BREAKING NEWS
Search

சரத்குமார் அணிக்கு… இல்லை, சரத்குமாருக்கு இது கவுரவமான தோல்விதான்!

சரத்குமார் அணிக்கு… இல்லை, சரத்குமாருக்கு இது கவுரவமான தோல்விதான்!

-எஸ் ஷங்கர்

sarathkumar
டிகர் சங்கத் தேர்தல் ஒருவழியாக முடிந்துவிட்டது. சரத்குமார் – ராதாரவி அணிக்கு இது கவுரமான தோல்விதான். விஷால் அணியை கேள்வி கேட்கும் அவ்வளவு அதிகாரத்தை இந்த அணிக்குத் தந்திருக்கிறது அவர்களுக்குக் கிடைத்திருக்கிற கணிசமான வாக்குகள்.

பொறுப்பில்லாமல் வாய்க்கு வந்தபடி பேசும் சிம்பு தோற்றதைத் தவிர, கொண்டாட வேறேதுமில்லை. நிச்சயம் நடிகர் சங்கத்தில் சரத்குமாரின் ஆளுமை தொடரும் என்றே நம்புகிறேன்!

விஷாலின் வெற்றிக்கு முக்கிய காரணம் ராதாரவியும் சரத்குமாரும்தான். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இன்றைக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் பிறமொழிக்காரர்கள்தான், விஷால் உள்பட!  அவர்களிடம் போய் விஷால் ரெட்டி, என இன ரீதியாகப் பிரச்சாரம் செய்தால் எப்படி எடுபடும்? நடிகர் சங்கப் பிரச்சினைகள் என்ன? அவற்றைச் சரி செய்யும் தகுதி யாருக்கு உள்ளது? என்கிற ரீதியில்தான் சரத்குமார் அணியின் பிரச்சாரம் இருந்திருக்க வேண்டும்.

அதேபோல, சம்பந்தமே இல்லாத, இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமைகூட இல்லாத பாரதிராஜா, கலைப்புலி தாணு, சேரன், செல்வமணி, சீமான் போன்றவர்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்கிற பெயரில் ‘தமிழ், தமிழன்..’ என்று அறிக்கை தந்தது சரத்குமாருக்கு இன்னொரு பெரிய மைனஸ் (இவர்களின் மறைமுக இலக்கு ரஜினிகாந்த்-தான். அவர் இனத்தால் மராட்டியராக இருந்தாலும், பிறந்தது தமிழ்நாட்டில். கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் அவர் சொந்த ஊர்)

ஆனால் இத்தனை மைனஸ் இருந்தாலும் அவர் நாசருக்கு சரிக்கு சமமாகவே வாக்குகள் பெற்றுள்ளார். வித்தியாசம் வெறும் 107 வாக்குகள்தான். நாடக நடிகர்களில் 600 பேர் வாக்கு இவருக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் சென்னையில் உள்ள நடிகர்கள் 625 பேரின் வாக்குகள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.

அதேபோல ராதாரவி. அவரும் லேசில் தோற்கவில்லை. விஷாலுக்கு கடும் நெருக்கடி தரும் வகையில் 1138 வாக்குகளை அவர் பெற்றிருக்கிறார்.

விஷால் அணியின் வெற்றி, விஷாலின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அதில் கணிசமான உண்மையும் உள்ளது. சரியான திட்டமிடல், எதிரணியின் பலவீனம் தெரிந்து செக் வைத்தது, கடுமையான உழைப்பு, குறிப்பாக நடிகைகள் மொத்தப் பேரின் வாக்குகளையும் தன் பக்கம் ஈர்த்தது… என இந்த வெற்றியில் விஷாலின் பங்களிப்பு அபாரம்.

நடிகர் சங்கம் என்றல்ல.. திரையுலகில் பெரும்பாலான நடுநிலையாளர்கள் விருப்பம், சரத்குமார் தலைவராக வேண்டும், மற்ற பொறுப்புகளுக்கு விஷால் அணி வரவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. காரணம் சரத்குமாரின் செயல்திறன், புத்திசாலித்தனம், அனைவருடன் இணங்கிச் சென்று பிரச்சினையை முடித்துவைக்கும் பாங்கு. ஆனால் சிம்பு, ராதிகா, ராதாரவி போன்றவர்கள் அந்த வாய்ப்பை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சிதைத்தார்கள், விரும்பத்தகாத பேச்சுக்களால்!

vishal

ஒரு உதாரணம்: நேற்று வாக்குப் பதிவின் போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வந்தார். அவரை வரவேற்ற ராதாரவி, ‘வாம்மா… சொல்வதெல்லாம் உண்மை-ன்னு நிகழ்ச்சி நடத்தறீங்க. ஆனா சொல்றதெல்லாம் பொய்’ என்று பகிரங்கமாகக் கூற, ‘என்னண்ணே இப்படி பப்ளிக்ல…’ என்று சங்கடத்துடன் வாக்களிக்கப் போனார். ராதாரவி கூறியதில் உண்மையிருந்தாலும், சொன்ன இடம் தவறல்லவா!!

மேடையில் திட்டிவிட்டு, உரிமையில் பேசினேன் என்று சொல்வதை சகித்துக் கொண்டது அந்தக் காலம். சங்கத்துக்கு தேர்தல் நடக்காத இந்த 18 ஆண்டுகளில் வந்த கலைஞர்களின் மனோபாவம் மாறிவிட்டது என்பதை ராதாரவி புரிந்து கொள்ள வேண்டும்.

சரத்குமார் அணியினர் தோற்றிருந்தாலும், அவர்கள் பெற்றுள்ள வாக்குகள், சங்கத்தில் அவர்களின் இருப்பை பலமாக பறைசாற்றுகின்றன. எந்த நடவடிக்கையாக இருந்தாலும் விஷால் அணி தன்னிச்சையாகச் செய்துவிட முடியாது என்பதை உணர்த்துவதாக உள்ளன.

நடிகர் சங்க ஒற்றுமை விஷயத்தில் நடுநிலைக் கலைஞர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அணி பிரிந்து நின்று மோதிக் கொண்டவர்களுக்குத்தான் ஆரம்பத்தில் சங்கடமாக இருக்கும். உள்குத்து வேலைகள் தொடர்ந்தாலும், வெளியில் ‘வாங்கண்ணே’ என சகஜமாகிவிடுவார்கள்.

rajini-election2

இந்தத் தேர்தலில் உண்மையான ஹீரோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-தான். அவர் என்னய்யா பண்ணார்? என்று நீங்கள் கேட்கலாம். இரு அணிகளையும் சமமாகப் பாவித்து, இணக்கமாக இருக்க வலியுறுத்தினார். காரணம், தேர்தல் என்று வந்தால் மோதல் இருக்கும் என அவருக்குத் தெரியும். இதில் ஒரு பக்கச் சார்பு நிலை எடுத்தால், பின்னாளில் இருதரப்பையும் ஒன்றிணைக்க முடியாது. எனவே கடைசி வரை பொதுவான மனிதராக நின்றார் அவர். தேர்தல் நாளன்றும் இது நடுநிலைமையையே கடைப்பிடித்தது மட்டுமல்ல, ‘யார் ஜெயிச்சாலும் ஒற்றுமையா இருக்கணும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேத்த முடியலன்னா ராஜினாமா பண்ணிட்டு போயிடுங்க,” என எச்சரித்தார். இந்த எச்சரிக்கையின் பலனை வரும் நாட்களில் பார்க்கத்தான் போகிறீர்கள்

-ஒன்இந்தியாவுக்கு எழுதிய கட்டுரையின் விரிவாக்கம்…
14 thoughts on “சரத்குமார் அணிக்கு… இல்லை, சரத்குமாருக்கு இது கவுரவமான தோல்விதான்!

 1. kumaran

  தலைவரின் தமிழ்நாடு நடிகர் சங்கம் என்ற கருத்துக்கு சரத் அணியில் பெரும்பாலும் வரவேற்ப்பு ஆனால் விஷால் அணியில் மழுபலான பதில் காரணம் என்ன?

 2. S VENKATESAN, NIGERIA

  சரத்குமார் நம் தலைவருக்கு ஒன்றும் உதவி செய்யவில்லை. எல்லாம் முடிந்தவுடன் அவர் கொடுத்த பணத்தை பங்கு பிரிக்க மட்டும்தான் தலை காட்டினார். ஆனால் மற்ற படங்களுக்கு பிரச்சனை வந்த பொழுது நிறைய உழைத்து இருக்கிறார். அதுதான் உண்மை. நம் தமிழ் சமுகத்துக்கு நியாபக சக்தி குறைவு. ராதா ரவி வாயை மூடி கொண்டு இருந்தால் முடிவு வேற மாதிரி வந்து இருக்க வாய்ப்பு உண்டு.

  விஷால், கார்த்தி போன்றவர்கள் இனிமேல் வரும் பிரச்சனைகளை எப்படி நேரம் செலவு செய்து தீர்க்க போகின்றார்களோ? எங்கேயாவது படப்பிடிப்பில் இருப்பார்கள்.

  அரசியலையே டார்கெட் வைத்து இருக்கும் விஜய்க்கு விஷால் வளர்ச்சி தடைகல்லாக இருக்கும். விஷால் மிகவும் புத்திசாலித்தனமாக நாடகம் நடத்தி (சிம்பு தம்பி மேல் கோவம் இல்லை ; தாக்கி விட்டார்கள் ETC.) வெற்றியும் பெற்று விட்டார்.

  பூச்சி முருகன் ஏற்கனவே முகவை போய் பார்த்து விட்டார். சிலர் அம்மாதான் எல்லாம் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்குள்ளேயே பூசல் வெடிக்க வாய்ப்பு இருக்கிறது.

  மக்களுக்கு பொழுது போகும்.

 3. குமரன்

  ராதா ரவி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் சங்கப் பதவிகளில் இருந்து வந்ததுடன் இதில் சுமார் இருபது ஆண்டுகளாக சங்கத்தில் தேர்தலே இல்லாமல் பார்த்துக் கொண்டு, தொடர்ந்து மூன்று முறையாக சரத் குமாரே தலைவராக இருந்து வந்தது, ஜன நாயக முறையில் நடிகர் சங்கம் இதுவரை நடத்தப் படவில்லை என்பதையே காட்டுகிறது.

  கட்டப் பஞ்சாயத்து நாட்டாமை போல எவரும் எனை எதிர்த்துத் தேர்தலில் போட்டி இடக் கூடாது, எவரும் பொதுக் குழு, செயற்குழுவில் என் கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கூறக் கூடாது என்று சங்கத்தை நடத்தியது வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியும். இளைய தலைமுறையைச் சேர்ந்த விஷால் உள்ளிட்டோர் இதை எதிர்த்தது சரியே. மூத்த உறுப்பினர்களான சிவகுமாரும் நாசரும் விஷால் அணிக்கு ஆதரவு தந்ததால் விஷால் அணியின் பக்கம் நியாயம் இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையைத் தந்தது. ஜெயா இந்தத் தேர்தலில் நாடு நிலை வகிக்கவும் சிவகுமார் ஈடுபட்டதுதான் காரணம் என்று நம்ப இடம் இருக்கிறது.

  27 பேர் செயற்குழுவில் எஸ்.வி.சேகர் மாற்றுக் கருத்துக் கூறியதை ஏகடியம் பேசியது, செயற்குழுவை சரத்குமார் எவ்வளாவு ஜனநாயக முறையில் நடத்தினார் என்பதைக் காட்டிவிட்டது.

  சரத் அணிக்குக் கிடைத்த வாக்குகள் தபால் வாக்குகளில் பெரும்பான்மை என்பது தெளிவாக வாக்கு எண்ணிக்கையில் தேர்கிறது. 16, 17ஆம் தேதியே ராதாரவி தபால் வாக்குகளில் பெரும்பான்மை தமது அணிக்கே என்று தெரிவித்தது எந்த அளவுக்கு தபால் வாக்குகளை “வாங்கி இருக்கிறார்கள்” என்பதைக் காட்டிவிட்டது. தபால் வாக்குகள் கிராமப் புறத்து, சிறு நகரத்து ஏழை நாடக நடிகர்களிடமிருந்து பெறப் பட்டவை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆக, சரத் அணியின் வாக்குகள் அவரது பலம்தானா என்பது சந்தேகத்துக்கு உரியது.

  இனம் என்பது வேறு, சாதி என்பது வேறு. சாதிப் பிரிவினைகளை விடாப்பிடியாகக் கடைப்பிடித்துக் கொண்டு அந்தச் சொல்லைச் “சாதி” என்று சொல்வதால்தான் என்னமோ சாதிப் பாகுபாடு வந்துவிடும் என்பது போல “இனம்” என்று சொல்வது இப்போது வழக்கமாகி விட்டது. “நாம் எல்லோரும் ஓர் இனம்” என்று எத்தனைத் தடவை படித்தாலும் மனதில் ஏறவில்லை.

  “இனம்” என்றால் “Race”
  “சாதி” என்றால் “caste”
  வித்தியாசம் வெகு அதிகம்.

  ரெட்டி என்பது சாதி.
  தமிழன் என்பது மொழிசார் அடையாளம்,
  இந்திய மக்கள் அனைவரும் ஒரே இனத்தின் பல துணைக் குழு வகையினர். தமிழரும் அப்படியே . மராத்தியரும் தமிழரும் ஒரே இனத்தவர். இவர்களைப் பிரித்துப் பேசுவது விஞ்ஞான ரீதியாகக் கூட மடமை. இவர்கள் பேசும் பகுத்தறிவு வாதத்தை அண்ணல் அம்பேத்காரே கூட ஏற்கவில்லை. தமது “untouchables – தீண்டத்தகாதவர்கள்” என்ற ஒரு நூலை நமது தமிழகத்து நந்தனார், மராத்தியத்து நாமதேவர், மராத்தியத்துச் சொக்கமேளர் (இவரும் அண்ணல் அம்பேத்காரின் மஹர் சாதியினரே) ஆகியோருக்கு அர்ப்பணித்தார் என்றால், இவர்கள் பேசும் தமிழர்- மராத்தியர் என்ற “இனவாதம்” எத்தனை மட்டரகமானது என்பது தெளிவு. இவர்கள்தான் பகுத்தறிவுப் பகலவன்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள்.

  நல்ல வேளை, விஷால் அணியினர் பதிலுக்கு, இலங்கை (ஈழம் அல்ல, கொழும்பு) செட்டியாரும், நாடாரும், நாயுடுவும், பிரித்தானியக் கிறித்தவரும் என்றெல்லாம் பதில் பேசவில்லை. பேசியிருந்தால் இன்னமும் நாறி இருக்கும். இவை அனைத்தும் சரத்-ராதிகா-ராதாரவி சம்பந்தப்பட்டவை. எவர் எது என்று ஊகித்துக் கொள்ளவும்.

 4. குமரன்

  இந்த நடிகர் சங்கம் போல பல தொழிற்சங்கங்கள் திரைத் துறையில் இருக்கின்றன.

  நடனக் கலைஞர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறது. அதில் உறுப்பினரானால்தான் குரூப் டான்ஸில் கூட ஆட முடியும். அதில் உறுப்பினர் இல்லாதவர்களை ஆட விடமாட்டார்கள். உறுப்பினர் கட்டணம் லட்சங்களில்… எப்படி ஒரு குரூப் டான்ஸ் ஆடும் கலைஞர் உறுப்பினராக முடியும்? பெண்கலைஞர்கள் கதி? கற்பனை செய்யக் கூட முடியாது.

  இதுபோலவே ஒப்பனைக் கலைஞர், ஸ்டண்ட்மேன், இயக்குனர் , மக்கள் தொடர்பாளர், லைட்பாய் சங்கம் என்று ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சங்கம், சங்க உறுப்பினராக பெரும் தொகை என்று துறை முழுவதும் கரையான் பிடித்து அல்லாடுகிறது. புதிதாக தொழிலுக்கு வருபவர் பகடி போல சங்கத்துக்கு பெரும் தொகை அழும் நிலைமை இருக்கிறது. வேறெந்தத் துறையிலும் ஒருவர் தொழிலாளி ஆகக் கூட பெரும் முதல் போடவேண்டும் என்ற நிலை இல்லை. கேட்பார் யார்?

 5. RAGHURAMAN

  தலைவர் அவர்களின் பாபா, குசேலன், லிங்கா படப் பிரச்சனைகளுக்கு சூப்பர் ஸ்டார் அவர்களே தான் முன் நின்று தனது பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வந்தார். அன்றைக்கு இருந்த நடிகர் சங்கத் தலைமையும் உதவ வில்லை. இன்றைக்கு உள்ள நடிகர் சங்கத் தலைமையும் உதவ முன் வரவில்லை. அவர்கள் தான் பிரச்சனையை பெரிதாக்கி காட்டினர். மேலும், இது என்னவோ தலைவர் அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை போல அமைதியாக இருந்து கொண்டனர். தலைவர் அன்பு ரசிகர்கள் உதவ வந்த போதும் தலைவர் அவர்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். இந்த பெருந்தன்மை வேறு எந்த நடிகனுக்கும் வராது. தனது ரசிகர்களை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தி இருப்பார்கள். இதனால், நடிகர் சங்கம் ஒன்று இருப்பதே தேவை இல்லாத ஒன்று என்பது எனது தனிப்பட்ட கருத்து.
  வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

 6. மிஸ்டர் பாவலன்

  இந்தத் தேர்தலில் உலக நாயகனின் பங்கு மகத்தானது!

  இளைஞர் அணிக்கு வாய்ப்பு கொடுப்போம் என எண்ணி விஷால் அணியை
  சந்தித்து உற்சாகம் கொடுத்து, அஞ்சா நெஞ்சனாக அவரது அருமை நண்பர்
  ஜெண்டில்மேன் – நாசர் அவர்களை – தலைவராக வழிமொழிந்தார்.

  சூப்பர் ஸ்டார் ரஜினி தேர்தல் அன்று கொடுத்த கருத்து விஷால் அணியை
  மிகவும் பாதித்தது. பாரதிராஜா மற்றவர்கள் போல் ரஜினியும் நடிகர்
  சங்கம் பெயர் “தமிழ்நாடு நடிகர் சங்கம்” என மாற்ற வேண்டும் என்று
  சொல்வார் என விஷால் அணி எதிர்பார்க்கவில்லை.

  உலகநாயகன் இதை கேட்டு – “நான் இருக்க பயம் ஏன்” என முறுக்கு
  மீசையுடன் வாக்களித்து விட்டு தைரியமாக ரஜினி கருத்தை மறுத்தார்.
  “தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை அகில இந்திய நடிகர் சங்கமாக
  மாற்றுவோம்” என்றார். இந்த அதிரடியால் மீடியா ஆடிப் போனது.
  தென்னிந்திய நடிகர் சங்கத்தை அகில இந்திய நடிகர் சங்கமாக மாற்றுவதா,
  இதில் பெரும் குழப்பமாகி விடுமே.. இருக்கிற பெயரையே தக்க வைத்து
  கொள்வோம்.. என பழைய வழிக்கு திரும்பி விட்டது..

  ரஜினியின் பந்து வீச்சை உலக நாயகன் சிக்சர் அடிக்காவிட்டால்
  அன்று நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும்.. எனவே விஷால் அணி
  உலகநாயகனுக்கு வெற்றி விழாவில் சிறப்பாக கௌரவம் செய்தால்
  நல்லது. ஆனால் உலகநாயகன் இதை எல்லாம் எதிர்பார்க்காதவர்..
  அவர்கள் இன்னொரு பட்டம் கொடுக்காவிட்டாலும் ஓ.கே. !!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 7. S VENKATESAN, NIGERIA

  இல்லாத போட்டியை நினைத்து மகிழும் பாவலன் அவர்களே கபாலி படத்துடன் உலக நாயகன் தன் படத்தை ரிலீஸ் செய்து தான் உண்மையான போட்டியாளர் என்று நிருபிப்பாரா?

  ___________

  நண்பர்களே,

  மிஸ்டர் பாவலன் கமல் பற்றி எழுதுவது ஒருவித Satire என்று எடுத்துக் கொள்ளுங்கள். அவரும் தலைவரின் ரசிகர்தான்!

  -என்வழி

 8. மிஸ்டர் பாவலன்

  /// இல்லாத போட்டியை நினைத்து மகிழும் பாவலன் அவர்களே கபாலி படத்துடன் உலக நாயகன் தன் படத்தை ரிலீஸ் செய்து தான் உண்மையான போட்டியாளர் என்று நிருபிப்பாரா? ///

  உலகநாயகனும், அவர் ரசிகர்களும் போட்டிக்கு தயார் !!
  (போட்டிக்கு முன்னாள் கமல் படத்தின் முழு உரிமையையும் நல்ல
  விலைக்கு விற்று விடுவார்.. ஹி.. ஹி..ஹி..)

  ஆனால் போட்டிக்கு ஒரு சிறிய கண்டிஷன்.. ரஜினியும், கமலும் நல்ல
  நண்பர்கள் என்பதால் ரஜினிக்கு ஒதுக்கப்படும் தியேட்டர்கள் அதே
  எண்ணிக்கையில் கமல் அவர்கள் படத்திற்கும் கொடுக்கப்பட வேண்டும்..

  ஜூட்டா??

  -=== மிஸ்டர் பாவலன் ==

 9. மிஸ்டர் பாவலன்

  //மிஸ்டர் பாவலன் கமல் பற்றி எழுதுவது ஒருவித Satire என்று எடுத்துக் கொள்ளுங்கள். அவரும் தலைவரின் ரசிகர்தான்!///

  மிக மிக சரி – ஆனால் இதை நானே எழுத வேண்டாம் என்றிருந்தேன்..

  முன்பு விஸ்வரூபம் படம் வெளி வந்த உடனே.. “புஸ்வானம்” என்ற
  பெயரில் ஒரு satire வெளியிட்டேன்.. தீவிரமான கமல் விமர்சகர் கூட
  அவ்வளவு வேடிக்கையாக எழுதுவாரா என்பது சந்தேகமே.. அதில்
  நண்பர்கள் குமரன், மனோகரன் இவர்களையும் விட்டு வைக்கவில்லை..
  முருகன், மனோ என்ற பெயர்களில் அவர்களை கதையில் இணைத்துக்
  கொண்டேன்..

  டாக்டர் சுப்பாண்டி என்ற பெயரில் ரஜினி ரசிகராக எழுதி வந்த நான்
  அவர்க்கு எதிராக தயார் செய்த புனை பாத்திரம் – மிஸ்டர் பாவலன்.
  நாளடைவில் சுப்பாண்டி மறைந்து பாவலன் நிலைத்து விட்டார்!
  (சென்னை வீரன், கண்மணி போன்றவர்கள் சில காலம் இருந்தார்கள்).

  -== மிஸ்டர் பாவலன் ==-

 10. enkaruthu

  ஓஹோ அவரா நீங்கள் பாவலன் அவர்களே.அப்பயே எனக்கு சந்தேகம் யார்ர இவர் கௌண்டமணி சொல்வதுபோல் என்ன பேசுகிறார் இந்த பாவலன் என்றேதெரியவில்லை ஒரே குழப்பமா இருக்கேடா சாமி என்று நினைத்தேன்.எங்களின் வாயை பிடுங்குவதுதான் உங்களின் வேலையாக இருந்து வந்துள்ளது.இருந்தாலும் கமலுக்கு அந்த அளவு சீன் இல்லை என்பதுதான் இப்பொழுதுள்ள நிலைமை.

 11. குமரன்

  மிஸ்டர் பாவலன் வழக்கமாகக் கலைச் செல்வி திரிஷாவைக் கலாய்ப்பது புரிந்தாலும், கமலையும் கலாய்ப்பது அந்த அளவுக்கு மற்றவர்களுக்குப் புரிவது இல்லை என்பதால்தான் அவ்வப்போது அவருக்கு நான் “குறுக்குசால்” ஓட்டி அவர் வாயைப் பிடுங்குவேன்!!

  அவர் அடிக்கடி இந்தப் பக்கம் வராது போனதால் எனக்கும் பொழுதே போகவில்லை.

  ஏதாவது வம்பும் (அன்புச்) சண்டையும் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும்!

 12. S VENKATESAN, NIGERIA

  //ஆனால் போட்டிக்கு ஒரு சிறிய கண்டிஷன்.. ரஜினியும், கமலும் நல்ல
  நண்பர்கள் என்பதால் ரஜினிக்கு ஒதுக்கப்படும் தியேட்டர்கள் அதே
  எண்ணிக்கையில் கமல் அவர்கள் படத்திற்கும் கொடுக்கப்பட வேண்டும்//
  மிஸ்டர் பாவலன் அவர்களே தாங்கள் அறியாதது என்று எதுவும் இல்லை. எல்லா நடிகர்களுக்கும் மார்க்கெட் பார்த்துதான் தியேட்டர்கள் கொடுக்க படும். கமல் உண்மையிலேயே வீரர் சூரர் என்றால் அவருக்கு அதிகமான தியேட்டர்கள் கொடுப்பார்கள். இதில் ரசிகர்கள் என்ன செய்ய முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *