BREAKING NEWS
Search

‘ஒரே ஆண்டில் எனது அரசின் அளப்பரிய சாதனைகள் பாரீர்!’ – அடித்துவிடும் ஜெ!

ஒரே ஆண்டில் எனது அரசின் அளப்பரிய சாதனைகள் பாரீர்! – அடித்துவிடும் ஜெ!

சென்னை: பல்வேறு சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, தடைக் கற்களை படிக்கற்களாக்கி, முள் பாதையை மலர் பாதையாக்கி மிகக் குறுகிய காலத்தில், அதாவது இந்த ஓராண்டிலேயே அதிமுக அரசு அளப்பரிய, அசாதாரண சாதனைகளைப் படைத்திருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

அதிமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி சட்டப்பேரவையில் புதன்கிழமை அவர் ‘படித்த’ உரை:

எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியுடனும், தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவுடனும் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள எனது தலைமையிலான அனைத்திந்திய அதிமுக அரசு தனது முதலாவது ஆண்டிலேயே மக்கள் மன நிறைவு அடையும் வகையில், மன நிம்மதி அடையும் வகையில், மகிழ்ச்சி அடையும் வகையில், மகத்தான சாதனைகளைப் புரிந்து, இரண்டாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றை வரியிலே சொல்ல வேண்டுமென்றால், “கொடுங்கோன்மை” அகன்று “செங்கோன்மை” நிலை நாட்டப்பட்டு இருக்கிறது. இதனையொட்டி, சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் இங்கே என்னை வாழ்த்தியும், பாராட்டியும் பேசினார்கள்.

இந்த அரசின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும், அதைக் கேட்டு ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி என்றால் அரசின் செயல்பாடுகளை பாராட்டுவது மட்டுமல்லாமல், குறைகள் என தாங்கள் கருதுவதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் பேசியவர்களுக்கும், எதிர்க்கட்சி என்றால் அரசை பாராட்டவே கூடாது என்ற கொள்கை கொண்டவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சவால்களைச் சமாளித்து வருகிறேன்…

இந்த அரசு தனது 100-வது நாளை நிறைவு செய்தபோது, இங்கே பேசிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முழு மனதோடு அரசின் செயல்பாடுகளை பாராட்டி இந்த மன்றத்திலே பேசினார்கள். அப்பொழுதே நான் என் உள்ளம் திறந்து சில கருத்துகளை எடுத்துக் கூறினேன். இந்த அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து அனைவரும் பாராட்டும்படி அமைய வேண்டுமே என்ற எனது உணர்வினை வெளிப்படுத்தினேன். அவ்வாறு எல்லோரும் பாராட்டும்படியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பது மிகப் பெரிய சவால் என்ற என் கருத்தையும் அப்போது தெரிவித்தேன். அந்தச் சவாலை இன்று வரை செம்மையாக சமாளித்து வந்துள்ளேன் என்பதையும், அதற்கேற்றாற்போல், இந்த அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்பதையும் உங்களின் பேச்சுக்களில் இருந்து நான் தெரிந்து கொண்டேன்.

ஜனநாயகம் என்பது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற இரண்டும் சேர்ந்ததுதான். எதிர்க்கட்சி இல்லாமல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியாது என்பதுதான் எனது திடமான எண்ணமாகும்.  எந்த ஒரு பிரச்சனையிலும் பல்வேறு வகையான கருத்துகள் வெளிப்பட்டால் தான், அந்தக் கருத்துகளை சீர்தூக்கிப் பார்த்து பெரும்பான்மையோருக்கு பயனளிக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க இயலும். இதைத்தான், John Stuart Mill, “The only way in which a human being can make some approach to knowing the whole of a subject, is by hearing what can be said about it by persons of every variety of opinion, and studying all modes in which it can be looked at by every character of mind” என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு மாறுபட்ட சிந்தனைகளை செவிமடுத்து, ஒரே பொருள் பற்றிய வேறு வேறு கருத்துகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் தான் பெரும்பான்மையான மக்களுக்கு நன்மை செய்ய இயலும்.

கொதிக்கிற சோறும் அகப்பையும்..

எதிர்க்கட்சி என்றால் அரசின் கொள்கைகளை, திட்டங்களை எதிர்க்கின்ற கட்சி என்ற பொருள் இல்லை. அரசு திட்டங்களின் நிறை குறைகளை எடுத்துச் சொல்லி, குறைகளை களைவதற்கான ஆலோசனைகளை வழங்குவது தான் எதிர்க்கட்சிக்கு இலக்கணமாக அமைய வேண்டும்.

“ஆளுங்கட்சி கொதிக்கிற சோறு என்றால், எதிர்க்கட்சி பதம் பார்க்கிற அகப்பை” என்று அண்ணா கூறுவார். அகப்பை இல்லாமல், சோற்றை கையை வைத்து பதம் பார்க்க முடியாது என்பது உண்மை தான். சோற்றை பதம் பார்க்க அகப்பை பயன்படுத்தப்பட வேண்டும். இந்த அடிப்படையில், ஆக்கப்பூர்வமான கருத்துகளை, ஆலோசனைகளை, அறிவுரைகளை எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும்போது, அதனை இந்த அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

எதிர்க்கட்சியினர் எடுத்துக்கூறும் ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்கு உரிய மதிப்பளித்து அவற்றை செயல்படுத்தும் அரசாக எனது தலைமையிலான அரசு விளங்கி வருகிறது.

எதிர்க்கட்சிகள் சோற்றை பதம் பார்க்கிற அகப்பையாக விளங்க வேண்டும். ஆனால், சோற்றை பதம் பார்க்கிறேன் என்று கூறி பானையை உடைக்கும் பணியில் அகப்பை ஈடுபடுமானால், அகப்பையைப் பதம் பார்க்க வேண்டிய நிலைமை தான் ஏற்படும் என்பதை பணிவன்புடன் இங்கே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

மார்க் இங்லிஸ் கதை..

எவரெஸ்ட் சிகரத்தின் மீது முதன் முதலாக ஏறி சாதனை படைத்தவர்கள் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்த டென்சிங் நார்கே ஆகியோர் ஆவர்.

இதே நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மற்றொரு மலை ஏறும் வீரர் மார்க் இங்லிஸ் நியூசிலாந்தில் உள்ள குக்  என்ற சிகரம் மீது ஏறிக் கொண்டு இருந்தார்.  அப்போது, தட்பவெட்ப நிலை மாறுதல் காரணமாக, மார்க் இங்லிஸ் ஏறிக்கொண்டிருந்த பகுதி பனியால் உறைந்துவிட்டது. இதன் காரணமாக அவர் மலையில் இருந்த ஒரு குகையில் தங்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் மீட்கப்பட்டாலும், இங்லிஸின் இரண்டு கால்களும் முழங்காலுக்கு கீழே துண்டாகிவிட்டன.  மலையேறும் வீரருக்கு கால்கள் தான் முக்கியமானவை.  இருந்தாலும், இங்லிஸ் மனம் தளரவில்லை.  செயற்கை கால்களை பொருத்திக் கொண்டு மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார்.

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைய வேண்டும் என்று திட்டமிட்டார்.  அதன்படி, தீவிரப் பயிற்சிக்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தின்மீது ஏறிக்கொண்டிருந்த போது, 6,400 மீட்டர் உயரத்தில் இங்லிஸ்க்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அவர் அணிந்திருந்த இரண்டு செயற்கை கால்களில் ஒன்று சேதமடைந்தது.  இருப்பினும், கைவசம் தயாராக வைத்திருந்த செயற்கைக் காலை பொருத்திக் கொண்டு தொடர்ந்து சிகரம் ஏறி, தான் நினைத்த சாதனையை எய்தினார் இங்லிஸ்.  இரண்டு கால்களையும் இழந்த ஒருவர் நடக்க நினைப்பதே அரிதான ஒன்று.  ஆனால், தன் விடா முயற்சியாலும், பயிற்சியாலும் இந்த சாதனையை இங்லிஸ் படைத்தார்.

இங்லிஸ் எப்படி பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து சாதனைப் படைத்தாரோ, அது போல்தான் இந்த அரசு, முந்தைய தி.மு.க. அரசால் விட்டுச் செல்லப்பட்ட கடன்கள், நிர்வாகச் சீர்கேடு, நிதிச் சீர்கேடு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பரிதாபகரமான நிலைமை, அரசு போக்குவரத்துக் கழகங்களின் அவல நிலைமை, ஆவின் நிறுவனத்தின் அலங்கோல நிலைமை, மத்திய அரசின் பாராமுகம் என பல்வேறு சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, தடைக் கற்களை படிக்கற்களாக்கி, முள் பாதையை மலர் பாதையாக்கி மிகக் குறுகிய காலத்தில், அதாவது இந்த ஓராண்டிலேயே மகத்தான சாதனைகளை படைத்து இருக்கிறது.

‘கரண்ட்’டுக்கு எதிர்த் திசையில் நீச்சல்…

ஓடுகின்ற நதியில், பாய்கின்ற ஆற்றில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கும்.  அதற்குப் பெயர் தான் கரண்ட். அந்த ஆற்றில், நதியில் நீந்த வேண்டும் என்று நினைப்பவர் அந்த நீர் ஒடுகின்ற பாதையிலேயே, அந்த ஈர்ப்பு சக்தி, கரண்ட் பாய்கின்ற திசையிலேயே நீந்திச் சென்றால் நீந்துவது என்பது மிகவும் எளிதான காரியம். அவர் எந்த சிரமும்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த கரண்டே அவரை ஈர்த்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிடும்.

ஆனால், அதற்கு மாறாக ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்தக் கரண்டை எதிர்த்து எதிர் நீச்சல் போட வேண்டுமென்றால் அதைப் போன்ற ஒரு கடினமான காரியம் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. அந்த ஈர்ப்பு சக்தி ஒரு திசையில் கொண்டு செல்லும், நீரைக் கொண்டு செல்லும். அந்த நீரில் எவ்வளவு பெரிய கனமான பொருள் விழுந்தாலும், அதையும் ஈர்த்துச் செல்லும். மிகப் பெரிய மரம் விழுந்தால் கூட அதையும் அந்தக் கரண்ட் இழுத்துச் செல்லும். அத்தகைய சக்தி வாய்ந்த கரண்டிற்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு வெற்றிகரமாக அக்கரைக்குப் போய்ச் சேர வேண்டுமென்றால் அது எவ்வளவு பெரிய சாதனை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அத்தகைய சாதனையைத்தான் எனது தலைமையிலான அரசு இந்தக் கடந்த ஓராண்டு காலத்தில் செய்து காட்டியிருக்கிறது, வெற்றி படைத்திருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

விலையில்லா பொருள்கள்…

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற எனது எண்ணத்தின் அடிப்படையில் தான், வாழ்வாதாரம் ஏதுமில்லாத ஏழை, எளிய, அடித்தளத்து மக்களுக்கு 1,000 ரூபாய் ஓய்வூதியம்; உணவுப் பாதுகாப்பை அனைவரும் பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் விலையில்லா அரிசி; தாய்மார்களின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில், விலை ஏதுமின்றி மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்குதல்; ஏழை, எளிய மக்களுக்கு விலை ஏதுமில்லாமல் பசுமை வீடுகள் வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இலவச சானிடரி நாப்கின்…

மனித வள மேம்பாட்டிற்கென பல திட்டங்களை எனது அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ – மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினி; இடை நிற்றலைத் தடுக்கும் வகையில், பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குதல்; விலையில்லா சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள், லேப்டாப் போன்ற உபகரணங்கள் வழங்குதல்; மேல் கல்விக்கான உதவித் தொகை வழங்குதல்; விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவியருக்கு உணவுப் படி அதிகரிப்பு; விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுதல்; வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்குதல்; பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், உயர்த்தப்பட்ட திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்குதல்; மகப்பேறு நிதி உதவியை உயர்த்தி வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விவசாயிகள், மீனவர்கள், கால்நடை பராமரிப்போர், என முதன்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில் பல்வேறு திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது.  ஏழை, எளிய மக்கள் தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க வழிவகை செய்யும் வண்ணம், அவர்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள் வழங்கும் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போன்று, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பல்வேறு திட்டங்களையும் எனது அரசு செயல்படுத்தி வருகிறது.

தொலைநோக்கு திட்டம்

நாட்டில் உள்ளோர், வாழ்வில் வளம் பெற வேண்டுமெனில் நாட்டின் பொருளாதாரம் மகத்தான வளர்ச்சி பெற வேண்டும். அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் தொழில் முனைவோர் இங்கே தொழில் தொடங்க முன்வருவர்.  இதனைக் கருத்தில் கொண்டு, பலப்பல உட்கட்டமைப்பு வசதிகளை எனது அரசு ஏற்படுத்தி வருகிறது. அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்ட தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 தயாரிக்கப்பட்டுள்ளது.

மின்சாரப் பற்றாக்குறை நீக்கப்படவில்லை

அளப்பறிய சாதனைகளை இந்த ஓர் ஆண்டில் எனது அரசு நிகழ்த்தியிருந்தாலும், மின் பற்றாக்குறை இன்னமும் நீக்கப்படவில்லை என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.  மின் பற்றாக்குறையை நீக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எனது அரசு முனைப்புடன் எடுத்து வருகிறது. விரைவில் தமிழகத்தில் உள்ள மின் பற்றாக்குறை நீக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதனைகள் எண்ணற்றவை

இந்த ஓராண்டில் எனது தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகள் எண்ணற்றவை என்றாலும், மேன்மேலும் சாதனைகள் பல தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த ஓராண்டு சாதனைகள் இன்னும் பல சாதனைகளை எட்டுவதற்கான அடித்தளமாக அமையும். மக்களின் கனவுகள் திட்டங்களாக உருப்பெறுகின்றன.  இந்தத் திட்டங்கள் உடனடியாக செயல்வடிவம் பெற்று அதன் பயன்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எனது குறிக்கோள் ஆகும். அதற்கேற்ற நடவடிக்கைகளை நாள்தோறும், நாள்தோறும் எனது அரசு எடுத்து வருகிறது.

எதிர்க்கட்சி உறுதுணையாக இருக்க வேண்டும்

வீணையின் நரம்புகள் தனித்தனியாக இருந்தாலும், அதை விரலாலே மீட்டுகின்ற போது, ஒரே இசையை எழுப்புவதைப் போல, அனைத்துக் கட்சியினருக்கும் பொதுவான நோக்கமாக விளங்கும் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் எனது நடவடிக்கைகளுக்கும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் எனது முயற்சிக்கும், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சியினரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

-என்வழி செய்திகள்




9 thoughts on “‘ஒரே ஆண்டில் எனது அரசின் அளப்பரிய சாதனைகள் பாரீர்!’ – அடித்துவிடும் ஜெ!

  1. தினகர்

    ”விலையில்லா அரிசி; விலை ஏதுமின்றி மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்குதல்; விலை ஏதுமில்லாமல் பசுமை வீடுகள் , விலையில்லா மடிக் கணினி;விலையில்லா சீருடைகள், விலையில்லா….. “

    ஆக ’இலவசம்’ என்ற திமுக ஆட்சியின் வார்த்தையை ‘ விலையில்லா’ என்று மாற்றியது தான் பெரும் சாதனையாக தெரிகிறது. திமுக ஆட்சியில் இலவசம் கொடுத்து மக்களை சோம்பேறியாக்கி விட்டார்கள் என்று யாரோ சொன்ன ஞாபகம். ஒரு வருஷ சாதனையே வெறும் ‘இலவசம்’ மட்டும் தான்னு அவங்க வாயாலே சொல்லியிருக்காங்க.

    என்ன சொல்லுறாங்கன்னு பார்ப்போம்… 🙂

  2. குமரன்

    ///“கொடுங்கோன்மை” அகன்று///

    உண்மைதான். சென்ற திமுக ஆட்சியை அகற்றியது சாதனைதான். ஆனால் அதைச் செய்தது அதிமுக அல்ல. மக்கள்தான். அது மக்களின் சாதனை. அதை அகற்றும்போது வேறு வழியில்லாததால் அந்த இடத்தில் மக்கள் அதிமுகவை அமர்த்தினார்கள் என்பதுதான் உண்மை.

    ஆனால் “செங்கோன்மை ” நிலைநாட்டப்பட்டது என்பது தவறு. மக்கள் சென்கொன்மையை நிலை நாட்டும் அளவுக்கு அவர்களுக்கு ஆட்கள் யாரும் கிடைக்கவில்லை. அவர்கள் மனதில் இருக்கும் ஆளோ தனக்கு வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார்.

  3. குமரன்

    ///ஜனநாயகம் என்பது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற இரண்டும் சேர்ந்ததுதான். எதிர்க்கட்சி இல்லாமல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியாது என்பதுதான் எனது திடமான எண்ணமாகும். ///

    இந்த விஷயத்தில் “ஜனநாயக வாதி”யாகச் செயல்பட்ட ஜெயலலிதாவைப் பாராட்டியே ஆக வேண்டும். தேமுதிகவும் சேர்ந்து சட்ட சபையில் தனக்கு ஜால்ரா அடிக்காத வண்ணம் விஜயகாந்தைத் தரக்குறைவாகப் பேசி அவரை உசுப்பி விட்டு உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்பட வைத்தமை ஜன நாயகத்துக்கு அவர் ஆற்றிய “மகத்தான” தொண்டு. (மகம் வந்திடுச்சி, நோட் பண்ணிக்குங்கப்பா, நோட் பண்ணிக்குங்கப்பா)

  4. குமரன்

    போஸ்டர்களில் பத்தாண்டு சாதனையை பத்து மாதங்களில் செய்ததாக ஒரு போஸ்டர். இன்னொன்றில் ஒரு வருடத்தில் நூறு ஆண்டு சாதனை செய்ததாக வாசகம்.

    அப்படியானால் சென்ற இரண்டே மாதங்களில் தொண்ணூறு ஆண்டு சாதனையா ….. அப்ப்பாடி … கணக்கு கண்ணக் கட்டுதே …

  5. M. Senthil

    நாம் எதைச்சொன்னாலும் மக்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு முழுமையாக நம்பிவிடுவார்கள் – என்ற அழ்ந்த நம்பிக்கை

    செல்வி-கும் உண்டு தாதா-வுக்கும் உண்டு. அப்படியொரு / எப்படியொரு தன்னம்பிக்கை!?

  6. HOTLINKSIN.COM

    ஜெவை விட இதில் கம்யூனிஸ்ட்தான் ரொம்ப பெருமைப்படுகிறார்களாம்…

  7. தினகர்

    திமுக ஆட்சியின் ‘இலவசம்’, அதிமுக ஆட்சியின் ‘விலையில்லா’ – இரண்டுக்கும் ‘ஆறு வித்தியாசம்’ போட்டியா?

    இந்த இலவசத்தை தவிர வேறு ஏதாவது குறிப்பிட்டு சொல்லியிருக்கிறாரா என்று மறுபடியும் ஒரு முறை தேடிப்படித்துப் பார்த்தால் ’2013 தொலை நோக்கு திட்டம் தயாரித்துள்ளோம்’ என்று ஒன்று இருக்கிறது.

    அது என்ன 2013 – ஏதும் ராசியான நம்பரா? சிவாஜியில் ஷங்கர் போட்ட திட்டத்தை பவர் பாயிண்டில் ஏத்தினாலே தொலை நோக்கு திட்டம் ரெடி.. என்ன ஆக்‌ஷன் ப்ளான்? அதானே முக்கியம். அப்படி ஏதும் தென்பட வில்லையே.

    நான் ஐந்து மாத்திரையையும் சாப்பிட்டு விட்டு தான் மறுபடியும் மருத்துவ்ரிடம் போவேன் என்று நண்பர் கூறியிருந்தார். ஒருவருஷத்தில் ஒரு மாத்திரை கூட கொடுத்த மாதிரி தெரியல்லியே..

    போலி டாக்டர்கள் சாக்பீஸையே மாத்திரைப்பொடி என்று கொடுப்பார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஏதாவது இருக்குமோ?

    போலிகள் தான் அதிகப்படியான விளம்பரம் செய்து உண்மை என்பது போல் நிருபிக்க முயற்சிப்பார்கள். ஒரெ நாளில் 25 கோடிக்கு விளம்பரம் செய்ததைப் பார்த்தால் அதே நினைப்பு தான் வருகிறது. ஒரு மின்சாரத் திட்டத்திற்கு அடிப்படை கட்டமைப்புக்கு இந்த 25 கோடி போதுமானது.

    பஸ் கட்டணத்தை உயர்த்தா விட்டால் நிர்வாகம் செய்ய முடியாது என்று சொன்னவர்கள், இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? மேற்கு வங்காளத்தில் இருப்பவர்களுக்கும், பஞ்சாபில் இருப்பவர்களுக்கும் இவர்கள் விள்ம்பரம் செய்வதால் யாருக்கு என்ன பயன்? தேவை என்றால் அதிமுக பணத்தில் விளம்பரம் செய்யட்டுமே…

  8. ஹாஜி

    கேக்குறவன் கேனையா இருந்தா…………………………ன்னு சொல்லுவாங்களாம்.
    மக்கள் எல்லாரையும் கேனையாக நினைக்கும் திமிரும் தைரியமும் எங்கிருந்து வருகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *