BREAKING NEWS
Search

என்னது, அண்ணா ஆர்ச்சை இடிச்சிட்டாங்களா… எனக்குத் தெரியாதே! – ஜெயலலிதா

என்னது, அண்ணா வளைவை இடிச்சாங்களா… எனக்குத் தெரியாதே! – ஜெயலலிதா

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா நினைவு வளைவை அகற்ற நான் உத்தரவிடவேயில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் பவள விழாவையொட்டி அன்றைய முதல்வர் எம்ஜிஆரால் கட்டப்பட்டது அண்ணா வளைவு. இதனை சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலப் பணிகளுக்காக இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.  கடந்த இரு வாரகாலமாக இதுகுறித்த செய்திகள் பத்திரிகைகளில் பிரதான இடம்பிடித்து வருகின்றன.

ஆரம்பத்தில் இடிக்க முடிவு செய்து வேலையில் இறங்கியவர்களுக்கு, அந்த வளைவை அகற்றுவது பெரும் சிரமமாகிவிட்டது. மேலும் மக்கள் மத்தியில் எதிர்ப்பும் அதிகரித்தது. எனவே இப்போது அதனை மீண்டும் ஒட்டப் போவதாக அறிவித்துள்ளனர். இதனை திமுக தலைவர் கருணாநிதி கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்.

இந்த நிலையில் தனக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டிருப்பவரும், கபட நாடகங்களை நடத்துவதில் கைதேர்ந்தவருமான திமுக தலைவர் கருணாநிதி, “பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு” அகற்றும் பிரச்சினையில் நான் ஊரை ஏமாற்ற நினைப்பதாக அறிவித்து இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது.

தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு பதிலளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, அண்ணா வளைவினை அகற்றத் தேவையில்லை என்று நான் உத்தரவிட்டது குறித்து, “… அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது. அகற்ற முடிவு செய்தது மட்டுமல்ல; அகற்றுகின்ற செயல்பாடு 70 சதவீதம் நடைபெற்றுள்ள நிலையில், முதல்வர் திடீரென்று அதனை அகற்றத் தேவையில்லை என்றும், அது நீண்டநாள் நினைவுச் சின்னம் என்றும் சொல்லியிருக்கிறார்.

அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்பது, அந்த நினைவுச் சின்னத்தை அகற்ற முடிவெடுத்த போது தோன்றவில்லையா?…” என்று வினவியிருக்கிறார்.

அதாவது சென்னையில் அண்ணா வளைவை அகற்ற முதலில் அனுமதி அளித்துவிட்டு, இடிப்புப் பணிகள் பாதியளவு முடிந்த பின்னர், இடிக்கக் கூடாது என நான் திடீர் என்று உத்தரவிட்டுள்ளதாக கருணாநிதி கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

2010ம் ஆண்டு முந்தைய திமுக ஆட்சியின்போது தான் 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் மூன்றாவது நிழற்சாலை சந்திப்பு ஆகியவற்றினை இணைக்கும் வண்ணம் மேம்பாலம் அமைக்க அனுமதிக்கப்பட்டது.

இதனையடுத்து 2011ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முந்தைய அரசால் விட்டுச் செல்லப்பட்ட பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுவது போல் இந்த மேம்பாலப் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த மேம்பாலப் பணி குறித்தோ அல்லது அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்தோ என்னிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை. நான் எந்த விதமான உத்தரவையும் இது தொடர்பாக பிறப்பிக்கவில்லை.

அரசின் அனைத்து முடிவுகளும் முதல்வர் ஒப்புதல் பெற்று வெளியிடப்படுவதில்லை என்பது 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா?. அரசின் அலுவல் விதிகளின்படி பல்வேறு மட்டங்களில் அரசு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது கருணாநிதிக்கு தெரியாதா? இல்லை, தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே, “அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது” என்று கூறியுள்ளாரா?

மேம்பாலம் அமைத்திட முந்தைய திமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டபோதே, அந்தப் பாலம் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு வழியாகத்தான் செல்லும் என்பதும், அதனை அகற்ற வேண்டும் என்பதும் கருணாநிதிக்கு தெரியாதா? ஒரு வேளை பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் வகையில் சென்னையின் அடையாளச் சின்னமாக அமைந்துள்ள இந்த அண்ணா வளைவை அகற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மேம்பாலப் பணிக்கு தான் வழங்கிய உத்தரவு இன்று எனது முடிவால் தடைபட்டுவிட்டதே என்ற கோபத்தில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார் போலும்!


எது எப்படியோ, முந்தைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு எனது கவனத்திற்கு முன்பே கொண்டுவரப்பட்டு இருந்தால், அண்ணா வளைவினை இடிக்காமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிச்சயம் நான் உத்தரவிட்டு இருப்பேன்.

அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்தியின்மூலம்தான் நான் அறிந்து கொண்டேன். இந்தச் செய்தியை அறிந்தவுடன், சென்னை மாநகரின் அடையாளச் சின்னமாக விளங்கும் அண்ணா வளைவினை அகற்றும் பணியினை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். மேலும், அண்ணா வளைவை அகற்றாமல் மேம்பாலப் பணியினை நிறைவேற்றிட ஆய்வு செய்யுமாறும், அது குறித்து விரிவாக விவாதிக்கப்படலாம் என்றும் நான் உத்தரவிட்டேன்.

அதன் அடிப்படையில், மூத்த அமைச்சர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் விரிவான ஆய்வு நடத்தி ஈ.வெ.ரா. சாலையில் இருந்து அண்ணா நகர் நோக்கி செல்லும் மேம்பாலத்தை சிறிதளவு கிழக்குப் புறமாக மாற்றி அமைத்து மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நான் அறிவித்தேன்.

எனது அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டப்பட்டு, சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் `பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு’ அகற்றப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

எனது அரசின் இந்த நடவடிக்கை மூலம், சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் `பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு’ காக்கப்பட்டது என்ற மன நிம்மதி எங்களுக்கு உள்ளது.

உண்மை நிலை இவ்வாறிருக்க, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீதும், எனது தலைமையிலான அரசு மீதும் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், இது போன்ற அவதூறுகளை, அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறாரா? அல்லது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டப்பட்டு, சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு அங்கு இருக்கக் கூடாது என்ற தனது தந்திர எண்ணம் ஈடேறவில்லையே என்ற ஆதங்கத்தில் கூடுதல் செலவு என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறாரா என்பதை கருணாநிதி தான் தெளிவுபடுத்த வேண்டும்,” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

முந்தைய அரசின் திட்டங்களை மாற்றியதே இல்லையா?

முந்தைய அரசின் திட்டங்களை அப்படியே நிறைவேற்றுவதாக தனது அறிக்கையில் கூறியுள்ள ஜெயலலிதாதான், அண்ணா நூற்றாண்டுவிழா நூலகக் கட்டடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக்க உத்தரவிட்டார். புதிய தலைமைச் செயலகத்தை முடக்கி வைத்தார். கருணாநிதி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சமச்சீர் கல்வி தொடங்கி பல்வேறு திட்டங்களை முடக்கவும் மாற்றவும் இவர் போட்ட உத்தரவின் மை கூட இன்னும் காயவில்லை. அவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் இன்னமும் உள்ளன என்பதெல்லாம் கடந்த ஒன்றரை ஆண்டுகளா மீடியா செய்திகளை கவனித்து வருபவர்களுக்கு நினைவிருக்கலாம்!
-என்வழி செய்திகள்
4 thoughts on “என்னது, அண்ணா ஆர்ச்சை இடிச்சிட்டாங்களா… எனக்குத் தெரியாதே! – ஜெயலலிதா

 1. devaraj

  JJ need not say the people are watching and they knew who is the bad leader.
  Vino has nicely summarized in the end.
  cheers
  Dev.

 2. குமரன்

  ////2010ம் ஆண்டு முந்தைய திமுக ஆட்சியின்போது தான் 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் மூன்றாவது நிழற்சாலை சந்திப்பு ஆகியவற்றினை இணைக்கும் வண்ணம் மேம்பாலம் அமைக்க அனுமதிக்கப்பட்டது.////

  பாலம் ஒழுங்காகக் கட்டி முடிக்கப்பட்டுத் திறப்பு விழா நடந்திருந்தால் ஜெயலலிதா இந்த உண்மையை இப்படி பகிரங்கமாக ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டிருக்க மாட்டார். ஏதோ அந்த வளைவை சரியாக இடிக்கவரவில்லையோ, என்னமோ, இப்படி ஜெயாவே உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டியதாகி விட்டது!

  ///அரசின் அனைத்து முடிவுகளும் முதல்வர் ஒப்புதல் பெற்று வெளியிடப்படுவதில்லை என்பது 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா?.///

  அப்படியானால் அதிமுக அமைச்சர்களும் வரிக்கு வரி துவக்கத்திலேயே நீட்டி முழக்கி “புரட்சித் தலைவி இதய தெய்வம் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் உத்தரவுப்படி” என்று சொல்லித்தானே எதையும் பேசவே ஆரம்பிக்கிறார்கள், அதெல்லாம் பொய்யா? அதுவும் “புரட்சித் தலைவி இதய தெய்வம் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்குத்” தெரியாதா?

  கருணாநிதி அரசைப் பொருத்தமட்டும், அரசின் அனைத்து முடிவுகளும் அவர் பிளஸ் அவரது குடும்பத்தில் ஒருவர் அனுமதி பெற்றே எடுக்கபப்ட்டன என்பது நாடறியும்!

  ///அரசின் அனைத்து முடிவுகளும் முதல்வர் ஒப்புதல் பெற்று வெளியிடப்படுவதில்லை என்பது 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா?.///

  டான்சி நிலத்தை ஜெயாவும் சசியும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனத்துக்கு விற்ற விஷயத்தை அப்போதைய “முதல்வரான ஜெயலலிதாவின் ஒப்புதல் பெறாமலே” அரசு நிறுவனமான டான்சியும் தொழில்துறையும் விற்றதாக ஜெயாவே நீதிமன்றத்தில் “முழங்கியது” அவருக்கே மறந்து விட்டது போலும், நான் இதெல்லாம் மறப்பதில்லை!

  ///அல்லது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டப்பட்டு, சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு அங்கு இருக்கக் கூடாது என்ற தனது தந்திர எண்ணம் ஈடேறவில்லையே என்ற ஆதங்கத்தில் கூடுதல் செலவு என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறாரா///

  இதில் உண்மை உண்டு.

  “முந்தைய அரசின் திட்டங்களை மாற்றியதே இல்லையா?” என்ற கேள்வியும் அதற்கான பதிலும் மிகச் சரி, ஆனால் அதெல்லாம் ஜெயாவின் மனத்தில் ஏறாது!

 3. s venkatesan, nigeria

  என்னது காந்தி செத்துட்டாரா? என்ற காமெடி சீன் நியாபகம் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *