BREAKING NEWS
Search

மூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு கல்தா… கட்சிப் பொறுப்பிலிருந்தும் நீக்கம்!!

மூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு கல்தா… கட்சிப் பொறுப்பிலிருந்தும் நீக்கம்!!

சென்னை: தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் மற்றும் கட்சி தலைமை நிலைய செயலாளர் பதவிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கொடநாட்டில் ஓய்வு முடிந்து திரும்பிய ஜெயலலிதா, போயஸ் தோட்டத்தில் கால் வைத்த கையோடு ஒரு அதிரடி நடவடிக்கையை அறிவித்து கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

தமிழக வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக கட்சியில் முக்கிய நிர்வாகியாக விளங்கினார். கட்சியின் தலைமை நிலைய செயலாளராகவும் இருந்து வந்தார்.

அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற போது அவர், விவசாயத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நம்பிக்கையானவர் என்று கட்சியினர் மத்தியில் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை.

இதனால் பொதுப்பணித்துறை அல்லது ஏற்கனவே பதவி வகித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து அவர் இறங்குமுகத்திலேயே இருந்தார். வருவாய்த் துறை அவரிடமிருந்து பறிக்கப்பட்டு விவசாயத்துறை வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இவருக்கு எதிரணியில் உள்ளவர்கள் அனைவரும் சசிகலா மூலம் அவருக்கு முக்கியப் பதவிகள் கிடைக்காமல் செய்துவிட்டனர் என்றும் கூறப்பட்டு வந்தது. சசிகலா போயஸ்கார்டனில் இருந்து வெளியேறிய பிறகு, சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. அப்போது, செங்கோட்டையனுக்கு மீண்டும் வருவாய்த் துறை வழங்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா கொடநாடு செல்வதற்கு முன் செங்கோட்டையன் உள்ளிட்ட 4 முக்கிய அமைச்சர்களை அழைத்து கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து சென்னை திரும்பினார். போயஸ்கார்டன் போகும் போது, ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்போதும் இருக்கும் செங்கோட்டையன் நேற்று வரவில்லை. அதன் பின் கட்சி அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். மேடையில் இல்லை. இறுக்கமான முகத்துடனேயே இருந்தார்.

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, திடீரென்று அறிவிப்பு வெளியானது. செங்கோட்டையன் வகித்த கட்சி பொறுப்பான தலைமை நிலையச் செயலாளர் பதவியில் இருந்தும் வருவாய் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் முதல்வர் ஜெயலலிதா நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் பதவியில் இருந்து செங்கோட்டையனை நீக்க வேண்டும் என்ற முதல்வரின் பரிந்துரையை கவர்னர் ரோசய்யா ஏற்றுக் கொண்டு நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதிய வருவாய் துறை அமைச்சராக பெருந்துறை தோப்பு என்.டி.வெங்கடாச் சலம் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரின் பதவி ஏற்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது.

செங்கோட்டையன் கட்சிப் பதவியில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது கடந்த வாரம் ஈரோடு மாவட்ட அதிமுகவினர் அதிகாலை 6 மணிக்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கொடநாடு சென்று புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது!

மேலும் மாநிலம் முழுவதும் சத்துணவு பணியாளர் நியமனம் குறித்து குற்றச்சாட்டு எழுந்தது. தூத்துக்குடியில் அவரை முற்றுகையிட்டு போராட்டமும் நடந்தது. இவ்வாறு தொடர்ந்து புகாருக்குள்ளானதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டிருக்கலாம் என்று அதிமுக வினர் கூறுகின்றனர்.

1996ம் ஆண்டு அதிமுக படுதோல்வி அடைந்தது. அப்போது கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக செங்கோட்டையன் இருந்தார். அவரது நடவடிக்கைகள்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் ஒரு குற்றச்சாட்டு கொளப்பாக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் கூறப்பட்டது.

இதனால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அதன்பின் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்சியின் பொறுப்புக்கு வந்தார். அதற்குள் ஓ.பன்னீர்செல்வம் 2ம் நிலைக்கு வந்ததால், செங்கோட்டையன் 3ம் நிலையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோப்பு வெங்கடாச்சலம் (48), முதல் முறையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.

‘இன்னொரு கூட்டம் போட வேண்டியிருக்கும்… ஜாக்கிரதை!’

ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனையின் போது, அமைச்சர்களையும் எம்.எல்.ஏக்களையும் முதல்வர் ஜெயலலிதா பகிரங்கமாக எச்சரித்துள்ளார். ‘உங்களில் பலர் மீது புகார்கள் வருகிறது. நீங்கள் திருந்தாவிட்டால், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு தனியாக கூட்டம் நடத்தியது போல உங்களுக்கும் தனியாக கூட்டம் நடத்த வேண்டியது இருக்கும்’ என்று  ஜெயலலிதா எச்சரித்ததாக கூறப்படுகிறது.

-என்வழி செய்திகள்




One thought on “மூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு கல்தா… கட்சிப் பொறுப்பிலிருந்தும் நீக்கம்!!

  1. Rajmohan

    1996ம் ஆண்டு அதிமுக படுதோல்வி அடைந்தது. அப்போது கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக செங்கோட்டையன் இருந்தார். அவரது நடவடிக்கைகள்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் ஒரு குற்றச்சாட்டு கொளப்பாக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் கூறப்பட்டது.

    Why ADMK lost in 1996 elections, everyone knows abt it!

    Above statement is good comedy…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *