BREAKING NEWS
Search

கட்சியில் சேர ரஜினிக்கு நெருக்கடி தருகிறதா பாஜக? மீடியாவில் உலாவரும் பரபர ‘செய்திகள்’!!

கட்சியில் சேர ரஜினிக்கு நெருக்கடி தருகிறதா பாஜக? மீடியாவில் உலாவரும் பரபர ‘செய்திகள்’!!

rajinikanth-isl-feat
பாஜகவில் சேர தொடர்ந்து ரஜினிக்கு அழைப்பு விடுத்தும், அவர் சேர மறுப்பதால்தான் அவருக்கு எதிராக பல புரளிகள் கிளம்புவதாகவும், அவரது மனைவியின் நிலத்தை எக்ஸிம் வங்கி கையகப்படுத்துவதாக அறிவித்ததாகவும் மீடியாவில் பரபர செய்திகள் உலா வருகின்றன.

மேலும் விரைவிலேயே ரஜினிகாந்த் பாஜகவில் சேரப் போவதாக சிலர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகளைக் கொளுத்திப் போட்டவண்ணம் உள்ளனர்.

இது ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று வரை சவலைப் பிள்ளையாகவே காட்சி தரும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் படு தீவிரமாக உள்ளார் கட்சியின் தலைவர் அமித் ஷா.

தமிழகத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள ரஜினிக்குதான் அவர் முதலில் வலை வீசினார். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடியை, ரஜினி வீட்டுக்கே போய் மரியாதை நிமித்தமாக சந்திக்க வைத்தார்.

மோடி பிரதமரான பிறகு ரஜினியுடன் பலமுறை அரசியல் பேசிப் பார்த்துவிட்டார் அமித் ஷா. ஆனால் கடைசிவரை ரஜினி பிடிகொடுக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் பாஜகவில் சேருவது இயலாத காரியம், ரசிகர்களுக்கு அது உகந்ததாக இருக்காது என்பதையும் அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் லிங்கா படம் வெளியானது. படம் குறித்து நேர்மறையான கருத்து ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்மறைச் செய்திகள் வேகமாக பரப்பப்பட்டன. குறிப்பாக பாஜக ஆதரவு ஊடகங்கள் லிங்காவுக்கு எதிராக மிக மோசமான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இன்னொரு பக்கம், ரஜினியின் குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது போன்ற செயல்களும் தொடர்வதாக ரசிகர்கள் கவலைப்படுகிறார்கள். இந்த எக்ஸிம் வங்கி நோட்டீஸ் கூட அதில் ஒன்றுதான் என்பது இவர்கள் கருத்து.

காரணம் எக்ஸிம் வங்கி என்பது மற்ற வணிக வங்கிகள் போன்றதல்ல. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கியில் கோச்சடையானுக்காக ரூ 20 கோடி கடன் பெற்றுள்ளார் அதன் தயாரிப்பாளர் மீடியா ஒன் குளோபல் நிறுவனம். அதற்கு உத்தரவாதம் தந்துள்ளார் லதா ரஜினி. அந்தப் பணத்தை கடந்த ஜூலையில் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் செலுத்தவில்லை. வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்துவதாக வங்கி அதிகாரிகளிடம் உறுதி தந்துள்ளனர் மீடியா ஒன் தரப்பில்.

இந்த நிலையில், திடீரென்று லதா ரஜினியின் சொத்தை கையகப்படுத்துவதாக வங்கி அறிவித்திருக்கிறது. கடன் வாங்கிய மீடியா ஒன் நிறுவனத்துக்கே ஏராளமான சொத்துகள் உள்ளன. அவற்றை இந்த வங்கி கணக்கில் கொள்ளவில்லை. மாறாக உத்தரவாத கையெழுத்துப் போட்ட லதா ரஜினியின் நிலத்தைக் குறிவைத்திருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்கள் அரசியல் வட்டத்தில்.

இந்த சூழலில்தான், பாஜகவில் ரஜினி சேரப் போகிறார் என்ற வதந்தியும் கிளம்பியது. ரஜினிக்கு பெரும் தொகை கொடுக்க பாஜக பேசி வருகிறது. அவர் விரைவில் பாஜக தலைவராகிறார் என்றெல்லாம் அந்த வதந்தி பல்கிப் பெருக ஆரம்பிக்க, சமூக வலைத் தளங்களில் ரஜினி ரசிகர்கள் கவலையுடனும் கோபத்துடனும் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் ரஜினிக்கு நெருக்கமான சிலரிடம் நாம் விசாரித்ததில், “இந்த நிமிடம் வரை பாஜகவில் சேரும் நினைப்போ, அதுபற்றிய பேச்சு வார்த்தையோ கூட ரஜினிக்குப் பிடிக்கவில்லை” என்று உறுதியாகச் சொன்னார்கள். “அவர் எந்தக் காலத்திலும் பாஜக அல்லது வேறு கட்சிகளில் சேரமாட்டார். ஒரு பேச்சுக்குக் கூட அவர் யாரிடமும் இதை விவாதித்ததில்லை. ஒரு வேளை அவர் அரசியலுக்கு வருவதாகவே இருந்தாலும், அவர் தனியாகத்தான் வருவார். இதை அழுத்தமாக பதிவு செய்யுங்கள்,” என்றனர்.
3 thoughts on “கட்சியில் சேர ரஜினிக்கு நெருக்கடி தருகிறதா பாஜக? மீடியாவில் உலாவரும் பரபர ‘செய்திகள்’!!

 1. sharajinis

  தலைவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது ஒரு பக்கம் இருக்க நாம் அதாவது ரசிகர்கள் மற்றும் பொது மக்களில் சிலரும் வந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கிறோம் தலைவருக்கு யாரையும் பகைத்துக் கொள்ளும் என்னமோ புண்படுத்தி பேசும் பழக்கமோ இல்லாதவர் எனவே அவர் வேண்டும் என்றால் வாய்ஸ் கொடுக்கட்டும் இதற்கு அவர்கள் சம்மதித்தால் அதாவது ஒருமுறை ஒரே ஒரு முறை இந்தியாவின் ஜனாதிபதியாக அமரட்டும் அது போதும் நமக்கு பதவி வேண்டாம் பட்டங்கள் வேண்டாம் இந்த பதவிக்கு மேலும் ஒரு பதவி இல்லை நம் தலைவரை நாம் அமர வைத்து அழகு பார்க்க இது என்னுடைய தாழ்மையானக் விண்ணப்பம் பதவிக்காக வாய்ஸ் கொடுக்க வேண்டாம் ரசிகனின் மனசுக்காக படம் பண்ணும் நம் தலைவர் இதுவும் அவர் ரசிகன் விருப்பம் தான் இதையும் நிறைவேற்றுவார் என்று நம்புவோம் வினோ சார் இதை எப்படி தலைவர்கிட்ட சேர்க்கனுமோ சேர்த்திடுங்க ப்ளீஸ்

 2. குமரன்

  ///ஒரு வேளை அவர் அரசியலுக்கு வருவதாகவே இருந்தாலும், அவர் தனியாகத்தான் வருவார். இதை அழுத்தமாக பதிவு செய்யுங்கள்///

  சூப்பர் !

  மற்ற படி, இந்த செய்தி அப்பட்டமான வதந்தி என்றுதான் தோன்றுகிறது.

  //// தமிழகத்தில் இன்று வரை சவலைப் பிள்ளையாகவே காட்சி தரும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் படு தீவிரமாக உள்ளார் கட்சியின் தலைவர் அமித் ஷா.
  தமிழகத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள ரஜினிக்குதான் அவர் முதலில் வலை வீசினார். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடியை, ரஜினி வீட்டுக்கே போய் மரியாதை நிமித்தமாக சந்திக்க வைத்தார்.///

  அமித் ஷா கட்சித் தலைவரானது யாரும் எதிர்பார்க்காதது, ராஜ்நாத் சிங்கே கூட எதிர்பார்க்காதது!
  அமித் ஷா மோடி பிரதமரான பின்னர்தான் தலைவரானார். ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சரானதால் ஒருவர் இரு பதவிகள் வகிக்கக் கூடாது என்ற விதிப்படி ராஜ்நாத் தலைவர் பதவியில் இருந்து விலகியதால், அமித் ஷா தலைவர் ஆனார்.

  அப்படி இருக்க அவர் எப்படி தேர்தலுக்கு முன்னாள் ரஜினியை மோடி சந்திக்க காரணமாகவோ, ஏற்பாடு செய்தோ இருக்க முடியும், வதந்தி எந்த அளவுக்கு முன்னோக்கி அல்லது பின்னோக்கிச் செல்லும் என்பதற்கு இது உதாரணம்.

  ///காரணம் எக்ஸிம் வங்கி என்பது மற்ற வணிக வங்கிகள் போன்றதல்ல. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கியில்///

  ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜன் மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி பேச்சைக் கேட்கவில்லை என்பது பத்திரிகைகளில் ஆதார பூர்வமாக வெளிவந்துவிட்டது! அதிலும் குறிப்பாகக் கொள்கை அளவிலான முடிவுகளிலேயே கேட்பதில்லை, சமீபத்தில் வங்கி வட்டிவிகிதம் குறித்த ஜேட்லியின் முடிவை ராஜன் ஏற்கவும் இல்லை, செயபடுத்தியதும் அவரது முடிவை மட்டுமே.

  இப்படி இருக்க எக்ஸிம் வங்கி அமித் ஷா பேச்சைக் கேட்டு இப்படிச் செய்தது என்பது வதந்தி உண்மையைக் கருத்தில் கொள்வதில்லை என்பதை நிரூபிக்கிறது.

  எந்தச் சொத்தை sarfsaei act இன் படிப் பட்டியல் செய்வது என்பது வங்கியின் தனிப்பட்ட அதிகாரம், முடிவு. இது போல காரண்டி கொடுத்தவர்களின் சொத்தைப் பட்டியலிட்ட நிகழ்வுகள் முன்னரே ஆயிரக்கணக்கில் பல வங்கிகள் எடுத்ததுண்டு. இதுவும் விவரம் இல்லாமல் வெறுமனே வதந்தியைக் கிளப்புவோர் செயல்பாடே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *