BREAKING NEWS
Search

ரஜினி, ஐஸ்வர்யா, இளையராஜா இசை….! – தனுஷ் மனம் திறந்த பேட்டி

இளையராஜா இசையே எனக்கு எல்லாம்! – தனுஷ் மனம் திறந்த பேட்டி

www.tkada.com

சைஞானி இளையராஜாதான் என் வாழ்க்கையில் எல்லாம். அவர் என் ரத்தத்தில் இருக்கிறார், என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

ஒளிவு மறைவின்றி பேசுவதில் இன்றைய இளம் நடிகர்களில் முதலிடம் தனுஷுக்குதான். மனதிலிருப்பதை பெரும்பாலும் அப்படியே கொட்டிவிடுவார் (சமயத்தில் அவருக்கு எதிராகவே இருந்தாலும்!).

சமீபத்தில் அவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியின் முக்கிய பகுதிகளை இங்கே தருகிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் தனிப்பட்ட விஷயங்களைக் கூட அதில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் தனுஷ்.

எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள்?

அடிப்படையில் ரொம்ப ஏழ்மையான குடும்பம் எங்களுடையது. என் இளமை மிகுந்த வறுமையில் கழிந்திருக்கிறது. நான் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் என் பெற்றோர் சென்னைக்கு வந்தனர். என் அப்பா ஒரு மில்லில் மாதம் ரூ 15 கூலிக்கு வேலை செய்தார். நான் செரலாக்ஸிலோ பாரக்ஸிலோ வளரவில்லை. அதிகபட்ச நல்ல உணவு அக்கம்பக்கத்து வீடுகளில் கொடுத்த தயிர்சாதம்தான். நானாவது பரவாயில்லை… என் அண்ணன் வெறும் தண்ணீரைக் குடித்து பசியைப் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அதனால் என் அம்மாவுக்கு இயல்பாகவே அவர் மீது பாசம் அதிகம். என் தந்தை அதற்குள் சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் இயக்குநராகவும் ஆகிவிட்டார். என்னுடைய 16வது வயதில் அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நான்கு சிறுவர்களில் ஒருவர் கடைசி நேரத்தில் விலகிக் கொள்ள அந்த வேடத்தில் நடிக்க, 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னை கூட்டிவந்துவிட்டார்.

முதல் படம் வெளியாகி நன்றாக ஓடினாலும் கூட, என்னை ஒரு ஹீரோவாக யாரும் மதிக்கவில்லை. ஆனால் காதல் கொண்டேன் வந்தது. ஒரே நாளில் ஹீரோவாகிவிட்டேன்.

உங்கள் மனைவி ஐஸ்வர்யாவை சந்தித்தது பற்றி… ரஜினியின் மகள் என்பதால் அவரைக் காதலித்தீர்களா?

தனது மனைவி ஐஸ்வர்யா பற்றி அவர் கூறுகையில், “காதல் கொண்டேன் படத்தின் ப்ரிமியர் ஷோவின்போதுதான் ஐஸ்வர்யாவைச் சந்தித்தேன். இடைவேளையின் போது ஒருவருக்கொருவர் ஹாய் சொல்லிக் கொண்டோம். பின்னர் தியேட்டர் உரிமையாளர் என்னை ஐஸ்வர்யாவுக்கும் சௌந்தர்யாவுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் ஒரு நாள் ஐஸ்வர்யா எனக்கு ஒரு வாழ்த்தும் பூச்செண்டும் அனுப்பி வைத்திருந்தார். தொடர்பில் இருங்கள் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். நான் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டேன். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த தொடர்பு எங்கள் திருமணத்தில் முடிந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக மட்டும் நான் ஐஸ்வர்யாவைப் பார்க்கவில்லை. அவரது எளிமை எனக்குப் பிடிக்கும். நீங்கள் அவரது தந்தை (ரஜினி) எளிமையானவர் என்று நினைத்தால், ஐஸ்வர்யாவை ஒரு முறை சந்தியுங்கள். அவர் ரஜினி சாரைவிட 100 மடங்கு எளிமையானவர் என்பது புரியும். எல்லோரையும் அவர் ஒரே மாதிரி நடத்துவார். எளிதில் நட்பாகிவிடுவார். அதேபோல அவரது சிக்கலான மனநிலையும் எனக்குப் பிடிக்கும். என் மகன்களுக்கு அவர் அருமையான தாய். மிகச் சிறப்பாக அவர்களை வளர்த்து வருகிறார்.

நீங்கள் மரியான் மற்றும் ராஞ்ஜஹனா (அம்பிகாபதி) படங்களில் ஏ ஆர் ரஹ்மானுடன் இணைந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?

dhanush-and-ilayaraja

இதற்கு தனுஷ் அளித்த பதில், அவர் இளையராஜாவுக்கு எத்தனை பெரிய ரசிகர் என்பதை உணர வைத்துள்ளது.

“இளையராஜாதான் எனக்கு ரொம்பப் பிடித்த இசையமைப்பாளர். அவர் இசைதான் எனக்கு தாலாட்டு. அவர் இசைதான் எனக்கு சாப்பாடு. இவர் இசைதான் என் இளமைப் பருவம். அவர் இசைதான் என் முதல் காதல். என் தோல்விகளிலும் அவர் இசைதான் துணை நின்றது… அவர் இசைதான் என் முதல் முத்தம்.. அவர் இசைதான் என் முதல் காதல் தோல்வி… அவர் இசைதான் என் வெற்றி… அவர் என் ரத்தத்தில் கலந்திருக்கிறார்!!”

-என்வழி ஸ்பெஷல்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *