சதிதான். பிரியா மகாலட்சுமியின் ஒரு முகத்தை மட்டும்தான் இதுவரை எல்லோருக்கும் தெரியும். இனி நான் என்ன பண்ணுவேன்னு வெளியில வந்து காட்டுறேன்” என்று கோபத்தோடு சொல்லி இருக்கிறார்…”
-என்வழி செய்திகள்
3 thoughts on “‘முதல்வர் மகள்’ செய்தி விவகாரம்: ஜூனியர் விகடன் மீது மூன்றாவது அவதூறு வழக்கு!

 1. s venkatesan, nigeria

  //வேணும்னா… டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கட்டும்// – இது என் கையெழுத்து இல்லை.

 2. thamil

  அப்ப அது முதல்வரோட பொண்ணா ?ஜூவில சும்மா போட மாட்டானே

 3. குமரன்

  ///ஸ்ரீரங்கத்தில் 1986-ம் ஆண்டு பிறந்ததாகவும் கூறிக் கொள்ளும் ப்ரியா மகாலட்சுமி ///

  1984 முதல் 1989 வரை ஜெயலலிதா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர். அந்த கால கட்டத்தில் ஸ்ரீரங்கத்தில் அவர் குழந்தை பெற்றதாக எந்த செய்தியும் இல்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ரகசியமாக இதை வைத்திருக்க முடியாது.

  இந்தப் பெண் சொல்வது அபாண்டம், பொய். இந்த விஷயத்தில் ஜூ.வி. நக்கீரனைத் தொடர்ந்து அடி வாங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *