BREAKING NEWS
Search

ஜெய் விஜயன்… அமெரிக்க டாப் கார் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக ஒரு தமிழர்!

ஜெய் விஜயன்…  அமெரிக்க டாப் கார் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக ஒரு தமிழர்!

unnamed

டல்லாஸ் (யு.எஸ்): பெட்ரோல் இல்லாத கார்கள் உலகத்தை உருவாக்கி வரும் அமெரிக்காவின் டெஸ்லா (Tesla) மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகக் (சிஐஓ) கலக்கி வருகிறார் ஜெய் விஜயன்.

மிகக் குறுகிய காலத்தில் அந்நிறுவனத்துக்கான அனைத்து மென்பொருட்கள் மற்றும் கட்டமைப்பை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளார் இந்த சுத்தத் தமிழர்.

டெஸ்லா ஜெய் விஜயன், கடந்த சனிக்கிழமை டல்லாஸில் நடைபெற்ற சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் தமிழ் ஆராதனை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது, அங்கு குழுமிய தமிழர்களை பெருமை கொள்ள வைத்தது.

நிகழ்ச்சியில் ஜெய் விஜயன் பேச்சு இன்னொரு ஹைலைட்… மனிதர் நம்ம தலைவர் பாணியில் அத்தனை எளிமை.. அவர் பேச்சும் தலைவரின் பாணியில்தான் அமைந்திருந்தது (இதை ஏன் குறிப்பிடறோம்னு கடைசில சொல்லப் போறேன்!).

டெஸ்லா விஜயனின் பேச்சிலிருந்து…

“குழந்தைக்கு நாம விளையாட்டு பொருட்கள் வாங்கி கொடுக்கிறோம்… அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு விளையாடப் பயன்படுத்தினால், வாங்கிக் கொடுப்பவர்களுக்கு  நிறைவாக இருக்கும். மேலும் பல விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொடுக்கத் தோன்றும்.

அதைப் போல்  நம்மிடம் இருக்கும் நல்ல பொருட்களையோ, விஷயங்களையோ மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டால், மேலும் மேலும் நல்ல விஷயங்களும் பொருட்களும் வந்து சேரும். அதே வழியில், பழமை வாய்ந்த, செழுமையான பல நல்ல விஷயங்களைக் கொண்ட நம் தமிழ் மொழியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு பாராட்டினால், தமிழ் தொன்று தொட்டு வளரும்.

இதைத்தான் தமிழ்ப் பள்ளி மூலமும், போட்டிகள் மற்றும் இந்த நிகழ்ச்சி போல பல நிகழ்ச்சிகள் வாயிலாகவும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை குழுமத்தின் தன்னார்வத் தொண்டர்கள் செய்து வருகிறார்கள். இங்கு வருகை தந்து இருக்கும் அனைவரும் மற்றும் சார்ந்தவர்களும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் எல்லோரும் பயன் அடையலாம். செம்மொழியான நம் தமிழ் மொழியும் நம்முடைய அடுத்த தலைமுறைகளுக்கு தொடர்ச்சியாக சென்றடையும்.

நம்மிடம் ஏராளமான திறமைகள் இருக்கிறது. ஆனால் அதை முழுமையாகப் பயன்படுத்துகிறோமா அல்லது சரியான வழியில் செயல்படுத்துகிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த நோக்கத்தை தீர்மானமாக மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும். அதை அடைவதற்கான வழிமுறைகளில் தீர்க்கமாக செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிட்டும்.

டெஸ்லா நிறுவனர் எலன் மாஸ்க்

3857218951_7e2ddc9ed8_o
டெஸ்லா நிறுவனர் எலான் மாஸ்க் (Elon Musk), நம்மால் கனவு மட்டுமே காண முடிந்த இலக்குகளை நிஜ வாழ்க்கையில் சாதித்து காட்டி, உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறார். ‘உங்களின் திறமை உங்களுக்கே தெரியவில்லை., இலக்கை நிச்சயம் விரைவாக எட்ட முடியும்’ என்று கூறி உற்சாகப்படுத்துவார்.. சிரமமாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள செய்து முடிக்கும் போது எங்கள் குழுவினருக்கே, அந்த சாதனை வியப்பாக இருக்கும் அதன் மதிப்பும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

நாம் எதையும் செய்து முடிக்கும் வல்லமை பெற்றவர்கள் என்று முழுமையாக நம்புகிறேன். எனவே நம்மால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் நோக்கத்தை செயல்படுத்துங்கள். தொலை நோக்கு பார்வை மட்டுமே போதாது. அதை நிறைவேற்றக்கூடிய ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வெவ்வேறு கோணங்களில் யோசித்தால்…

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் பிரச்சனைகள் நம்மைவிட பெரிதாகிக் கொண்டே போகும். மேலும் மேலும் மன உளைச்சலைக் கொடுக்கும். அதையே மாற்றி, உடனடியாக தீர்வு நோக்கி சிந்திக்க ஆரம்பித்தால், பிரச்சனைகள் சிறிதாகிக் கொண்டே போகும். மன உளைச்சல் இல்லாமல் தீர்வு காண முடியும்.

உதாரணமாக அலுவலகத்தில்  நம்முடைய ’கம்ப்யூட்டர் ப்ராஜக்ட்’ வேலையில் சிக்கல்கள் ஏற்படும் போது, அதனால் பெயர் கெட்டுவிடுமோ? வேலைக்கு ஆபத்தோ?, குடும்பம் என்னாகுமோ? என்ற ரீதியில் யோசித்தால், பிரச்சனை அந்த திசை நோக்கியே பெரிதாகிக் கொண்டு போகும். அதை விடுத்து, அந்தச் சிக்கலை தீர்க்க வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தால் விடையும் கிடைக்கும். வேலையில் உயர்வும் கிடைக்கும்.

என் வெற்றியின் ரகசியம்

நம்மில் பலர் நமக்கு முன்னால் உள்ள பல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் வழிகளை சிந்திக்காமல், பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு தமக்கு தாமே வேலியை போட்டுக் கொள்கிறார்கள். உதாரணமாக, நான், எம்.பி.ஏ படிக்கவில்லை, கம்ப்யூட்டரில் மாஸ்டர்ஸ் படிக்கவில்லை, தமிழனாக இருக்கிறேன் என்று ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு ஒரு எல்லைக்குள் முடங்கி விடுகிறார்கள்.

என்னைப்ப ற்றி இங்கே கூறினார்கள். கிடைக்கும் வாய்ப்புகளை தீர ஆராய்ந்து முடிவெடுத்து, பின்னர் எந்த காரணத்திற்காகவும் பின் வாங்காமல் இலக்குளை நோக்கி செயல்பட்டு  வருகிறேன். அது தான் எனது வெற்றியின் ரகசியம். இது அனைவருக்கும் பொருந்தும். நீங்கள் அனைவருமே சாதனையாளர்கள் ஆகமுடியும். தொடர்ந்து உற்சாகத்துடன் பணியாற்றி வாருங்கள். நினைத்த இலக்கை நிச்சயம் அடைவீர்கள்,’ என்றார்.

சாதனைத் தமிழர் இவர்

அமெரிக்காவே வியந்து நோக்கும் விலை உயர்ந்த நவீன எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி, உற்பத்தி செய்து வரும் டெஸ்லா நிறுவனத்தின் கணிணித் துறைக்கு தலைமைப் பொறுப்பேற்று, அனைத்து மென்பொருட்கள் மற்றும் கட்டமைப்பை மிகவும் குறைந்த காலத்திலேயே நிறைவேற்றிக் கொடுத்தவர் விஜயன்.

unnamed (2)

34 நாடுகளில் அதிவேகமாக வளர்ந்து விட்ட நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் கணிணி கட்டமைப்புக்கு பொறுப்பேற்று சி.ஐ.ஓ (Chief Information Officer) ஆக பணியாற்றி வருகிறார் நம்மாள் ஒருத்தர் என்றால் எத்தனை பெருமிதமாக இருக்கிறது!

தமிழ்ப் பணிகளை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தனது பல்வேறு வெளிநாட்டுப் பயணங்களுக்கிடையே தமிழ் ஆராதனை விழாவிற்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்து, கலிஃபோர்னியாவிலிருந்து வந்திருந்தார்.

தலைவர் ரஜினி பாணியில்…

தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு தருணத்திலும், ஒரு சாதாரண ஆரம்பநிலை ஊழியராக தான் கடந்த வந்த பாதையை நினைவுப்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை ஜெய் விஜயன்… நம்ம தலைவர் ரஜினி பாணியில்தான் இவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

கொஞ்ச நேரம் அவருடன் பேசிய பிறகுதான் தெரிஞ்சது நம்ம ஜெய் விஜயனுக்குள்ளும் ஒரு ரஜினி ரசிகர் இருப்பது!

-சின்னமணி
டல்லஸிலிருந்து…




3 thoughts on “ஜெய் விஜயன்… அமெரிக்க டாப் கார் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக ஒரு தமிழர்!

 1. visi

  It is appropriate time to make some plans for the future and it is time to be happy.

  I have read this post and if I could I desire to suggest you few interesting things or tips.

  Perhaps you can write next articles referring to this article.

  I want to read more things about it!

 2. பாண்டியன்

  சம கால தமிழர்களில், உயர்ந்த நிலை அடைந்த பிறகும் பணிவோடும் பண்போடும் ஒருவர் நடந்து கொண்டால், அது நிச்சயம் தலைவர் சூப்பர் ஸ்டாரை பின்பற்றித் தான் இருக்க வேண்டும். ஒருவேளை, தலைவரை மானசீக குருவாகக் கூட ஏற்றுக்கொண்டிருக்கலாம்!

  வேறு யாரையும் பின்பற்றுபவர்களுக்கு பணிவு என்பது இருக்கவே இருக்காது என்பதும் நிச்சயம்

 3. பாண்டியன்

  கணிணி தொழில் நுட்பத்தில் வேலை பார்க்கும் தமிழ் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருங்க ஜெய் சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *