BREAKING NEWS
Search

நீதானே என் பொன்வசந்தம் இசைவெளியீடு – 65 ஹங்கேரி இசைக் கலைஞர்களுடன் அசத்திய ராஜா!

நீதானே என் பொன்வசந்தம் இசைவெளியீடு – 65 ஹங்கேரி இசைக் கலைஞர்களுடன் அசத்திய ராஜா!

சை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் இசை நேற்று சென்னையில் நடந்த பிரமாண்ட விழாவில் வெளியிடப்பட்டது.

ஹங்கேரியிலிருந்து வந்திருந்த 65 இசைக் கலைஞர்களுடன் இணைந்து இளையராஜா அத்தனை பாடல்களையும் மேடையில் இசைத்து அறிமுகம் செய்தார்.

இதுவரை எந்தத் தமிழ் திரைப்படத்துக்கும் நடந்திராத அளவுக்கு நேர்த்தியாகவும், பிரமாண்டமாகவும், இசைமயமாகவும் அமைந்த ஒரே இசை வெளியீட்டு விழா இதுதான் என்றால் மிகையல்ல.

இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்கள் அத்தனைப் பேரும் நேரு உள்விளையாட்டரங்கில் திரண்டுவிட்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக ராஜாவின் பிரபலமான எந்தப் பூவிலும்…, தென்பாண்டிச் சீமையிலே, ராஜா கைய வச்சா, மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்… போன்ற பிரபலமான பாடல்களை ஹங்கேரி இசைக்குழுவினர் தொடர்ச்சியாக வாசிக்க ரசிகர்களை வேறு உலகத்துக்கு கொண்டு சென்றது அந்த இசை.

அடுத்து உறவுகள் தொடர்கதை…. என்ற மிக அழகான பாடலை பாடியபடி மேடைக்கு வந்தார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இளையராஜாவின் மிகச் சிறந்த ரசிகர் மட்டுமல்ல, நல்ல பாடகரும் கூட!

மேடையிலேயே இசைஞானியை ஒரு சின்ன பேட்டி கண்டார். நாமெல்லாம் ஆர்வத்துடன் கேட்க நினைத்து முடியாத ஒரு கேள்வி..  தனக்குப் பிடித்த ஐந்து பாடல்களை இசைஞானியை பாட வைத்து அனைவரையும் ரசிக்க வைத்தார்.

பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம் பெற்ற கோடைக் கால காற்றே…,
ஆறிலிருந்து அறுபது வரை படத்திலிருந்து கண்மணியே காதல் என்பது….., கடலோரக் கவிதைகள் படத்தின் அடி ஆத்தாடி…..,
அக்னி நட்சத்திரம் படத்திலிருந்து ஒரு பூங்காவனம்…..,
அவதாரம் படத்திலிருந்து தென்றல் வந்து…..

-ஆகிய ஐந்து பாடல்களையும் இளையராஜா பாடியும் அந்த பாடல்கள் உருவான விதத்தைப் பற்றியும் கூற, ரசிகர்கள் அப்படியே ஒன்றிப் போய் கேட்டனர் (ராஜாவே கேட்டுக் கொண்ட பிறகும் அடங்காத உற்சாக விசில்கள் தனிக் கதை)!

படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். ஒவ்வொரு பாடலை வாசிக்கும் முன்பும், அதன் காட்சிகளில் சிலவற்றை திரையிட்டு, அதன் தொடர்ச்சியாக கலைஞர்கள் இசை மீட்ட… ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. பாடல்கள் ஒவ்வொன்றையும் ஒரு விஐபி அறிமுகப் படுத்தி பேசினர்.

‘புடிக்கலை மாமு, படிக்கிற காலேஜ்…. ’ என்ற பாடலை நடிகர் சந்தானம் அறிமுகப்படுத்தி வைத்தார். கூடவே இளையராஜாவின் தெலுங்கு பாடல் ஒன்று அவரது காதலுக்கு எவ்வாறு உதவியது என நகைச்சுவையாக கூறினார்.

நகைச்சுவையில் ராஜா மட்டும் சளைத்தவரா… “பண்றது நீங்க பழி என் மேலயா…?” என சந்தானத்தைக் கேட்க, அரங்கம் அதிர்ந்தது.

சூர்யா

அடுத்து ‘காற்றை கொஞ்சம்…’ பாடலை அறிமுகப்படுத்தியவர் சூர்யா. வாரணம் ஆயிரம் படத்தில் ராஜாவின் பாடலை கிடாரில் வாசித்தபடி அவர் காதலிக்கும் காட்சிகள் நினைவுக்கு வந்தன.

இளையராஜா இசையை தாய் தந்தைக்கு இணையாகக் குறிப்பிட்டார் சூர்யா.

“இளையராஜா பாடல்கள் ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் அழகுபடுத்தி இருக்கும். இளமை காதலி, அழகான விஷயங்கள் எல்லாவற்றிலும் அவர் பாடல்கள் இருக்கும். சிறு வயதில் இருந்தே அவர் பாடல்களோடுதான் நான் வளர்ந்தேன். அழகான உலகத்தை பார்க்க வைத்தது.

அப்பா, அம்மா மாதிரி இளையராஜா பாடல்கள் என்றும் மாறாதவை. சிறு வயதில் ரீ-ரிக்கார்டிங் பார்த்துள்ளேன். பாடல்கள் எப்படி உருவாகின்றன என்பதை அறிந்தேன். கேட்க கேட்க சலிப்பே வராத பாடல்களை இளையராஜா கொடுத்துள்ளார்”, என்றார்.

மூன்றாவது பாடல் ‘முதல் முறை…’. இதை அறிமுகப்படுத்தியவர் நா முத்துக்குமார். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய பெருமையும் இவருக்குதான்.

நான்காவதாக சாய்ந்து சாய்ந்து… யுவனும் என்எஸ்கே ரம்யாவும் பாடினர் (என்எஸ் கலைவாணரின் பேத்தி).

இயக்குநர்கள் அனுபவம்…

நான்கு பாடல்களுக்குப் பிறகு, வந்திருந்த இயக்குநர்கள் கே பாலச்சந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, ஆர் சுந்தரராஜன், பி வாசு, ஆர் கே செல்வமணி, ஆர்வி உதயகுமார் ஆகியோரை மேடைக்கு அழைத்து, இசைஞானியுடனான அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வைத்தார் கவுதம் மேனன். நிகழ்ச்சியில் ராஜாவின் ரசிகர்களுக்கு எல்லையில்லா பரவசம் தந்த பகுதி இது.

இயக்குநர் பாலச்சந்தர் பேசுகையில், “80கள்தான் தமிழ் திரையிசையின் பொற்காலம். அந்தப் பொற்காலம் மீண்டும் திரும்ப வேண்டும்,” என்றார். இளையராஜாவுக்கும் இயக்குநர் கவுதம் மேனனுக்கும் இந்த ஆண்டு தேசிய விருது உறுதி என்றார்.

பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், “இளையராஜா ஒரு சுயம்பு, அவராகவே அனைத்து விதமான இசைகளையும் கற்றுக் கொண்டார். இன்று வெளிநாட்டினர் வந்து அவரது இசை வாசிக்கின்றனர். அவரது பெருமையை, திறமையைப் பேச நாட்கள் போதாது,” என்றார்.

காதல் ஓவியம் படத்தில் ராதாவின் கண்ணசைவிற்கு பொருத்தமாக இளையராஜா இசையமைத்த விதத்தை, ரசிகர்கள் நேரில் பார்ப்பது போல பாரதிராஜா வர்ணித்தது நிகழ்ச்சிக்கு சிகரம் வைத்தது போலிருந்தது.

இயக்குனர் பாலுமகேந்திரா பேசுகையில், 35 ஆண்டுகளுக்கும் மேலாக இளையராஜாவுடன் பணி புரிவதாகவும், இரண்டு படங்களைத் தவிர, இதுவரை தான் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் இசை இளையராஜாதான் என்றும், இனி இயக்கப் போகும் படங்களுக்கும் இசை இளையராஜாதான் என்றார். பாலு மகேந்திராவின் அறையை அலங்கரிக்கும் இரண்டு புகைப்படங்கள்.. ஒன்று சத்யஜித்ரே… மற்றொன்று இசைஞானி!!

ஆர் சுந்தர்ராஜன்

வைதேகி காத்திருந்தாள் என்ற மியூசிகல் சூப்பர் ஹிட் குறித்து இயக்குநர் ஆர் சுந்தரராஜன் கூறியது மிகவும் சுவாரஸ்யமான தகவலாக இருந்தது.

“இளையராஜாவிடம் 7 அருமையான பாடல்கள் இருந்தன. அந்தப் பாடல்களை ஒரே படத்தில் பயன்படுத்துபவர்களுக்குத்தான் தருவேன் என்று பிடிவாதமாக இருந்தார் இளையராஜா. அந்தப் பாடல்களுக்கு கடும் போட்டியிருந்தாலும், 7 பாடல்களை வைக்கும் அளவுக்கு கதை அமையவில்லை. அதை ஒரு சவாலாக நினைத்து பஞ்சு அருணாச்சலம் அவர்களிடம் போய் விஷயத்தைச் சொன்னேன். அவர் உடனே பாடலை வாங்கி வரச் சொன்னார். அவற்றைக் கேட்டேன். ஒவ்வொன்றும் அப்படி அற்புதமாக இருந்தது. அப்போது உருவான கதைதான் வைதேகி காத்திருந்தாள். படம் வெள்ளிவிழா…”, என்றார்.

ஆர்கே செல்வமணி பேசும்போது, இசை சர்வாதிகாரி இளையராஜா என்றார்.

சின்னத்தம்பி படத்தின் அத்தனை பாடல்களையும் இளையராஜா 30 நிமிடத்தில் போட்டுக் கொடுத்ததாகக் குறிப்பிட்டார் பி வாசு.

மற்றவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய இளையராஜாவின் ட்யூன்களை தன் படங்களில் பயன்படுத்தி ஹிட் செய்ததைக் குறிப்பிட்டார் ஆர்வி உதயகுமார். அப்படி ஒரு பாட்டு ஒரு நாளும் உனை மறவாத… (பாக்யராஜ் வேண்டாம் என்ற பாடல் இது!!)

சுரேஷ் கிருஷ்ணா தனக்குப் பிடித்த பாடலாக வளையோசை… பாடலைக் குறிப்பிட்டார்.

எஸ்பி முத்துராமன் முறை வந்தது. அவர் குறிப்பிட்டது சூப்பர் ஸ்டார் ரஜினி கலக்கிய ஆசை நூறு வகை… விசிலுக்கும் கைத்தட்டலுக்கும் கேட்கவா வேண்டும்!

ஒவ்வொரு இயக்குநரும் தங்களுக்குப் பிடித்த இளையராஜாவின் பாடலைக் குறிப்பிட்டுச் சொல்ல, அவற்றை கார்த்திக் பாடினார்.

தொடர்ந்தது பாடல் அறிமுகம்…

மீண்டும் படத்தின்  பாடல் அறிமுகம் தொடர்ந்தது. ஐந்தாவதாக வரும் ‘சற்றுமுன் பார்த்த…’ பாடலை, படத்தின் நாயகி சமந்தா, அறிமுகப்படுத்த ரம்யா பாடினார்.

‘பெண்கள் என்றால்….என்ற ஆறாவது பாடலை படத்தின் நாயகன் ஜீவா அறிமுகப்படுத்த யுவன் சங்கர் ராஜா பாடினார்.

‘என்னோடு வாவா.. ‘ என்ற ஏழாவது பாடலை பெருத்த ஆரவாரத்துக்கிடையே கார்த்திக் பாடினார்.

அடுத்து படத்தின் இசை வெளியிடப்பட்டது.  இயக்குனர் கே.பாலசந்தர் வெளியிட சூர்யா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியின் கடைசிப் பாடல் ‘வானம் மெல்ல…’ இசைஞானி இளையராஜா, பேலா ஷென்டேயுடன்  பாடி மனசை அள்ளினார்.

நிகழ்ச்சி இரவு பதினோரு மணிக்குப் பிறகும் நீள, வந்திருந்த கூட்டம் கலையாமல் காத்திருந்து கேட்டு ரசித்தது.

ஒரு பாடல் போல மற்ற பாடலை தரமாட்டேன்…

விழாவில் இளையராஜா பேசும் போது, “ஒரு பாடலை போல் இன்னொரு பாடல் இருக்ககூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒவ்வொரு பாடலும் மக்களை போய் சேரவேண்டும். சில இயக்குனர்கள் அந்த பாடலை மாதிரி வேண்டும் என்று கேட்பார்கள். நான் இயக்குனர்கள் பேச்சை கேட்பது இல்லை. எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி பாடல்களைத்தான் கொடுப்பேன்,” என்றார்.

பொதுவாக ஒரு சம்பிரதாயமாக மாறிப்போன இசை வெளியீட்டு விழாவை, இத்தனை பரவசமான அனுபவமாக மாற்றிய பெருமை இசைஞானி மற்றும் இயக்குநர் கவுதம் மேனனையே சேரும் என்பது நிகழ்ச்சிக்கு வந்திருந்த செய்தியாளர்களின் கருத்தாக இருந்தது!

-என்வழி செய்திகள்

நீதானே என் பொன்வசந்தம் இசை வெளியீட்டு விழா – முழு படங்கள்
9 thoughts on “நீதானே என் பொன்வசந்தம் இசைவெளியீடு – 65 ஹங்கேரி இசைக் கலைஞர்களுடன் அசத்திய ராஜா!

 1. kabilan

  இயக்குனர் மகேந்திரன் சார் இதுல மிஸ் ஆயிட்டாரே.அவர் படங்களில் தன இளையராஜவின் இசை உச்சத்தை தொட்டது

 2. Deen_uk

  அதிக எதிர்பார்ப்பில் இருந்தேன்.ஒரு சில பாடல்கள் தவிர மற்றவை ஏமாற்றி விட்டன என்பதே கசப்பான உண்மை. சில பாடல்கள் அவரது தொண்ணூறுகளின் ட்யூன்களை ஞாபக படுத்தின.ராக் வகை இசைகள் ராஜாவின் இனிமை இசையை குறைத்து விட்டன.எனது கருத்துக்கு ராஜா ரசிகர்கள் மன்னிக்கவும்.

 3. தினகர்

  ”நிகழ்ச்சியின் தொடக்கமாக ராஜாவின் பிரபலமான எந்தப் பூவிலும்…, தென்பாண்டிச் சீமையிலே, ராஜா கைய வச்சா, மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்… போன்ற பிரபலமான பாடல்களை ஹங்கேரி இசைக்குழுவினர் தொடர்ச்சியாக வாசிக்க ரசிகர்களை வேறு உலகத்துக்கு கொண்டு சென்றது அந்த இசை.”

  யூடியூபில் பார்க்கவே பரவசமாக இருக்கிறதே. நேரில் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  http://www.youtube.com/watch?v=OP0wEADK8_க

  திரையில் தலைவருக்கு போட்டி தலைவர் மட்டும் தான் என்பது போல், இசையில் ’ ’ராஜாவுக்கு போட்டி ராஜா மட்டுமே’ என்று மீண்டும் ஒரு முறை நிருபணமாகி இருக்கிறது

 4. Manoharan

  நீதானே என் பொன்வசந்தம் என் வரிசை :

  சூப்பர் 6 :

  1 .) வானம் மெல்ல கீழிறங்கி….
  2 .) என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன்…
  3 ) முதல் முறை பார்த்த ஞாபகம்…
  4 .) சற்று முன்பு பார்த்த மேகம்…
  5 .) காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்…
  6 .) சாய்ந்து சாய்ந்து …..

  சுமார் :

  7 .) புடிக்கலை மாமு…
  8 ,) பெண்கள் என்றால்…

  இந்த இரண்டு பாடல்கள் கேக்க கேக்க பிடித்தாலும் பிடித்துவிடும். ஏன் என்றால் மற்ற பாடல்கள் இவ்விரண்டையும் கீழே தள்ளிவிட்டன.
  .

 5. Manoharan

  எனக்கென்னவோ தொண்ணூறுகளின் சாயல் அவ்வளவாக இல்லை என்றுதான் தோன்றுகிறது. சில இடங்களில் மட்டும் ….வெகு சில இடங்களில் மட்டும் குறிப்பாக சற்று முன்பு பாடலில் மட்டும் இசையின் இரைச்சல் அதிகம் இருப்பது போல் தோன்றுகிறது. May be ராஜாவின் மீதான எதிர்பார்ப்பு அபரிதமாக இருப்பதாலும் எண்பதுகளின் இசையை அப்படியே கேக்க வேண்டும் என்கிற ஆவலினாலும் அப்படி தோன்றலாம்.

 6. r.v.saravanan

  என்றென்றும் இசை சக்கரவர்த்தி அவர் தான்

 7. c.bala subramanian

  ஒரு இசையமைபாளருக்கே இவ்வளவு பிடிவாதமா? இது மட்டும் சற்று நெருடலாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *