BREAKING NEWS
Search

எத்தனை முறை நீதிமன்றத்திடம் அசிங்கப்பட்டாலும் திருந்தாதவர்கள்!

எத்தனை முறை நீதிமன்றத்திடம் அசிங்கப்பட்டாலும் திருந்தாதவர்கள்!

ந்தியாவில் எந்த மாநில அரசாவது, சிறப்பு நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதி மன்றத்திடம் இந்த அளவுக்கு திட்டுக்களையும் கண்டனங்களையும், வாங்கிக் கட்டிக்கொண்டிருக்குமா?

நிச்சயம் இல்லை!

அந்தப் பெருமையை முழுக்க முழுக்க ஜெயலலிதாவும் அவர் தலைமையிலான தமிழக அரசுமே குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளன(ர்).

தனிப்பட்ட முறையில் நீதிமன்றங்களை ஜெயலலிதா பொருட்படுத்தாததுதான் இன்று ஆட்சியிலும் எதிரொலிக்கிறது.

ஒரு வழக்கில் எத்தனை முறை வாய்தா வாங்குவார்கள்… 16 நெடிய ஆண்டுகள். 150க்கும் அதிகமான வாய்தாக்கள். உறுதி செய்யப்பட்ட ஒரு குற்றத்துக்கு எதிராக எத்தனை மேல் முறையீடுகள், எதிர் வழக்குகள்? கடைசியில், தன்னை விசாரிக்கும் நீதிபதியையே நீக்க வேண்டும் என்று வந்து நிற்கிறார்கள். விட்டால் அந்த நீதிமன்றத்தையே கலைக்கவும் சொல்வார்கள் போலிருக்கிறது.

ஆனால் ஜெயலலிதா ஆதரவாளர்கள் கொஞ்சமும் வெட்கமின்றி திரும்பத் திரும்ப கனிமொழியையும் ஆ ராசாவையும் மையப்படுத்தி வாதிக்கிறார்கள்.

கனிமொழியும் ராசாவும் எத்தனை முறை வாய்தா வாங்கினார்கள்..? தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமாகத்தானே சந்தித்தார்கள்? இன்று வரை அத்தனை விசாரணைக்கும் தவறாமல் ஆஜராகிறார்களே… இத்தனைக்கும் அவர்களின் குற்றத்துக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது சிபிஐ. கனிமொழியை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி நியாயமாக நடந்து கொள்ளவில்லை என உச்சநீதிமன்றமே கண்டிக்கும் நிலை.

திமுகவினர் சட்டத்தை மதித்து அந்த நடைமுறைக்கு உடன்படுகிறார்களா இல்லையா… கேட்டால் மத்திய அரசு ஆதரவு என்ற சப்பைக் காரணத்தை முன்வைப்பார்கள் சிலர். மத்திய அரசின் ஆதரவு என்றால், இந்த வழக்குக்கே வேலை இல்லையே. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எத்தனை கமுக்கமாக ஒன்றுமில்லாமல் செய்திருக்க முடியும்…. அப்படியெல்லாம் நடக்காமல், குற்றச்சாட்டு என்று வந்ததும் அமைச்சராக இருந்த ராசா கைதானார். எம்பியாக இருந்த கனிமொழியும் கைதானாரே… ஆதாரமிருந்து தீர்ப்பு பாதகமாக வந்தால் மீண்டும் சிறை செல்லத் தயாராகத்தானே உள்ளார்கள்?


ஆனால் இங்கே, ஆட்சியில் இருந்தும் கூட, அரசியல் சாசன சட்டத்தையே ஜெயலலிதா அன்ட் கோ மதிக்கவில்லையே!

சமச்சீர் கல்வி விவகாரத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையிழந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ‘தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது? அங்கு சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? ஏன் எதுவும் சரியாக இல்லை? ஒரு தீர்ப்பை எத்தனை முறை அப்பீலுக்குக் கொண்டு வருவீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முறையிட்ட அத்தனை நீதிமன்றங்களிலும் நீதிபதிகளின் கண்டனங்கள், கண்டிப்புகள் சிரிப்பாய் சிரித்துவிட்டன.

அண்ணா நூற்றாண்டு விழா நூலக விவகாரத்தில் ஒரு மாநில அரசு இதைவிட அசிங்கப்பட முடியாது எனும் அளவுக்கு போய்க் கொண்டிருக்கிறது நிலைமை. கருணாநிதி மீதான தனிப்பட்ட குரோதத்தில், சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட பிரத்தியேக நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்ற ஜெயலலிதா எடுத்த முடிவை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திவிட்டது உயர்நீதிமன்றம். அறிவுப் பொக்கிஷமான இந்த நூலகத்தை அழிக்கும் அரசின் முயற்சிக்கு தன் கண்டனங்களையும் பதிவு செய்தார் நீதிபதி சந்துரு.

பின்னர் அந்த நூலகத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து தமக்கு உரிய அறிக்கை தரவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இவற்றையெல்லாம் கிஞ்சித்தும் சட்டை செய்யாமல், அந்த நூலகத்தின் கருத்தரங்கை திருமண நிகழ்ச்சிக்கு விட்டு, அங்கேயே சாப்பிட்டு, கழித்து நாறடிக்க துணை போயிருக்கிறது தமிழக அரசு என்றால், மனதில் எத்தனை அழுக்காறு இருக்க வேண்டும்!

இந்த அரங்கம் இலக்கிய விழாக்கள், கருத்தரங்குகள், சர்வதேச அளவிலான ஆய்வு மாநாடுகள் போன்றவற்றை நடத்துவதற்குத்தான். ஆனால் ஜெயலலிதா வந்ததும் முதல் வேலையாக சினிமாக்காரர்களுக்கு விழா நடத்த அரங்கத்தை வாடகைக்கு விட்டார்கள். அன்று பிடித்தது சனி, இந்த அருமையான அரங்கத்துக்கு!

ஜெ அரசின் இந்த அலட்சியம் குறித்து மீண்டும் உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்ததும், தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி டி எஸ் சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதில், “நூலக அரங்கில் திருமண நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. திருமணத்துக்கு பெற்ற பணத்தை திரும்பி ஒப்படைக்க வேண்டும். நூலகத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் திருமண நிகழ்ச்சிகள் நடக்க அனுமதிக்கக் கூடாது. இதற்கு தடை விதிக்கிறோம். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக தனியாக விளக்கமான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.

திருந்துகிற ரகமா இவர்கள்… சட்டத்தின் வரம்புக்குட்படாத அரசை எவ்வளவு காலம் நீதிமன்றங்கள் அனுமதிக்கின்றன என்று பார்ப்போம்!

ஆனால் ஒன்று… ஜெயலலிதாவின் இத்தனை சட்டவிரோதங்களை, அவரது ஆட்சியின் மக்கள் விரோதங்களை ஒப்புக்குக் கூட கண்டிக்கத் துப்பில்லாத யாரும், கருணாநிதி பற்றியோ திமுக பற்றியோ குறைந்தபட்ச விமர்சனம் வைக்கக் கூட கூட அருகதையற்றவர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளட்டும்!

-விதுரன்
என்வழி ஸ்பெஷல்
17 thoughts on “எத்தனை முறை நீதிமன்றத்திடம் அசிங்கப்பட்டாலும் திருந்தாதவர்கள்!

 1. தேவராஜன்

  //ஜெயலலிதா என்று வந்துவிட்டால் பாதார விந்தங்களே சரணம். அவர் என்ன செய்தாலும் நியாயமே. நூலகத்தை கல்யாண மண்டபமாக்கி நாறடித்தாலும் நறுமணம்தான் இவர்களுக்கு.

  அந்த நியூஸை என்வழில ஏங்க போடலை? //

  என்று முந்தைய கமெண்டில் கேட்டிருந்தேன். முடிந்தால் அதை மட்டும் நீக்கிடுங்க. நான் கமெண்ட் போட்டு முடிச்சி refresh பண்ணிப் பார்த்தால், அதிரடியா சூடு வைக்கிற மாதிரி, நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி ஒரு அசத்தல் கட்டுரை போட்டுட்டீங்க. இந்த துணிச்சல் எவனுக்கும் இன்னும் வரல. அதுக்கு இன்னும் ஓரிரு வருஷமாகும் போல.

 2. குமரன்

  இந்த விஷயத்தில் இதுவரை என்வழியில் கட்டுரை வரவில்லையே என்று அடிக்கடி பார்த்திருந்தேன். இன்றும் வராவிட்டால் பொன் செய்துவிடுவது என்றே தீர்மானித்திருந்தேன்.

  நாட்டுக்கும் மக்களுக்கும் ஒரு நல்ல வசதியை ஏற்படுத்தி வைத்தாலும், அது கருணாநிதி செய்தது என்ற ஒரே காரணத்துக்காக, அதை விடாமல் துரத்தித் துரத்திக் கெடுப்பதையே கொள்கையாக ஜெயலலிதா வைத்திருக்கிறார் என்பதை கடந்த ஞாயிறன்று நூலக வளாகத்தில் நடந்த திருமண வரவேற்பு உறுதிப்படுத்துகிறது.

  நேற்று அஜீத்தின் பில்லா-2 படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவும் அங்கேதான் நடப்பதாக இருந்து பின்னர் கோர்ட் உத்தரவின் எதிரொலியாக ரத்து ஆகியுள்ளது.

  கோபம் இருந்தால் நியாயம் தெரியாது என்பது போல காழ்ப்புணர்ச்சி போன்ற உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப் படும் முடிவுகள் நியாயத்துக்கு உட்பட்டதாக இருப்பதில்லை.

 3. தேவராஜன்

  //நான் ஆங்கிலப்பத்திரிகை மட்டும் படிக்கிறேன் தினமலர் படிப்பதில்லை. ஆனாலும் அதில் வருவது கருணாநிதியின் அறிக்கை அளவுக்கு நச்சு இல்லை//

  -ஒரு மேதாவி இப்படி கமெண்ட் எழுதுகிறார். இந்த நபரின் ஆங்கிலப் புலமைக்கு ஆஹா ஓஹோ என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள் பாவலன் போன்றவர்கள். எத்தனை பெரிய தவறு இது? அறிஞர்களுக்கு அழகா இது? ஆங்கிலப் பத்திரிகை படிப்பவன் இஷ்டத்துக்கு பொய்யாய் எழுதலாமா?

  ஜெயலலிதாவின் அயோக்கியத்தனங்களுக்கு வக்காலத்து வாங்குவதற்கென்ற கிருஷ்ணா போன்றவர்கள் எத்தனை முறை அசிங்கப்பட்டாலும், துடைத்துப்போட்டுவிட்டு தொடர்ந்து அதே தவறைச் செய்கிறார்கள். நான் ஏதோ காழ்ப்பிலோ, கோபத்திலோ சொல்லவில்லை. மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களே, இவர்கள் செய்வது திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் என்பது உங்களுக்குமா புரியவில்லை?

 4. மிஸ்டர் பாவலன்

  //நாட்டுக்கும் மக்களுக்கும் ஒரு நல்ல வசதியை ஏற்படுத்தி வைத்தாலும், அது கருணாநிதி செய்தது என்ற ஒரே காரணத்துக்காக, அதை விடாமல் துரத்தித் துரத்திக் கெடுப்பதையே கொள்கையாக ஜெயலலிதா வைத்திருக்கிறார் என்பதை கடந்த ஞாயிறன்று நூலக வளாகத்தில் நடந்த திருமண வரவேற்பு உறுதிப்படுத்துகிறது.// (குமரன்)

  நூல்களையும், நூலகங்களையும் மிகவும் மதிப்பவன் நான். இன்னும்
  நிறைய நூலகங்கள் நிறுவப்பட வேண்டும் – அறிவியல், விஞ்ஞான
  நூல்கள் சுஜாதா முயற்சி எடுத்தது போல் எளிமைப் படுத்தித் தர வேண்டும்
  என்பதிலும் நான் ஆர்வம் காட்டி வருகிறேன். அண்ணா நூலகம் ஒரு
  நல்ல முயற்சி என்பதில் மாற்றுக் கருத்து இருப்பதற்கு குமரன் சொன்னது
  போல் அரசியல் மட்டுமே காரணமாக இருக்கிறது வருந்தத் தக்கது.

  கோர்ட்டின் அறிவுரை, உங்கள் பதிவு மக்கள் நலன் சார்ந்தது. யாராக
  இருந்தாலும் நீதிக்குத் தலை வணங்க வேண்டும். நீதிபதிகளின்
  பரிந்துரைகளை மதிக்க வேண்டும். நன்றி.

  -மிஸ்டர் பாவலன்

 5. தேவராஜன்

  //Rediff வலை தளத்தில் மட்டும் தான் வந்தது என்று நான் எங்கே சொன்னேன்? வலை தளங்களில் சிலவற்றில் மட்டும் தான் வந்தது என்று தானே தெரிவித்தேன்? வலை தளங்களில் வருவதை பொதுவாக அரசியல் வாதிகள் ignore தான் செய்வார்கள். ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் பயனீர் ஆசிரியர்கள் ஆங்கில தொலைக்காட்சிகளில் வரும் பேட்டிகளில் எப்படி காங்கிரசுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என்பதை 2004-ல் இருந்து பார்த்து கொண்டு தானே இருக்கிறேன்?//

  -ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய் என்பார்களே, அதற்கு உதாரணம் தெரிய வேண்டுமென்றால் மேற்கண்ட மேற்கோளைப் படியுங்கள் நண்பர்களே.

  இந்த நபர்தான் முதலில் சொன்னார், ரீடிப் தவிர வேறு யாரும் செய்தி வெளியிடவில்லை என்று. அதிலும் ரீடிப் நம்பகத்தன்மை இல்லாத தளம் என்ற ரீதியில். இப்போது இந்துஸ்தான் டைம்ஸ், பயனீர், கேள்விக்குறியோடு வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா ஆகியவை கூட ஜெயலலிதாவுக்கு எதிராக செய்தி வெளியிடுவதாகக் கூறுகிறார். போதாக்குறைக்கு அந்த பத்திரிகையின் ஆசிரியர்களையும் சாடுகிறார். என்னா ஒரு வில்லத்தனம்!

  இவர் ஆங்கிலப் பத்திரிகை அல்லது அந்த பத்திரிகையின் வலைத்தளங்கள் படிக்கும் லட்சணம் தெரிகிறதா (அனைத்து ஆங்கிலப் பத்திரிகைகளும் தங்கள் அச்சு ஊடகத்தில் வந்ததைத்தான் 99 சதவீதம் ஆன்லைனில் தருவார்கள்). இந்தப் பத்திரிகைகள் அனைத்துமே சந்தர்ப்பம் வாய்த்தால் ஜெயலலிதாவை மகாராணி ரேஞ்சுக்கு தூக்கி வைத்துக் கொண்டாடியவைகளே. கடந்தமுறை திமுக ஆட்சியின்போது ஜெயலலிதா டெல்லிக்கு வந்தபோது The Queen Arrives Capital என எட்டு பத்திக்கு தலைப்பாக்கியது டைம்ஸ் ஆப் இந்தியா. Jaya gets royal reception என எழுதி மகிழ்ந்தது இந்துஸ்தான் டைம்ஸ். நேரமிருந்தா ஏதாவது நல்ல லைப்ரரியில போய் இதையெல்லாம் தேடி எடுத்து படிங்க. தேடற கஷ்டம் கூட வேணாம்… மெட்ராஸ் யுனிவர்ஸிட்டி லைப்ரரில பீரியாடிக்கிள்ஸ் பகுதிக்குப் போங்க. அந்தக் கால சுதேசமித்திரன்லருந்து உங்க விருப்பமான அத்தனை ஆங்கிலப் பத்திரிகைகளின் 60 வருஷ பதிப்புகளும் கிடைக்கும்!

  குதிரைக்கு சேனம் போட்ட மாதிரி உங்களுக்கு கருணாநிதி எதிர்ப்பு என்ற சேனம் மாட்டப்பட்டுள்ளது. அதை நீக்கிவிட்டுப் பார்த்து கருத்தெழுதுங்கள். இல்லாவிட்டால் அசிங்கப்படுவது தொடரும்!

 6. மு. செந்தில் குமார்

  நல்ல கட்டுரை. அழகாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

  ஜெயலலிதாவின் இத்தனை சட்டவிரோதங்களை, அவரது ஆட்சியின் மக்கள் விரோதங்களை ஒப்புக்குக் கூட கண்டிக்கத் துப்பில்லாத யாரும், கருணாநிதி பற்றியோ திமுக பற்றியோ குறைந்தபட்ச விமர்சனம் வைக்கக் கூட அருகதையற்றவர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளட்டும்!

  இவை நான் வரவேற்கின்ற வரிகள்.

 7. Rajmohan

  See
  One person OR One GOVT is doing mistakes means, please highlight and comment/ criticise!

  But don’t do, “this mistake is less or better one compare to previous one” like that of attitude is bitter rubbish!

  If really u ppl want to compare, do it with better state governments outside TN.

  Moreover, what is the necessity happens to compare it with DMK ppl and Govt. It is not good.

  Here, we don’t have options, by the way political parties also decided after five years we will be back to throne like that….

  Last but least, one joke in this, CBI is still searching for proof! ha ha ha….

  Hope, he will write in future, nothing happens in 2G like that…

 8. Nirmal

  நீங்க என்ன சொல்ல வருகிறிர்கள். புரியும் படியாக சொல்லவும்

 9. MANNAI SENTHIL

  விருதுநகர் கலெக்டர் பாலாஜி காக்கவைக்கப்பட்டிருக்கிறார் … தர்மம் காக்க வைக்கப்படுகிறது நீதி தள்ளி வைக்கப்படுகிறது நேர்மை தண்டிக்கப்படுகிறது . பதினைந்து மாதத்தில் செய்திட்ட நல்ல விடயம் எதையாவது இவர்கள் சொல்வார்களா? ஆடு மாட்டு என்று ஓசி புராணம் படாதீர்கள். நாட்டிற்கு என்ன கிடைத்தது? முழு உண்மை என்னவென்றால் நேர நிர்வாக திறமையற்றவர் ஜெயலலிதா ..பலவீனத்தையே பலமாய் மக்களை நம்ப வைத்துவிட்டன ஊடகங்கள் . ..

 10. தினகர்

  “யாராக இருந்தாலும் நீதிக்குத் தலை வணங்க வேண்டும். நீதிபதிகளின்
  பரிந்துரைகளை மதிக்க வேண்டும் ”

  ஏனுங்க ஏதோ பக்கத்து நாட்டில் நடப்பது போல் பொத்தாம் பொதுவா சொல்றீங்க.. ”முதல்வர் நீதிக்கு தலைவணங்க வேண்டும் “ என்று சொல்லக்கூட உங்களுக்கு நா எழவில்லையா? ’கை’ தட்ட(ச்சு) வர வில்லையா? 🙂

 11. venkt

  ஜெயலலிதாவின் இத்தனை சட்டவிரோதங்களை, அவரது ஆட்சியின் மக்கள் விரோதங்களை ஒப்புக்குக் கூட கண்டிக்கத் துப்பில்லாத யாரும், கருணாநிதி பற்றியோ திமுக பற்றியோ குறைந்தபட்ச விமர்சனம் வைக்கக் கூட கூட அருகதையற்றவர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளட்டும்!

  சூப்பர் சாட்டையடி

 12. தினகர்

  ”நேர நிர்வாக திறமையற்றவர் ஜெயலலிதா ..பலவீனத்தையே பலமாய் மக்களை நம்ப வைத்துவிட்டன ஊடகங்கள் . ..”

  ”நேர” என்பது தேவையில்லா வார்த்தை.. ஊடகங்களும் சில ஆதிக்க சக்திகளும் ஒன்றாக இணைந்து பதினைந்து வருடங்களாக நடந்து வரும் வழக்குகளை மறைத்து இவருக்கு ‘ க்ளீன்’ சர்ட்டிபிகேட் எல்லாம் வேற் கொடுத்தாங்க. இவங்களும் ரொம்ப தைரியமா என் மீது எந்த வழக்கும் இல்லை என்று மேடையிலும் டிவியிலும் சொன்னாங்க.

  ஆட்சியை பிடித்தவுடன் முதலில் ஒடியது பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு தான்.

  சரி அதெல்லாம் கிடக்க்ட்டும், ஆட்சியில் ஏதாவது கடுகளவு நன்மை இருக்கிறதா என்று பார்த்தால் ஏதுமில்லை. மாறாக கடுமையான நிர்வாக கோளார்று.

  மின்சார உற்பத்திக்காக, பாபநாசம் அணையை முற்றிலும் திறந்து விட்டு, இன்றைக்கு வற்றாத தாமிரபரணி. வரண்டு கிடக்கிறது. சில ஆயிரம் மெகாவாட்டிற்காக, விவசாயிகளின் சேமிப்பான நீர் ஆதாரம் அழிக்கப்பட்டுள்ளது.. என்ன ஒரு நிர்வாகம்? இதே அம்மையார், இந்த மாவட்டத்தில் நெல் பயிர் கதிர் முற்றும் தருவாயில் இருக்கும் போது தண்ணீர் திறந்து விடாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை கருக வைத்து, லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் அடித்தார்.

 13. kanalmeegam

  அய்யா தன்மீதுள்ள சொத்துகுவிப்பு ஊழல் வழக்கு விசாரணையையே பத்து பதினைந்து ஆண்டுகள் நொண்டிசாக்குகள் கூறி சட்டத்திற்கு மதிப்பளிக்காமல் வாய்தா வாங்கியே வழக்கை சவ்வுமிட்டாய் ஆக்கி நீதியையே அவமதிக்கும் ஒருவர் தலைமைபொறுப்பில் இருந்தால் நாடு எப்படி உருப்புடும்? சட்டம் எங்கே வாழும்? மக்கள் செய்த மாபெரும் தவறு இப்போது தமிழகம் பலவழிகளிலும் பின்தங்கிய மாநிலமாக மாறிவருகிறது.

 14. vilambi

  The worst of it is a brahmin fanatic cho ramasami….has never mentioned even one word about the atrocities in the court…but raja and kanimozhi are focussed even personally bad.then what is sasi to j?no one dares to question…when she was sent out of poes garden cho ramasami has written that J has come out of all complaints…but after her re admission in poes school cho mama has not even whispered a word?by the by who is the title holder and owner of kodanadu? why there is a parallel secretariat? at whose cost?…the brahmins should think fair…..she was the person who has made the insult of the century to the caste by remanding jayendrar for her own egos….The most daring TN Seshan was standing shirtless in Kancheepuram street as a sentry after retirement…but not even a single brahmin came out to support him…but now they think they are ruling through her….shame.She has so far proved wrong to everyone that but for Sasi she will insult anyone on the earth…pls verify with her husband M.Natarajan who has sold his backbone to the reserve bank papers and sophistication….pls dont waste quality time on this waste subject…..

 15. மிஸ்டர் பாவலன்

  இந்த வாரத்து ஜூனியர் விகடன் படித்த போது தி.மு.க.
  நடத்திய “சிறை நிரப்பும் போராட்டம்” பற்றி பல தகவல்கள்
  படித்தேன். அவற்றின் சாராம்சத்தை நண்பர்கள் ஜூவியைப்
  படித்து தெரிந்து கொள்ளலாம்.

  பெங்களூரில் நடந்து வரும் DA case பற்றியும் ஒரு தகவல்
  படித்தேன். அது இது தான்:

  //இது கருத்து ஸ்பெஷல் கோர்ட் வட்டாரத்தில் பேசினோம்.
  “நீதிபதி மல்லிகார்ஜூனையா ஆகஸ்ட் 4-ம் தேதி ஒய்வு
  பெறுகிறார். மிஞ்சிப் போனாலும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல்
  நீட்டிக்க முடியாது. அதனால் புதிய நீதிபதியிடம் வழக்கை
  நடத்திக் கொள்ளலாம் என்ற முடிவில் ஜெயலலிதா டீம்
  இருக்கிறார்கள்” என சொன்னார்கள்.///

  ஆகஸ்ட் 4 -ம் தேதிக்குள் விசாரணை முடியாமல் புதிய
  நீதிபதி வழக்கை எடுத்துக் கொண்டு நடத்தினால் வழக்கு விசாரணை
  முதலில் இருந்து தொடங்குமா, என்ன நடைமுறை என்பதை
  சட்ட அறிஞர் குமரன் விளக்கலாம்! (புதிய நீதிபதி appoint செய்வதற்கும்
  சற்று கால அவகாசம் எடுக்கும் எனத் தோன்றுகிறது.)

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 16. s venkatesan, nigeria

  எங்கே நீதிக்கு தலை வணங்கறது.
  எம்ஜியாரே நேரில் வந்தாலும் அவங்க தலை வணங்க மாட்டங்க.

 17. buruhani

  ஜனாயக நாட்டில் மக்கள் ஆச்சி இருக்கும் வரை மக்கள் தட்டி கேக்காத வரை தலைவர்களை குறை சொல்லி எந்த பயனும் இல்லை .தாங்கள் ஒருவர் மட்டும் சிறப்பாக சிந்தித்து எழுதுவது போல் தமிழ் நாட்டில் ஒவ் ஒரு சுத்த தமிழனும் சிந்திக்கணும் ஒரு பொதுவான நுலகம் .அதில் தேவை அற்ற வகையில் சில பொது
  நிகழ்ச்சிகள் அதில் கலந்து கொண்ட அனைவரும் குற்றவாளிகளே .ஒரு நுலை எழுதி அதை மக்களுக்காக விட்டு சென்று இருக்கும் இருக்கும் மறைந்த அறிங்கர் பெருமக்களையும் அவமத்திதர்க்கு சமம் .மக்கள் நினைத்தால் ஒரு நல்ல தலைவரை நாட்டுக்கு ஒரு அரை நொடியில் மாற்றி அமைக்க முடியாத என்ன ?மக்களை தான் இலவசம் என்ற மாய சொல்லில் மயக்கி வைத்து இருக்கிறார்களே இது அவர்களின் வரிப்பணம் தான் அப்படி இருக்க இது அவர்களின் பணம் தான் தலைவர்கள் அவர்களின் சொந்த பணத்தில் இருந்து எதுவும் செய்வது இல்லை என்பதை புரிந்து கொள்ளும் வரை தங்களை போன்றவர்கள் என்ன சொன்னாலும் புஷ்வானம் தான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *