BREAKING NEWS
Search

தமிழக முதல்வராவது பிக் பாஸ் மாதிரி 100 நாள் வேலைத் திட்டமா கமல் ஹாசன்?

Rajini-Kamal

சென்னை: நான் தனிக்கட்சி தொடங்கப் போகிறேன். ஊழலை எதிர்ப்பவர்கள் எல்லோரும் எனக்கு உறவினர்களே, தமிழக முதல்வர் ஆக ஆசைப்படுகிறேன் என்றெல்லாம் நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சந்தித்தும் உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவர் ஆவாரா அல்லது தனிக்கட்சி ஆரம்பித்து ஆம் ஆத்மியுடன் கூட்டணி சேர்வாரா என்று தெரியவில்லை. ஆனால், அரசியலுக்கு வந்தே தீருவேன் என்ற கமல் ஹாசன் தீர்மானமான முடிவில் இருப்பதாக தெரிகிறது.

கடந்த காலங்களில் கமல் ஹாசனின் அரசியல் சம்மந்தமான பேச்சுக்களை கவனித்துப் பார்த்தால் ஒன்று புரியும். மக்கள் பிரச்சனைகளுக்காக அவர் பெரிதாக குரல் கொடுத்ததே இல்லை. தன்னுடைய படத்திற்கு பிரச்சனை வந்த போது, ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன் அரசு இயங்குகிறதா இல்லையா என்று தெரியவில்லை என்று ஒரு தடவை குரல் கொடுத்தார்.

இயற்கை பேரிடர் போது அரசுக்கு ஒத்துழைப்பதை விடுத்து குறை கூறுவதா என பலதரப்பட்டவர்களிடமிருந்து கண்டனம் எழவே, சத்தத்தை குறைத்துக் கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா மரணம் அடையும் வரை தமிழக அரசியல் பற்றி மூச்சுக் கூட விடாமல் இருந்தவர் தான் கமல் ஹாசன். ஊரெல்லாம் ஜெயலலிதாவின் மரணம் பற்றி சந்தேகம் கிளப்பும் போது கூட வாய் மூடி அமைதியாக வேடிக்கை பார்த்தவர்தானே.

முதல்வரின் மரணத்திற்குப் பிறகு ஒபிஎஸ், இபிஎஸ், டிடிவி பஞ்சாயத்துகளின்போதும், கூவாத்தூர் பேரங்களின் போதும் கமல்ஹாசனின் கண்களும் காதுகளும் மூடியே இருந்தன.

எப்போது பிக்பாஸ் ஆரம்பமானதோ, அப்போதுதான் தூசி படிந்து கிடந்த ட்விட்டர் கணக்கை திறந்து பார்த்தார். தினசரி இரவு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை ட்விட்டினார். மீடியாக்கள் பின்பாட்டு பாடவே உற்சாகமாகி, ஒரு டி மேலே போனார். ஆனாலும் மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்கள் இன்னும் கமல் ஹாசன் கண்களுக்கு தெரியவே மாட்டேங்கிறது. ஜெயலலிதா சொன்னதுபோல, செலக்டிவ் அம்னீஷியா வந்துவிட்டது இவருக்கு.

இப்போது நான் முதல்வர் ஆவேன் என தனக்குத்தானே கிரீடம் சூட்டிக் கொள்ள முயல்கிறார். சோலோவாக தன் குரல் எடுபடாது என்பது தெரிந்ததால், அவ்வப்போது ரஜினி பெயரை அவரது அனுமதியின்றி இஷ்டத்துக்கும் பயன்படுத்துகிறார்.

முதல்வர் என்றால் அவ்வளவு சுலபமான ஒன்றாகி விட்டதா என்ன? 100 நாள் பிக்பாஸில் பத்துப் பேரை கட்டி மேய்ப்பதுவும், அவர்களுக்கு கட்டளை இடுவதும், பஞ்சாயத்துப் பண்ணுவதும் சுலபமாக இருக்கலாம்.

ஆனால் முதல்வர் என்பவர், யாரோ ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுப்பதை காமிரா முன் நடிக்கும் பிக்பாஸ் அல்லவே! ஊழல் ஊழல் என்கிறாரே! ஊழலை எப்படி ஒழிக்கப் போகிறேன் என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாரா? ஊழலுக்கு எதிராக போராடி ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி மீதும் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. மோடியின் அரசு மீது இல்லாத ஊழல் குற்றச்சாட்டுகளா.. காங்கிரஸை ஜஸ்ட் லைக் தட் மிஞ்சிவிட்டதே மோடி அரசு.. அதை கண்டிக்க முடியாமல் அப்புறம் என்ன ஊழல் ஒழிப்பு?

முதலில் ஊழலை எப்படி ஒழிக்கப்போகிறேன் என்று கமல் ஹாசன் சொல்ல வேண்டும். அதற்கான திட்ட வரைவை முன் வைக்கட்டும். அவரை உசுப்பேத்தி விடும் எந்த ஊடகமாவது இந்த கேள்வியை முன் வைத்துள்ளதா? மாட்டார்கள். டிசைன் அப்படி!

தமிழக மக்கள் தொகை என்ன? மக்களின் வருவாய் ஆதாரங்கள் எவை? என்னென்ன தொழில்கள் தமிழகத்தில் உள்ளது? அதில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது? விவசாயிகள் பிரச்சனை என்ன? சமூகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு தீர்வு என்ன? வேலைவாய்ப்புத் திட்டங்கள் என்னென்ன? பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் என்ன? – இப்படி தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதாவது இந்த நாயகனிடம் இருக்கிறதா? ஆனால் ரஜினியிடம் இதற்கெல்லாம் பதில் இருக்கிறது. பக்காவான திட்டமிடல் உள்ளது.

மிகத் தீவிரமாக ரஜினிகாந்த் ஒரு விஷயத்தை மக்களுக்காகச் செய்ய முற்படுகையில், அவரை முந்த வேண்டும் என்ற அரை வேக்காட்டுத்தனமான ஆசையில் கமல் ஹாஸன் இந்த அரசியல் களத்துக்குள் குதித்துள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது. இது மீடியாவுக்குத் தெரியாவிட்டாலும், மக்களுக்குத் தெளிவாகப் புரிகிறது.

‘இருபத்தைந்து நாட்கள் ட்விட்டர் அறிக்கைகள், அடுத்ததாக முதல்வர் வேட்பாளர் என அறிவிப்பு. தேர்தல் வந்ததும் முதல்வர்’. இதெல்லாம் கனவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இது என்ன மூன்றரை மணி நேர திரைப்படமா அல்லது 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியா?

– ஸ்கார்ப்பியன்
One thought on “தமிழக முதல்வராவது பிக் பாஸ் மாதிரி 100 நாள் வேலைத் திட்டமா கமல் ஹாசன்?

  1. R. Hari hara kroshnan

    பிக் பாஸ் மாதிரி நிகழ்ச்சியில் கூட முதல் 60 நாட்கள் தான் தான் பிக்பாஸ் போல நிகழ்ச்சி ஆரம்ப/முடிவுகளில் பிக்பாஸ் – நான் என்று முடிப்பார் பின் வெறும் உங்கள் – நான் எறு மட்டும் சொகிறார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு யா சென்ற பிறகு. வந்த மாற்றம் இது! அரசியல் என்பது வேற லெவல் கமல் – ஓரமா போய் விளையாடுங்க! அரசியல் – டீவீ நிகழ்ச்சி அல்ல!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *