BREAKING NEWS
Search

இனம்… இந்த ஈனத்தனத்துக்கும் வக்காலத்து வாங்கிய சினிமாக்காரர்களை என்ன செய்வது!

இனம்… சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா!

Inam-tamil-movie

னம் என்ற ஈனத்தனமான படத்தை வெளியிட எப்படி இந்த லிங்குசாமி ஒப்புக் கொண்டார்?

இந்தக் கேள்விக்கு எனக்குக் கிடைத்த பதில், ‘சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா!’

காரணம், சினிமாக்காரர்களின் தமிழுணர்வும் இனவுணர்வும் அந்த லட்சணத்தில்தான் உள்ளது.

திடீரென ஒரு நாள் பொங்கி எழுந்து கறுப்புச் சட்டை, கறுப்பு பாட்ஜ் போட்டுக் கொண்டு சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்வார்கள்… அந்த நாளோடு அந்தப் பிரச்சினையை மறந்துவிட்டு, ராஜபக்சேவின் ஏதாவதொரு பினாமி நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சி அல்லது படத்தில் ஒப்பந்தமாகிவிடுவார்கள்.

எனக்குத் தெரிந்து இவர்களில் விதிவிலக்கு தலைவர் ரஜினிகாந்த் மட்டும்தான். ரஜினியின் ரசிகர் என்பதால் இதைச் சொல்லவில்லை. அவர் ஈழத் தமிழர்பால் காட்டும் அக்கறை, பரிவை நேரில் பார்த்திருக்கிறேன். தன் தமிழ் உணர்வை, தமிழர் போராட்டங்களுக்கான தன் ஆதரவை எந்த ஊடகத்திலும், கூட்டத்திலும் ரஜினி விளம்பரப்படுத்திக் கொண்டவரில்லை.. ஆனால் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் தொடர்பவர்!

அவர் நினைத்திருந்தால் எந்திரன் படத்தை கொழும்பு திரைப்பட விழாவில் போட்டிருக்கலாம். ஐஃபா விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கலாம். ராஜபக்சே அழைப்பை ஏற்று இலங்கை போயிக்கலாம். ம்ஹூம்… எடுத்த எடுப்பிலேயே இவை அனைத்தையும் மறுத்த மாமனிதர் ரஜினி ஒருவர்தான். ஒருவிதத்தில் கொழும்பு ஐஃபா விழாவுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவரே ரஜினிதான். அவர் அந்த விழா அழைப்பிதழைக் கூட வாங்க மறுத்ததால்தான், அத்தனை பேருக்கும் விழிப்பு தட்டியது!

மற்றபடி ஈழப் பிரச்சினையில் இந்த கோடம்பாக்கத்தில் எத்தனையோ பேர் இந்த நிமிஷம் வரை நடிகர்களாகவே இருக்கிறார்கள்!

ஈழத்தில் இறுதிப் போர் நாட்களில் தமிழ் மக்கள் ஆயிரம் ஆயிரமாக கொன்றொழிக்கப்பட்டனர். குண்டு வீசப்படாத பகுதி என அறிவித்து அங்கு தமிழ் மக்களை வரவழைத்துக் கொன்றது சிங்கள ராணுவம்.

மே 17-ம் தேதி மட்டும் கண்ணெதிரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை மிகக் கொடூரமாக கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். தடுக்க ஏதாவது செய்யுங்கள் உலக மக்களே, என உருக்கமாக வேண்டுகோள் வைத்து, தானும் அந்த இனப் படுகொலைக்கு பலியானார் ஒரு தமிழ் நிருபர்.

உலகில் தனக்கென விடுதலை, சுய அடையாளம், சுதந்திர நாடு கேட்ட எந்த இனமும் சந்திக்காத பேரவலத்தையும் இனப்படுகொலையையும் சந்தித்த ஒரே இனம் தமிழினம்தான்.

ஆறு மாதங்களில் தமிழ்ப் பகுதியில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக தமிழ் அமைப்புகள் கூறுகின்றன. 70 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர் என ஐநா அறிவித்துள்ளது. ஆனால் ராஜபக்சே அரசு 38000 பேர் என மொத்தமாகக் கணக்கு காட்டியது.

இந்த 38 ஆயிரம் கணக்கை உறுதிப்படுத்த ராஜபக்சேவின் அறிவிக்கப்படாத தூதராக நின்று ஒரு படத்தை இயக்கி, அதை லிங்குசாமியின் தலையில் கட்டியிருக்கிறார் சந்தோஷ் சிவன் என்பவர்.

மணிரத்னம், சந்தோஷ் சிவன் போன்றவர்களுக்கு ஈழம் என்பதும் அதன் மக்களும் வெறும் சப்ஜக்ட்.. கதை.. அதைத் தாண்டி உணர்வு ரீதியாக அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லை.

ஈழத்தில் நடக்கும் போர் ஒரு ஆயுத வியாபாரத்தில் தொடர்ச்சி என்ற புத்திஜீவி மணிரத்னம் (கன்னத்தில் முத்தமிட்டால்). ஈழப் போரை முடிந்தவரை கொச்சைப்படுத்திய படம் டெர்ரரிஸ்ட். அதை இயக்கியவர்தான் இந்த சந்தோஷ் சிவன். அந்த ஆசாமியிடமிருந்து வேறு எந்த மாதிரி படத்தை எதிர்ப்பார்க்க முடியும்?

தன்னை தமிழனாகவும், தமிழ் உணர்வாளனாகவும் காட்டிக் கொள்ளும் லிங்குசாமி எப்படி இந்த அரைவேக்காட்டுப் படத்தை வாங்கி வெளியிட ஒப்புக் கொண்டார்?

தமிழுக்கே தான்தான் அத்தாரிட்டி என்று பீற்றிக் கொள்ளும் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து எப்படி இந்தப் படத்துக்கு நற்சான்று வழங்கினார்?

சென்சார் சான்று வாங்கிய எந்தப் படத்தையும் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று இப்போது முழங்கும் வெண்ணை வெட்டி ஆர்கே செல்வமணி, டேம் 999, மெட்ராஸ் கபே படங்களைத் தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினாரே… அன்றைக்கு தெரியவில்லையா சென்சார் சான்றின் மகிமை!

இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் போன்றவர்கள் இனி ஈழப் பிரச்சினை குறித்து பேசக்கூட குறைந்தபட்ச தகுதியற்றவர்கள்.

இனம் படத்தைப் பார்த்த அத்தனை பேரும் அதன் அபத்தங்கள், உள் அரசியல், ராஜபக்சேவுக்கான சந்தோஷ் சிவனின் வக்காலத்து, விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசியல், பாலியல் ரீதியில் ஈழத் தமிழினத்தை இழிவுபடுத்தும் கேவலம்.. அத்தனையும் நிரம்பிய படம் இது என்பதை உணர்ந்து எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

ஆனால் சினிமாக்காரர்களுக்கு..?

வியாபாரம்தானே முக்கியம். எடுத்தவர் சந்தோஷ் சிவன். வெளியிட்டவர் லிங்குசாமி. இந்த இருவரின் நட்பு வலையம்தான் சினிமாக்காரர்களுக்கு முக்கியமாகப் பட்டதே தவிர, அந்தப் படம் துப்பிய விஷத்தின் வீர்யம் புரியவே இல்லை.

ஈழத்தில் இரண்டு தசாப்தங்களாக தமிழ் பெண்கள் சுமந்தது சிங்களவன் கருவை என்கின்றன இனம் காட்சிகள்..

தன்னை எந்த சிங்கள நாய் கெடுத்ததோ.. அவனையே தேடிப் போய் திருமணம் செய்து, வயிற்றில் வளரும் பிள்ளைக்கு இனிஷியல் கொடுக்கச் சொல்லும் காட்சிகள்…

போரில் மக்களுக்கு உடன்பாடே இல்லை.. புலிகளே வலிந்து திணித்தனர் என்கின்றன இன்னும் சில காட்சிகள்…

சிங்கள புத்த பிக்குகள் போல மனிதநேயம் கொண்டவன் யாருமில்லை என ஒரு காட்சி…

பாதிப்பு தமிழனுக்கு மட்டுமல்ல.. சிங்களவனும் இணையாக பாதிக்கப்பட்டான் என நிறுவ சில காட்சிகள்…

‘தலைவர்’ இறந்துவிட்டார் என்று சொல்ல, சம்பந்தமே இல்லாத ஒரு காட்சி அமைப்பு…

போராளிகள் யாரும் நல்ல சாப்பாடு சாப்பிட்டதில்லை… தலைமேல் எந்த வேளையிலும் குண்டு விழும் சூழலிலும் பிட்டு படம் பார்க்க அலைந்தவன் ஈழத் தமிழன்… சுற்றிலும் குண்டு மழை பொழியும் ஒரு நாளில் பால்ய விவாகம் முடித்து, முதலிரவுக்கு காத்திருக்கும் சிறுவர்கள்…

தமிழர்களைக் காக்க சிங்கள ராணுவத்தினர் பெரும்பாடு பட்டதாக ஒரு மிகைப் புனைவு…

பேசாம கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நிதியுதவி – ராஜபக்சே அல்லது நமல் ராஜபக்சேன்னு டைட்டில் கார்ட் போட்டிருந்தா ‘ஃபினிஷிங் டச்’ கச்சிதமா இருந்திருக்கும்!

-விதுரன்
என்வழி ஸ்பெஷல்
15 thoughts on “இனம்… இந்த ஈனத்தனத்துக்கும் வக்காலத்து வாங்கிய சினிமாக்காரர்களை என்ன செய்வது!

 1. sathya

  உண்மையான நட்டு பற்றோ தமிழ் மற்றும் தமிழரின் மேல் பற்றோ இருந்தால் லஞ்சம் வாங்காமல் கொடுக்காமல் மிகவும் நேர்மையாக தனது காரியங்களையும் கடமைகளையும் செய்ய வேண்டும். அதை தவிர்த்து ஒரு படமோ அல்லது புத்தகமோ அந்த படைப்பாளியின் எண்ணங்களை பிரதிபலிக்கும்போது ஆதரிக்காவிட்டாலும் அமைதியாக அனுமதிக்க வேண்டும், மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. எல்லா வித படைப்பைகளிலும் தீமை மற்றும் நல்ல விஷயங்கள் உள்ளன, மக்கள் அதை புரிந்து செயல்படுவார்கள். ஒரு சிலர் தனது சுய நலத்திற்காக இத்தகைய நாடகங்கள் அவ்வபோது நடத்தி விட்டு மௌனம் காப்பர். ஒரு சரியான பொது கழிப்பிடம் கிடையாது ஒரு சாதாரண குடிமகன் அன்றாடம் எவ்வளவு பிரச்சினைகளை, சந்திக்கிறான், அதற்க்கு குரல் கொடுக்க வேண்டும், சமுதாய சீர்திருத்தங்கள் நிறைந்த படங்களால் என்ன மாற்றம் நிகழ்த்த முடிந்தது? அந்த படைப்பளிகல்தான் பணம் சேர்த்தார்கள் மக்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றனர்.

 2. chozhan

  இந்த பதிவுக்காக நன்றி, வினோ i am saluting for this statement. thanks

 3. குமரன்

  உணர்வே இல்லை என்றாலும், உண்மை எங்கே என்று பார்க்க வேண்டாமா?

  90000 புதிய விதவைகள் இருக்கிறார்கள் என்று கணக்கு நிரூபணம் ஆகி இருக்கிறது. அப்படியானால், குறைந்த பட்சம் 90000 திருமணமான ஆண்கள் இறந்திருக்கிறார்கள் என்பதுதானே சரியாக இருக்க முடியும். இது தவிர திருமணமாகாத ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று லட்சக் கணக்கில் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தும் சிங்கள அரசும், அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட ஏனைய பாரபட்ச அரசுகளும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள்.

  இந்தப் படத்தை திரை அரங்குகளில் இருந்து விலக்கிக் கொள்வதாக இப்போதுதான் அறிவித்திடுக்கிறார் லிங்குசாமி.

  வெளியிட்டதே தப்பு. எல்லாம், பணமயம். பிணத்தின் மீதிருக்கும் ஒரு ரூபாயையும் விடாத அளவுக்கு ஆசை.

 4. மிஸ்டர் பாவலன்

  //இந்தப் படத்தை திரை அரங்குகளில் இருந்து விலக்கிக் கொள்வதாக இப்போதுதான் அறிவித்திடுக்கிறார் லிங்குசாமி.//

  //வெளியிட்டதே தப்பு. எல்லாம், பணமயம். பிணத்தின் மீதிருக்கும் ஒரு ரூபாயையும் விடாத அளவுக்கு ஆசை.// (குமரன்)

  புரட்சித் தமிழன், சீமான்.. இவர்கள் மௌனம் காத்தது குறிப்பிடத் தக்கது.

  உலக நாயகன் கமல் அவர்களும் லிங்குசாமி படத்தில் நடிப்பதாலோ,
  என்னமோ, இனம் படம் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. At least,
  இந்தப் படம் வாங்கி, வெளியிட வேண்டாம் என லிங்குசாமியிடம்
  அவர் கேட்டுக் கொண்டிருக்கலாம்…

  -== மிஸ்டர் பாவலன் =-

 5. பரமசிவம்

  மிக நன்றான பதிவு. நம்மை கொச்சைப் படுத்த யாரும் வர வேண்டாம். நமது மக்களே போதும். இந்த எதிர்ப்பை பார்த்த பின்னாவது,இனி யாரும் இப்படி முயற்சிக்க வேண்டாம்.

 6. யாரோ

  //மிஸ்டர் பாவலன் அவர்களே கமல் தன் படத்திற்கு பிரச்சனை வந்தால் சீறுவார் அழுவார் நாட்டை விட்டு போவேன் சொல்லுவார். பிறருக்கு வந்தால் அவர் பெரும்பாலும் கவலை படுவதில்லை. அதான் கமல் :-(//

  அதானே பார்த்தேன், என்னடா சம்பந்தமே இல்லைனாலும் எப்படியாவது கமலை உள்ளே இழுத்து திட்டனுமே, இன்னும் யாரும் திட்டலயேன்னு பார்த்தேன். செஞ்சுட்டீங்க!

  — யாரோ

 7. மிஸ்டர் பாவலன்

  அஞ்சான் படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் என ஒரு
  இணைய தளத்தில் படித்தேன். லிங்கு சாமி இவரை உடனே
  மாற்றி விடுவது நல்லது. இல்லை என்றால் அஞ்சான்,
  உலக நாயகனின் “உத்தம வில்லன்” படங்கள் வெளிவருவதில்
  குழப்பம் நேரிடலாம். நன்றி!

  -===== மிஸ்டர் பாவலன் ====-

 8. மிஸ்டர் பாவலன்

  //அழுவார் நாட்டை விட்டு போவேன் சொல்லுவார். பிறருக்கு வந்தால் அவர் பெரும்பாலும் கவலை படுவதில்லை.// (யாரோ)

  யாரோ சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம்
  என்பதால் இதை நான் விட்டு விடுகிறேன்! நன்றி 🙂

  -== மிஸ்டர் பாவலன் ==-

 9. யாரோ

  பாவலன் அவர்களே, எதை சொல்வதாயினும் அதை யாரோ ஒருவர் தான் சொல்லுகிறார். எனவே, யாரோவராயினும் அவரும் முக்கியமே!

  — யாரோ

 10. மிஸ்டர் பாவலன்

  யாரோ ஒருவர் சொன்னாலும் சொன்னவர் முக்கியம் அல்ல,
  சொன்னவை தான் முக்கியம் என நண்பர் யாரோ சொன்னதை
  நான் இப்போது யாரோ சொன்னதாக எண்ணாமல் ஒரு நண்பர்
  சொன்னதாகவே எடுத்துக் கொண்டு அதை யாரோ சொன்னதாக
  முன்னர் குறிப்பிட்டதற்கு வருத்தம் கொள்ளும் வேளையில்
  ராஜேஷ் என்ற ஒருவர் சொன்னதை யாரோ சொன்னதாக கூறி
  அதற்கு பதில் மறுத்த நிலையில் அந்த யாரோ என்பவர் யாரோ
  அல்ல, நமது நண்பர் தான், என்ற போதிலும் ராஜேஷ் என்பவர்
  என்ன சொன்னார் என்பது மறந்து விட்டதால் அதை யாரோ ஒருவர்,
  அல்லது யாரோ நண்பர், இவர்களில் யாராவது சொன்ன கருத்தை
  சொன்னால் அதற்கு உடன் பதில் தருவதற்கு பாவலன் தயாராக
  இருக்கிறேன் என்றும், உலக நாயகன் பற்றிய எனது கருத்துக்கள்
  வளரும் என்றும் சொல்லி, கோச்சடையான் படத்தை மே மாதம்
  ரசிகர்களுடன் திரையால் காண ஆவலாக இருக்கிறேன் என்று சொல்லி
  இந்த சிறிய பதிலிற்கு ஒரு சிறிய இடைவேளை விடுக்கிறேன். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *