BREAKING NEWS
Search

மிச்சமிருந்த 6 அமைச்சர்களையும் சங்கரன் கோயில் தேர்தல் வேலைக்கு அனுப்பி ஜெ உத்தரவு!!

சங்கரன் கோயில் இடைத் தேர்தலுக்கு 32 அமைச்சர்கள்… ஜெயலலிதாவின் உலக சாதனை!

சென்னை: சங்கரன் கோயில் இடைத் தேர்தலுக்கு மேலும் 6 அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதன் மூலம் அனைத்து அமைச்சர்களுமே சங்கரன் கோயிலுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்.

சங்கரன் கோயில் தொகுதியில் வரும் மார்ச் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது.

இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, மதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.

அதிமுகவுக்கு இந்தத் தேர்தல் வெற்றி கவுரவப் பிரச்சினையாகிவிட்டது. தேமுதிகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள அதிமுக, இந்தத் தேர்தலில் தனித்து களமிறங்குகிறது.

‘சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன். பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, கூடுதல் வரிகள், மின் வெட்டு என பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், மக்கள் வாக்கு எங்களுக்கே… தேமுதிகவுக்கு திராணி இருந்தால் தனியாக நிற்கட்டும்’ என்று சட்டமன்றத்திலேயே பகிரங்க சவால் விடுத்தார் ஜெயலலிதா.

தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தனது கட்சியின் வேட்பாளராக முத்துச் செல்வியை நிறுத்தினார்.

தொகுதியின் தேர்தல் பணிகளை கவனிக்க ஓ பன்னீர் செல்வம், செங்கோட்டையன் உள்பட 26 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அறிவித்திருந்தார். இதுகுறித்து நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். விரைவில் இன்னும் சில அமைச்சர்களும் தேர்தல் பணிக்கு அனுப்பப்படலாம் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அதை மெய்ப்பித்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. அமைச்சரவையில் மிச்சமிருந்த 6 அமைச்சர்களையும் இப்போது கூடுதலாக தேர்தல் பணிக்கு நியமித்து திங்கள்கிழமை மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்மூலம் 33 பேர் கொண்ட தமிழக அமைச்சரவையில் 32 பேர் சங்கரன் கோயில் இடைத்தேர்தலுக்காகவே அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மிச்சமிருப்பவர் முதல்வர் ஜெயலலிதா மட்டும்தான். அவரும் விரைவில் பிரச்சாரத்துக்கு சங்கரன்கோயிலுக்கு கிளம்பவிருக்கிறார்!

ஒரு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்காக மொத்த அமைச்சரவையே தேர்தல் பணிக்குழுவில் பொறுப்பாளர்களாக்கப்பட்டிருப்பது, உலகிலேயே இதுதான் முதல்முறை. இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வாக்குகளை வெற்றி வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் எழுத்துப்பூர்வ உத்தரவு!

தலைமைச் செயலகமே சங்கரன் கோயிலுக்கு இடம்பெயர்ந்து விட்டதைப் போன்ற நிலைமையை ஆளுங்கட்சி உருவாக்கியுள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ ஏற்கெனவே கமெண்ட் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்
7 thoughts on “மிச்சமிருந்த 6 அமைச்சர்களையும் சங்கரன் கோயில் தேர்தல் வேலைக்கு அனுப்பி ஜெ உத்தரவு!!

 1. karthik

  அப்புறம்.. சும்மாவா.. எப்படியாவது திராணியை நிருபிக்க வேணுமில்லையா ?

 2. தினகர்

  பயம்.. எங்கே தோற்றுவிடுவோமோ என்ற பயம…..

  ஒட்டு மொத்த் அமைச்சரவை சென்றாலும் , அதிமுக தோற்று விட்டால் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கும்… அப்படி ஏதாவது நடந்தால் நல்லது.

 3. swami

  பயம்..வாழ்க்கைல பயம் இருக்கலாம் ஆனா பயமே வாழ்க்கையா இருக்க கூடாது…. 🙂

 4. மிஸ்டர் பாவலன்

  கோயில்ல சாமி கும்படற மாதிரி மினிஸ்டர்ஸ்
  தலை வணங்கி நிற்கும் போட்டோ. அன்றும், இன்றும்,
  என்றும் அ.தி.மு.க.-வில் இதே நிலை தான்.
  நாமும் நேரில் சந்திக்க நேர்ந்தால் எப்படி பணிவாக
  நிற்க வேண்டும், வணங்க வேண்டும், எப்படி அமைதி
  காக்க வேண்டும், மரியாதை செய்ய வேண்டும் என்பதை
  இந்த போட்டோ manual போல் சொல்கிறது.

  துக்ளக் சோ குறிப்பிட்டது போல் AIADMK கட்சியின் மீது
  முதல்வர் JJ வைத்திருக்கும் கட்டுப்பாடு இந்தியாவில்
  வேறொரு கட்சியில் காண்பது அரிது.

  தி.மு.க.-வில் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”
  உண்டு என்பார்கள். அது என்ன என்றால், கலைஞர் –
  முதல் குடும்பம் சொல்வதை செய்வது DMK கட்சிக்காரர்கள்
  கடமை. உரிமை, பதவிகள் எல்லாவற்றையும்
  கலைஞர் குடும்பத்திற்கு விட்டுக் கொடுத்து விட்டு,
  கலைஞர் இதயத்தில் அவர் கொடுக்கும் இடத்தைப் பெறுவது
  கண்ணியம். பொதுக்குழு, செயற்குழு, இதர குழு
  மீட்டிங்கில் “கலைஞரே தலைவர், அவர் தலைவராக,
  முதல்வராக என்றும் தொடர வேண்டும், ஓய்வெடுக்கக்
  கூடாது!” என பாராட்டுவது தான் கட்டுப்பாடு. இதை
  நன்கு புரிந்தவர் அன்பழகன் போன்றவர்கள். அதனால் தான்
  கட்சியில் நீடித்து நல்ல பேர் பெற்று விளங்க முடிகிறது.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 5. தினகர்

  “கோயில்ல சாமி கும்படற மாதிரி மினிஸ்டர்ஸ் தலை வணங்கி நிற்கும் போட்டோ. அன்றும், இன்றும், என்றும் அ.தி.மு.க.-வில் இதே நிலை தான்.”

  அதிமுக என்பது எம்ஜியாரால் ஆரம்பிக்கப்பட்டது, மூன்று முறை அவர் முதல்வராக இருந்திருக்கிறார். அவர் அமைச்சரவையிலும் அமைச்சர்கள் இருந்தார்கள். முழு சுதந்திரமாக செயல்பட்டு, எம்ஜியாரிடம் நேருக்கு நேர் விவாதம் செய்து முடிவு எடுத்த அமைச்சர்கள் அவர்கள். எம்ஜியார் ஆரம்பித்த அதிமுகவில் என்றுமே அமைச்சர்கள் தலை குனிந்து நிற்கும் இந்த நிலை இல்லை. அம்மா திமுகவில் மட்டுமே இந்த இழி நிலை.

 6. மிஸ்டர் பாவலன்

  அண்ணா தி.மு.க. இப்போது அம்மா தி.மு.க.-வாக
  மாறி விட்டது உண்மை தான்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 7. ஊர்க்குருவி.

  //அண்ணா தி.மு.க. இப்போது அம்மா தி.மு.க.-வாக
  மாறி விட்டது உண்மை தான்! //

  super comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *