BREAKING NEWS
Search

இசைஞானி 70!

இசைஞானி 70!

 NEP-Audio-Launch-33
தியில் காற்று மட்டுமே இருந்ததாக வேதம் சொல்கிறது… அந்த காற்று இசையாக இருந்தது.. அந்த இசை இளையராஜாவாக இருக்கிறது!!’

-இன்று பிறந்த நாள் காணும் இசைஞானி இளையராஜாவுக்கு வந்த பல்லாயிரம் வாழ்த்துகளில் ஒன்று இது.

‘எது நல்ல இசை என்று காலம் சொல்லும்.. நான் ஏன் அதைப் பற்றிப் பேச வேண்டும்?’ என்று 1988-ல் கேட்டவர் இளையராஜா. கால் நூற்றாண்டுகள் கடந்த பிறகும் இசையென்றால் இளையராஜாதான் எனப் புரிந்து கொண்டாடுகிறது உலகம்.

தமிழன் என்றல்ல.. இந்த மண்ணில் மனிதனாய் பிறந்த  எல்லோரின் பெருமை இசைஞானி இளையராஜா என்றால் அது மிகையல்ல!!

திருவாசகம் ஆரட்டோரியோவை சென்னையில் வெளியிடும் முன், இளையராஜாவை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க வைத்தார் மதிமுக தலைவர் வைகோ.

அப்போது இளையராஜாவுக்கு அவர் தந்த அறிமுகம்.. ‘எமது மண்ணின் மகத்தான இசைக் கலைஞன்… இவர் குரலுக்கு பல கோடி ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள்… இந்தியாவின் தன்னிகரற்ற இசையமைப்பாளர்!”

அதற்கு மன்மோகன் சிங் சொன்னது… “Yes I know him Vaiko… I often listen him!” என்று சொன்னவர், சத்மா படத்தில் ராஜாவின் பாடலை குறிப்பிட்டுச் சொன்னாராம்!

இசை பிறந்தது…

இன்றைய தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார சிறு கிராமமொன்றில் பிறந்து, வறுமையின் உச்சம் பார்த்து, போராட்டங்களையே தன் இசையின் அஸ்திவாரமாக்கி இன்று உலகம் புகழும் இசைமேதையாகத் திகழும் இளையராஜாவுக்கு இன்று வயது 70.

இளையராஜாவின் வருகை இந்திய திரையிசையில் உண்டாக்கிய புரட்சிகள் சொல்லில் அடங்காதவை. ஏன்… இன்னும் கூட பலராலும் புரிந்து கொள்ள முடியாதவை..!

மற்றவர்கள் இசையைக் கற்று, அதை இசைத்துப் பார்த்து, இசைக் கோர்வையாக்குகிறார்கள்.

ஆனால் இவர் மட்டும்தான் இசையை எந்த வித முன் தயாரிப்போ ஒத்திகையோ இல்லாமல் தன் மனதுக்குள்ளே கட்டமைத்து அதை ஒரு பொறியாளரின் லாவகத்துடன் வடிவமைக்கிறார். அந்த வடிவமைப்பு கூட காகிதத்தில்தான். பின்னர் அதை கலைஞர்கள் இசைக்கும்போது கற்பனைக்கும் எட்டாத ஒலிக் கோர்வை கிடைக்கிறது.

இந்தியாவில் எந்த இசைக் கலைஞரிடமும் இதைப் பார்க்க முடியாது.

காட்சி, பின்னணி இசை, பாடல்… மூன்றும் எப்போது எங்கு எப்படி சங்கமிக்கின்றன என்பதை உணர முடியாத அளவுக்கு நுணுக்கமாக கோர்ப்பதில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே… இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்த பிறகும்கூட இத்தனை நுணுக்கமான ஒரு இசைக் கலைஞர் தோன்றுவாரா என்பது… ம்ஹூம்!

மேற்கத்திய செவ்வியல் இசை, கீழை நாடுகளின் தொல்லிசை, நவீன இசை, இவையெல்லாம் கலந்த கலவை இசை என்று எழுத்தில் படிப்பதை, எந்த வித ஆர்ப்பாட்ட அறிவிப்புமின்றி அமைதியாக தந்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போவது ராஜாவின் பாணி.

MGR-and-Illayaraja-2

1993-ல் லண்டனில் இளையராஜா சிம்பொனியை இசைத்திருக்கலாம். ஆனால் அவர் பல ஆண்டுகளுக்கே முன்பே சிம்பொனி இசை வடிவத்தை திரைப்பாடல்களில் தந்துவிட்டார். புதிய வார்ப்புகளில் இடம்பெற்ற இதயம் போகுதே.. பாடலும், பன்னீர் புஷ்பங்களில் இடம்பெற்ற ஆனந்த ராகம், நெஞ்சத்தைக் கிள்ளாதேவில் அவர் தந்த ஏ தென்றலே… போன்ற பாடல்கள் அவர் ஏற்கெனவே தந்த சிம்பொனியின் எளிய வடிவங்கள்!

“இசையை அதன் துல்லியமும் தூய்மையும் மாறாமல் தர ஒருவர்தான் இருக்கிறார். அவர் பெயர் இளையராஜா,” என்றார் ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்த மறைந்த இசை விமர்சகர் சுப்புடு. ஆஹா.. சுப்புடுவே பாராட்டிவிட்டார் என்று கிறங்கிப்போக இதை குறிப்பிடவில்லை. இளையராஜாவின் வளர்ச்சியை, அவரது இசை காட்டிய புதுப் புது பரிமாணங்களை ஜீரணிக்க முடியாமல் தவித்த ஆச்சார கோஷ்டிகள் எப்படி வேறு வழியின்றி அவரைச் சரணடைந்தன என்பதற்கான ஒரு உதாரணமாகத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உயர் நடுத்தர வர்க்க பத்திரிகைகள் அன்று ராஜாவைத் தூற்றியது கொஞ்சமல்ல. இவரால் கர்நாடக சங்கீதமே போச்சு என்று கூப்பாடு போட்டுக் கதறின அவை. அந்த வெறியில் அன்னக்கிளி விமர்சனத்தில் இவர் பெயரைக் கூட எழுத மறுத்தன. உதயகீதம், இதயக் கோயில், தளபதி என காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெற்ற படங்களின் விமர்சனங்களில் இளையராஜாவை மிகக் கீழ்த்தரமாக வசைபாடின. ஆனால் இன்று அதே பத்திரிகைகள் இளையராஜாவுக்கு மேடைகள் அமைக்கின்றன. இசையின் பிதாமகன் என போற்றி தொடர்கள் எழுதுகின்றன.

ஏழையும் சாளையும் சரிசமந்தான் என்று அவர் பாடியது நடந்துவிட்டது. கர்நாடக சங்கீதம், கிராமத்து பாட்டு என்ற பேதங்களை தகர்த்தெறிந்து எல்லா இசையும் எல்லோருக்கும் பொதுவானது, சொந்தமானது என்பதை யாருக்கும் எந்த உறுத்தலுமின்றி இயல்பாய் நடைமுறைப்படுத்திய இசைப் புரட்சியாளர் இளையராஜா.

இளையராஜாவுக்கு தேசிய அளவில் இன்னும் பெரிய அங்கீகாரம், உலகளாவிய விருதுகள் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அவர் இசையையே உணர்வாகக் கொண்ட எல்லோருக்குமே உண்டு.

ilayarajaa-bday

உலகெல்லாம் இன்று கொண்டாடும் இசை மேதை ஜோஹன் செபாஸ்டியன் பாக், அவர் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பா முழுவதிலும் புகழ்பெற்றவராகத்தான் இருந்தார். பெரிதும் மதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அமைப்பு ரீதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்த ஏக்கம் அவர் இசையிலும் பிரதிபலித்தது. இளையராஜா விஷயத்தில் அந்தத் தவறு நடக்கக் கூடாது. விருதுகளைத் தாண்டியது அவர் இசை என்ற சமாதானங்கள் தேவையில்லை. லதா மங்கேஷ்கருக்கு எப்போதோ பாரத் ரத்னா வழங்கி கவுரவித்த மத்திய அரசு, இசையின் வடிவாக திகழும் இளையராஜாவை கண்டு கொள்ளாமலிரு்பபது பெரும் தவறு.

ஒரு மகத்தான கலைஞனை மாச்சர்யங்களைத் தாண்டி அவர் வாழும் காலத்திலேயே வாழ்த்த, பாராட்ட, உச்சத்தில் வைத்துக் கொண்டாடப் பழகுவோம்!

இசைக்கு ரத்தமும் சதையும் உயிரும் இருந்தால் அதன் பெயர் இளையராஜா!!

-எஸ் ஷங்கர்

Courtesy: Tamil.Oneindia.in
8 thoughts on “இசைஞானி 70!

 1. குமரன்

  இளையராஜா, இசைராஜா

  அவருக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும் என்ற எனது உள்ளக் கிடக்கையை ஒருமுறை கங்கை அமரனோடு பகிர்ந்து கொண்டேன், இன்னும் சில அரசியல் இரண்டாம் கட்டத் தலைவர்களுடனும் பகிர்ந்து கொண்டேன். ஆனால், ஆட்சியாளர்களின் கவியரங்கங்களிலும், பாராட்டு விழாக்களிலும் பங்கு கொள்வோருக்கு மட்டுமே அரசின் விருதுகள் என்பது இங்கே எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. எனது ஆதங்கத்தை இந்தக் கட்டுரை பதிவதில் ஒரு சிறு ஆறுதல். அவ்வளவே.
  அடுத்த பிறந்த நாளுக்குள், அவரை பாரதம் அங்கீகரிக்க இறைவனை வேண்டுவோம்.

 2. மு. செந்தில் குமார்

  இளையராஜாவின் வளர்ச்சியை, அவரது இசை காட்டிய புதுப் புது பரிமாணங்களை ஜீரணிக்க முடியாமல் தவித்த ஆச்சார கோஷ்டிகள் எப்படி வேறு வழியின்றி அவரைச் சரணடைந்தன என்பதற்கான ஒரு உதாரணமாகத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  ஒரு மகத்தான கலைஞனை மாச்சர்யங்களைத் தாண்டி அவர் வாழும் காலத்திலேயே வாழ்த்த, பாராட்ட, உச்சத்தில் வைத்துக் கொண்டாடப் பழகுவோம்!

  இசைக்கு ரத்தமும் சதையும் உயிரும் இருந்தால் அதன் பெயர் இளையராஜா!!

  ———–அருமை..அருமை

 3. s venkatesan, Nigeria

  இசைக்கு ரத்தமும் சதையும் உயிரும் இருந்தால் அதன் பெயர் இளையராஜா!! – மிக சரியான வார்த்தைகள்.

 4. c.muthu

  இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரின் இசைப்பணி அன்னை மூகம்பிகையின் ஆசிகளோடு தொடரட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *