BREAKING NEWS
Search

கபாலி இணையத்தில் வெளியாகவில்லை… அது பொய் செய்திதான்!

கபாலி இணையத்தில் வெளியாகவில்லை… அது பொய் செய்திதான்!

13413148_481476162055289_1663993551573998778_n

சினிமா தொழிலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள இணையத் திருடர்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய அவசர அவசிய காலம் வந்துவிட்டது.

ஒரு படம் வெளியான பிறகு இணையத்தில் திருட்டுத் தனமாக வெளியிட்டு வந்த இந்த கும்பம் இப்போது படம் வெளியாக சில தினங்கள் இருக்கும்போதே வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

திருட்டு வீடியோ, இணைய வீடியோ திருடர்கள் கும்பலிடமிருந்து தங்கள் படங்களைக் காக்க தயாரிப்பாளர்கள் பெரும் பாடுபட்டு வருகின்றனர்.

கபாலி படம் இப்படி வெளியாகிவிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் முன்னெச்சரிக்கையாக வழக்குத் தொடர்ந்து 225 திருட்டு வீடியோ இணையத் தளங்களை முடக்கும் உத்தரவைப் பெற்றார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

அவரது இந்த நடவடிக்கையால் ஆத்திரப்பட்ட திருட்டு வீடியோ தளங்கள், ‘கபாலியை வேறு சர்வர் மூலம் வெளியிட்டே தீருவோம்’ என்று கொக்கரித்தன. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் இதை அறிவிப்பாக வேறு வெளியிட்டன.

இன்னொரு பக்கம், கொஞ்சம் கூட வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் இந்த திருட்டு வீடியோக்காரர்களுக்கு சிலர் வெளிப்படையாக வக்காலத்து வாங்கிய கேவலமும் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது. இது எந்த மாதிரி மனநிலை.. வக்கிரத்தின் உச்சம் என்று பலரும் கண்டித்து வரும் சூழலில்தான், கபாலி படத்தின் திருட்டு வீடியோ டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத இணையத்தில் வெளியானதாக செய்திகள் கசிந்துள்ளன.

இந்த டார்க் வெப் என்பது போதை பொருள் விற்பனை செய்வது, கொலை செய்வதற்கு ஆட்கள் தயார் செய்துகொடுப்பது, குழந்தைகளின் பாலியல் தொடர்பான வீடியோக்கள் வெளியிடுவது, துப்பாக்கிகள் போன்ற தீவிரவாதத்துக்கு துணைபோகும் ஆயுதங்கள் விற்பது போன்றவற்றுக்கு உதவும் திருட்டுத் தளங்கள். சாதாரணமாக நமது கம்ப்யூட்டர்களில், மொபைல்களில் பார்க்க முடியாது.

சரி, உண்மையிலேயே கபாலி அப்படி வெளியாகிவிட்டதா என்று விசாரித்தபோது, அந்த தகவல் ஒரு வதந்தி என்று தெரிய வந்துள்ளது. யாரோ சிலர் வேண்டுமென்றே இந்த புரளியை கிளப்பி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சினிமா ஆர்வலர்கள் இதுகுறித்து கூறும்போது, “பெரிய நடிகர்களின் படங்கள் இதுபோல் திருட்டுத்தனமாக வெளியானால் அது அந்த படத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தியேட்டரில் பார்க்கும் கூட்டம் இம்மியும் குறையாது. அதுவும் ரஜினி படத்துக்கெல்லாம் சான்ஸே இல்லை. மலை மீது விட்டெறியப் படும் சிறு கூழாங்கல் இது.

சிறு பட்ஜெட், புது ஹீரோக்களின் படங்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும். இருப்பினும், இதுபோல் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. இல்லாவிட்டால் திரைத் துறையே அழியும் அபாயமுள்ளது,” என்றனர்.

இந்த தகவலை அத்தனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பாத தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எந்த வழியிலும் கபாலி வீடியோ கசிந்துவிடக் கூடாது என்பதில் குறியாக உள்ளார். தொழில்நுட்ப ரீதியில் இந்த திருட்டு வீடியோக்காரர்களைத் தடுக்க தனி குழுவையே நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *