BREAKING NEWS
Search

மமதாவின் அரைவேக்காட்டு அரசியல் விளையாட்டில் சிக்கிக் கொண்ட அப்துல் கலாம்!

மமதாவின் அரைவேக்காட்டு அரசியல் விளையாட்டில் சிக்கிக் கொண்ட அப்துல் கலாம்!


முன்பெல்லாம் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும். அப்படியா? என்று கேட்டு நிமிர்வதற்குள், யாரோ ஒரு ரிட்டயர்ட் அரசியல் தலைவர் சத்தமின்றி அந்த நாற்காலியில் உட்கார்ந்திருப்பார்!

அதனாலேயே, இந்தப் பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்ப்தான் என மக்கள் மனதில் ஆழப் பதிந்துபோனது.

நினைவு தெரிந்து, முதல் முறையாக இப்போதுதான் குடியரசுத் தலைவர் தேர்தல் இத்தனைப் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது. இந்தப் பதவியில் அமர்பவர், உலகத்துக்கான இந்தியாவின் முகம் என்ற உணர்வு ஓரளவு நன்கு உணரப்பட்டுள்ளது. முன்பெல்லாம், ராஷ்ட்ரபதி பவனுக்கு யார் வந்தால் நமக்கென்ன? என்றிருந்த மனநிலை மாறி, இன்னார் வந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் மேலோங்கியிருப்பதற்கு காரணம் இதுவே!

அரசியல் சாசனப்படி பெரும் அதிகாரமிருந்தும், நடை முறையில் அதை செயல்படுத்த முடியாத குடியரசுத் தலைவருக்கு, இந்த சூழல் புதிய அந்தஸ்தைக் கொடுத்திருப்பது உண்மைதான்.

பிரதிபா பாட்டீல் ராஷ்ட்ரபதி பவனைவிட்டுப் போகப் போகிறார் என்று செய்தி வெளியானதுமே பெரும்பாலானோர் அடித்த கமெண்ட்: ‘சீக்கிரம் போகச் சொல்லுங்க!’ அந்த அளவு ‘உத்தமமான’ குடியரசுத் தலைவராக அந்த மாளிகையை ‘அலங்கரித்த பெருமை’ அவர் ஒருவருக்குத்தான் உண்டு!

பிரதிபாவுக்குப் பின் புதிய குடியரசுத் தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தவுடன், மீடியா முன் வைத்த இரு பெயர்கள் பிரணாப் முகர்ஜி மற்றும் அப்துல் கலாம்.

இவர்களில் அப்துல் கலாமுக்கு சின்னச் சின்ன அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், தேர்தலைத் தீர்மானிக்கும் பலம் வாய்ந்த எந்தக் கட்சியும் அவர் ஜனாதிபதியாவதை விரும்பவில்லை என்பதுதான் உண்மை!

அதற்கு பல்வேறு காரணங்கள்… ஆனால் அரசியல் ரீதியான காரணம் ஒன்றுதான்… ‘நமக்கென்று ஒரு வேட்பாளர் இருக்கும்போது, அரசியலோ நிர்வாகமோ தெரியாத இவரை எதற்காக பொது வேட்பாளராக ஏற்க வேண்டும்… அதில் நமக்கென்ன பலனிருக்கப் போகிறது?’ என்ற கட்சிகளின் நினைப்புதான்.

காங்கிரஸ் கட்சி அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்ற பொதுவான எதிர்ப்பார்ப்பில் இம்மியளவும் நியாயமில்லை என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

காரணம், கலாம் ஒரு நல்ல மனிதர், குழந்தைகளின் ஆதர்ச நாயகன், ஏவுகணை ஹீரோ என்ற பிம்பங்களுக்கு அப்பால், காங்கிரஸ் மற்றும் அதன் தலைமையின் எதிர்ப்பாளராகவே இருந்து வருகிறார். இந்த எதிர்ப்பை அவர் வெளிப்படையாகக் காட்டவில்லையே தவிர, வேறு விதங்களில் முடிந்தவரைக் காட்டியுள்ளார்.

சோனியா பிரமதராவதைத் தடுத்தவர் என பாஜகவினர் இவரைக் கொண்டாடுவது ஒரு சின்ன சாம்பிள்தான். ஆனால் இவர் ராஷ்ட்ரபதி பவனில் இருந்த காலத்தில், காங்கிரஸ் அரசின் பல முடிவுகளை அத்தனை சுலபத்தில் ஏற்கவில்லை. ‘தன்னை ஜனாதிபதியாக்கிய பாஜகவுக்கு விசுவாசமாக இருக்கும் கலாமிடம் போய் ஒரு விஷயம் குறித்து பேசுவதையே தவிர்த்துவிட்டால் என்ன?’ எனும் அளவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசுக்கு தயக்கம் இருந்தது.

ஜனாதிபதி – பிரதமர், ஆளுநர் – முதல்வர் ஆகியோருக்கிடையிலான உறவு நிலை சுமூகமாக இருப்பது மிக அவசியம். அப்துல்கலாம் – காங்கிரஸ் அரசுக்கிடையில் இருந்த உரசல் வெளியில் பார்க்க சுவாரஸ்யமாக இருந்ததே தவிர, ஆட்சியை சுமூகமாக நடத்த உதவவில்லையே!

முன்பு தமிழக கவர்னராக இருந்த சென்னா ரெட்டியும் முதல்வர் ஜெயலலிதாவும் மோதிக் கொண்டது சரித்திரம் அறிந்தது. ஒரு கீரி – பாம்பு சண்டை பொழுதுபோக்காக மட்டும்தான் அது இருந்ததே தவிர, மாநில அரசுக்கோ மக்களுக்கோ அதனால் பைசா பிரயோசனம் இருந்ததா?

ஆக, காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் தங்களுக்குள் ஒரு தவறான எதிர்ப்பார்ப்பை வைத்துக் கொண்டு, அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேறாத கோபத்தில் காங்கிரஸையும் அதன் தலைமையையும் திட்டிக் கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனமாகவே தெரிகிறது.

அப்துல் கலாம் திறமையான ஏவுகணை விஞ்ஞானி. நேர்மையான மனிதர். மாணவர்களை பெரிய பெரிய கனவுகளாகக் காணச் சொன்னவர். ஆனால் எந்த தேசிய, மக்கள் பிரச்சினையிலும் தன் கருத்து இன்னதுதான் என இதுவரை அவர் தெளிவாக அல்லது வெளிப்படையாகச் சொன்னதில்லை. எதற்கு பிரச்சினை? என்ற அவரது மனோபாவமும் இதற்கு காரணமாக இருக்கலாம்…

இருக்கட்டும்… அப்துல் கலாமின் நேர்மைக்கும் திறமைக்கும் மதிப்பளிக்கும் வகையில் ஏற்கெனவே குடியரசுத் தலைவராக்கிப் பார்த்துவிட்டது வாஜ்பாய் அரசு. அன்று சூழ்நிலை சாதகமாக இருந்தது. தன்னை குடியரசுத் தலைவராக்குங்கள் என்று கலாம் கேட்காமலேயே, தங்களின் ஒருமித்த வேட்பாளர் என ஆளும் கட்சியும், அதற்கு ஒத்திசைவான கட்சிகளும் அவர் பெயரை அறிவித்தன. கலாம் குடியரசுத் தலைவராக வர முடிந்தது.

ஆனால் இன்றைய சூழல் வேறாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் முக்கிய கூட்டாளிக் கட்சிகளுக்கும் அப்துல் கலாமை வேட்பாளராக்கும் ஐடியா ஆரம்பத்திலிருந்தே இல்லை. பாஜகவுக்கும் கூட அந்த எண்ணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக், ட்விட்டர் மற்றும் மீடியாவில் எழுந்த ஒரு ஆதரவான நிலையை நம்பி, இந்த முறையும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல் கலாமை நிறுத்தலாம் என ஆரம்பகட்டத்தில் சொல்லப்பட்டது. ஆனால் நடைமுறையில் அதற்கான சாத்தியங்கள் இல்லாத நிலையில், அந்த மனிதரை அமைதியாக விட்டுவிட்டிருக்கலாம்!

அல்லது, அவராவது இதைப் புரிந்து அமைதியாக ஒதுங்கிவிட்டிருக்கலாம்.

ஆனால் மமதா பானர்ஜி போன்ற அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் செய்த வேலையால், இந்தியாவின் அனைத்து மக்களாலும் விரும்பப்படுபவர் என்ற பெயரைச் சம்பாதித்த கலாம், இன்று கேலிக்குரியவராக அல்லது பரிதாபத்துக்குரியவார பார்க்கப்படுகிறார்!

கலாம் மீது மமதாவுக்கு வந்த திடீர் மரியாதை, அக்கறைக்கு காரணம், பக்கா அரசியல்… பக்குவமற்ற அரசியல்!

எதிலும் தான் சொன்னதே இறுதியாக இருக்க வேண்டும் என்ற மமதையும் அகங்காரமும் ஜெயலலிதா ஒருவருக்கே சொந்தமாக இருக்க வேண்டுமா என்ன… மமதா அந்த விஷயத்தில் ஒன்றரை மடங்கு ஜெ எனலாம்!

இவர் இருப்பதோ காங்கிரஸ் கூட்டணியில். இவரது எம்பிக்களை நம்பித்தான் அரசு என்ற நிலை ஒன்றும் இல்லை. கூட்டணியில் சற்று பெரிய கட்சி, அவ்வளவுதான். அதற்காக இவர் மத்திய அரசைப் படுத்தும் பாடு இருக்கிறதே…

 

மமதா செய்தால் சரி… கருணாநிதி செய்தால் தவறா?

தன் மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி எந்தக் காரணத்தைக் கொண்டும் நாட்டின் முதல் குடிமகனாக வரக்கூடாது என்பதுதான் மமதாவின் அல்டிமேட் இலக்காக இருந்தது.

தமிழரான கலாமை ஜனாதிபதியாக்க கருணாநிதி முன்வரவில்லையே என புலம்புபவர்கள், வங்காளியான பிரணாபை முதல் குடிமகனாக்க பெரும் முட்டுக்கட்டையாக இன்னொரு வங்காளி மமதா நிற்பது பற்றி கிஞ்சித்தும் பேச மறுப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை!

அட அவ்வளவு ஏன்… தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா என்ன அப்துல் கலாமையா பரிந்துரைக்கிறார்… கலாம் ஜனாதிபதியாவதை அவரும்தானே எதிர்க்கிறார்? சொந்தக் கட்சிக்காரர்களிடமே ஆதரவில்லாத சங்மாதானே ஜெயாவின் வேட்பாளர்? பிறகு ஏன் கருணாநிதியை குறை கூற வேண்டும்! கூட்டணி தர்மத்தை அவர் சரியாகத்தானே கடைப்பிடிக்கிறார்!

 

குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர் பற்றி ஆலோசனை செய்ய மமதாவை சோனியா அழைத்தபோது, வேண்டுமென்றே, இப்போது பிரதமராக  உள்ள மன்மோகன் சிங்கை பரிந்துரைத்தார் மமதா. கூடவே அப்துல் கலாம் பெயரையும் முன்வைத்தார். இந்த இருவரையும் வேட்பாளராக காங்கிரஸ் ஏற்காது என மமதாவுக்கு தெரியாதா என்ன?

எதிர்ப்பார்த்த மாதிரியே காங்கிரஸ் கலாமை ஏற்கவில்லை என்றதும், தனது முரட்டுத்தனத்தை காட்ட ஆரம்பித்தார். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ… கூட்டணியின் தலைவர் சோனியா காந்திதான். அவரைத்தான் Chairperson of UPA என சர்வ அதிகாரமிக்க பதவி கொடுத்து அமர்த்தியிருக்கிறார்கள் ஆளும் கூட்டணிக் கட்சியினர். ஆனால் தலைமையின் சொல்லுக்கு இம்மியளவு கூட கட்டுப்படவில்லை மமதா. அதுமட்டுமல்ல… மூடிய அறைக்குள் பேசியதை வேண்டுமென்றே அம்பலப்படுத்தினார்.

இவரைப் போன்ற கூட்டணி தலைவர்களிடம் ஆலோசனை கேட்கக் கூப்பிட்டால், நான் சொல்பவரைத்தான் நீங்கள் ஜனாதிபதியாக்க வேண்டும் என மூர்க்கம் காட்டுவதா கூட்டணிக் கட்சிக்கு அழகு?

சோனியா தன் பேச்சைக் கேட்கப் போவதில்லை என்பது தெரிந்ததும், எங்கள் வேட்பாளர் கலாம்தான் என்றும், முடிந்தால் என்னைக் கூட்டணியிலிருந்து விலக்கிப் பாருங்கள் என்றெல்லாம் வாய்ச்சவடால் விட்டார். முலாயம் சிங் தன்னை ஆதரிப்பதாக அவர் நினைப்பு.

ஆனால் ஒரு நாள் மாலைக்குள் மொத்த சூழலும் மாறிப் போனது. பிரணாப் முகர்ஜிதான் வேட்பாளர் என சோனியா அறிவிக்க, அதனை முதலில் ஆதரித்து, வாழ்த்தும் சொன்னவர் முலாயம் சிங் யாதவ்தான்!

ஆதரவுக் கட்சிகளை விடுங்கள்… உங்கள் ஓட்டு சங்மாவுக்கே என பெரிதாய் பிரச்சாரத்தை ஆரம்பித்த ஜெயலலிதாவைக் கூட கண்டு கொள்ளாமல், பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கத் தயாராகிவிட்டது பாரதிய ஜனதா கட்சி. சங்மாவின் கட்சித் தலைமையே அவரை நிற்க வேண்டாம் எனக் கூறி, பிரணாபுக்கு ஆதரவளித்திருக்கிறது.

தகுதியோ பலமோ இல்லாவிட்டாலும், தான் ஒரு கிங் மேக்கர் என காட்டிக் கொள்ள முயன்று, குப்புற விழுந்து மூக்குடைபட்டு நிற்கும் சூழல் மமதாவுக்கு. இப்போது பேஸ்புக் மூலம் ஆதரவு திரட்டுகிறாராம் அப்துல் கலாமுக்கு. பேஸ்புக் பயனாளர்களா வாக்களிக்கப் போகிறார்கள்? அல்லது பேஸ்புக் பிரச்சாரத்தைக் கண்டு மிரண்டு போய், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கலாமுக்கு எம்பிக்களும் எம்எல்ஏக்களும் வாக்களிக்க வரிசை கட்டி நிற்பார்கள் என்ற எண்ணமா மமதாவுக்கு? இவருக்கு முன்பே பேஸ்புக்கில் கொடிகட்டிப் பறப்பவர்தானே கலாம். இப்படி ஆதரவு கேட்க அவருக்குத் தெரியாதா என்ன?!

தன் மதிப்பை தக்க வைத்துக் கொள்ள கொஞ்சமாவது கலாமுக்கு விருப்பமிருந்தால், தன்னை மையப்படுத்தி நடக்கும் இந்த அற்ப அரசியல் விளையாட்டுகளை அவர் அனுமதிக்கவே கூடாது.

ஒருமனதான ஆதரவில்லாத நிலையில், மீண்டும் நாட்டின் குடியரசுத் தலைவராவதை தான் விரும்பவில்லை என அறிவித்துவிட்டு, குழந்தைகள் – மாணவர்களுடனான தனது பயணத்தை அவர் தொடரலாம்!

-டாக்டர் எஸ் ஷங்கர்
என்வழி ஸ்பெஷல்
30 thoughts on “மமதாவின் அரைவேக்காட்டு அரசியல் விளையாட்டில் சிக்கிக் கொண்ட அப்துல் கலாம்!

 1. குமரன்

  ஒருமுறை குடியரசுத் தலைவராக இருந்தவர் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆனதாக நமது வரலாற்றில் இல்லை. அதனைக் கவனத்தில் கொண்டு கலாம் இந்த விவகாரங்களில் இருந்து விலகி இருப்பதுதான் கவுரவம்.

  ஆனால் கருணாநிதி கலாம் என்றால் கலகம் என்று சொன்னது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. விஷம் கலந்த விஷமனானது. நல்ல வேலை மம்தா அப்பாடி எதுவும் பிரணாப் பற்றி அவரது பெயரை வைத்து வார்த்தை விளையாட்டு ஆடவில்லை.

 2. தினகர்

  ”ஒருமனதான ஆதரவில்லாத நிலையில், மீண்டும் நாட்டின் குடியரசுத் தலைவராவதை தான் விரும்பவில்லை என அறிவித்துவிட்டு, குழந்தைகள் – மாணவர்களுடனான தனது பயணத்தை அவர் தொடரலாம்! ‘’

  அது தான் கலாம் போன்ற பெரிய மனிதர்களுக்கு அழகு..

 3. வெங்கடேஷ், மதுரை

  //தமிழரான கலாமை ஜனாதிபதியாக்க கருணாநிதி முன்வரவில்லையே என புலம்புபவர்கள், வங்காளியான பிரணாபை முதல் குடிமகனாக்க பெரும் முட்டுக்கட்டையாக இன்னொரு வங்காளி மமதா நிற்பது பற்றி கிஞ்சித்தும் பேச மறுப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை!//

  -இங்கே கருணாநிதியைத் திட்டும் ஒருவராவது இதற்கு பதில் சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு மமதாவைத் தெரிந்தது அவ்வளவுதான்.

  கலாமை கலகம் என கருணாநிதி வர்ணித்த விதம் தவறுதான். ஆனால், அவர் அந்த வார்த்தையை பயன்படுத்திய சூழல் சரியானதுதானே. கலகம் விளைவிக்கப் பார்க்கும் மமதாவுக்கு கலாம் ஏன் துணை நிற்க வேண்டும்?

 4. பாவலன்

  குமரன் சொன்னது போல் விஞ்ஞானி கலாம் அவருக்கு இருக்கும்
  உயர்ந்த பெயரைத் தக்க வைத்துக் கொள்ள போட்டியில் இருந்து
  ஆரம்பத்தில் இருந்தே விலகி விடுவது சாலச் சிறந்தது. “பிரனாபிற்கு
  போட்டியிட ஒரு நபர் வேண்டும், அவர் தோற்றாலும் பரவாயில்லை”
  என்ற NDA விளையாட்டிற்கு கலாம் ஏற்றவர் அல்ல. வெற்றிபெறும்
  அளவிற்கு கலாமிற்கு % இல்லை என்பது தான் இன்றைய நிலை.

  //ஆனால் கருணாநிதி கலாம் என்றால் கலகம் என்று சொன்னது மிகவும்
  சிறுபிள்ளைத்தனமானது. விஷம் கலந்த விஷமனானது. // (குமரன்)

  புதுக்கோட்டையில் தே.மு.தி.க. பெற்ற வாக்குகள், டெபாசிட்டை
  தக்கவைத்துக் கொண்டது, அந்தக் கட்சியின் வளர்ச்சி, இவை தி.மு.க.
  தொண்டர்களை சற்று கவலையில் ஆழ்த்தி உள்ள நிலையில்,
  ராஜா பழையபடி தி.மு.க.-வில் பெற்று வரும் செல்வாக்கு, 2G வழக்கின்
  அடுத்த கட்டங்கள், கலைஞரின் கேள்வி-பதில் அறிக்கைகள், புலம்பல்கள்,
  கலாமை ‘கலகம்’ என்றது, தி.மு.க. கட்சிக்கு ‘இறங்கு முகம்’ கொடுத்து
  விடும் அபாயம் இருக்கிறது. ‘உயிருடன் இருந்தால் அடுத்த உட்கட்சி
  தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன்’ என கலைஞர்
  சொன்னதாக Headlines-ல் படித்தேன். (ஒரு அரசியல் சாணக்கியர் தான்!)

  இப்போதைக்கு கலைஞர்க்கு ஓய்வெடுக்கும் ப்ளான் எதுவும்
  இல்லை என்பது ஸ்டாலின் போன்றவர்களுக்கும் கவலை அளிக்கலாம்!

  -பாவலன்

 5. தேவராஜன்

  கலாம் என்றால் கலகம் என்று கருணாநிதி கூறியதை வைத்து, முஸ்லிம்கள் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதை அப்படியே திமுக மற்றும் கருணாநிதிக்கு எதிராகத் திருப்பும் முயற்சியும் நடக்கிறது.

  கருணாநிதி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?

  எந்த ஆதரவும், பின்புலமும், அரசியல் செல்வாக்கும் இல்லாத கலாம், தனக்கு ஒரு மித்த ஆதரவு இல்லை என்பது தெரிந்தும், பிரசிடென்ட் போஸ்டைப் பெற முயற்சிப்பதால், ஏற்பட்டுள்ள தேவையற்ற குழப்பங்களைக் குறிப்பிடத்தான் கருணாநிதி இந்த சொல்லைப் பயன்படுத்தியுள்ளாரே தவிர, கலாம் என்ற வார்த்தைக்கு அகராதி ரீதியான அர்த்தத்தைச் சொல்ல அல்ல.

  தமிழில் கலாம் என்றால் கலகம் என்றுதானே அர்த்தம். க்ரியா தமிழ் அகராதி மற்றும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அகராதிகளில் கலகம் (கலாம்) – சண்டை, சச்சரவு என்றுதானே அர்த்தம் தந்துள்ளனர்.

  கலகம் என்ற சொல்லியில் ‘க’ மயங்கி, கலாம் என்று இலக்கியங்களில் கையாளப்படுவது உண்மைதானே..

  மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்றல்லவா ஆகிவிட்டது.

  கலாம் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள ஆரம்பத்திலேயே ஒதுங்கியிருந்திருக்கலாம். ஒரு சராசரி அரசியல்வாதியாகி, நமக்கு மீண்டும் அந்தப் பதவி கிடைத்தால் நன்றாக இருக்குமே என்றுதானே நினைத்துவிட்டார். அப்படியே இவர் பிரசிடென்டாக இருந்த காலத்தில் ஏதாவது நல்லது நடந்ததா, அதுபற்றி யாராவது ஏதேனும் கூற முடியுமா?

  இவர் பிரசிடென்டாக இருந்த காலத்தில் செய்த பயணங்கள் அனைத்திலும் ஏதாவது வெளிநாட்டு சர்ச் அல்லது மசூதிகளுக்குப் போவதை வழக்கமாக வைத்திருந்தார். காங்கிரஸ் அரசுடன் நல்ல உறவு இல்லாததால், அரச ரீதியான உறவுவை அயல் நாடுகளிடம் மெயின்டெய்ன் பண்ணவும் முடியவில்லை!

  கலாம் நல்ல மனிதர். ஆனால் நிர்வாகத் திறமை அற்றவர். ராஜரீக விவகாரங்களுக்கு சரிப்படாதவர். அதனால்தான் பாஜகவே அவரை மீண்டும் பிரசிடென்ட் ஆக்க விரும்பவில்லை.

  கருணாநிதியைத் திட்ட காரணம் தேடிக் கொண்டிருப்பவர்கள், இந்த கலகத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது வேடிக்கை. தமிழில் அத்தனை வீக்கா தமிழர்கள்?

 6. டான் அசோக்

  மம்தா மட்டுமா? இங்கே வாய்தா புகழ் முதல்வரும் அல்லவா அகலக்கால் வைத்து முகமுடைப்பட்டிருக்கிறார்!!! அருமையான அலசல். தெளிவான கட்டுரை.

 7. Ramesh

  மக்கள் அனைவரும் கலாம் பின் இருக்க,சில முக்கிய அரசியல் கட்சிகள் சொந்த விருப்பு வெறுப்புகலுக்காகவும் அரசியல் காரணங்களுக்குகாகவும் ஒருவரை ,இந்த உலகத்திற்கு நம் நாட்டின் அடையாளம் ஆக தேர்ந்து எடுத்தால்,அவர் எப்பொழுதும் அந்த அரசியல் கட்சிக்கு சாதகமாகத்தான் செயல் படுவார்.பிறகு எப்படி ஆட்சி மாறினாலும் கொள்கை,செயல்,கடமை தவறாத முடிவுகளை அவரிடம் இருந்து எப்படி எதிர் பார்க்க முடியும்.இப்படி நடகாவிருக்கும் வண்ணம் நடுநிளையானவருக்கு ஆதரவு தெரிவிபவரை நீங்கள் அரை வேக்காடு என்று சொல்கிறீர்கள்.இன்று பேஸ்புக் தான் இளைஞர்களின் குறளாக உள்ளது.இதை கவனத்தில் கொள்ளவும்.கருணாநிதி,ஜெயலலிதா வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் கலாமை ஆதரிக்காமல் போகலாம்.ஆனால் என்றும் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனும் கலாமயே ஜனாதிபதியாக விரும்புவார்கள்.இன்னொன்றை தெளிவு படுத்த விரும்புகிரேன்.இந்த நாடும் ஆட்சியும் மக்களுகாகவே தவிற அரசியல் வாதிகளுக்காக இல்லை.இந்த விசயத்தில் என்வழியின் கருத்துக்கள் நடுநிலையாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை..இன்னொரு விஷயம்.கலாமை கழகம் என்றது தவறில்லை என்று சில கருத்துகளை படித்தேன்.சரி அப்படியே வைத்துக் கொள்வோம்.முஸ்லிம் நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.ஒரு உவமைக்காக இதை கூறுகிறேன்.முஸ்லிமில் ஒரு பிரிவினரை S***i முஸ்லிம் என்று அழைப்பார்கள்.அதற்கு தமிழில் அர்த்தம் என்ன என்று அனைவருக்கும் தெரியும்.அந்த பிரிவினரை பற்றி யாரவது உங்களிடம் கருத்து கேட்டல் நீங்கள் அதன் தமிழ் அர்த்தம் இது என்ற விளக்கம் கூறுவீர்களா?அப்படி கூறினால் அது சரிதானா?இது அவர்களை அவமானப் படுதுவதாகவா உள்ளது.ஒரு மாநிலத்தின் பிரதான கட்சியின் தலைவர் இடம் பொருள் ஏவல் அறிந்து பேச வேண்டாமா?அவை அறிந்து தான் அவர் அப்படி பேசினார் என்றால் அவரின் நோக்கம் கேள்வியை திசை திருப்புவதும் கலாமை புன்படுத்துவடுமாகதானே தெரிகிறது…. இதற்கு நீங்கள் வக்காலத்து வேறு..

 8. FEROS

  மிகச் சிறந்த அலசல் கட்டுரை டாக்டர் சார். நாடோ கண்ணை மூடிக் கொண்டு கலாம் கலாம் என கோஷம் எழுப்ப, நீங்கள் நடுநிலையாக, நிதானத்துடன் எழுதியிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் தமிழரா வட இந்தியரா என்தல்ல முக்கியம். நாட்டுக்கு எது நல்லதோ அதுதான் முக்கியம். பிரணாப் சிறந்த தேர்வுதான்.

 9. சேனா

  தனக்கு எதிரா ஒரு கார்டூன் வந்ததற்காக பேஸ்புக் பயன்படுத்தறவங்கெல்லாம் ஏதோ தீவிரவாதிங்கற ரேஞ்சுக்கு பேசிய இந்த மமதாவுக்கு, இப்போ பேஸ்புக்தான் பிரச்சார சாதனமாம். தனக்கு ஒன்னுன்னா எப்படி வேணாலும் பேச்சை மாத்தும் மட்டமான அரசியல்வாதிதானே இவரும். இவரை நம்பி அப்துல் கலாம் பல்பாகிட்டாரே!

 10. enkaruthu

  இங்கே சில நண்பர்களின் கருத்துக்களை பார்த்தால் இவர்களுக்கு அப்துல் கலாம் ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசையை விட கருணாநிதியை எப்படியாவது திட்ட வேண்டும் என்ற ஆசைதான் அதிகம் தெரிகிறது.

  அப்படி என்ன கலைஞர் சொல்லிவிட்டார்.கலாமை வைத்து டெல்லியில் அன்றைய தினம் பரபரப்பாக நடந்த கலகத்தை பார்த்துதான் அன்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு அப்படி சொன்னார்.

  மேலும் கலாம் என்கின்ற ஒரு முஸ்லிம் மத பெயருக்கு கலகம் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை.அதைவிடவும் நிருபர் கேட்ட கேள்வி ஒன்றும் முஸ்லிம் மதத்தை பற்றியது அல்ல ஜனாதிபதி தேர்தலை பற்றி.

  இன்று இதை தினமலரிலும் ,காலை கதிரிலும் கலாம் என்றால் கலகம் ஆத்திரத்தில் கலைஞர் என்று வந்த தலைப்பை பார்த்த என்னுடன் வாக்கிங் வந்த முஸ்லிம் நண்பர்கள் மூன்று பேரும் சொன்னது இதுதான் ஆகா என்ன அக்கறை நம் மசூதியை இடித்தவர்களுக்கு ஆதரவு கொடுத்து எழுதும் இவர்கள் கலைஞர் என்றவுடன் அப்படியே நமக்காக கொந்தளிக்கிறார்கள் எல்லாம் வெளி வேஷம்.எனக்கும் அவர்கள் சொல்வதுதான் சரி என்று தோன்றுகிறது.

  என்கருத்து என்னவென்றால் இவர்கள் எல்லோருக்கும் கலைஞர் எந்த நோக்கில் அந்த இடத்தில அப்படி சொல்லிருப்பார் என்று தெரியும்.பேசியது கலைஞர் ஆயிற்றே அதனால் இவர்களுக்கே உரிய கலைஞர் மீதான வெறுப்பின் காரணமாக சொல்வதாகத்தான் நினைக்கிறேன். இதுவே ஜெயலலிதா மட்டும் இப்படி சொல்லிருந்தால் தினமலர் போன்றோர்கள் அப்பொழுது மட்டும் அவர் ஏன் அப்படி சொன்னார் ,எதற்காக சொன்னார் என்றெலாம் ஒரு மிக பெரிய அலசல் கட்டுரையை எழுதிருப்பார்கள்.

 11. பாவலன்

  ///இவரை நம்பி அப்துல் கலாம் பல்பாகிட்டாரே!/// (சேனா)

  கலாமிடம் இருந்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும்
  வராத நிலையில் Missile Man அவர்களை ‘bulb’ என
  ஏளனம் செய்யவேண்டாம்! நன்றி.

  -பாவலன்

 12. SANTHOSH

  கருணாநிதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவிட்டால் கனிமொழி மீண்டும் கைது செய்யப்படுவர் என்பதை உணர்ந்துள்ளார்… தன்னைவிட கலாம் மிகபெரிய தலைவராவதை கருணாதியின் பொறாமை குணம் தான் தடுக்கிறது ….

  வரபோகும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு சாதகமாக முடிவுகளை எடுக்க காங்கிரஸ் கட்சி சேர்ந்தவரை வேட்பாளரை நிறுத்துகிறார்கள்…. ஜனாதிபதி என்பவர் எந்த அரசியல் கட்சிக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டும்…

  இந்திய இளைஞர்களுக்கு அப்துல் கலாம் மீது பற்றும் மரியாதையும் அதிகமாகவே இருக்கிறது என்பதை பேஸ்புக் மூலம் நிரூபணமாகி உள்ளது…

  எப்படியோ அடுத்து வரபோகும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்திய இளைஞர்களால் மண்ணை கவ்வப்போகிறது ………..

 13. Senthil

  அது எப்புடி என்வழி நண்பர்கள் எல்லாம் ஒரே மைண்டுக்கு போறீங்க?

  கட்டுரை எல்லாத்தையும் சப்போர்ட் பண்ணியே கமெண்ட் (ரமேஷ் தவிர்த்து ) வருதே ,

  யாருமே வேறு மாதிரி சிந்திக்க மாட்டிங்கள ? இல்ல என்வழி ல வர்ற எல்ல கட்டுரைமே கரெக்டா தான் இருக்கும் நு நீங்க நேனைக்குரிங்கள ?

  ஏன்ன யாருமே கலாம் சப்போர்ட் பன்னால ?

  common man ஒருத்தர் நம்ம ப்ரெசிடெண்ட வந்தா நல்லதுதானே?

  ஏன் அவர் போட்டி ல வருரரோ இல்லையோ, நாம (ரஜினி fans அட்லீஸ்ட் ஒரு share or கமெண்ட் facebook ல பண்ணலாமே )

  நாம தான் வேர்ல்ட் fulla ரசிகர்கள் இருக்கோமே அட்லீஸ்ட் சப்போர்ட் பண்ணி, இவ்ளோ supporters இருக்கோம்னு காமிக்கலமே …

  இந்திய ல பெஸ்ட் 10 பேர்ல நம்ம தலைவர் இருக்குறாங்க ,

  எவ்ளோவோ vote கெடைச்சுது , அதே சப்போர்ட் நாம கலம்க்கு கொடுக்கலாமே …

  facebookla வாங்குற vote வச்சு Dr . abj நிக்க போறது இல்ல , பட்
  we can show our சப்போர்ட்———

  பாவலன் சார் நீங்களுமா ??

  Common Man ……………..

 14. Veera

  Ayya mamta never said that she is the only woman working for the welfare of Bengalis . But karuna always says he is a tamilinathalaivar.
  It’s not mandatory that everyone should support the leader of an alliance government.
  Prathibha Patel , supported by congress, spent more-than 200 cr for her trip to abroad. I don’t know how much efforts she put for the welfare of our nation during these visits .But Mr. Kalam used to visit many schools so as to create an awareness of corrupted free government and he also motivated the students to be a good citizen of India in future.

  I think you are the follower of either congress government which has been fully corrupted now or karuna. That’s why your article on this issue is totally in favour of those.
  Valga

 15. Ramkumar

  //அது எப்புடி என்வழி நண்பர்கள் எல்லாம் ஒரே மைண்டுக்கு போறீங்க?//

  அப்புடி என்ன ஒரே மைன்டை கண்டுபுடிச்சிட்டீங்க செந்தில்? முதலில் எல்லா கமெண்ட்ஸையும் முழுசா படிங்க. அவரவர் கருத்தை சொல்லியிருக்காங்க. கலாமுக்கு ஆதரவளிப்பதா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம்.

  ஒரு கட்டுரையை பலரும் ஆதரிச்சா, அது ஓரளவு அவங்க சிந்தனையோட ஒத்துப்போறதாத்தானே அர்த்தம்.

  அப்துல் கலாம் என்ற பிம்பத்தை மேலும் மேலும் பெரிதாக்கிக் கொண்டுபோவது உங்களைப் போன்றவர்களுக்கே கூட நல்லதில்லை. அவர் நல்ல விஞ்ஞானி. அதற்கான மரியாதையும் கவுரவமும் கொடுக்கப்பட்டாகிவிட்டது.

  கலாம் விஷயத்தில் கருணாநிதி எந்தத் தவறும் செய்யவில்லை. கலாமை ஆரம்பத்திலேயே வெறுத்து ஒதுக்கிவிட்ட ஜெயலலிதாவைத் திட்டமுடியுமா இங்கே கருணாநிதியை விமர்ச்சித்தவர்களால்?

 16. சேனா

  பாவலன், இவ்ளோ கலகம் நடந்துகிட்டிருக்கே, இந்த மனுசன் (கலாம்) இப்பவாவது, ‘இல்ல வேணாம், என்னை வைத்து அரசியல் விளையாட்டு வேண்டாம்’ என்று குறைந்தபட்சம் சொல்லக் கூட இல்லையே. அப்புறம் எப்படிங்க மரியாதை வரும்? இவரும் ஒரு பதவி அரசியல்வாதி ஆகிட்டாரே.

 17. பாவலன்

  ///பாவலன் சார் நீங்களுமா ??/// (செந்தில்)

  உங்கள் கேள்விக்கு பதில் தரும் முன்னர் இளங்கோவின்
  சூப்பர் பதிவில் இருந்து ஒரு பகுதி:

  ///இவர் குடியரசு தலைவரான பிறகு தான் அந்த பதவிக்கே ஒரு அர்த்தம் இருப்பதை பலர் உணர்ந்திருப்பார்கள்…! குறிப்பாக குழந்தைகள் …!

  இந்திய 2020 …. என்ற தொலை நோக்கு பார்வை …

  அதற்காக அவர் குழந்தைகளையும் … இளைஞர்களையும் தேடி சென்று அவர்கள் மனதில் அதற்கான விதை வித்தார்!/// (Elango)

  விஞ்ஞானி அப்துல் கலாமின் மீது மாபெரும் மரியாதை
  வைத்திருப்பவன் நான்! போட்டி இல்லாமல் – consensus candidate –
  ஆக தேர்ந்தெடுக்கப் பட்டால் தான் அவருக்கு மரியாதை.
  ஆனால் சோனியா காந்தி பிரதமர் பதவி ஏற்பதை சட்டம்
  அனுமதிக்காததால் (dual citizenship) மறுத்தார் என்பதால்
  காங்கிரஸ் அவருக்கு extension கொடுக்கவில்லை, அவரை
  blacklist செய்து விட்டது. NDA-கூட்டணிக்கு போதுமான %
  இல்லாததால் கலாமிற்கு போட்டியிட தயக்கம் வந்துவிட்டது.
  மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கலாம் விரும்புகிறார்.
  (சில முட்டாள்கள் கலாமிற்கு பதவி ஆசை என திரிக்கின்றனர்).
  ஆனால் குமரன் சொன்னது போல் ஊழல் அரசியல்வாதிகள்
  கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராக எதிர்த்து வருகின்றனர்.

  வினோ பிரணாப் முகர்ஜியை புகழ்ந்து எழுதி இருப்பதை நான்
  ஏற்கவில்லை. அண்ணா கூட்டணியில் இருந்து பிரணாப் முகர்ஜி
  மீது ஒரு SIT விசாரணை நடத்த வேண்டும் எனச் சொல்வதால்
  அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிகிறது.
  கலாம் மீது யாரும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியதில்லை.
  அவர் அரசியல் வாதி அல்ல. ஆனால் தனக்கு வாக்கு வங்கி
  (மஜாரிட்டி) இல்லாத நிலையில் கலாம் தேர்தலில் இருந்து
  ஒதுங்கி விடுவது தான் அவரது உயர்ந்த நிலைக்கு அழகு என
  நான் ஆரம்பத்தில் இருந்தே எழுதி வருகிறேன். அடுத்து NDA
  ஆட்சி வந்தால், வாக்கு வங்கி அமைந்தால், அப்போது கலாம்
  குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுவார் என நம்புவோம்!
  நன்றி.

  -பாவலன்
  ________________________

  //NDA-கூட்டணிக்கு போதுமான %
  இல்லாததால் கலாமிற்கு போட்டியிட தயக்கம் வந்துவிட்டது.//

  பாவலன்-

  என்டிஏ கூட்டணிக்கு கலாமை வேட்பாளர் ஆக்கும் எண்ணமே இல்லையே. என்டிஏவின் தோழர் ஜெயலலிதாவின் வேட்பாளர் சங்மாதானே. நேற்றைய என்டிஏ கூட்டத்தில் கூட கலாமை வேட்பாளர் ஆக்குவது பற்றி ஒப்புக்குக் கூட ஒருத்தரும் பேசவில்லையே. இன்னொன்று கடந்த முறை கூட கலாமை என்டிஏ முன்மொழியவில்லை. முலாயம் சிங்தான் முன்மொழிந்து, தன் முடிவில் உறுதியாக இருந்து கலாமுக்கு மரியாதை தந்தார். இந்த யதார்த்த நிலையை நீங்கள் கவனிக்கவே மாட்டீர்களா?

  என்னது, கலாமுக்கு தயக்கம் வந்துவிட்டதா…? அவர் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு முனைப்பு கூட காட்டவில்லை என்பதுதான் நமது வருத்தமெல்லாம். தன் விஷயத்தில் ஒருமித்த கருத்து இல்லை என்று புரிந்துவிட்டது. மமதா தவிர வேறு யாரும் தன் பெயரை சொல்லக்கூட மறுப்பது தெரிகிறது. ஆனால், ‘இந்த விளையாட்டு நான் வரவில்லை’ என்று ஒரு சின்ன வெளிப்படையான அறிவிப்பைக் கூட அவர் தெரிவிக்கவில்லையே. முகர்ஜி அறிவிக்கப்பட்ட நிலையில், சங்மா பின்வாங்க மறுக்கும் சூழலிலும், ஏதாவது திருப்பங்கள் நடக்கும் என இன்னும் கலாம் காத்திருக்கிறார்.

  சரி காத்திருக்கட்டும்.

  பிரணாபை பற்றி அந்தக் கட்டுரையில் எழுதப்பட்டதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. அத்தனையும் உண்மைகள். அவர் ஆரியரா, பிராமணரா என்ற பாகுபாட்டையெல்லாம் பார்க்கவில்லை. ஹஸாரே கோஷ்டி ஊழல் புகார் வாசித்துள்ளது ஒரு விஷயமா… யார் மீது யார் ஊழல் குற்றம் சாட்டுவது என்ற விவஸ்தையே இல்லையா? முதலில் ஹஸாரே கோஷ்டி தங்கள் மீதுள்ள ஊழல் புகார்களுக்கு தெளிவான பதில் சொல்லி மக்கள் நம்பிக்கையைப் பெறப் பார்க்கட்டும். வாய்க்கு வந்ததை புகாராக பட்டியலிட்டால், அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. பிரணாபுக்கு எதிராக அவர்களால் தர முடிந்த ஆதாரங்கள் என்ன? வெற்று வாய்ச் சவடால்தானே. இந்த நாட்டில் இம்மியளவுக்குக் கூட மரியாதை தரத் தேவையில்லாத கும்பல் ஹஸாரே கும்பல். இவர்கள் சொல்லும் எதையும் யாரும் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை! இதை நாடு உணர்ந்துள்ளது ஆறுதலளிக்கிறது!!

  -வினோ

 18. Krishna

  //இன்று இதை தினமலரிலும் ,காலை கதிரிலும் கலாம் என்றால் கலகம் ஆத்திரத்தில் கலைஞர் என்று வந்த தலைப்பை பார்த்த என்னுடன் வாக்கிங் வந்த முஸ்லிம் நண்பர்கள் மூன்று பேரும் சொன்னது இதுதான் ஆகா என்ன அக்கறை நம் மசூதியை இடித்தவர்களுக்கு ஆதரவு கொடுத்து எழுதும் இவர்கள் கலைஞர் என்றவுடன் அப்படியே நமக்காக கொந்தளிக்கிறார்கள் எல்லாம் வெளி வேஷம்.எனக்கும் அவர்கள் சொல்வதுதான் சரி என்று தோன்றுகிறது. – என் கருத்து//

  இதென்ன லாஜிக், ஜெயலலிதாவை ஆதரிக்கிறவர்கள் எல்லாம் மசூதி இடிப்பை ஆதரிக்கிறார்கள் என்று? இன்றும் ஜவாஹிருல்லா தலைமையிலுள்ள மனித நேய மக்கள் கட்சி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருக்கிறதே – அவர்கள் எல்லாம் மசூதி இடிப்பை ஆதரிக்கிறார்களா?

  /இதுவே ஜெயலலிதா மட்டும் இப்படி சொல்லிருந்தால் தினமலர் போன்றோர்கள் அப்பொழுது மட்டும் அவர் ஏன் அப்படி சொன்னார் ,எதற்காக சொன்னார் என்றெலாம் ஒரு மிக பெரிய அலசல் கட்டுரையை எழுதிருப்பார்கள்.//

  மீண்டும் சொல்கிறேன், செப்டம்பர் 2002-ல் ஜெயலலிதா சோனியாவை தரக்குறைவாக பேசியதற்கு அன்றைய தினமலரில் “டவுட்டு தனபால்” மற்றும் வாசர்கள் கடிதம் பகுதியில் கடும் கண்டனங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

 19. பாவலன்

  வினோ அவர்களே..உங்கள் நீண்ட பதிலுக்கு நன்றி.
  Point by point பதில் கொடுக்க எனக்கு நேர அவகாசம் இல்லை.

  “இந்த தேர்தலில் டாக்டர் கலாம் போட்டியிடாமல் ஒதுங்கி
  விடுவது அவரது உயர்ந்த பெயருக்கு நல்லது” என்பதில்
  நம்மில் பலருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. (மம்தா, டாக்டர்
  சுவாமி இருவர் மட்டுமே அவரது பெயரை முன்மொழிந்து
  வருகிறார்கள் என்பது உண்மை). இதை விட்டு விடுவோம்!

  அடுத்து பிரணாப் முகர்ஜி மேட்டர்.

  கருப்பு பணம் மீட்பு பற்றி பிரணாப் முகர்ஜி நடவடிக்கை
  ராம் ஜெத்மலானி போன்றவர்களால் கடுமையாக விசாரிக்கப்
  பட்டு வருகிறது. குமரன் போன்ற சட்ட வல்லுனர்கள் தான்
  அந்த மூத்த வழக்கறிஞர் சொல்வதன் சாராம்சம் அறிந்து
  விளக்கவேண்டும். நான் சட்டம் கற்றவன் அல்ல. நன்றி.

  -பாவலன்

 20. Krishna

  //தன் மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி எந்தக் காரணத்தைக் கொண்டும் நாட்டின் முதல் குடிமகனாக வரக்கூடாது என்பதுதான் மமதாவின் அல்டிமேட் இலக்காக இருந்தது.//

  வினோ அவர்களே, மம்தா காங்கிரசில் இருந்த போது மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. மேற்கு வங்க காங்கிரசில் அப்போது இரண்டு கோஷ்டிகள் இருந்தன – மம்தா மற்றும் பிரணாப் கோஷ்டி. மம்தா இடதுசாரிகளை தீவிரமாக எதிர்த்த சமயம் பிரணாப் அவர்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரித்ததோடு இல்லாமல் மம்தாவையே ஓரம் கட்டும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். அதனால் தான் ஜனவரி 1998-ல் காங்கிரசை விட்டு வெளியே வந்த போது மம்தா, பிரணாப் – இடது சாரிகளின் கள்ள உறவு மேற்கு வங்க காங்கிரசை எப்படி அழித்துக் கொண்டிருக்கிறது என்று அன்றைய காங்கிரஸ் தலைவர் சீதாரம் கேசரிக்கு மிக விரிவாக கடிதம் எழுதினார். அத்துடன் இனியும் காங்கிரசில் தொடர்ந்ததால் தம்மை பிரணாப் ஒழித்தே கட்டி விடுவார் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதை வைத்து பார்க்கும் போது மம்தாவிற்கு தம்மை அழிக்க நினைக்கும் பிரனாபை எதிர்க்க தார்மீக உரிமை இருக்கிறது. ஆனால் அப்துல் கலாம் கருணாநிதியின் அரசியல் வாழ்வை அழிக்கப் பார்த்தார் என்று சொல்ல முடியுமா? எனவே இந்த ஒப்பீடு சரியில்லை என்று நினைக்கிறேன். மற்றபடி கருணாநிதி பிரனாபை ஆதரிப்பதில் தவறில்லை என்ற உங்கள் கருத்தை ஏற்கிறேன்.
  _________________

  ஒரு அரசியல்வாதியாக அவர் நிலையில் நியாயம் இருக்கலாம். கூட்டணி என்று வந்தபிறகு, கூட்டணியின் ஒருமித்த முடிவுக்கு கட்டுப்படுவதுதான் நியாயமானது. ஆனால் மமதா தனது அரசியல் பகையை முன்வைத்து பிரணாபை வெளிப்படையாக எதிர்க்கிறார். ஆனால், கருணாநிதி அப்துல் கலாமை எதிர்க்கவில்லையே. தன் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கிறார். மீண்டும் ஜனாதிபதியாகும் ஆசை கலாமுக்கு வந்திருப்பதால் இப்போது தேவையற்ற குழப்பம் வந்துவிட்டது என்ற பொருள்படத்தானே கருணாநிதி பேசினார். இதில் கருணாநிதியை விமர்சிக்க என்ன இருக்கிறது. ஆனால் நியாயமாக உங்களைப் போன்றவர்கள் கோபப்பட வேண்டியது ஜெயலலிதா மீது. கலாம் பற்றி பாஜ கூட்டணியில் யாரும் பேச்சே எடுக்கக் கூடாது என்று அவசர அவசரமாக சங்மாவை அறிவித்தவர் அவர்தான். பிரணாபை காங்கிரஸ் கூட்டணி அறிவித்ததில் குழப்பமே இல்லை. அதே போன்ற தெளிவோடு கலாமை ஜெ உள்ளிட்ட என்டிஏ கூட்டணி நிறுத்தியிருந்தால், நிச்சயம் அது வேறு ரேஞ்சுக்குப் போயிருக்கும். கலாமுக்கு மரியாதையும் இருந்திருக்கும்… ஏன் காங்கிரஸே மிரண்டிருக்கும்!

  -வினோ

 21. மு. செந்தில் குமார்

  அருமையான அலசல். தெளிவான கட்டுரை.

 22. குமரன்

  ///இந்த மானம் கெட்ட அரசியல் வாதிகளின் வாதத்தில் விழாமல் … உண்மையை சிந்தியுங்கள் மக்களே!

  இவர் வாழுகின்ற கால கட்டத்தில் நாம் வாழுகின்றோம் என்ற பெருமையே நம் தலைமுறைக்கு அவர் வாரி வழங்கிய பெருமை!///

  இளங்கோ, மிகச் சரியாகச் சொன்னீர்கள். இரண்டே வரிகளில் அத்தனையும் அடக்கம்.

  பாவலன் சொல்வது போல சிலர் கலாம் மீது பலி சுமத்தி உண்மையைத் திரிக்கிறார்கள். என்ன பழி? அவர் பதவி ஆசை பிடித்தவர்! எதற்காக அவர் ஆசைப்பட வேண்டும்? அவரது குடும்பத்தார் கருணாநிதி குடும்பம் போல பணம் சம்பாதிக்கவா? இல்லை அவருக்கு ஏதாவது உடன்பிறவா சகோதரர் (ஜெயா சசி போல) காத்திருக்கிறாரா, பணம் சம்பாதிக்க, அதிகாரம் செய்ய?
  இல்லை, பிரதீபா பாட்டில் போல ஆடம்பரமாக வாழ ஆசைப் படுகிறாரா, எல்லா நாடுகளுக்கும் சொந்த பந்தம் என்று அறுபதுக்கும் மேற்பட்டவர்களை அழைத்துப்போக ஆசைப்படுகிறாரா? அவரது உடன் பிறந்த சகோதரர் குடும்பம் இன்னமும் ராமேஸ்வரத்தில் முன்பு போலவே அதே நடுத்தர வர்க்கத்தில் இன்னமும் நேர்மை என்றால் என்ன என்று பறை சார்ருகிறதே, அது யார் கண்ணிலும் என் படவில்லை.

  நேர்மைக்கு முன்னுதாரணமாகத் திகழும் கலாமையும் அவரது உடன் பிறந்த சகோதரர் குடும்பத்தையும் பார்த்து அத்தனை அரசியல் வாதிகள் மட்டும் அல்ல அத்தனை பொதுமக்களும் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ உள்ளதே?

  இதே கருணாநிதிக்குப் “பிடித்தவராகக்” கலாம் இருந்திருந்தால், காங்கிரசின் வளைப்புக்கு வளைந்து கொடுத்திருந்தால் இப்படிப்பட்ட சூழலில் கருணாநிதி என்ன புலம்பியிருப்பார்? சாம்பிள் இதோ… “கலாம் சூத்திரர்,
  இனத்தவர் அதனால்தான் அவரை யாரும் விரும்பவில்லை. மதச் சார்பின்மை செத்துவிட்டது, ஆரியம் சூழ்ச்சி செய்து வென்று விட்டது!” இதுதான் அவர் சொல்லக் கூடியது.

  கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆக ஆசைப் பட்டாலும் அதில் நியாயம் இருக்கிறது, என்ன நியாயம் அது? அவருக்கு நேர்மையார்ற ஆசை மட்டும் அல்ல, நடத்தையும் கிடையாது என ஐந்தாண்டுகள் நிரூபித்திருக்கிறார், அதற்குப் பின்னரும் பெரிய மாளிகை வேண்டும் என்று அலையாமல், ஒரு அறையில் வாழ்வை நடத்துகிறார். எளிமையின் இலக்கணமாக கிட்டத்தட்ட துறவி போலவே வாழ்கிறார். தனிமனிதத் தூய்மையின் சின்னமாக விளங்குகிறார்.

  இப்படிப்பட்ட நற்குணங்கள் அனைத்தையும் ஒரு பொருட்டாகவே மதிக்காதவர்கள்தான் “கருணாநித்தியின் கலாம் என்றால் கழகம்” என்பதை ஏற்பார்கள்.

  என்ன, அவரே முன்வந்து தனக்கு ஔமைப்பட்ட ஆதரவில்லை என்றால் தான் குடியரசுத் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க முடியாது, தாம் முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற முறையில் மீண்டும் போட்டியிட்டு பதவிக்கு வருவது அப்பதவிக்கு/ நாற்காலிக்குத் தரப்படும் கவுரவம் அல்ல என்பதைச் சொல்லியிருந்தால் அவரது கவுரவம் இன்னமும் உயர்ந்திருக்கும். கருனாநித்தி போன்றவர்கள் அவரைப்பற்றி பேசியிருக்க முடியாது.

 23. குமரன்

  வினோ

  ///அவர் ஆரியரா, பிராமணரா என்ற பாகுபாட்டையெல்லாம் பார்க்கவில்லை.///

  வினோ, என்பார்வையில் நீங்கள் இப்படிப் பார்ப்பதில்லை. எனது விமரிசனம் என்ன என்றால் ‘உட்கார்ந்தால் எழுந்தால்’ இந்தப் பாகுபாடு பேசும் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் பற்றியது மட்டுமே.

 24. குமரன்

  பாவலன்

  ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிரான போராட்டங்கள் எப்போதும் மிகக் கடினமானவை. இவர் இல்லாவிட்டால் இன்னொருவர் என்ற ரீதியல் ஆள்பவர்கள் ஊழல் செய்கிறார்கள். அதுபோலவே இவர் இல்லா விட்டால் இன்னொருவர் என்ற ரீதியில் இனி போராட்டங்கள் தொடரும், நிச்சயமாக இந்தப் போராட்டம் என்றாவது வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஊழலும் கருப்புபனமும் நிரந்தரமாகக் கோலோச்ச முடியாது. இப்போதே வங்கிகளில் கணக்குத் துவங்குவதில் இருந்து பணம் செலுத்துவது வரையில் பலவித நெறி முறைகள் வந்துள்ளன. காலப் போக்கில் கறுப்புப் பணம் ஒளியும்

  இதனால்தான் பணமாக ஆயிரக் கணக்கான கோடிகள் வாங்க இனியும் இயலாது என்ற நிலையில் கேடி பிரதர்ஸ் சண் டி.வி.மூலமாக மலேசியா அனதகிருஷ்ணன் (மேக்சிஸ்) மூலமாக முதலீடு என்ற போர்வையில் எண்ணூறு கோடி ரூபாயை வாங்கப் போக அது இப்போது சி.பி.ஐ விசாரணைக்கு வந்துவிட்டது. அதில் கைதைத் தவிர்க்கத்தான் கலாநிதி இத்தாலிக்கு ஓடிப்போய் லூர்துசாமி என்ற தமிழர்- கார்டினல் மூலம் போப்பாண்டவர் மூலம் சோனியாவிடம் பேசி கனிமொழியைக் கைது செய்த அதே மத்திய அரசு கலாநிதி – தயாநிதியைக் கைது செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றும் கலாநிதி ஐரோப்பாவில்தான் இருக்கிறார். நிச்சயம் குற்றம் செய்தவர்கள் யாராயினும் சட்டம் தண்டிக்கும் என்று நம்புகிறேன். ஊழல் நிரந்தரம் அல்ல. ஆனால் உண்மையும் நேர்மையும் வெல்லும், வெல்ல வேண்டும்.

 25. குமரன்

  வினோ,#
  ஜெயலலிதா பதவிப் பிரியர்/ வெறியே பிடித்தவர் என்பது உலகே அறியும், அவருக்கே கூடத் தெரிந்திருக்கும் ஆனால் ஒப்புக் கொள்ள மாட்டார்

  நிற்க, கருணாநிதி கூட குடியரசுத் தலைவர் ஆக விரும்பினார் என்று சில தகவல்கள் கூறுகின்றன! இதில் எந்த அளவு உண்மையோ. ஆனால் அது நடந்திருந்தால் குறைந்த பட்சம் “சகோதரச் சண்டை”யாவது முடிவுக்கு வந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

 26. பாவலன்

  //ஜெயலலிதா பதவிப் பிரியர்/ வெறியே பிடித்தவர் என்பது உலகே அறியும், //
  //கருணாநிதி கூட குடியரசுத் தலைவர் ஆக விரும்பினார் என்று சில தகவல்கள் கூறுகின்றன! // (குமரன்)

  ஆசையே அலை போலே
  நாமெலாம் அதன் மேலே
  ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே!
  (கவியரசு கண்ணதாசன்)

 27. பாவலன்

  கலாமை நினைவு படுத்தும் ஒரு பழைய பாடல்..

  எழுதியவர் : உடுமலை நாராயண கவி
  படம் – ______ .(ஹி..ஹி..ஹி)

  “தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
  காசு முன் செல்லாதடி
  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
  காசு முன் செல்லாதடி.. குதம்பாய் காசு முன் செல்லாதடி..

  நல்லவரானாலும் ம்.. ம்..ம்..
  நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது
  நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது – குதம்பாய்
  நாடு மதிக்காது – கல்வி
  இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
  வெள்ளிப் பணமடியே.. குதம்பாய் .. வெள்ளிப் பணமடியே ”

  -பாவலன்

 28. Krishna

  //ஆனால், கருணாநிதி அப்துல் கலாமை எதிர்க்கவில்லையே. தன் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கிறார். மீண்டும் ஜனாதிபதியாகும் ஆசை கலாமுக்கு வந்திருப்பதால் இப்போது தேவையற்ற குழப்பம் வந்துவிட்டது என்ற பொருள்படத்தானே கருணாநிதி பேசினார். இதில் கருணாநிதியை விமர்சிக்க என்ன இருக்கிறது. ஆனால் நியாயமாக உங்களைப் போன்றவர்கள் கோபப்பட வேண்டியது ஜெயலலிதா மீது. கலாம் பற்றி பாஜ கூட்டணியில் யாரும் பேச்சே எடுக்கக் கூடாது என்று அவசர அவசரமாக சங்மாவை அறிவித்தவர் அவர்தான். பிரணாபை காங்கிரஸ் கூட்டணி அறிவித்ததில் குழப்பமே இல்லை. அதே போன்ற தெளிவோடு கலாமை ஜெ உள்ளிட்ட என்டிஏ கூட்டணி நிறுத்தியிருந்தால், நிச்சயம் அது வேறு ரேஞ்சுக்குப் போயிருக்கும். கலாமுக்கு மரியாதையும் இருந்திருக்கும்… ஏன் காங்கிரஸே மிரண்டிருக்கும்!//

  கருணாநிதி கலாமை ஆதரிக்கவில்லை என்பதால் நான் அவரை விமரிசனம் செய்யவில்லை. கலாம் என்றால் கலகம் என்று சொன்னதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்தேன். கலாம் பெயரைச் சொல்லி கலகம் நடக்கிறது என்று ஒரு வேளை கருணாநிதி தெரிவித்திருந்தால் அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவித்திருக்க மாட்டார்கள். கலாம் பற்றி பேச்சு எடுக்க கூடாது என்பதற்காக தான் ஜெயலலிதா சங்கமா பெயரை அறிவித்தார் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்? இதுவரையிலும் ஒரு இஸ்லாமியர், ஒரு பெண், ஒரு தாழ்த்தப்பட்டவர் ஏற்கனவே குடியரசு தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள் – எனவே இம்முறை பழங்குடி+கிறிஸ்துவ வகுப்பை சேர்ந்த ஒருவர் வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் சங்கமா வை ஆதரிப்பதாக ஜெயலலிதாவும் நவீன் பட்நாயக்கும் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இது கூட தவறு தான் என்பது வேறு விஷயம். தவிர NDA கூட்டங்களில் ஜெயலலிதாவோ நவீன் பட்நாயக்கோ கலந்து கொண்டதே கிடையாது. சில வாரங்களுக்கு முன் சுஷ்மா ஸ்வராஜ் அப்துல் கலாம் பெயரை மீடியாவில் சொன்னதும் அதற்கு சரத் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதை அடுத்து தான் சொன்னதை வாபஸ் வாங்கும் நிலைக்கு சுஷ்மா ஸ்வராஜ் தள்ளப்பட்டார். இது தவிர முஸ்லிம்களை வெறுக்கும் சிவா சேனையும் கலாமிற்கு எத்ரிப்பு தெரிவித்திருந்தது. இதிலிருந்து அப்துல் கலாமிற்கு பாஜகவைத் தவிர மற்ற NDA கட்சிகளின் ஆதரவு இல்லை என்பதால் அவர் நிச்சயம் தோற்று விடுவார் என்பதால் தான் சங்கமா வின் பெயரை ஜெயலலிதாவும் நவீன் பட்நாயக்கும் அறிவித்தார்கள்.
  ________________

  அடேங்கப்பா அபார கண்டுபிடிப்புங்க. என்டிஏ கூட்டங்களில் நேரில் போய் கலந்து கொண்டால்தான் உண்டா.. அதான் தேடி வந்து ஆலோசனை நடத்துகிறார்களே!

  //இதுவரையிலும் ஒரு இஸ்லாமியர், ஒரு பெண், ஒரு தாழ்த்தப்பட்டவர் ஏற்கனவே குடியரசு தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள்//

  அதாவது உங்கள் விருப்பத்துக்கேற்ப நிலைப்பாடுகள் இருக்க வேண்டும். அர்த்தங்கள் மாறிக் கொள்ள வேண்டும் அப்படித்தானே? மேலே நீங்கள் குறிப்பிட்டதே உண்மையானால், அப்துல் கலாம் பெயரைச் சொல்லி எதற்கு புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்? கலாமால் இப்போது கலகம்தான் என்பதே கருணாநிதி சொன்னது. அதைத்தான் கலாம் என்றால் தமிழில் கலகம் என்ற ஒரு பொருளும் இருக்கிறது என்றார். இதில் உங்களுக்கென்ன வந்தது? இஸ்லாமிய சமூகம் எங்கே இழிவுபடுத்தப்பட்டது?

  -வினோ

 29. Krishna

  வினோ அவர்களே, நான் சொல்வது என்னவெனில் ஜெயலலிதா சங்கமா பெயரை அறிவிப்பதற்கு முன்னரே கலாம் சரத் யாதவ் மற்றும் பால் தாக்கரே போன்றவர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளார். ஜெயலலிதாவை பொறுத்த வரையிலும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறக்கூடாது என்பது தான் அவரது குறிக்கோளாக இருக்கும். அதனால் தான் கலாம் நின்றால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சங்கமா பெயரை முன்மொழிந்தார். கலாம் நிறுத்தபபடாததற்கு முழு முதற் காரணம் சரத் யாதவ், நிதீஷ் குமார், பால் தாக்கரே போன்றவர்கள் தான்.

  //அதாவது உங்கள் விருப்பத்துக்கேற்ப நிலைப்பாடுகள் இருக்க வேண்டும். அர்த்தங்கள் மாறிக் கொள்ள வேண்டும் அப்படித்தானே? மேலே நீங்கள் குறிப்பிட்டதே உண்மையானால், அப்துல் கலாம் பெயரைச் சொல்லி எதற்கு புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்? //

  இது என் நிலைப்பாடல்ல – ஜெயலலிதா மற்றும் நவீன் பட்நாயக்கின் நிலைப்பாடு. என்னைப்பொருத்த வரையிலும் அப்துல் கலாம் ஏற்கனவே சோனியாவை பிரதமராக்குவதற்கு தடை போட்டும் பிறகு சோனியா என்ற ஒரு தனி நபரை காப்பாற்றுவதற்காக 2007-ல் “office of profit” மசோதாவை காங்கிரஸ் கொண்டு வர முயற்சி செய்தததை முறியடித்ததும் அவர் செய்த மிகப் பெரிய தொண்டு. காங்கிரஸ் அதற்கு பிறகு இது போல் constituition – ஐ subvert செய்ய முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் மீண்டும் குடியரசு தலைவர் ஆனால் மகிழ்ச்சி என்றாலும் ஆகவில்லை என்றாலும் வருத்தமில்லை. ஏனெனில் he has served his purpose. நான் ஏற்கனவே கூறியது போல் கலாமின் பெற்றோர்கள் அவருக்கு தமிழ் பெயர் வைக்கவில்லை. கலாம் என்ற உருது பெயர் தான் வைத்தார்கள். அதை தமிழ்ப் படுத்தி “கலகம்” என்று சொன்னால் கருணாநிதி என்ற தமிழ் பெயர் உருது படுத்தப்பட்டு “கொம்புகள்” என்ற அர்த்தம் வந்து விடும் என்று தான் தெரிவித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *