BREAKING NEWS
Search

தலைவா படப் பிரச்சினைக்குக் காரணம் முதல்வர் ஜெயலலிதாவா?

தலைவா படப் பிரச்சினைக்குக் காரணம் முதல்வர் ஜெயலலிதாவா?

Vijay Met Chief Minister Jayalalitha (1)

டந்த இரு வாரங்களாக தலைவா என்ற படம் தொடர்பான சர்ச்சைகளே மீடியாவை ஆக்கிரமித்திருந்தன. ஆனால் அப்படியொன்றும் ஆரோக்கியமான அல்லது நேர்மையான விஷயமாக அது இல்லாததாலேயே அதுகுறித்து இங்கே ஏதும் எழுதவில்லை.

தலைவா என்ற படம் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வந்தாலும், அதற்கு நான்கு தினங்களுக்கு முன்பே படத்தை நாங்கள் வெளியிட முடியாது என திரையரங்குகள் பின்வாங்கிவிட்டன. இதனை ஆகஸ்ட் 8-ம் தேதி வெளிப்படையாகவும் அறிவித்துவிட்டன.

9-ம் தேதி திட்டமிட்டபடி நாட்டின் தென் மாநிலங்கள், மும்பை மற்றும் சில நாடுகளில் படம் வெளியாகிவிட்டது (இப்போது தூக்கப்பட்டும்விட்டது!). தமிழகத்தில் மட்டும் வெளியாகவில்லை என்றதும், பெரும்பான்மையானோர் அதற்குக் காரணமாகச் சொன்னது முதல்வர் ஜெயலலிதாவைத்தான்.

இதே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் விஜய் நடித்த நண்பன் வெளியானது, துப்பாக்கியும் வெளியானது. எந்தப் பிரச்சினையும் வரவில்லை. ஆனால் தலைவா அரசியல் படம் என்பதால் வெளியாக அரசு ஒத்துழைக்கவில்லை என்றார்கள்.

ஆனால் இந்தக் காரணங்களை யாரும் ஆதாரப்பூர்வமாகவோ, அதிகாரப்பூர்வமாகவோ சொல்லவில்லை. காற்றுவாக்கில் பரவ விட்டனரே தவிர, யாரும் மூச்சுக் காட்டவில்லை.

கடந்த 10 நாட்களாக, முதல்வரைச் சந்திக்க விஜய் முயற்சிக்கிறார், அறிக்கை விடுகிறார்…

‘அம்மா ஆட்சி அருமை, நல்ல திட்டங்கள் போட்டு சிறப்பான நிர்வாகம் நடத்துகிறார்… தலைவா படத்தை ரிலீஸ் பண்ண நடவடிக்கை எடுப்பார்’ என்கிறார்.

‘அம்மா நீங்க தயவு செய்து இந்தப் படத்தை ரிலீஸ் செய்து காப்பாத்துங்க’ என வீடியோவில் கெஞ்சுகிறார்.

-ஆனால் என்ன பிரச்சினை என்று மட்டும் சொல்லவே இல்லை.

இன்னொரு பக்கம் இயக்குநர் விஜய்யும் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் (சினிமா பைனான்ஸ் என்ற பெயரில் பல தயாரிப்பாளர்களை மறைமுகமாகக் கொன்றவர்… இவரால் முடங்கிக் கிடக்கும் படங்களின் எண்ணிக்கையே 5-ஐத் தாண்டும்!) பிரஸ் மீட் வைத்து, படத்தை வெளியிடாவிட்டால் நடுத்தெருவுக்கு வந்துவிடுவோம் என்றார்கள்.

-சரி, ஏன்யா படம் வெளியாகல… காரணம் ஏதாவது இருக்குமே… அதைச் சொல்லுங்க? என்று கேட்டால், கேட்டவரை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, பின் வாயை இறுக்க மூடிக் கொண்டனர். அடுத்த நாள் உண்ணாவிரதம் என்றார்கள். யாரை எதிர்த்து, என்னென்ன கோரிக்கைகள் என்றால்.. பதிலில்லை. அரசும் அனுமதி மறுத்துவிட்டது!

தலைவா எனத் தலைப்பு வைத்து, தலைமை தாங்க இதுதான் தருணம் என்று உப தலைப்பும் வைத்தவர்களுக்கு, அந்தத் தலைவா நொண்டியடிக்கக் காரணம் எதுவென்று சொல்லக் கூட முதுகெலும்பில்லை!

சரி, இனி வேலைக்காகாது… படம் வெளிவருவது கஷ்டம்தான் என்று தெரிந்ததும் விஜயா மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் சேட்டு. அவரை அங்கே அட்மிட் பண்ணிவிட்டு, பின்னி மில்லில் அடுத்த படமான ஜில்லா ஷூட்டிங்குக்குப் போய்விட்டார் ‘இளையதளபதி’!

அன்பழகன் போட்ட குண்டு

அதே நாளில், திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் ஒரு உண்மையைப் போட்டுடைத்தார். “தலைவா படத்துக்கு அரசின் தரப்பில் எந்தத் தடையோ, சிக்கலோ இல்லை. தியேட்டர்கள் தரப்பிலும் பிரச்சினை இல்லை. என்னிடம் கொடுங்கள் நான் வெளியிட்டுக் காட்டுகிறேன்,” என அவர் அறிவிக்க, அடித்துப் பிடித்துக் கொண்டு இப்போது பட வெளியீட்டை அறிவித்துள்ளது படத்தின் வெளியீட்டாளரான வேந்தர் மூவீஸ். தலைப்பில் இடம்பெற்ற ‘தலைமை ஏற்க சரியான தருணம்’ என்ற வாசகத்தையும் நீக்கியுள்ளனர்.

சரி, இதில் முதல்வர் ஜெயலலிதா எங்கே வந்தார்? இந்த ஒரு குப்பைப் படம் அவரது ஆட்சியை அசைத்து விடுமா? அல்லது தான் நடித்த படத்துக்கு தடை இன்னார்தான் என சொல்லக்கூட தொடை நடுங்கும் ஒரு சாதாரண நடிகன், அவருக்கு சரிக்கு சரியான எதிரியாகி விடுவானா?

தேர்தலும் ஜெயலலிதாவும் அணிலும்...

விஜய் மற்றும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனின் ‘அரசியலை’ நன்கு அறிந்தவர் முதல்வர் ஜெயலலிதா. இவர்கள் கருணாநிதி ஆட்சியில் அனுபவித்த சலுகைகளையும், அவரது ஆட்சியின் கடைசிகட்டத்தில் எதற்காக எதிராகத் திரும்பினார்கள் என்பதையும், இவர்களின் நிஜமான நோக்கம் என்னவென்பதையும் நன்கு புரிந்தவர் ஜெயலலிதா.

சட்டமன்றத் தேர்தலில் தனக்கு ஆதரவு தருமாறு விஜய்யையோ, அஜீத்தையோ அல்லது வேறு எந்த நடிகரையுமோ அவர் கேட்கவில்லை என்பதே உண்மை. நானும் ரவுடிதான் என்ற கூவலோடு போயஸ் தோட்டம் போய் பவ்யமாய் பம்மிக் கொண்டிருந்துவிட்டு வந்தனர் மகனும் தந்தையும். முதலில் அதிமுகவுக்கு ஆதரவு, தேர்தல் பிரச்சாரம் என்றெல்லாம் ஜெயலலிதாவிடம் கூறிவிட்டு, பின்னர் குறைந்த பட்சம் அறிக்கை கூடத் தராமல் (அரசியல் சாணக்கியத்தனமாம்!) விஜய் அப்படியே கழன்று கொண்டார். எஸ் ஏ சந்திரசேகரன் மட்டும் இரண்டு மூன்று தேர்தல் கூட்டங்களுக்குப் போனார்.

தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா முதல்வரானதும், நாங்களும் இந்த வெற்றிக்கு அணில் மாதிரி உதவினோம், என்று அறிக்கை விட்டார் விஜய். அன்றே இவர்களை வைக்க வேண்டிய இடம் எது என்பதைப் புரிந்து கொண்டார் ஜெயலலிதா.

அதற்கடுத்து விஜய் நடிப்பில் தயாரான இரண்டு படங்கள் வெளியாகின. இந்தப் படங்களின் தொலைக்காட்சி உரிமையைப் பெற்றது ஜெயா டிவி அல்ல, விஜய் டிவி. ஆனால் அதைப் பற்றியெல்லாம் ஜெயலலிதா அலட்டிக் கொள்ளவே இல்லை. நண்பனும் துப்பாக்கியும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளியாகின. சம்பாதித்தன.

விஜய் தரப்பின் விஷமத்தனம்…

அடுத்ததாக தலைவா. இந்தப் படத்தின் தலைப்பிலிருந்து பல விஷயங்களில் தனது விஷமத்தனத்தைக் காட்டியிருந்தனர் விஜய் அண்ட் கோ. ஆனால் இந்த முறையும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தார் முதல்வர்.

படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு, முதல் திரியைக் கொளுத்தியவர்கள் திரையரங்கு உரிமையாளர்களே. அபிராமி ராமநாதன் மூலம்தான் அந்தத் திரி கொளுத்தப்பட்டது. இது அரசியல் சார்பு படமாக உள்ளது. விஜய்யை தலைவராக முன்நிறுத்துவது போல தலைப்பு, வாசகங்கள், வசனங்கள் உள்ளன. எனவே போலீஸ் பாதுகாப்பு இருந்தால் நல்லது என்று ஆரம்பித்தனர்.

திரையரங்கு உரிமையாளர்களைப் பொறுத்தவரை, பாதுகாப்புக்குதான் முதலிடம் தருவார்கள். விஸ்வரூபம் விவகாரத்திலும் இதைத்தான் பிரதான காரணமாகக் காட்டினர். எனவே தலைவா திரையிடும் அரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்க, முடியாது என கைவிரித்தது போலீஸ். அது எதார்த்தமும் கூட.

உடனே இதை வைத்துக் கொண்டு அரசே தடுப்பதாக ஒரு பேச்சைக் கிளப்பிவிட்டது விஜய் தரப்பு. அடுத்த சில மணி நேரங்களில் முதல்வரைக் கலந்தாலோசித்துவிட்டு தமிழக டிஜிபி வெளியிட்ட அறிக்கையில், “போலீசுக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெளியிடுவதும் வெளியிடாததும் சினிமாக்காரர்கள் இஷ்டம்” என்று கையொப்பமிட்ட அறிக்கையையே வெளியிட்டுவிட்டார்.

லாபம் குறையுதே…

இதற்கு மேல் அரசைக் குற்றம் சாட்ட விஜய் தரப்புக்கு எதுவுமே இல்லை. திரையரங்க உரிமையாளர்களிடம் பேசி வெளியிட வேண்டியதுதானே. ஆனால் இப்போது புதிய பிரச்சினை… படம் வெளியாகி திருட்டு டிவிடி வந்து, படம் குப்பை என்ற விமர்சனங்களும் வந்துவிட்டன. எனவே கொடுத்த பணத்தை அட்வான்ஸாக வைத்துக் கொண்டு, சதவீத அடிப்படையில் படத்தை வெளியிடலாம் என்று திருப்பிக் கொண்டனர்.

இப்படி சதவீத முறையில் வெளியிட்டால் நிச்சயம் ரூ 20 கோடி வரை இழப்பு வரும்… அதாவது லாபத்தில் நஷ்டம். இதை ஏற்க மனமின்றி இழுத்துக் கொண்டிருந்தனர் ஜெயினும் மூவேந்தர் மூவீஸும். இதுதான் உண்மையான காரணம்.

இதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. விஜயகாந்துக்கே கொடுக்காத எதிரி என்ற அந்தஸ்தை அத்தனை சீக்கிரம் விஜய்க்கு தந்துவிடுவாரா என்ன?

‘விஜய் என்பவர் ஒரு சாதாரண நடிகன்… அவருக்குப் பின்னால் ரசிக பலமோ, சினிமா பலமோ எதுவுமே இல்லை’ என்பதை அம்பலமாக்கிக் கொண்டிருந்த ‘நிஜ சினிமா’வை அவர் ரசித்துக் கொண்டிருந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம். தலைவா வெளியாகாமல் இருப்பதற்குக் காரணம் ஜெயலலிதா என்று சினிமா, அரசியல் என எந்தத் தளத்தில் உள்ளவர்களும் சொல்லிவிட முடியாத அளவுக்கு கவனமாகப் பார்த்துக் கொண்டார்.

தலைவா படப் பிரச்சினை பற்றி கருத்து சொன்ன திமுக தலைவர் கருணாநிதியால் கூட ஜெயலலிதா மீது குற்றம் காண முடியவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

விஸ்வரூபமும் தலைவாவும்..

தலைவா படப் பிரச்சினையை கமல் ஹாஸனின் விஸ்வரூபத்துக்கு வந்த பிரச்சினையோடு தொடர்புபடுத்தி சிலர் அரசியல் பேசினர்.

கமல் பிரச்சினை வேறு. விஸ்வரூபத்தை வெளியிட தியேட்டர் கிடைக்காத நிலையில் அவர் டிடிஎச் என பிரச்சினை கிளப்பி, பரபரப்பை ஏற்படுத்தி, தியேட்டர்கள் பெற்றார். ஆனால் அவரே எதிர்ப்பார்க்காமல் முஸ்லிம்கள் பிரச்சினை வர, முதல்வர் தலையிட்டார். முதல்வரே நேரடியாக அறிக்கை விடுத்தார். தமிழக அரசு படத்துக்கு தடை விதித்தது. கமல் நீதிமன்றம் போனார். பின்னர் அரசுடன் சமரசமாகி, எடிட் செய்து படத்தை வெளியிட்டார்.

இதில் ஒவ்வொரு விஷயமும் மக்களுக்கு மீடியா மூலம் தெளிவாகத் தெரிந்தது. என்ன பிரச்சினை, அரசு ஏன் தலையிட்டது என்பதையெல்லாம் கமல் வெளிப்படையாகச் சொன்னார். இதையெல்லாம் முடிந்த வரை தனது படத்தின் வர்த்தகத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார் அந்த புத்திசாலி. அதன் விளைவு, வந்த விஸ்வரூபம் திருட்டு டிவிடியைக் கூட ரசிகர்கள் வாங்கவில்லை.

ஆனால் தலைவா விஷயம் அப்படியல்ல. தன் படம் வெளியாகாததற்கு காரணம் அரசின் மறைமுக மிரட்டல் எனக் கற்பனை செய்து கொண்டு, தங்களுக்குள் புலம்பிக் கொண்டிருந்தார்கள். அதையும்கூட வெளியில் சொல்ல தைரியமில்லை இவர்களுக்கு. இதைவைத்து எவ்வளவு அரசியல் அனுதாபம் தேட முடியும் என்ற யோசனையோடு கள்ள மவுனம் காத்தனர். அதற்குக் கிடைத்த பலன்தான், தலைவா திருட்டு டிவிடிகளின் அமோக விற்பனை மற்றும் ஆன்லைன் டவுன்லோடுகள்.

முதல்வரா… தியேட்டர்காரர்களுக்கு முதலாளியா?

முதல்வர் பெயரை தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையில் இழுத்தது விஜய் தரப்பு செய்த மிகப் பெரிய குற்றம். படம் வெளியாகவில்லை என்றதும், உடனே முன் அனுமதி கூடப் பெறாமல் முதல்வர் தங்கியிருந்த கொட நாடு பங்களாவுக்கே சென்றது எந்த அர்த்தத்தில்? திரும்பத் திரும்ப முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டது எதற்காக? முதல்வர் என்ன விநியோகஸ்தர்களின் தலைவரா? அல்லது தியேட்டர்காரர்கள் அனைவருக்கும் முதலாளியா?

இவர்கள் கேட்டபடி முதல்வர் சந்தித்திருந்தால், அது ஒரு தவறான முன்னுதாரணமாகியிருக்கும். இந்த விஷயத்தில் முதல்வரின் நடவடிக்கை மிகச் சரியானதே!

தமிழகத்தில் எவ்வளவோ படங்கள் வெளியாகின்றன. அவற்றுக்கு சில சமயம் மிரட்டல்களும் வருகின்றன. அதற்காக யாரும் வெளியிடாமல் இருக்கிறார்களா… அல்லது போலீஸ் பாதுகாப்பு கொடுக்கச் சொல்லி முதல்வர் அலுவலகக் கதவுகளைத் தட்டுகிறார்களா?

நியாயமாக இதற்காகவே படத்தைத் தடை செய்திருக்க வேண்டும். எந்த சினிமா எப்போது வரவேண்டும், அதில் என்னென்ன வசனங்கள் உள்ளன என்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது அரசின் வேலையல்லவே.

MDSA067312-MDS-M (1)

கேளிக்கை வரி மறுப்பு ஏன்?

இந்தப் படத்துக்கு கேளிக்கை வரி மறுத்ததை ஒரு புகாராகக் கூறிக் கொண்டுள்ளனர். இந்தப் படம் வரிவிலக்கின்றி வெளியானால் அதிகபட்சம் ரூ 3 கோடி வரை அரசுக்கு வரி செலுத்த வேண்டும். மக்கள் தலைவா என்றும், அண்ணாவுக்குப் பிறகு வாரிசு நானே என்றும் படத்தில் வசனம் வைக்கத் தெரிந்தவர்களுக்கு, நான்கைந்து படங்களைக் காப்பியடித்து உருவாக்கப்பட்ட கதைக்கு 45 கோடியை செலவிட முடிந்தவர்களுக்கு, இந்த ரூ 3 கோடி வரி செலுத்தக் கசக்கிறதா?

தவிர, படத்துக்கு வரி விலக்கு தராமல் போனதற்கான காரணங்களையும் அரசு வெளிப்படையாகவே அறிவித்த பிறகு, அதைப் புகாராகச் சொல்ல அவசியமென்ன இருக்கிறது!

தலைவா பட விவகாரத்தில் அரசின் மீதோ, முதல்வர் மீதோ எந்தப் பழியையும் சுமத்த முடியாது. இது ஒரு தனிப்பட்ட விவகாரம், வியாபாரம். அதைச் சரியாகக் கையாளத் தெரியாமல் கவிழ்ந்தனர் விஜய் தரப்பினர்.

சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இருக்கும் மூத்த இயக்குநர்- தயாரிப்பாளர் – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என பெரும் செல்வாக்குமிக்கவர், ‘அண்ணாவுக்கு நிகரானவர்’ என தன்னைத் தானே விளித்துக் கொள்ளும் ‘பெரும் தலைவரான’ எஸ் ஏ சந்திரசேகரனால், தன் துறை சார்ந்த தியேட்டர்காரர்களுடனும் விநியோகஸ்தர்களுடனும் இணக்கமாகப் போய் தன் மகன் படத்தை வெளியிட முடியவில்லை. அந்த இயலாமைக்கு அரசியல் சாயம் பூசி, அனுதாபமும் ஆதாயமும் தேடப் பார்த்தார்கள்… அவமானப்பட்டு அம்பலத்தில் நிற்கிறார்கள்.

தலைவா படத்தின் தயாரிப்பாளர், வெளியீட்டாளர், ஹீரோ, அவர் தந்தை, இந்தப் படத்துக்கான நோக்கம் அனைத்திலுமே ஒரு கள்ளத்தனம் இருப்பதைக் கவனிக்கலாம். அடுத்த முதல்வர் நானே என்று கூட சினிமா எடுங்கள்.. ஆனால் வர்த்தகத்தை நேர்மையாகச் செய்யுங்கள்.

-விதுரன்
18 thoughts on “தலைவா படப் பிரச்சினைக்குக் காரணம் முதல்வர் ஜெயலலிதாவா?

 1. குமரன்

  //// தி.மு.க. எம்.எல்.ஏ.வும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜெ.அன்பழகன், தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் எங்களிடம் 300 திரையரங்குகள் உள்ளன. விஜய் விரும்பினால் தலைவா படத்தை வெளியிட தயாராக இருக்கிறோம்.” எனக் கூறியிருந்தார். மேலும், தலைவா பட வெளியீட்டு உரிமை இப்போது எனக்கு வந்தால் கூட படத்தை நாளை காலை ரிலீஸ் செய்ய முடியும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.////

  தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருக்கும் பழக்கடை ஜெயராமனின் மகன் ஜே.அன்பழகன் தென் சென்னை மாவட்ட செயலாளர்.

  இவரால் தொண்ணூறு கோடி கொடுத்து இந்திரன் திரைப்பட உரிமையை ஒரு ஏரியாவுக்கு வாங்கி வியாபாரம் செய்ய முடிகிறது.

  இப்போது இந்தத் தலைவா படத்தைத் தன்னிடம் இருக்கும் 300 தியேட்டர்களில் இன்று கொடுத்தால் நாளைக் காலை வெளியிட முடியும் என்று அறுதியிட்டுக் கூற முடிகிறது.

  ஹூம், எல்லாம் உழைத்துச் சம்பாதிக்கிறாங்கப்பா !!

 2. குமரன்

  விதுரனின் கட்டுரை அருமை.

  மக்கள் தலைவா என்றும், அண்ணாவுக்குப் பிறகு வாரிசு நானே என்றும் படத்தில் வசனம் வைத்துவிட்டு கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் எப்படி இவர்களை ஆதரிப்பார்கள்?

  நான்கைந்து படங்களைக் காப்பியடித்து உருவாக்கப்பட்ட கதை ….
  படம் துவக்கத்தில் அப்படியே நாயகன் கதையாகவே இருப்பதாகச் சொல்கிறார்கள். அண்டைப் புளுகுராஜ் கமல் நடித்த பாத்திரத்தில் வருவதாகச் சொல்கிறார்கள்.

  இந்த அண்டைப்புளுகுராஜ் தலைவா படவிழா என்று ஒன்றில் விஜய் டி.வியில் அபப்டியே விஜய்தான் அடுத்த தலைவர் என்று ஒரு புகழ்ச்சி வேறு செய்கிறார், ஏனென்றால் விஜய் தமிழனாம் !!!

 3. Suryakumar

  செம செம செம….. Very good write up… நேத்து விசை சம்பந்தப்பட்ட பேஸ்புக் பக்கத்தில எல்லாம் ஒரே வீர வசனம்தான்… செம காமெடி…

 4. மிஸ்டர் பாவலன்

  நண்பர்களே.. நான் இந்த வலையில் எத்தனையோ பதிவுகளை
  எழுதி இருந்தாலும் அவற்றில் நண்பர்களைக் கவர்ந்தது, அவர்கள்
  நினைவில் நிற்கும்படி இருந்தது மிகக் குறைவான பதிவுகளே.
  அவற்றில் ஒன்று.. முன்பு நான் எழுதிய பாடல். அது வெளிவந்த
  தொடர் –> http://bit.ly/QwUsbA

  நண்பர்களுக்காக அந்த பாடலை நான் Cut+Paste செய்கிறேன்.
  இந்த தொடருக்கு related என்பதால் தருகிறேன். வினோவிற்கு நன்றி!

  மிஸ்டர் பாவலன் says:
  August 3, 2012 at 11:54 am

  “பரமசிவன் ..” பாட்டு மெட்டில்…
  (சூர்யகாந்தி படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
  அதை நண்பர்கள் தான் எடுத்துச் சொல்ல வேண்டும்!!)

  SAC -ன் காரில் இருந்து குருவி கேட்டது,
  “தலைவா, சௌக்யமா?”
  “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  கண்ணா.. சௌக்கியமே!”
  தலைவர் சொன்னது – அதில் அர்த்தம் உள்ளது!

  SAC -ன் காரில் இருந்து குருவி கேட்டது,
  “தலைவா, சௌக்யமா?”
  “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  கண்ணா.. சௌக்கியமே!”
  தலைவர் சொன்னது – அதில் அர்த்தம் உள்ளது!

  சூப்பர் ஹிட்டு கொடுக்கும் போது
  இண்டஸ்ட்ரி உன்னை மதிக்கும்
  பிளாப் படம் கொடுத்து வந்தால்
  நிழலும் வெறுத்து ஒதுக்கும்

  சூப்பர் ஹிட்டு கொடுக்கும் போது
  இண்டஸ்ட்ரி உன்னை மதிக்கும்
  பிளாப் படம் கொடுத்து வந்தால்
  நிழலும் வெறுத்து ஒதுக்கும்

  “உன் வாழ்க்கை.. உன் கையில்” என்று
  உண்மையான ரசிகனுக்கு தலைவர் சொன்னது
  அது தலைவர் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

  SAC -ன் காரில் இருந்து குருவி கேட்டது,
  “தலைவா, சௌக்யமா?”
  “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  கண்ணா.. சௌக்கியமே!”
  தலைவர் சொன்னது – அதில் அர்த்தம் உள்ளது!

  படம் ஓட கதையும் நடிப்பும் இரண்டுமே வேண்டும்
  அந்த இரண்டில் ஒன்றும் இல்லையென்றால்
  எந்த படம் தான் ஓடும்
  ரீமேக்கை விட்டு விட்டு படம் எடுக்க வேண்டும்
  பணிவோடும் உழைப்போடும் படம் எடுப்பது ..
  அது கடமை என்பது.. அது தலைவர் கண்டது..

  SAC -ன் காரில் இருந்து குருவி கேட்டது,
  “தலைவா, சௌக்யமா?”
  “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  கண்ணா.. சௌக்கியமே!”
  தலைவர் சொன்னது – அதில் அர்த்தம் உள்ளது!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 5. varadhu

  இவனுடைய அடிவருடி சத்யராஜ் எங்கே போனான் ? இத பத்தி கருத்து ஒன்றும் கூறவில்லை . அவனால் வந்த விளைவு தான் இது .

 6. ஞானபழம்

  அருமையான, தெளிவான கட்டுரை. இது வரை யாருமே இந்த பிரச்சனையில் ஒரு தெளிவான புரிதல் இல்லாமல் குழப்பி கொண்டிருந்தனர் (என்னையும் சேர்த்து ). மிக விளக்கமான எழுத்துகள். வாழ்த்துக்கள்.

 7. மிஸ்டர் பாவலன்

  நண்பர்களே.. இது தொடர்பான எனது பழைய பதிவு ஒன்று
  http://bit.ly/QwUsbA
  இது பழைய பாடல் என்றாலும், இன்றைய சூழலுக்கு
  related என்பதால் அதை அப்படியே தருகிறேன். நீங்கள்
  அந்த தொடரைப் படித்தால் ஏன் இந்தப் பாடல் எழுதினேன்
  என தெரிந்து கொள்வீர்கள். ‘என் கருத்து’ பாராட்டிய பாடல் இது!
  அவர் குறிப்பிட்டது – “சூப்பர் – பாவலன் அவர்களே”.

  மிஸ்டர் பாவலன் says:
  August 3, 2012 at 11:54 am

  “பரமசிவன் ..” பாட்டு மெட்டில்…
  (சூர்யகாந்தி படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
  அதை நண்பர்கள் தான் எடுத்துச் சொல்ல வேண்டும்!!)

  SAC -ன் காரில் இருந்து குருவி கேட்டது,
  “தலைவா, சௌக்யமா?”
  “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  கண்ணா.. சௌக்கியமே!”
  தலைவர் சொன்னது – அதில் அர்த்தம் உள்ளது!

  SAC -ன் காரில் இருந்து குருவி கேட்டது,
  “தலைவா, சௌக்யமா?”
  “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  கண்ணா.. சௌக்கியமே!”
  தலைவர் சொன்னது – அதில் அர்த்தம் உள்ளது!

  சூப்பர் ஹிட்டு கொடுக்கும் போது
  இண்டஸ்ட்ரி உன்னை மதிக்கும்
  பிளாப் படம் கொடுத்து வந்தால்
  நிழலும் வெறுத்து ஒதுக்கும்

  சூப்பர் ஹிட்டு கொடுக்கும் போது
  இண்டஸ்ட்ரி உன்னை மதிக்கும்
  பிளாப் படம் கொடுத்து வந்தால்
  நிழலும் வெறுத்து ஒதுக்கும்

  “உன் வாழ்க்கை உன் கையில்” என்று
  உண்மையான ரசிகனுக்கு தலைவர் சொன்னது
  அது தலைவர் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

  SAC -ன் காரில் இருந்து குருவி கேட்டது,
  “தலைவா, சௌக்யமா?”
  “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  கண்ணா.. சௌக்கியமே!”
  தலைவர் சொன்னது – அதில் அர்த்தம் உள்ளது!

  படம் ஓட கதையும் நடிப்பும் இரண்டுமே வேண்டும்
  அந்த இரண்டில் ஒன்றும் இல்லையென்றால்
  எந்த படம் தான் ஓடும்
  ரீமேக்கை விட்டு விட்டு படம் எடுக்க வேண்டும்
  பணிவோடும் உழைப்போடும் படம் எடுப்பது ..
  அது கடமை என்பது.. அது தலைவர் கண்டது..

  SAC -ன் காரில் இருந்து குருவி கேட்டது,
  “தலைவா, சௌக்யமா?”
  “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  கண்ணா.. சௌக்கியமே!”
  தலைவர் சொன்னது – அதில் அர்த்தம் உள்ளது!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 8. vijay

  சத்யராஜ் விவரமுள்ள ஒரு விஜய தி ராஜேந்தர்,

 9. vijay

  இந்த மாதிரி நியூஸ் ஐ எல்லாம் வினோ அவர்கள் எழுதுவது இன்னும் கட்சிதமாக இருக்கும்

 10. Jegadeesh

  ///‘விஜய் என்பவர் ஒரு சாதாரண நடிகன்… அவருக்குப் பின்னால் ரசிக பலமோ, சினிமா பலமோ எதுவுமே இல்லை’ என்பதை அம்பலமாக்கிக் கொண்டிருந்த ‘நிஜ சினிமா’வை அவர் ரசித்துக் கொண்டிருந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம். ///

  அரசியல் ஆசை காட்டி ரசிகனை ஏமாற்றும் நடிகர்கள் நம் தமிழ் சினிமாவின் சாபக்கேடுகள்…

 11. Nanda

  யாரு வேண்டுமானாலும் நடிகர் ஆகலாம். ஆன்னால் நல்ல மனதினைக முடியாது .. அப்படி நல்லமனிதன் ஆகிறவன் தான் தலைவன்.. அது நம் தலைவருக்கு மட்டும் தான் பொருந்தும். விஜய் இன்னும் நிறைய காத்துக வேண்டியது இர்ருக்கு… தன்னை தானே தலைவன் சொன்ன தலைவனாக முடியாது.

 12. gunasekar

  விஜய் யோட டிராமா வினால் பலியானது ஒரு அப்பாவி ரசிகன்

 13. மிஸ்டர் பாவலன்

  //இந்த மாதிரி நியூஸ் ஐ எல்லாம் வினோ அவர்கள் எழுதுவது இன்னும் கட்சிதமாக இருக்கும்// (Vijay)

  எனது கதையில் வரும் ‘ரகுநாத் ஐயர்’ பேசுவது போல் இந்த dialogue
  இருக்கிறது 🙂 🙂 🙂

  -== மிஸ்டர் பாவலன் ==-

 14. siva

  நல்ல உண்மையான விசயத்த எழுதிதியதற்கு ரொம்ப நன்றி. இவன் எல்லாம் ஒரு ஆளு இன்னு இந்த அம்மா கண்டுக்கவே கண்டுக்காது. M G R யே இந்த அம்மா’ட்ட பார்த்து கொஞ்சம் உசாரா இருந்தாரு. தன்னோட பிரச்சனைய தைரியமா வெளியில சொல்ல முடியல.இவரு தலைவரா வந்து ஊர்ல இருக்கிற பிரச்சினைய திர்த்து வசுடுவனா?. விஜய் வளர்ந்ததும் அழிய போறதும் அவரோட அப்பா’வளத்தான் என்பது உண்மை.

 15. Mahendran

  ஏன் அனைவரும் ஒரே மாதிரி யோசிக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் ஜெயலலிதா திட்டம் போட்டு விஜயை பழி வாங்கியிருப்பது, சினிமாவை கவனித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. முழு பூசணிகாயை சோற்றில் மறைக்க வேண்டாம். விஜயை திட்டுவதும் அம்மாவுக்கு support பண்ணுவதும்தான் உங்கள் நோக்கமாக இருக்கிறது.

  தலைவர் ரஜினிக்கும் கூட அம்மாவின் பழிவாங்கும் குணம் தெரியும். இருந்தாலும் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று அவர் இணக்கமாக இருக்கிறார். விஸ்வரூபம் பிரச்னையில் கூட dth விவகாரம் அவராக உருவாக்கி கொண்ட ஒன்று. ஆனால் அதை தொடர்ந்து வந்த பிரச்னைகள் எல்லாமே அம்மாவின் கைங்கர்யம். முதலில் இதை ஒப்புக்கொண்ட கமல், பிறகு அவரிடம் சரண்டர் ஆனார். அம்மாவுக்கும் நன்றி சொல்வதுபோல் ஐஸ் வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *