BREAKING NEWS
Search

இது இசைஞானியின் சவால்!

ப்ரியா படத்துக்கு பத்து நிமிடத்தில் நான் அமைத்த இசைக்கு இன்று நோட்ஸ் எடுக்கவே மாதக்கணக்கில் ஆகும்! – இசைஞானி

raja
“லண்டனில் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடக்கும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையிலிருந்து நேராக இங்கே வருகிறேன். அன்றைக்கு அரை மணி நேரத்தில் ட்யூன் போட்டு, இரண்டு மணி நேரத்தில் இசையமைத்து ரெக்கார்டிங் செய்யப்பட்ட பாடல்களுக்கு இப்போது நோட்ஸ் எடுக்க ஒரு நாள், இரண்டு நாளாகிறது. இந்த ரிகர்சலில் பங்குபெறும் இசைக் கலைஞர்கள் எல்லோருமே… எப்படி இது முடிந்தது உங்களால்… போகிற போக்கில் இப்படிப்பட்ட மெட்டுக்களையெல்லாம் எப்படி உருவாக்க முடிந்தது? என்றெல்லாம் வியந்து போய் கேட்கிறார்கள்…

அது நானாக யோசித்து யோசித்து உருவாக்கிய இசையல்ல. தானாக வந்தது. நான் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் என்று நினைத்து இசையமைத்திருந்தால் அந்த இசை மனதில் இறங்காது… தலையில் போய் உட்கார்ந்து தலைக்கனத்தை ஏற்றிவிடும்.

ப்ரியா படத்தில் 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக வசனங்கள் இல்லாமல் பின்னணி இசை மட்டுமே வரும்.. சிங்கப்பூர் பூங்காக்கள், பறவைக் கண்காட்சி, டால்பின் பார்க் போன்றவற்றில் ஹீரோ ஹீரோயின் வருவது போன்ற காட்சிகளை தொடர்ச்சியாக எடுத்திருந்தார்கள்.

இந்தக் காட்சிக்கான இசையை நானே கண்டக்ட் செய்தேன். அதற்கு முன் கோவர்தன் மாஸ்டர் செய்து பார்த்தார். ஒன்று, இசை காட்சியை மீறிப் போய்விடும்… அல்லது காட்சி முடிந்து இசை மீதமிருக்கும். இரண்டும் பர்ஃபெக்டாக பொருந்தி வரவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான், அண்ணா நீங்கள் உள்ளே சென்று மற்ற வேலையைப் பாருங்கள். நான் இதை கண்டக் செய்கிறேன் என கூறிவிட்டு ஒரே டேக்கில் செய்து முடித்தேன்.

உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்று நீங்கள் யாரைக் கருதுகிறீர்களோ அவர்களிடம் போய் அந்த இசையை… படத்தில் பத்துநிமிடம் வரும் அந்த இசைக்கு நோட்ஸ் எடுக்கச் சொல்லுங்கள்… அவர்களுக்கு குறைந்தது சில மாதங்களாவது தேவைப்படும்…. நோட்ஸ் எடுத்து முடிக்கவே குறைந்தது இரண்டு மாதங்களாகும்!

இப்படியெல்லாம் வாசிக்கக் கூடிய அற்புதமான இசைக் கலைஞர்கள் இங்கிருக்கிறார்கள்…”

-இன்று சனிக்கிழமை நடந்த லண்டன் இசை நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பில் இசை பிதாமகன் இளையராஜா.

குறிப்பு: உலகின் சிறந்த இசையமைப்பாளரா… உங்களைத் தவிர யாருண்ணே அது… உள்ளூர் இசையையும் உலகத் தரமாக்கிய தவப் புதல்வர் அல்லவா நீங்கள்!

குறிப்பு 2:  லண்டனில் முதல் முறையாக வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி பிரமாண்ட ஓ2 அரங்கில் இசைஞானியுடன் 100 கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறுது. 40 பாடல்கள் வரை இடம்பெறவிருக்கின்றன. நம் இசைஞானி குறைந்தது 10 பாடல்களாவது பாடுவார் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள்!

என்வழி ஸ்பெஷல்
10 thoughts on “இது இசைஞானியின் சவால்!

 1. குமரன்

  ராஜா இசையின் ராஜா.

  அவரது திருவாசக இசை விழாவில் வைகோவின் மிக அருமையான உரையைக் கேட்டு மகிழ்ந்தேன். திருவாசகம் குறித்து வைகோ உரை என்பது மிக அரிய செய்தி, கேட்க இனிமையான உரை. இருபகுதிகளில் யூ டியூபில் இந்த நிரலியில் அன்பர்கள் கேட்டு மகிழலாம். தமிழின் இனிமையை அனுபவிக்கலாம்.

  உலகெலாம் உருக்கிய திருவாசகத்துக்கு இளைய ராஜா அமைத்த இசை விழாவில் ……
  இசைஞானியும் சூப்பர் ஸ்டாரும் வைகோவின் உரையில் உருகும் காட்சிகளையும் காணலாம்.

  https://www.youtube.com/watch?v=Ye_5xqM6roE

 2. MI

  தனக்கு அறிவு உள்ளது என நினைப்பது இயல்பு ,
  தனக்கு மட்டுமே அறிவு உள்ளது என நினைப்பது ஆணவம் , முட்டாள் தனம் .

  இளையராஜா அவர்கள் ஒரு அருமையான இசையமைப்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை , தலைவர் தான் உலகின் ஸூப்பர் ஸ்டார் என உலகமே ஒப்பு கொண்டுள்ளது .

  அது அவருக்கும் தெரியும் , ஆனால் அதை அவர் ஒரு மகுடமாக எடுத்துக்கொள்வதே இல்லை . தலைவர் தலைவர் தான் ..

  “KNOWN IS A DROP , UNKNOWN IS AN OCEAN ”
  இது தலைவர் பாபா படத்தில் உபயோக ப்டுத்தி இருப்பார் .. அதை நான் இன்றும் நான் மனதில் பதித்து வைத்து கொள்கிறேன் . .

 3. நாஞ்சில் மகன்

  யார் தமிழன்? “அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்” சொல்லிலும் செயலிலும் அன்பினையே போற்றுவன் தமிழன்.

  “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினார் சுட்ட வடு.”
  மறந்தும் மாற்றாரின் மனதினைத் தைக்கும் சொற்களைக் கூறாதவன் தமிழன்.

  “சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
  நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
  இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
  பட்டாங்கில் உள்ளபடி” –ஔவையார்.

  வருணம் நாலென்றும், இவன் புலையனென்றும், தீண்டல் தகாதென்றும் பிதற்றியோன் தமிழனா ?

  இரண்டே சாதி, ஈபவன் உயர்ந்தோன், அதை மறுப்பவன் இழிசாதி. நீதி தவறாது நின்று பொருளீட்டி, ஈட்டிய பொருளில் ஈகையும் மேற்கொண்டு சிறக்க வாழ்பவன் தமிழன்!!

  பெண்ணை மதியாமல், மகளையும், இல்லத்துமனுசியையும் கூட மனிதம் துளியுமின்றி சாத்திரச் சாட்டைக்கொண்டு சுழற்றியோன் தமிழனா??

  ” தையலை உயர்வுசெய் ” , பெண்மையின் பெருமையுணர்ந்து பேசுபவன் தமிழன்!!

  “கற்பெனில் இருவர்க்கும் பொதுவினில் வைப்போம்” ஒருவனுக்கு ஒருத்தியாய்க் காதலில்களித்து வாழ்பவன் தமிழன்!

  பண்பாடு மிக்க மொழி தமிழ். பண்பாடு மிக்க இனம் தமிழ். இதை நாம் காண்பதற்கு பூதக்கண்ணாடி தேவையில்லை. காலக்கண்ணாடி போதும். நம் மொழியின் முன்னைய இலக்கியங்களைப் பார்த்தோமானால் இந்த உண்மையை அறியலாம். அவ்வாறு நாம் அறிய முயல்கின்றபோது -நம் உடலெங்கும் ஒரு கூதல் ஓடும். சட்டெனவே மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கும். இதனை நாம் அனைவரும் உணர்வோம்.

  இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களின் முன்னர் நமது தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றனார் ஒரு கவிதை பகன்றார். இந்தக் கவிதை கற்பனையில் கால்கொண்டு உள்ளத்தில் ஊற்றெடுத்து உணர்ச்சிக் கழிப்பில் பெருக்கெடுத்தது அல்ல. பாரம்பரியம் மிக்க நமது மொழியிலிருந்து பண்பாட்டிலிருந்து ஊற்றெடுத்து சுரந்து உடைப்பெடுத்துப் பெருகிறது. கணியன் பூங்குன்றனாரின் சங்ககாலக் கவிதையைச் சொல்கின்றேன்-கேளுங்கள்

  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்
  தீதும் நன்றும் பிறர்தர வாரா
  நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
  சாதலும் புதுவதன்றே வாழ்தல்
  இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிஷன்
  இன்னாதென்றாலும் இலமே…
  காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
  பெரியோரை வியத்ததும் இலமே
  சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே”
  இதன் பொருளும் சொல்லவேண்டும் எனில் இதோ:

  எல்லா ஊர்களும் நமது ஊர்களே. எல்லோரும் நமது உறவுகளே. தீமையும் நன்மையும் தாமே கொள்வது அல்லாது பிறர் தர வாராது. அவ்வாறே நோவும் அதன் தீர்வும் தாமே வருவன. சாவும் புதியதல்ல. வாழ்வு இனிமை என்று மகிழ்வதும் இல்லை. விரக்தி வந்துற்றபோது கொடுமை என்று வெறுப்பது இல்லை. நம்மை நாமே தெளிவாக உணர்ந்து கொண்டோ ஆதலினால் மாட்சிமை தங்கிய பெரியோரை வியந்து போற்றப் புகழமாட்டோம். அதேசமயம் சிறியோரை இகழ்தல் என்பன ஒருபோதும் செய்யோம்.

  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு கவி தமிழ் மகனிடமிருந்து வருகின்றதென்றால் அது தமிழ்ச் சமூகத்துப் பண்பாட்டுடன் விழுமியத்தின் வெளிப்பாடு அல்லாது வேறு என்ன?

  ” பெரியோரை வியத்தல் இலமே
  சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே ”

  என்று சொல்ல வேறு எந்த சமூகத்தால் முடிந்திருந்தது? நமது பண்பாட்டு விழுமியப் பெருக்கின் பெறுபேறு அல்லவா இது! இதனால் பெருமிதம் அடையவேண்டும். ஓர் உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தவறுகள் களைய விமர்சனம் தேவைதான். அது எமக்குள். அது ஒருபுறம் இருக்க நாம் அஞ்சத் தேவையில்லை. நம்மை நான் குறைத்து மதிப்பிடவும் தேவை இல்லை. நம் இனம் தலை நிமிர்ந்து வாழ ஆயிரக்கணக்கில் தம்மைக் கொடையாய் கொடுத்தவர்களின் சமூகம் நமது சமூகம். ஓர் உன்னத சமூகத்தின் வயிற்று மைந்தர் நாம். அதனால் பெருமிதப்படுவோம். நெஞ்சு நிமிர்த்தி வீறுநடை போடுவோம்.

  பதினாறு நூற்றாண்டுகளின் முன் “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று சொன்ன சிலப்பதிகாரம் எழுந்த தமிழ்ச்சாதி நமது.

  “தன்னிலையில் தாழாமை தாழ்ந்த பின் உயிர் வாழாமை” என்று பதினைந்து நூற்றாண்டுகளின் முன் பாடிய வள்ளுவன் வாழ்ந்த தமிழ்ச்சாதி நமது.

  “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று பாடியே பன்னிரண்டு நூற்றாண்டுகள் அழிந்து விட்டன. அதுதான் நமது தமிழ்ச்சாதி.

  “மானுடம் வென்றதம்மா” என்று மானுடத்தை வியர்ந்து போற்றிய காலம் கழிந்து பத்து நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்ச்சாதிதான் அதைச் சாதித்தது.

  “மனிதனுக்கு மேலொன்ருமில்லை
  மானுடம் போலொரு மெய்மையுமில்லை”.

  என்று மனிதரைப் போற்றி ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் பாடிய சாதி நம் தமிழ்ச்சாதி

  சொல்லுங்கள்-தமிழ்ச்சாதி என்பது தரக்குறைவா? விதியை தமிழர் நாம் வெல்வோம். தமிழ்ச்சாதி என்று தலை நிமிர்த்தி தோள் உயர்த்தி நெஞ்சு விரித்து நிமிர்வோம் வானம் அளந்த அனைத்தும் அளப்போம்.

  “தமிழன் என்று சொல்லடா
  தலை நிமிர்ந்து நில்லடா”

  வாழ்க இளையராஜா வளர்க தமிழன் இனம்

 4. மிஸ்டர் பாவலன்

  //உலகெலாம் உருக்கிய திருவாசகத்துக்கு இளைய ராஜா அமைத்த இசை விழாவில் ……
  இசைஞானியும் சூப்பர் ஸ்டாரும் வைகோவின் உரையில் உருகும் காட்சிகளையும் காணலாம்.// (குமரன்)

  வை.கோ பேச்சு நான் இன்னும் கேட்கவில்லை. அது ஒருவேளை
  உள்ளத்தை உருக்கலாம். கண்ணீர் மல்கலாம்.

  ஆனால் இளையராஜாவின் திருவாசகம் மிகவும் மிகைப் படுத்தப்பட்ட
  ஒன்று. கிறிஸ்துவர்களின் Oratorio என்ற பாணியில் அவர் அமைத்த
  இசை சர்ச்சில் உட்கார்ந்து Bach, Mozart இவர்களின் Mass இசை கேட்பது
  போல் தான் இருந்தது. சைவத் திருமறை கேட்பது இல்லை. நமது
  ஓதுவார் சுவாமிகள் – தருமபுரம் சுவாமிநாதன், திருத்தணி சுவாமிநாதன்,
  மயிலை சற்குருநாதன் – சிறப்பாக வெளியிட்டுள்ள திருவாசகம்
  ஒலித்தட்டுகள் மணிவாசகர் அமைத்த பண்ணின் (Ragas) வழியில்
  அமைந்தது. நாயன்மார்கள் சுவாமிகளின் பண்ணின் மாற்றியது
  சரியல்ல. பாரம்பரியமான இசையில் Westernization தேவை இல்லை.
  ராகத்தின் பாணியிலே அமைந்து fusion என்ற முறையில் வெளிவரும்
  (synthesizers, drums, guitar சேர்த்து) வரும் கர்நாடக இசை, பக்தி இசை
  இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

  //தனக்கு அறிவு உள்ளது என நினைப்பது இயல்பு ,
  தனக்கு மட்டுமே அறிவு உள்ளது என நினைப்பது ஆணவம் ,
  முட்டாள் தனம் . // (MI)

  இந்த கருத்தை அனைவருக்கும் சொல்லலாம். சிறப்பான கருத்து.
  உங்களைப் பாராட்டுகிறேன்.

  ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
  ஆரிருள் உய்த்து விடும்’
  என்பார் திருவள்ளுவர்.

  இளையராஜாவிற்கு திறமை இருக்கிறது. அவர் ஒரு இசை மேதை.
  ஆனால் சவால் விடுவதில் கர்வம் தெரிகிறது.

  இளையராஜா அவர் Symphony ஒன்றை எப்பொழுதோ இசை அமைத்து
  முடித்திருந்தாலும் அதை ஏன் இன்னும் release செய்யவில்லை ?
  அவர் மிக சிறந்த மேதை என்றால் உடனே அதை release செய்து
  அப்பொழுதே உலகப் புகழ் பெற்றிருக்கலாமே! ஏன் இன்னும் தாமதம்?
  அதை அவர் release செய்து உலகப் புகழ் பெற்று சிறப்படைய வாழ்த்துக்கள்!

  -== மிஸ்டர் பாவலன் ==

 5. Marthu

  நீங்கள் மிக சிறந்த இசை பிதாமகன்…என்பதில் ஐயம் ஏதும் இல்லை…..

  உங்கள் இசை தாலாட்டில் இன்றும் உறங்கும் மீசை முளைத்த குழந்தைகளில் நானும் ஒருவன்…

  ஆனால்….இப்டி பழைய புராணம். அதையே திரும்பி திரும்பி பார்த்து திருப்தி கொண்டே இருந்தால் போதுமா…??? உங்கள் இசை அடுத்த கட்டம் என்ற நிலையை தாண்டாமல் இருப்பதாக உணர்கிறோம்….

  ஜீன்ஸ் பேண்ட் போட்ட இளசுகளை….வெறுக்கும் வேட்டி கட்டுன பெருசுகள் போல….இன்றய இசை இசை அமைப்பளர்கள் (உங்கள் மகன் உட்பட )கையை மேலும் கீழும் ஆட்டி… இசை அமைப்பது இல்லை. அது காலத்தின் பரிணாம வளர்ச்சி….

  நீங்கள் இசை அமைக்க வந்த புதிதில் உங்கள் இசையை கூட இரைச்சல்…என்று சொன்னதாக கேள்வி….

  நாங்கள் உங்கள் இசையை புதிய நவீன மாற்றங்களுடன்…இன்றைய இளம் இயக்குனர்களின் கூட கைகோர்த்து வெளியாக காத்திருக்கிறோம்….

  உங்களுடய “நீதானே என் பொன் வசந்தம்”…நவீன எலக்ட்ரானிக் புயலில் கொஞ்ச நாள் கூட தாக்கு பிடிக்காதது ஒரு உதாரணம்…

  அப்புறம் தலையில இருப்பதை இறக்கி வச்சிக்கிட்டு…தனக்குதானே ஜால்ரா போடுவதை நிறுத்திவிட்டு… வாருங்கள் ஒரு கை பார்ப்போம்…..

 6. குமரன்

  இசைஞானி ஆணவம் கொண்டவர் அல்லர், அவரது பின்வரும் பாடல் தனது சாமானிய மனிதன் என்ற நிலையை உணர்ந்து எழுதப்பட்டது. இதற்கு இசை அமைத்துப் பாடியவரும் அவரே. இந்தப் பாடல் ‘நான் கடவுள்’ படத்தில் வந்தது ஆகும். 1996 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ரமணமணிமாலை என்ற பாடற்தொகுப்பில் (Album) இடம் பெற்ற ஒரு பாடல் இது, பின்னர் நான் கடவுள் படத்தில் எடுத்தாளப்பட்டது. இந்தத் தொகுப்பில் இருக்கும் பிற பாடல்களும் ராஜா தனது சாமானிய மனிதன் என்ற நிலையை உணர்ந்து உருகி எழுதிப் பாடியவை ஆகும்.

  தனது இசை குறித்த செம்மாப்பின் காரணமாக ராஜா பேசியவற்றை இறுமாப்பு எனக் கொளல் சரியல்ல. செம்மாப்பு அறிவின் பாற்பட்டது. இறுமாப்பு அகந்தையின் ஆணவத்தின் பாற்பட்டது. ‘செம்மாப்பு’ பிறரை மனம் வருத்தவோ அல்லது துன்புறுத்தவோ நோக்கம் கொண்டதல்ல. மேலை நாட்டினரின் தாம் என்ற மேட்டிமைச் சிந்தனையை எதிர்கொள்ளும் விதமாகத் தனது செம்மாந்த நிலையை மேற்கொள்ளுதல் குறைபாடு ஆகாது.

  இளையராஜா திருவாசகத்தையும் இப்படித்தான் ஆழ்ந்து அனுபவித்துப் பாடி இசை அமைத்திருக்கிறார். திருவாசகம் தன்னைச் சாதாரணமனிதனாக கடையனாகக் கருதிச் செய்யப்பட்ட பாடல் தொகுப்பு. தம்மை “நாயிற்கடையேனாக” மாணிக்க வாசகப் பெருமான் உருவகித்து உருகி பாடிய வரிகள் இதற்குச் சாட்சி. எந்த மனிதரையும் மேட்டிமை செய்யாதவர் மாணிக்க வாசகர். பாண்டிய மன்னனே ஆனாலும் அவரது மேட்டிமைக்கு வளிகொடாத மனப் பக்குவ நிலையை எய்தியபின்னர் மாணிக்க வாசகப் பெருமான் யாப்பிய பாடல்கள் திருவாசகம். இளைய ராஜாவின் ரமணமணி மாலையும் அப்படிப்பட்ட மனநிலையில் எழுதப்பட்டதே ஆகும்.

  பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
  யான் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
  பிண்டம் என்னும், எலும்பொடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
  பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே (2)

  அம்மையும் அப்பனும் தந்ததா, இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா (2)
  உண்மையை நான் அறியாததால்
  உண்மையை நான் அறியாததால்
  சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
  பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே (2)

  அத்தனை செல்வமும் உன் இடத்தில், நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் (2)
  வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில், அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்
  ஒரு முறையா இரு முறையா, பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
  புது வினையா பழ வினையா, கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
  பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
  உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
  அருள் விழியால் நோக்குவாய், மலர் பதத்தால் தாங்குவாய்
  உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

  பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
  யான் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
  பிண்டம் என்னும், எலும்பொடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
  பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

 7. மிஸ்டர் பாவலன்

  //இசைஞானி ஆணவம் கொண்டவர் அல்லர்,// (குமரன்)

  உங்கள் நகைச்சுவை உணர்வை நான் பாராட்டுகிறேன்!

  ‘பிச்சை பாத்திரம்’ பாட்டு எழுதியதால் அவர் அடக்கமானவர்
  என சொல்ல முடியாது! அவர் விடும் சவாலில் மிகவும்
  ஆணவம் தொனிக்கிறது. Philip Glass போன்ற Composers
  இந்திய இசையையும், மேற்கத்திய இசையையும் முறையாக
  கற்று பல Concertos, Symphonies, Oratorios, Operas இசை அமைத்து
  வெளியிட்டுள்ளார். அவரும் குறைந்த நாட்களில் எத்தனையோ
  படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அமைதிப் படமாக வந்த
  Dracula (B/W) பிலிப் கிளாஸ் சமீபத்தில் அமைத்த இசையை
  நீங்கள் கேட்டு பார்க்கவும். வறுமையால் Philip Glass சில மாதங்கள்
  New York-ல் cab driver-ஆக இருந்திருக்கிறார். இளையராஜா சினிமா
  படங்களில் பாட்டு சிறப்பாக இசையமித்திருந்தாலும் உலக அளவில்
  Mozart, Bach, Beethoven போன்ற ஜாம்பவான்களோடு ஒப்பிட வேண்டும்
  என்றால் அதற்கு சினிமா பின்னணி இசையை வைத்து ஒப்பிட முடியாது.
  ராஜாவின் How To Name It, Nothing But Wind, India-24 Hours இவை fusion
  albums என்று தான் கருதப்படுகிறது. இவை Symphony அல்ல. விரைவில்
  அவரது Symphony இசையை வெளியிட்டால் அறிஞர்கள் ஒப்பிட்டு பேசலாம்.
  நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 8. குமரன்

  ” பெரியோரை வியத்தல் இலமே
  சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே ”

  எனில் ஜெயலலிதாவை வியத்தல் எவ்வகை?
  ஒருவேளை அவர் பெரியோர் இல்லையோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *