BREAKING NEWS
Search

நான் சாகத் தயார்.. ஆனா நீங்க என்ன சாகவிட மாட்டீங்கன்னு தெரியும் – அடுத்த நாடகத்தில் இறங்கிய ஹஸாரே!

நான் சாகத் தயார்.. ஆனா நீங்க என்ன சாகவிட மாட்டீங்கன்னு தெரியும் –  அடுத்த நாடகத்தில் இறங்கிய ஹஸாரே!

டெல்லி: லோக்பால் நாடகத்தின் அடுத்த பாகத்தை அரங்கேற்றி வருகின்றனர் அன்னா ஹஸாரேயும் அவரது கோஷ்டியினரும். கடந்த நான்கு தினங்களாக யாராலும் கண்டுகொள்ளப்படாததால், ஞாயிற்றுக்கிழமை தானே களமிறங்கினார் ஹஸாரே.

‘இந்த முறை நான் சாகத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு என்னை மக்கள் விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது,” அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான, வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றக்கோரி அன்னாஹசாரேவும் அவரது கோஷ்டினரும் கோரி வருகின்றனர்.

ஆரம்பத்தில் இவருக்கு பலத்த ஆதரவு இருந்தது. ஆனால் இவருடன் உள்ளவர்களின் சுயநல நாடகங்கள், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் வெளிநாட்டு கார்ப்பொரேட்டுகளிடம் இவர்கள் வாங்கிக் குவித்த நிதி உதவி, சிறப்பு விருந்தினர் என்ற போர்வையில் தொண்டு நிறுவனங்களிடம் அல்பத்தனமாக அடித்த ரொக்கம்.. என எல்லாம் புரிய ஆரம்பித்த பிறகு மக்கள் ஆதரவு சுத்தமாகவே இல்லாமல் போனது.

அரசு நிறைவேற்றுவதாகக் கூறும் லோக்பால் மசோதாவை ஏற்க மறுத்துள்ள ஹஸாரே கோஷ்டி, அரசின் மொத்த கட்டுப்பாடும் தங்கள் வசம் இருப்பது போன்ற லோக்பால்தான் வேண்டும் என்று கூறிவருகின்றனர். குடிமைப் பணிகள் அனைத்தையும் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முனைகிறது.

மூன்றாவது முறை மும்பையில் இந்த கோஷ்டி உண்ணாவிரதம் இருந்தபோது, மைதானமே ஈயோடிக் கொண்டிருந்தது. வெறுத்துப் போய் மூன்று நாள்களில் உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிக் கொண்டு போன இந்த கோஷ்டி, இப்போதுதான் மீண்டும் திரும்பியுள்ளது.

‘கல்யாண வீட்டில் இழவு கொட்டும்’ முயற்சியை பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற நாளில் உண்ணாவிரதத்தை அரங்கேற்றினர். ஆனால் ஒருவரும் சீந்தவில்லை.

அப்போது, முதலில் ஹஸாரே உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.  ஐபிஎல் சியர் லீடர் மாதிரி வந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.

‘ஏன் வயதான ஹஸாரேவை துன்புறுத்துகிறார்கள். அவர்கள் கோஷ்டியில் உள்ள கேஜ்ரிவாலோ, கிரண் பேடியோ, பிரசாந்த் பூஷணோ உண்ணாவிரதமிருக்க வேண்டியதுதானே’, என்ற கேள்வியைத் தவிர்க்க, முதலில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் உண்ணாவிரதம் என அறிவித்தனர்.

மிக சொற்ப கூட்டம்தான் வந்தது. உடனே, தங்களை காங்கிரஸ் தொண்டர்களை விட்டு தாக்கப் பார்ப்பவதாக புரளி கிளப்பிவிட்டார்கள். அப்படியும் ஒருவரும் வரக்காணோம்.

இப்படியே போனால், ரொம்பத்தான் காமெடி பீஸாகிவிடுவோம் என நினைத்த ஹஸாரே கோஷ்டி, பாபா ராம்தேவின் தயவை நாட, அவர் தனது அடியாள் படையுடன் மைதானத்துக்கு வந்து, கொஞ்சம் குரளி வித்தை காட்டிப் பார்த்தார்!

அப்படியும் கூட மீடியாவின் கவனம் இந்தக் குழுவினர் பக்கம் திரும்பவே இல்லை. இந்த நிலையில், அரசுக்கு தான் விதித்த 4 நாட்கள் கெடு முடிந்துவிட்டதாகவும், அப்படியும் அரசு கண்டுகொள்ளவே இல்லையே என்ற புலம்பலுடன், தானே களத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளார் ஹஸாரே.

டெல்லி ஜந்தர் மந்தர் மைதான மேடையில் அமர்ந்து காலை 10.30 மணிக்கு உண்ணா விரதத்தைத் தொடங்கினார் (இடையிடையே தண்ணீர், குளுக்கோஸ் உண்டு). ஹஸாரேவும் களத்தில் குதித்ததால், விடுமுறை நாளில் இந்த நாடகத்தை வேடிக்கைப் பார்க்க கொஞ்சம் கூடுதலாக ஆட்கள் வந்திருந்தனர்.

பிரதமர் வீட்டு முன்பு…

இந்த நிலையில் திடீரென, எல்லோரும் ரேஸ் கோர்ஸ் சாலை செல்லுங்கள். அங்குதான் இனி போராட்டம் நடக்க வேண்டும் என்று ஹஸாரே கூற, சில ஆதரவாளர்கள் அந்த சாலையில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

சென்னையில் சிதம்பரம் வீட்டு முன்பு போராட்டம் நடத்த முயன்ற சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நான் சாவேன்… ஆனா மாட்டேன்!

தனது உண்ணாவிரத சீரியலின் இந்த பாகம் குறித்து ஹஸாரே பேசுகையில், “நான் இந்த முறை நிஜமாகவே சாகும் வரை உண்ணாவிரதமிருக்கப் போகிறேன். ஆனால் நான் சாக விரும்பினாலும் என்னை அந்த நிலைக்கு போக விடமாட்டார்கள் மக்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. லோக்பால் கிடைக்கும் வரை நீங்கள் என்னை சாகவிட மாட்டீர்கள்,” என்றார்.

உங்கள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவில்லையே என்றபோது, கூடும் கூட்டத்தை வைத்து போராட்டத்தை எடை போடக் கூடாது என்றார். ஆனால் இதற்குமுன் நடந்த உண்ணாவிரதங்களில் கூடிய மக்கள் கூட்டத்தைக் காட்டித்தான் அரசை ஹஸாரே கோஷ்டி மிரட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தற்போது குடியரசுத் தலைவர் ஆகிவிட்ட பிரணாப் முகர்ஜி உள்பட 15 மத்திய அமைச்சர்கள் மீது குற்றப்புகார் கூறிய ஹஸாரே கோஷ்டியினர், தங்களிடம் உள்ள அதற்கான ஆதாரங்களை வெளியிடப் போவதாகக் கூறினர். ஆனால் பின்னர் அவற்றை பிரதமருக்கும், சோனியாவுக்கும் மட்டும் அனுப்பிவிட்டதாகக் கூறி அமைதியாகிவிட்டனர்!

-என்வழி செய்திகள்

தொடர்புடைய செய்திகள்:

ஹஸாரே கோஷ்டி மக்கள் ஆதரவை முற்றாக இழந்தது ஏன்?

ஹஸாரே மீது உங்களுக்கு அப்படியென்ன வெறுப்பு? இது தலைவரை எதிர்ப்பது போலாகாதா? – கேள்வி பதில் 22

ஹஸாரே சாப்… எதுவரை இந்த மௌன விரதம்?

லோக்பாலும் வேண்டாம் கழுதைப் பாலும் வேண்டாம்… லஞ்சம் கொடுக்கமாட்டோம் என முதலில் உறுதி எடுங்கள்!

பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஹஸாரே! – எஸ்பி ஜனநாதன்




9 thoughts on “நான் சாகத் தயார்.. ஆனா நீங்க என்ன சாகவிட மாட்டீங்கன்னு தெரியும் – அடுத்த நாடகத்தில் இறங்கிய ஹஸாரே!

 1. மிஸ்டர் பாவலன்

  //லோக்பால் நாடகத்தின் அடுத்த பாகத்தை அரங்கேற்றி வருகின்றனர் அன்னா ஹஸாரேயும் அவரது கோஷ்டியினரும். கடந்த நான்கு தினங்களாக யாராலும் கண்டுகொள்ளப்படாததால், ஞாயிற்றுக்கிழமை தானே களமிறங்கினார் ஹஸாரே.// (என் வழி செய்திகள்)

  இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா?
  இன்னும் எத்தனை நாளம்மா? அன்னா
  ஜன்லோக்பாலுக்கு உண்ணாவிரதம் எத்தனை நாளம்மா?
  எத்தனை நாளம்மா?
  இன்னும் எத்தனை நாளம்மா?

  -== மிஸ்டர் பாவலன் ===-

 2. குமரன்

  ஹசாரே, கலைஞரிடம் ட்ரெயினிங் எடுத்துக் கொள்ளவேண்டும்!

  “வாழு, வாழவிடு” என்று ஒரு உயரிய தத்துவத்தைச் சமணம் போதிக்கிறது.

  அதன் மாற்றாக, ஹசாரே “சாவு, சாகவிடு” என்ற தத்துவத்தைப் போதிப்பாரோ ????

 3. பிரபா

  வினோ சார், நீங்க உண்மையிலேயே பெரிய தீர்க்க தரிசி. இந்த நபரின் நாடகங்கள் கடைசியில் இப்படித்தான் முடியும் என எத்தனை துல்லியமாகக் கணித்திருக்கிறீர்கள்? அந்த பழைய செய்திகளின் லிங்குகளில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் சவுக்கடி. யாரையும் ஆதரிக்கும் முன் தொலைநோக்குப் பார்வை அவசியம் என்பதை புரிந்து கொள்ள உதவியது.

  கண்மூடித்தனமான ஆதரவு மண்மூடிப் போய்விட்டது. அசாரே போன்றோரை வைத்து பெரிய மோசடிக் கும்பல் விளையாடப் பார்த்தது இந்தியர்கள் என்றோ செய்த புண்ணியத்தால் தகர்க்கப்பட்டுள்ளது.

  நமக்கு காங்கிரஸும் வேண்டாம், அசாரேயும் வேண்டாம், காவி கும்பலும் வேண்டாம். யார் வந்து எங்களைக் காக்கப் போகிறார்களோ. ஈஸ்வரோ ரக்ஷது!

 4. மிஸ்டர் பாவலன்

  //வினோ சார், நீங்க உண்மையிலேயே பெரிய தீர்க்க தரிசி. இந்த நபரின் நாடகங்கள் கடைசியில் இப்படித்தான் முடியும் என எத்தனை துல்லியமாகக் கணித்திருக்கிறீர்கள்? // (பிரபா)

  அருமையான வரிகள். கேஜ்ரிவால், கிரண் பேடி பற்றியும் ஆரம்பத்திலேயே
  வினோ சரியாகக் கணித்தார். வினோ ஒரு பிரபல பத்திரிக்கையாளர்.
  அதனால் அவருக்கு contacts அதிகம். Twitter, Facebook-ல் வரும் செய்திகள்
  அனைத்தும் நம்பகமானவை அல்ல. Reliable sources அறிந்து நாம் ஒரு
  முடிவுக்கு வருவது என்றும் நலம்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 5. கோடையிடி குமார்

  தீக்குளிக்கப் போறேன்னு ஒரு பெருசு சவுண்டு வுட்டுச்சே…. அது எங்கப்பா?

 6. enkaruthu

  எப்படியும் சாகவிடமாடார்கள் என்ற தைரிய்த்திலத்தான் இந்த அன்னா ஹசாரே போன்றோர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் என்று நினைத்த நேரததில் எல்லாம் கிளம்பி விடுகிறார்கள்.இவர்கள் நடத்தும் நாடகத்துக்கு அப்பாவி மக்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள்.

  ஒரு போராட்டம் என்பது ஒரு முடிவு வரும் வரை நடத்துவதாகும்.இப்படி அப்ப அப்ப கூத்து கட்டுபவர்களை போல நடத்துவது அல்ல.

 7. anbudan ravi

  திரு வினோ அவர்களே, உங்களை எப்படி மின்-அஞ்சலில் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. ஆதலால் எனது கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். இன்று ஒன்-இந்தியா இதழில் வெளியான ஆட்சியர் சகாயம் மற்றும் கிரானைட் குவாரியைப்பற்றி எனது கருத்து….

  மேலூரிலிருந்து காரைக்குடி செல்லும் வழயில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள கண்மாய்களும் வயல்களும் சிறு குன்றுகளும் தகர்க்கப்பட்டு கிரானைட் குவாரிகள் உருவாகிவிட்டன. இதன் பாதிப்பு – விவசாயம் முற்றிலும் அழிக்கப்பட்டு அனைத்து விவசாய நிலங்களும் வீடுகளாக்கபடுகிறது. அனைத்து நீர்நிலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆடுமாடுகள் தண்ணீர் குடிக்கமுடியாது. விவசாயம் கிடையாது. அனைத்திற்கும் காரணம் PRP மற்றும் இரு ஆளும் கட்சி ஜால்ராக்கள். உண்மைகளை கண்டறிய என்வழி போன்ற பத்திரிக்கைகள் அந்த பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். ஆனால் பாதுகாப்புடன் செல்லவில்லை என்றால் உயிருக்கு உத்திரவாதமில்லை.

  சகாயம் இதை கண்டுபிடுத்து ஒடுக்க நடவடிக்கை எடுக்கும்போழுதுதான் மாற்றப்பட்டார். ஆயிரக்கணக்கான கோடிகள் மோசடி செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து அதிகாரிகளுக்கும் இதில் பங்குகள் இருக்கிறது…கர்நாடகாவின் காலி ஜனார்தன ரெட்டி குவாரி ஊழல் போல இங்கும் நடக்கிறது…..விரைவில் அனைத்து உண்மைகளும் வெளி வர வேண்டும்.

  அன்புடன் ரவி.

  ____________-

  இன்றுதான் இதுகுறித்த ஒரு விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்படுகிறது. தலைப்பு: சகாயம் ஐஏஎஸ்: கிரானைட் கொள்ளை அம்பலமாக்கும் கடிதம்! என்ற தலைப்பில் வெளியாகிறது. அந்த நூல் அனைவருக்கும் சேர வேண்டும். ஊழல், இயற்கையை கொள்ளையடிக்கும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு முக்கியம். மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: envazhi@gmail.com
  -வினோ

 8. Krishna

  லோகபாலுக்காக சாகத் தயார் என்று ஒருவர். தனி ஈழம் காணாமல் சாகமாட்டேன் என்று இன்னொருவர். நல்லா காமெடி பண்றாங்கப்பா.

 9. Anbudan Ravi

  திரு வினோ அவர்களே, உங்களது மின்னஞ்சலை தெரிவித்ததற்கு மிக்க நன்றிகள். திரு சகாயம் அவர்களின் புத்தகத்தில் உள்ள விவரங்கள் ஒரு நாளிதழில் வந்திருந்தது. மிகவும் அருமையான உண்மையான குற்றச்சாற்றுகள் அவை. அப்படி வெளியிட்டும் இதுவரை அதைப்பற்றிய ஒரு சலனமோ ஒரு அறிக்கையோ இந்த அரசிடம் இருந்து வரவில்லை, வராமலும் போகலாம். ஆனால் ஒரு காரணம் உண்டு: சுரங்கம் நடத்திக்கொண்டிருப்பதில் ஒருவர் அதிமுக இன்னொருவர் திமுக….இரண்டு கட்ச்சிகளுக்கும் கொள்ளைஅடிக்கும் பணத்திலிருந்து நிதிகள் போய்க்கொண்டிறிக்கிறது. இப்படி சொல்வது மேலூர் மக்கள் தான். அப்படியிருக்க இரண்டு கட்ச்சிகளும் இந்த சுரங்க ஊழலை சட்டை செய்யாது என்றே தோன்றுகிறது. பாதிக்கப்பட்டது மக்கள்தான், வறுமையை காரணம் காட்டி எல்லாவற்றையும் இழந்து தவிக்கிறார்கள்.

  திரு சகாயம் சாட்டையை சுழற்றி தனக்குதானே அடித்துகொண்டதுபோல உள்ளது.

  அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *