BREAKING NEWS
Search

ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சாதி அடையாளத்துடன் அவமானப்​படுத்தும் அசிங்கம்..!

சாதி வெறிக்கு சாவு வந்து சேராதோ!

தமிழருவி மணியன்

casteism
ளவரசன் ஒரு தலித்தாகவும் திவ்யா ஒரு வன்னியப் பெண்ணாகவும் பிறக்க வேண்டும் என்று பல்லூழிக் காலம் தவமிருந்து இறைவனிடம் வரம் வாங்கியா இந்த மண்ணில் வந்து சேர்ந்தார்கள்? நம்முடைய தனிப்பட்ட இச்சையின்படியா ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சாதிச்சாயம் வாய்த்திருக்கிறது? உலகத்தின் எந்த நாட்டில் இந்த சாதி வெறி ஒவ்வொரு நாளும் நெருப்பாய்க் கனன்று ஊரை எரித்துக்கொண்டிருக்கிறது? ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சாதி அடையாளத்துடன் அவமானப்​படுத்தும் அசிங்கம், இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குத் தொடரப்போகிறது? விலங்குத் தன்மையில் இருந்து விடுபட்டு உயர் மாந்தராக மலர்ச்சியுறும் முயற்சி இறக்கும் வரை நம்மிடம் பிறக்கப்போவதில்லையா? ஆதிக்கமற்ற, சுரண்டலற்ற, மூடப் பழக்கங்களின் முடை நாற்றமற்ற சமூகம் எப்போதுதான் சாத்தியப்படும்?

‘உழைக்கும் மக்கள் அனைவரும் அசுத்த​மானவர்கள். அதனால், அவர்கள் தீண்டத் தகாத​வர்கள். வியர்வை அரும்பாமல், உடலில் அழுக்குப் படாமல் ஆதிக்கம்செய்து சுரண்டுபவர்களே சுத்தமானவர்கள்; அவர்களே வணங்கத்தக்கவர்கள்’ என்று மனுநீதி சொல்வதாக இன்றுவரை பேசிக்கொண்டிருக்கும் நாம், ஓர் அருவருப்பான உண்மையை இனம் காண வேண்டிய காலம் இது.

‘சாதி என்பது உழைப்பின் பிரிவினையைக் குறிக்கும் சொல் அன்று. அது உழைப்பவருக்கு இடையே உள்ள பிரிவினையைக் குறிக்கிறது’ என்று தெளிவாக விளக்கம் தந்தார் அண்ணல் அம்பேத்கர். இளவரசனும் திவ்யாவும் மனுக்குல மக்கள் இல்லை. அவர்கள் இருவருமே உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகள். இவர்களுடைய காதலுக்கு எதிராக வேதங்களும் ஆகமங்களும் ஆர்ப்பரிக்கவில்லை. ‘பிறப்பால் உன்னைவிட நான் உயர்ந்தவன்’ என்ற சாதித் திமிரே இளவரசனைச் சாய்த்து, ஒரு காதல் வாழ்வைத் தீய்த்துவிட்டது.

‘சாத்திரங் கண்டாய் சாதியின் உயிர்த்தலம்’ என்றான் பாரதி. பிறப்பின் அடிப்படையில் மனிதரை வேறுபடுத்தி ஏற்றத்தாழ்வுள்ள சமூகக் கட்டமைப்பை ஒரு மதம் நிலைநிறுத்தும் எனில், அந்த மதம் பேசும் கடவுள், பிரம்மம், ஆத்மா என்ற அனைத்தும் பொருளற்றுப் போய்விடும். அதனால்தான் சமயத்தைக் காக்க நினைத்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் சாத்திரத்தைப் போற்றவில்லை. சாதிகளை முற்றாக அவர்களால் வேரறுக்க முடியாமற் போனாலும், அவற்றை மையமாக்கி உயர்வு-தாழ்வு வேற்றுமைகளை உருவாக்கவில்லை.

998347_479957675432644_1426258688_n

மதுரகவி ஆழ்வார் பிறப்பால் பிராமணர். அவர் வேளாளர் குலத்தில் உதித்த நம்மாழ்வாரை ஞானாசிரியனாகப் பாவித்தார். பெருமானைப் பற்றிப் பாடாமல், நம்மாழ்வாரைப் புகழ்ந்து 11 பாசுரங்களைப் பாடினார். அவர் சாதி பார்க்க​வில்லை. லோகசாரங்கா என்ற பிராமண அர்ச்சகர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த திருப்பாணாழ்வாரைக் கல்லெறிந்து காயப்படுத்தியபோது, திருவரங்கக் கோயிலில் அறிதுயிலில் ஆழ்ந்திருந்த பெருமாளின் நெற்றியில் குருதி கொட்டியது. அர்ச்சகரின் கனவில் வந்த ஆண்டவன், திருப்பாணரைக் கருவறைக்குக் கொண்டுவரும்படி கட்டளை​யிட்டான். மறுநாள் காலை லோகசாரங்கா தாழ்த்தப்பட்ட திருப்பாணரைத் தோள் சுமந்து கோயில் கருவறைக்குள் கொண்டுசேர்த்தார். 1,100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிராமணர் தோள் சுமக்க, ஒரு தாழ்த்தப்பட்ட அடியார் ‘ஆலயப் பிரவேசம்’ செய்தார். இதைக் கற்பனைக் கதை என்று நாத்திகர் புறந்தள்ளினாலும், ஒரு சமூக சமத்துவத்துக்கான சமிக்ஞை இது என்பது உண்மை இல்லையா?

வேதங்களைக் கற்றுணர்ந்த வைதிகப் பிராமணர் ஞானசம்பந்தர் தாழ்த்தப்பட்ட சமூகம் சார்ந்த நீலகண்ட யாழ்ப்பாணரோடு கோயில் கோயிலாகச் சென்று பக்திப் பனுவல்களைப் பாடி மகிழ்ந்தார். மயிலாப்பூர் செட்டியார் சிவநேசர், தன் மகளை மணமுடிக்கும்படி ஞானசம்பந்தரை வேண்டியதும், ஆதி சைவராகிய சுந்தரர் பரத்தையர் சமூகத்தில் பிறந்த பரவை நாச்சியாரை மணந்ததும் கலப்புத் திருமணங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருப்பதை அறிவிக்கவில்லையா? ‘திருக்குலத்தார்’ என்று ராமானுஜர் தாழ்த்தப்பட்​டவர்களைத் தழுவிக் கொள்ளவில்லையா? பெரிய புராணத்தில் சேக்கிழார் ஐந்து முறை ‘ஐயரே’ என்று தாழ்த்தப்பட்டவர்களை வேதியர் மூலம் அழைக்கச் செய்து சாதி சமத்துவத்துக்குப் பாதையிடவில்லையா?

‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று தொடங்கும் சுந்தரர் அடுத்த வரியில், ‘திருநீலகண்டத்துக் குயவனார்க்கு அடியேன்’ என்று சாதி சமத்துவம் கொண்டாடவில்லையா?

‘மேலிருந்தும் மேலல்லவர் மேலல்லர்; கீழிருந்தும் கீழல்லவர் கீழல்லர்’ என்ற வள்ளுவரின் வழித்தடத்தில் நாம் என்றுதான் நடக்கவிருக்கிறோம்? உயர்வும் தாழ்வும் வந்தது பிறந்த சாதியினாலா? வாழும் வாழ்க்கை ஒழுக்கத்​தினாலா?
உயர்த்தப்பட்ட சாதி, இழைத்த அநீதிகள் போதும் என்று ஒதுங்கிக்கொண்டது. தாழ்த்தப்பட்ட சாதி உரிமையுணர்வுடன் இப்போதுதான் எழுந்து நிற்கிறது. இடைநிலைச் சாதிகளால்தான் இப்போது எல்லாப் பிரச்னைகளும் எழுப்பப்படுகிறது. இச்சாதிகளால்தான் பழநிலைச் சமுதாய அமைப்பில் அடிநிலையில் அழுந்திக் கிடக்கும் சாதிகளின் மீது தீண்டாமை திணிக்கப்படுகிறது; உழைப்பு சுரண்டப்படுகிறது.

சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதாரம், சமூக நிலைகளில் வளர்ச்சிக்கான அடித்தளங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்புடன் பராமரிக்கப்படுவதில் இந்த இடைநிலைச் சாதிகளுக்குச் சம்மதமில்லை. கிராமங்களில் மிகக் குறைந்த தலித் மக்கள் பொருளாதார நிலையில் மேம்பட்டிருப்பதையும், வாழ்க்கை வசதிகள் அவர்களுக்குக் கொஞ்சம் கூடியிருப்பதையும், நிலவுடைமையாளர்களாக அவர்கள் வளர்ந்திருப்பதையும் இடைநிலைச் சாதிகளால் சகிக்க முடியவில்லை. அதன் நேரடி விளைவுதான் காலனிகள் தீக்கிரையாவதும், காதல் திருமணங்கள் தடை செய்யப்படுவதும், இளவரசன் திவ்யா போன்றோரின் தனிப்பட்ட வாழ்வு நிர்மூலமாக்கப்படுவதும் என்ற ரகசியம் நமக்குப் புரிவது நல்லது.

சாதி அமைப்பை ஒழிக்காமல் சாதி முரண்பாடுகளை அழிக்க முடியாது. சாதி அமைப்புக்குச் சாவு வரவேண்டும் எனில் கலப்புத் திருமணங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும். ‘கலப்புத் திருமணமே சமுதாயத்தின் உண்மையான உயர்வுக்கு வழிவகுக்கும்’ என்றார் அம்பேத்கர். சாதி, மதம் கடந்து பெண்கள் மணம் புரிவதை, காதல் வாழ்க்கை வாழ விரும்புவதைச் ‘சாதித் தூய்மை’ காக்க விரும்பும் சக்திகள் ஒருபோதும் அனுமதிக்காது. இளவரசனைக் கைப்பிடித்தால் திவ்யாவின் சாதித் தூய்மை பழுதுபட்டுவிடும் என்பதுதானே அடிப்படைப் பிரச்னை. மேல் வருணத்தைச் சார்ந்தவன் கீழ் வருணத்தில் பிறந்த பெண்ணுடன் உறவுகொள்வது பாவம் இல்லை. அது ‘அனுலோமா உறவு’ என்று அங்கீகரிக்கப்படும். கீழ் வருணத்து ஆண் மேல் வருணப் பெண்ணுடன் மண உறவுகொள்வது ‘பிரதிலோமா உறவு’ என்று புறக்கணிக்கப்படும்.

‘அனுலோமா’ என்றால் இயற்கைக்கு இயைந்தது என்று பொருள். ‘பிரதிலோமா’ என்றால் இயற்கைக்குப் புறம்பானது என்று பொருள். இளவரசன் திவ்யாவை மணந்தது இயற்கைக்குப் புறம்பானது என்கிறது மனுநீதி. இப்போது மனுநீதியின் காவலர்கள், பிராமணர்கள் மட்டும் இல்லை. சூத்திரர்களில் ‘உயர்ந்த’ சூத்திரர்கள்தான், மனுவைப் பாதுகாக்கும் புத்திரர்களாகப் புறப்பட்டுவிட்டனர். சாதி மானம், குல கௌரவம் ஆகிய தவறான கற்பிதங்கள் இன்று இந்த நவீன பிராமணர்களைத்தான் அன்றாடம் அலைக்கழிக்கின்றன.

சாதி வேற்றுமைகளைத் தீயிட்டு எரிக்க முடியாவிட்டாலும், திரையிட்டு மறைப்பதற்காவது நம் மாநில அரசு சில உருப்படியான முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.Ilavarasan_1507692g

1. தீண்டாமைக் கொடுமைகளை எந்த வடிவத்திலும் அனுமதிக்கக் கூடாது.

2. தலித் பிள்ளைகளுக்கு என்று தனியே பள்ளிகள், தங்கும் விடுதிகள் இருக்கக் கூடாது.

3. நகர்ப்புறங்களில், கிராமங்களில் ஒதுக்குப்புறத்தில் தலித் மக்களுக்கு அரசு வீடுகட்டலாகாது.

4. எல்லாச் சாதிகளும் ஒன்றுசேர்ந்திருப்பதற்குத்தான் எந்தத் திட்டமும் வகுக்கப்பட வேண்டும்.

5. பள்ளியில் முதல் வகுப்பில் சேரும்போதே சாதியைக் குறிக்கக் கூடாது. இட ஒதுக்கீட்டுப் பயன்பெற விரும்புவோர் தொழிற்கல்வி தரும் கல்லூரிகளில் சேரும்போது மட்டும் விரும்பினால் சாதிப் பெயரைக் குறிப்பிடலாம்.

6. வேலை வாய்ப்பின்மையே கிராமங்களில் இளைஞர்கள் சாதி அமைப்புகளில் வீணாக நேரத்தைச் செலவிடத் தூண்டுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கு அரசு வழி காண வேண்டும்.

7. ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து மக்களையும் நேரடியாக அறிந்துவைத்திருக்கும் உள்ளூர் மனிதர்களையே அரசு நிர்வாகத்தில் நியமிக்க வேண்டும். அப்போதுதான் எளிதில் கலவரங்களின் பின்புலத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

8. காவல் துறையில் உள்ள புலனாய்வுத் துறை திறமையாகச் செயலாற்றி இருந்தால் தர்மபுரி, மரக்காணம் கலவரங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. இனியாவது அரசு விரைந்து புலனாய்வுத் துறையைச் சீரமைக்க வேண்டும்.

9. சாதிக் கலவரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வேகமாகத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

10. உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசுவதும் எழுதுவதும் சுவரொட்டிகள் அச்சிடுவதும் முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

மோசஸின் 10 கட்டளைகளைப் போன்று இந்த 10 பரிந்துரைகளில் அரசின் கவனமும் செயற்பாடும் அமைந்தால் நல்லது.

இளவரசனின் மரணம் சாதி வெறியர்களின் மனச்சான்றை ஓரளவாவது உலுக்கியிருக்கும் என்பது நிச்சயம். தான் நடத்தியது காதல் நாடகம் இல்லை என்பதை அந்த இளைஞர் தன்னுடைய மரணத்தின் மூலம் மருத்துவர் ராமதாசுக்கு அழுத்தமாக உணர்த்திவிட்டார். களங்கமற்ற காதல் கண்ணீரில்தான் முடிய வேண்டும் என்பது காலத்தின் கட்டளையாகக்கூட இருக்கலாம்.

காதல், சுகத்தையும் சோகத்தையும் சேர்த்துத் தரும் ஒரு ரசவாதம். இன்னொரு ஜீவனால் நினைக்கப்படுகிறோம் என்ற பெருமிதத்தில் எழும் சுகமும், அந்த ஜீவனை அடைய முடியாத வேதனையில் விளையும் சோகமும் காதலின் இரண்டு பக்கங்கள். திவ்யாவை இனி அடைய முடியாது என்ற நினைவே அவனுடைய உயிரைக் குடித்துவிட்டது.

உடற்பசியில் உருக்குலையும் காமுகர்களுக்கு இடையே இளவரசன் அரிதாய், அபூர்வமாய்ப் பூத்து உதிர்ந்த குறிஞ்சி மலர். அவனுடைய செயல் முட்டாள்தனம் என்று சிலர் சொல்லக் கூடும். ‘இருதயத்தின் கசப்பை இருதயமே அறியும்’ என்ற பைபிள் மொழியை அவர்கள் அறியாதவர்கள்.

சாதி வெறியர்கள் இன்னும் எத்தனை இளவரசன்களைத் தங்கள் பலிபீடத்தில் வெட்டுக்கொடுக்கக் கத்தியுடன் காத்திருக்கப்போகிறார்கள்? இன்னும் எத்தனை திவ்யாக்களின் நெஞ்சங்களில் நெருப்பிடத் துடிக்கிறார்கள்? ஒன்றை இரண்டாக்குவது அஞ்ஞானம். இரண்டை ஒன்றாக்குவதுதான் உயரிய ஞானம். மதம், சாதி, இனம், மொழி என்று மனிதர்களைப் பிரித்துவைக்க ஆயிரம் சக்திகள் உண்டு. இத்தனை சக்திகளையும் மீறி, மனித குலத்தை அன்பில் விளையும் மனிதநேயமே ஒன்றுபடுத்தும்.

இந்தியாவில் நிலவிவரும் சாதியமைப்புக் கட்டுமானம் தகர்ந்தாலன்றி ஆதிக்க உணர்வும் அடிமை வாழ்வும் சுரண்டல் சூழ்ச்சியும் அகலப்போவது இல்லை. இங்கே வர்க்க உணர்வு வளர்ந்து சமூக நீதிக்கான போராட்டமாகச் சரித்திரம் படைக்காமல், சாதியுணர்வு வெறியாக வளர்ந்து சமூக ஒற்றுமை சரிந்துவருகிறது.

‘வறுமை, அறியாமை, பின்னடைவு என்னும் பாலை நிலத்தில் இருந்து விடுபட்டு, வாழ்க்கைச் சுகங்கள் நிறைந்த சோலையில் வசிப்பவர்களுக்கும், அந்த சோலையை அடைய முடியாமல் பாலை நிலத்திலேயே பரிதவிப்பவர்களுக்கும் இடையில்தான் உண்மையான மோதல் நிகழ்கின்றது. சோலையில் கனிகள் மிகக் குறைவாகவே இருப்பதனால், அவற்றை வெளியில் உள்ளவர்களுடன் பங்கிட்டுக்கொள்வதற்கு உள்ளே இருப்பவர்கள் தயாராக இல்லை’ என்றார் நீதியரசர் சின்னப்பரெட்டி.

ஆனால், தமிழகத்தில் சோலையில் சுகிப்பவனுக்கும் பாலையில் பசியோடு பரிதவிப்பவனுக்கும் இடையில் இப்போது போராட்டம் இல்லை. பாலை மணலில் வெங்கொடுமைகளை அனுபவிக்கும் இரண்டு பிரிவுகளே சாதி அரிவாளைக் கையில் பிடித்தபடி ஒன்றை ஒன்று சாய்க்கத் துடிக்கிறது.
tamilaruvi-maniyan
”எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன்” என்று கண்ணன் கூறுவதாகப் பகவத் கீதை சொல்வதன் உட்பொருள் என்ன? ஒவ்வோர் உயிரிலும் ஆண்டவனைத் தரிசிக்கும் உள்ளம் அமைந்துவிட்டால், அதைவிடப் பெரிய ஞானம் வேறெதுவும் இல்லை. சக உயிர்களின் இன்பதுன்பங்களைத் தனது சொந்த இன்பதுன்பங்களாக ஏற்கும் இதயம் எல்லோருக்கும் வாய்த்துவிட்டால், அன்றே உலகம் அமைதி உலவும் ஆலயமாகிவிடும்.

பாரதி சொல்கிறான்… ‘பார்ப்பானும் கடவுளின் ரூபம்; பறையனும் கடவுளின் ரூபம்’. சாதி சமத்துவத்துக்கு இதைவிடச் சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது!

– நன்றி: விகடன்
2 thoughts on “ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சாதி அடையாளத்துடன் அவமானப்​படுத்தும் அசிங்கம்..!

 1. கடலூர் சித்தன்.ஆர்

  “ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும் விடுதலை! விடுதலை! விடுதலை!
  பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை! ”

  //”பாரதி சொல்கிறான்… ‘பார்ப்பானும் கடவுளின் ரூபம்; பறையனும் கடவுளின் ரூபம்’. சாதி சமத்துவத்துக்கு இதைவிடச் சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது!- – நன்றி: விகடன் “.//

  //1. தீண்டாமைக் கொடுமைகளை எந்த வடிவத்திலும் அனுமதிக்கக் கூடாது ??????.-தமிழருவி மணியன்//

  // ஆகஸ்டு முதல் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள ஜாதி – தீண்டாமை ஒழிப்புப் போராட் டமான, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட் டத்திற்கு இடையில், இன்னும் நான்கு நாட்களே உள்ளன;- திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி.//

  ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும் விடுதலை! விடுதலை! விடுதலை!
  பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை!

 2. கடலூர் சித்தன்.ஆர்

  “சாதி ஒழிந்ததா? இல்லவே இல்லை. ஒழியாததற்கு என்ன காரணம்? ”

  //‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’;
  ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’;
  ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’;
  ‘இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்’;
  ‘சாதிகள் இல்லையடி பாப்பா’;
  ‘ஒன்று எங்கள் சாதியே ஒன்று எங்கள் நீதியே’;
  ‘ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்’
  சங்க காலம் தொடங்கி இந்தக் காலம் வரை சாதியை எதிர்த்தும், மனிதகுல ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும் பாடாத புலவர்கள் இல்லை; பேசாத தலைவர்கள் இல்லை; சொல்லாத அறிஞர்கள் இல்லை. எத்தனை எத்தனையோ மகான்களும் சீர்திருத்தவாதிகளும் இந்த மண்ணில் தோன்றி சாதியை ஒழிக்கப் போராடிப் பார்த்தார்கள்.
  சாதி ஒழிந்ததா? இல்லவே இல்லை.
  ஒழியாததற்கு என்ன காரணம்? -ஆசிரியர்: டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் ; http://www.jihtn.org/?p=4345// நன்றி;

  ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும் ..சாதி ஒழிந்ததா? இல்லவே இல்லை. ஒழியாததற்கு என்ன காரணம்? ????
  உச்சநீதி மன்றமா??? பாராளுமன்றமா??? அரசியல் வியாதிகளா??? நமக்கு முறையாக வழிகாட்டாத மீடியாவா??? எல்லோரும் இந்நாட்டு மன்னர்களா??????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *