BREAKING NEWS
Search

‘ஒரு கள்ளக்காதலுன் கள்ளக்காதலியும் போல நானும் என் ஆர்மோனியமும் சந்தித்துக்கொண்ட நாட்கள்..’- இளையராஜா

‘ஒரு கள்ளக்காதலுன் கள்ளக்காதலியும் போல நானும் என் ஆர்மோனியமும் சந்தித்துக்கொண்ட நாட்கள்..’


ளையராஜா… எழுபதைத் தொடும் ஒரு இளைஞன்… நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசையால் ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் கிறங்கடித்திருக்கிறார் என்றால் மிகையல்ல.

எட்டு வயது சிறுவன் முதல் அறுபது வயது பெரியவர் வரை அனைவரும் ரசித்துக் கேட்டு மகிழ்கிறார்கள் இந்த இசையை. பெரிய ஸ்டோர்களில் வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கும் இல்லத்துப் பெண்மணிகள், நீதானே என் பொன்வசந்தம் இசைத் தட்டு விளம்பரத்தைப் பார்த்ததும், அந்த சிடி
ஒண்ணும் சேர்த்துக்கங்க, என்று சொல்வதை லேண்ட்மார்க் தொடங்கி பல கடைகளிலும் தினசரி காட்சிகளாகிவிட்டது.

இந்தப் படத்துக்கான அவரது இசை அறிமுகமான தினம், தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த படைப்பாளிகளும் கலைஞர்களும் நேரு உள்விளையாட்டரங்கில் கூடிவிட்டனர். ஒவ்வொரு இயக்குநரின் முகத்திலும்… – புதிய இசை வேண்டும் என யார் யாருடனோ பணியாற்றி, கடைசியில் ராஜாவின் பாதிப்பில்தான் அந்த இசையும் வருகிறது என்று புரிந்து – நேரடியாக அவருடன் பணியாற்ற ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்ற ஏக்கம். பலர் அதை நேரடியாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

இசையில் பழசு புதுசு என்று எதுவுமில்லை… அது கேட்பவரின் ரசனையில், மனநிலையில் இருக்கிறது என்பதை தலைமுறைகளைத் தாண்டி உணர்த்தி வருபவர் ராஜா ஒருவர்தான்.. அந்த வகையில் அவர் ஒரு இசை விஞ்ஞானி!

நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ் தொலைக்காட்சிகள் அத்தனையும் ஜெயாடிவியிடம் தோற்றுப் போயின என்றால் மிகையல்ல. ஏதோ ராஜாவின் தீவிர ரசிகன் என்ற மனநிலையில் எழுதுவதாக யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் 12 வீடுகளின் தொலைக்காட்சிகளிலும் ராஜாதான் பாடிக் கொண்டிருந்தார் என்பதை விட ஒரு சாம்பிள் வேண்டுமா!

இந்த நிகழ்ச்சியில் எது மிகச் சிறந்த பகுதி என்று சொல்ல முடியவில்லை. அத்தனையும் அற்புதமாக அமைந்திருந்தது. பலருக்கும் கவுதம் மேனன் மீது லேசான பொறாமை கூட எட்டிப்பார்த்திருக்கும். ராஜாவுக்கு தமிழ் சினிமா உலகமே நினைத்திருந்தாலும் இப்படி ஒரு சிறப்பான பாராட்டை தந்திருக்க முடியாது. அவரை அப்படியே கொண்டாடிவிட்டார் மனிதர்! அதே நேரம் இத்தனை தீவிர ராஜா ரசிகர், பத்தாண்டுகள் தொட்டுவிடும் தூரத்தில் நின்றபடி ரசித்துக் கொண்டிருந்திருக்கிறாரே என்ற நினைப்பில் அவர் உயர்ந்து நிற்கிறார்.

ரொம்ப இயல்பாக அமைந்த ராஜா – கவுதம் மேனன் உரையாடலும், அவரது நிறைவுப் பேச்சும்தான் நிகழ்ச்சியின் ஹைலைட் எனலாம்.

அதை இங்கே தருகிறேன்…

கவுதம் மேனன் ராஜாவை மேடைக்கு அழைக்கிறார்…

அவர் வருகையை எழுந்து நின்று வரவேற்கிறார்கள் அரங்கிலிருப்பவர்கள்… ராஜாவை விட சீனியரான பாலுமகேந்திரா உள்பட!

ராஜா பேச இல்லையில்லை.. பாட ஆரம்பிக்கிறார்… ஜனனி ஜனனி… பாடல். ஏக கரகோஷம். நீங்க சத்தம் போட்டா என்னால பாட முடியாது என அவர் சொல்ல அமைதி. பின்னர் கவுதமுடன் உரையாடல்…

“நீங்கள் துவக்குவதற்கு முன்னால் நான் துவக்குகிறேன். மற்ற கச்சேரிகளில் நீங்கள் விசிலடிப்பது சரி. ஆனால் இங்கு நீங்கள் இனிமேல் நீங்கள் விசில் அடிக்கக்கூடாது. அப்படி அடித்தால் நான் எழுந்து போய்விடுவேன். சப்தம் இல்லாமல் நீங்கள் அமைதியாக இருந்தால் இசையை அனுபவிக்கலாம். நீங்கள் இசைக்காக வந்திருக்கிறீர்கள். எனக்காக வந்திருக்கிறீர்கள். அந்த மரியாதைக்காக நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இது கமாண்ட் இல்லை. இனி விசில் அடிக்கவேண்டாம். தேவைப்பட்டால் கைதட்டலாம். ஓ.கே.வா?”

-என்று கேட்க (யாருக்கு இப்படி ஒரு ஆளுமையும் அந்த ஆளுமைக்கு சந்தோஷமாக கட்டுப்படும் ரசிகர் கூட்டமும் இருக்கும்!!), அரங்கில் அமைதி.

இப்போது இசைஞானியுடன் கவுதம் மேனன் உரையாடுகிறார்..

கவுதம் மேனன்: ‘நான் ராஜா சாருடன் கடந்த ஆறு மாதங்களாக நெருங்கிப் பழகியிருக்கிறேன் என்று சொல்லலாம். நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.

இப்போது அவர்கிட்ட சில விஷயங்களை கேட்கப் போறேன்… சார்.. இந்த ஹார்மோனியத்தில் இருந்துதான் இத்தனைப் பாடல்களும் உருவாகியிருக்கின்றன. இல்லையா?

இளையராஜா: இவன் (ஆர்மோனியம்) ஒருவனுக்குத்தான் என்னைத் தெரியும். இது வெறும் மரப்பெட்டி அல்ல.  என்னுடைய அண்ணன் பாவலர் வரதராஜன், கோயம்புத்தூரில் உள்ள எம்.என். பொன்னையா ஆசாரி என்பவரிடமிருந்து எண்பத்தைந்து ரூபாய் கொடுத்து இதை வாங்கி வந்தார். இதை அவர் வாங்கிவரும்போது நான் மிகவும் சிறுவன். இதில் நான் கைவைத்தால் அவர் என்னை கைகளை நீட்டச்சொல்லிப் பிரம்பால் அடிப்பார். அதுவும் கையைத் திருப்பிக் காட்டச் சொல்லி. ஆனாலும் அண்ணன் இல்லாத நேரத்திலே இந்த ஆர்மோனியப் பெட்டியை தொடுவேன். அதாவது ஒரு கள்ளக்காதலனும், கள்ளக்காதலியும் சந்திக்கின்றதைப்போல, நாங்கள் சந்தித்திருக்கிறோம் (சிரிப்புடன்). இந்த ஆர்மோனியத்திற்கு கவராக முதலில் ஒரு மரப்பெட்டி இருந்தது. அது பெரிதாக இருக்கும். கச்சேரிகளுக்குப் போய்த் திரும்பும்போது, பஸ் கிடைக்காமல், இதன்மேலேயே படுத்து நாங்கள் தூங்கியிருக்கிறோம்.

இதே பெட்டியை பாரதிராஜாவும் சேர்ந்து தூக்கியிருக்கிறார் (‘இதோ பாரதிராஜா வந்திருக்கான் பார்..!’ என்கிறார் ஆர்மோனியத்திடம் ராஜா!). நாங்கள் ஒன்றாக நடந்து வந்தவர்கள்தான். ஆனால் இப்போது அவர் எங்கோ இருக்கிறார். நான் எங்கோ இருக்கிறேன்…!

-இப்படி ராஜா கூறியதும், முன்வரிசையில் புன்னகையும் கண்களில் ஆனந்தக் கண்ணீரும் தேக்கியபடி அமர்ந்திருந்த பாரதிராஜா, இரு கைகளையும்  ‘அப்படியெல்லாம் இல்ல…’ என்ற பாவத்தில் ஆட்ட, அரங்கில் கரவொலி. ராஜா முகத்தில் புன்னகை!
 
கவுதம் மேனன்: அன்னக்கிளியில் இருந்து ‘நீதானே என் பொன்வசந்தம்’ வரை, உங்களுக்குள் ஒரு கம்போஸர் ஆக என்ன மாற்றத்தை உணருகிறீர்கள்?

இளையராஜா: “மாற்றம் என்று எதுவுமில்லை. இந்த விஷயம் எப்போதோ நடந்திருக்கலாம். முதல் படத்தில் இருந்தே ஒரு பாடல்போல இன்னொரு பாடல் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன்.  அப்படி இருந்திருந்தால் அது ஒரு ‘மாதிரி’தான். ஒரு பாடல்போல இன்னொரு பாடல் இருக்க முடியாது. ஒரு பாட்டுன்னா… அது ஒண்ணே ஒண்ணுதான்.

இந்தப் பாடல் மாதிரி வேண்டும்’ என்று டைரக்டர்கள்தான் என்னிடம் கேட்பீர்கள். ஆனால் நான் தரமாட்டேன். அந்த வகையில் நான் இயக்குநர் பேச்சை கேட்பதில்லை. ஆனால், கவுதம் என்னிடம் வருவதற்கு முன்பாகவே என்னை நன்றாகத் தெரிந்துகொண்டு, ‘சார்.. இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ரெகார்ட் செய்யலாம்’ என்றார். அவர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பது எங்கள் முதல் சந்திப்பில் அவர் அப்படிக்கூறியதுமே எனக்குத் தெரிந்துவிட்டது”.

கவுதம் மேனன்: “சார் உங்கள் குரலில் ஒரு மேஜிக் இருக்கிறது. உங்கள் குரலில் நான் நிறைய பாடல்களை விரும்பிக் கேட்டிருக்கிறேன்…

இளையராஜா: ரசிகர்களைப் பார்த்து, “நான் பாடணுமா?” எனக் கேட்க, ஆரவார ஆமோதிப்பு…

கவுதம் மேனன்: “சார்.. ஒரு ஐந்து பாடல்கள் நான் செலக்ட் பண்ணியிருக்கேன்…

இளையராஜா: (கொஞ்சம் எள்ளல் தொனியில்) “அது சரி..!”

கவுதம் மேனன்: ‘ஒருவேளை நீங்கள் மறந்திருந்தால் என்னசெய்வதென்று பாடல் வரிகளைக் கூட எழுதிக் கொண்டு வந்துவிட்டேன்..
முதலாவது, ‘கோடை காலக்காற்றே’..

இளையராஜா:    “குழந்தைகள் சுற்றுலா செல்லும்போது Backgroundல் வரும் பாடல் இது.’ இந்தப் படமும் அதுமாதிரி ஒரு கதை என்பதால் இந்தப் பாட்டை தேர்ந்தெடுத்திருக்கிறார் கவுதம் மேனன் என்று நினைக்கிறேன்… என்ன கரெக்டா (அதை ஒப்புக் கொள்கிறார் கவுதம்)… என்று கேட்டுவிட்டு பாடலின் முதல் சில வரிகளைப் பாடினார், கிடார் இசையுடன்!  பாடிமுடித்ததும், முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரம்ஜியைப் பார்த்து, ‘என்ன பிரேம்.. சரியா பாடினேனா.. நான் சரியா பாடறானேனான்னு நீதான் சொல்லணும்…’ என்று கூற, பிரேம்ஜி முகத்தில் அத்தனை சந்தோஷம்!

கவுதம் மேனன்: “சார்.. அடுத்து, ‘கண்மணியே காதல் என்பது’..

இளையராஜா: இது ஒரு புதுமையான பாடல். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு பாட்டுமே அப்படித்தான். “இந்தப் பாடலை  ஒரே மூச்சில் பாடவேண்டும்… அது பாலுவுக்கு  கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அன்றைக்கு 3 ட்ராக் வசதிதான். எனவே முதல்ல ஒரு பகுதியை பாடச் சொல்லி பதிவு செய்துவிட்டு, பாலுவால் முதலில் பாட முடியாத இடங்களில், இரண்டாவது ட்ராக் பாடச் சொல்லி இணைத்தோம்.

சொல்லிவிட்டு, அந்தப் பாடலின் சில வரிகளைப் பாடி முடித்தார்.  ‘அடுத்த பேப்பர்…’

கவுதம் மேனன்: …அடி ஆத்தாடி… சார்!

இளையராஜா:  ‘அடி ஆத்தாடி…இளமனசொண்ணு றெக்க கட்டி பறக்குது சரிதானா?,’ 80-களில் நாம் கேட்ட அதே குரலில் பாட, கண்களில் ஈரம் மினுங்க தலையாட்டி ரசித்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா.

கவுதம் மேனன்: ஒரு யூத்புல் படமாக வந்த அக்னி நட்சத்திரத்திலிருந்து ‘ஒரு பூங்காவனம்’..!

இளையராஜா: இந்தப் பாடலைப் பற்றிச் சொல்லவேண்டும். பொதுவாக டைரக்டர்கள்  பாடல் காட்சிகளை யோசிக்கும்போது, ‘இந்த இடத்தில் பாடல் வரவேண்டும், அதில் கமர்ஷியலா விஷயங்கள் சேர்ந்திருக்கவேண்டும். அதன்பின்னர் இத்தனை ரீல்கள் தள்ளி ஒரு பாடல்வரவேண்டும். அதன்பின்னர் இன்டர்வெல் அப்போ பாடல் வரக்கூடாது” என்று ஒரு முடிவோடுதான் என்னிடம் வருவார்கள். அவர்களுக்குப் பாட்டை ஹிட்டாக்கவேண்டும். ஆனால் எனக்கு என் ட்யூன் ஹிட்டாகணும்.

இந்தப் பாட்டு ஒரு நீச்சல்குளத்தில் பெண் குளிப்பதுபோன்ற சிச்சுவேஷன்.. எனவே கமர்ஷியலாத்தான் இருந்தாகணும். ஆனா நான் ரிவர்ஸில் போய், இதை மெதுவான பாட்டாக தரவேண்டும் என முடிவு செய்துவிட்டேன். இயக்குநரிடம் எதுவும் சொல்லவில்லை. பின்னர் யோசித்துப் பார்த்தேன். அந்த நேரத்தில் எனக்கு ஒரு ராகம் நினைவுக்கு வந்தது.  அந்த ராகத்தில் ஒரே ஒரு நோட் மட்டுமே சேர்த்துக் கொண்டேன். இந்தப் பாடலுக்கு அப்படி ஒரு கதை இருக்கிறது”.

-இந்தப் பாட்டுக்கு தான் உபயோகித்த ராகம், அது ஒரு பூங்காவனம் என்ற மெட்டாக மலர்ந்த விதத்தையும், பல்லவிக்குப் பிறகு, பிடிபட மறுத்த சரணத்துக்கான மெட்டையும் அவர் வாசித்துக் காட்டிய விதம், சங்கீதம் புரிந்தாலும் புரியாவிட்டாலும்.. ரசிக்க வைத்தது!

கவுதம் மேனன்: கடைசியா… ‘தென்றல் வந்து தீண்டும்போது’..

இளையராஜா: இந்தப் பாட்டை ராஜா வார்த்தைகளில் பாடவில்லை. வெறும் தத்தகாரத்தையே பாட்டாக்கி மயக்கினார்.

கவுதம் மேனன்: உங்களுடைய பாடல்கள் என்று இல்லாமல் வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் பற்றி சொல்ல முடியுமா…

இளையராஜா: அது ஒண்ணா… ரெண்டா… இந்த நிமிஷத்தில் துவங்கினாலும் எனக்குப் பிடித்த இசையைக் கேட்டு முடிக்க இன்னும் எனக்கு எத்தனையோ ஜென்மங்கள் எடுக்கவேண்டும். அவர்களின் பெருமையை உங்களுக்குச் சொல்லவேண்டுமென்றால்… ஒரேவிதமான ஸ்வரங்களை உபயோகித்திருப்பார்கள். ஆனால் அவற்றுக்கு ஒவ்வொருவரின் அப்ரோச்சும் வேறுவிதமாக இருக்கும். பிரசன்டேஷன் வேற மாதிரி இருக்கும்.  ஒரே ட்யூன்தான்.

உதாரணமாகச் சொன்னால், ஆஜா ரே… என்ற பாடல். இதே ராகத்தில் அமைந்த இன்னொரு ட்யூனை வேறு கம்போஸர் எப்படி உபயோகிக்கிறார் என்று பாருங்கள்… மாயி ரே… இதையே, நம்ம ஆள் (எம்எஸ் விஸ்வநாதன்) பாலிருக்கும்.. பழமிருக்கும்…

இப்ப ஆஜா ரே.. மாயி ரே… பாலிருக்கும்… ஒரே ட்யூன், எத்தனை வித்தியாசம்?

-என்று கேட்க, அந்த உரையாடல் முடிந்து, நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் அரங்கேற்றம், இயக்குநர்கள் அணனுபவங்கள் எல்லாம் நடந்து முடிகின்றன.

நிகழ்ச்சியின் இறுதியில் இசைஞானி பேசியது:

இந்தப் படத்திற்கான இசை சாதாரணமாக நடந்து முடியவில்லை. என்கிட்ட கவுதம் மேனன்,’நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இந்த படத்தின் இசையை ரெக்கார்ட் பண்ணிக்கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

நான் அவரிடம் எதையும் சொல்லாமல் ரெக்கார்டிங்கைத் துவக்கினேன். இந்தப் பாடலின் வடிவம், ஆர்கெஸ்ட்ரேஷன் இப்படித்தான் இருக்கும் என்றெல்லாம் எதையும் அவரிடம் நான் சொல்லவில்லை.

‘நீங்கள் எப்படி செய்தாலும் எனக்கு ஓ.கே.’ என்று அவர் விட்டுவிட்டார். ஆனால் ட்யூன் செலக்ட் பண்ணும்போது மட்டும் சரியான ட்யூன்களை செலக்ட் செய்தார். ‘காற்றைக் கொஞ்சம்’ பாடல், ஒரு சின்ன ‘பிட் சாங்’காகத்தான் செய்தேன். அதை முழுப் பாடலாக டெவலப் பண்ணிக் கேட்டார்.

அதேபோல ஒரு சிச்சுவேஷனுக்குக் கொடுத்த இரண்டு மூன்று ட்யூன்களில் வேண்டியதை மட்டும் எடுக்காமல், மற்ற ட்யூன்களையும், ‘சார் இது கதையில் இந்த இடத்தில் உபயோகமாக இருக்கும்’ என்று வாங்கிக்கொண்டார்.

இந்தப் படத்திற்கு நல்ல இசை வேண்டும் என்று அவர் மெனக்கெட்ட அந்தக் கடின உழைப்பிற்கு நீங்கள் அவருக்குதான் நன்றி சொல்லவேண்டும். இப்படி ஒரு ஆர்க்கெஸ்ட்ராவுடன் இப்படி ஒரு ஷோவை நடத்துவது சாதாரணமான விஷயம் அல்ல,” என்றார்.

-எஸ்எஸ்
என்வழி ஸ்பெஷல்
3 thoughts on “‘ஒரு கள்ளக்காதலுன் கள்ளக்காதலியும் போல நானும் என் ஆர்மோனியமும் சந்தித்துக்கொண்ட நாட்கள்..’- இளையராஜா

  1. gowrisankar

    ராஜா ஒரு சகாப்தம் அவர் தந்த இசை இன்னும் பல நுட்ராண்டுகள் பேசும்
    இந்தி பட உலகம் சொக்கி போய் நின்றது அவரிடம் அவர் நல்ல உடல் நலத்துடன் இன்னும் தமிழுக்கு இசைக்கும் சேவை செய்ய நல்ல உடல் நலத்துடன் வாழ இறவனை பிரார்த்திக்கிறேன் .

    கௌரிசங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *