BREAKING NEWS
Search

‘அம்மம்மா காற்றுவந்து ஆடை தொட்டுப் போகும்…’ – இசைஞானியின் வைகை அணை ப்ளாஷ்பேக்

‘அம்மம்மா காற்றுவந்து ஆடை தொட்டுப் போகும்…’ – இசைஞானியின் வைகை அணை ப்ளாஷ்பேக்


சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, தனது இளமை நாட்களில் பார்த்த முதல் ஷூட்டிங், ஜெயலலிதாவின் வெண்ணிற ஆடை படப்பிடிப்புதான் என்றார்.

விழாவில் இளையராஜா பேச்சு சுருக்கமாக, ஆனால் கச்சிதமாக இருந்தது.

அவர் பேசியது:

கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்களைத் தந்து நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு முதல்வர் இப்படி பெரிய பாராட்டுவிழா நடத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

சிறு வயதில், நான் படிக்க மிகவும் கஷ்டப்பட்ட காலம். அப்போது பள்ளிக்குப் போகும் நேரம் போக, மீதி நேரத்தில் வைகை அணையில் வேலை செய்து கொண்டிருந்தேன்.  அங்கு ஹோஸ் பைப்பில் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது என் வேலை.

ஸ்ரீதர் சார் என்றால் எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு ஆசை. எங்களுக்கெல்லாம், எனக்கு, பாரதிராஜாவுக்கு, அண்ணன் பாஸ்கருக்கெல்லாம் அவர்தான் ஹீரோ. வெண்ணிற ஆடை படப்பிடிப்புக்காக அவர்கள் வைகை அணைக்கு வந்திருந்தபோது நானும் மற்றவர்களும் அடங்காத ஆர்வத்தோடு கூட்டத்தோடு கூட்டமாக பார்த்த முதல் ஷூட்டிங் அதுதான்.

அந்த ஷூட்டிங்குக்காக முதல்வர் அவர்களும் அன்று வந்திருந்தார்கள். ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் போகும்… (பாடிக் காட்டுகிறார்…) என்ற பாடலுக்கு அவர்கள் நடித்தார்கள்.

மிக அருமையான பாடல். என் நினைவு தெரிந்த நாள் முதலாய் நான் கேட்டது கேட்டுக் கொண்டிருப்பது அண்ணன் எம்எஸ்வி அவர்களின் இசையைத்தான். எத்தனையெத்தனை பாடல்கள். ஒவ்வொன்றும் கேட்கத் திகட்டாதவை. என் உடம்பில் நாடி நரம்பிலெல்லாம் அந்த இசைதான் ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்று எனக்குள் இருக்கும் இந்த இசை அண்ணன் எம்எஸ்வி போட்ட பிச்சைதான். அவர் தூ என துப்பியதுதான்.. என்றால் மிகையல்ல.

அவர்களை வேறு என்ன சொல்லி வாழ்த்தினாலும் சரியாகாது. இசை வடிவங்களாகத் திகழும் இந்த மேதைகளை உரிய நேரத்தில் கவுரவித்த முதல்வர் அவர்களுக்கும், ஜெயா டிவிக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு இளையராஜா பேசினார்.

விழாவில் கமல்ஹாஸன் பேசியது:

“இது என் குடும்பம். அதேபோல் முதல்-அமைச்சரும் நினைத்ததால் தான் இங்கே நம்முடன் அமர்ந்திருக்கிறார். என் குருநாதர் கே.பாலச்சந்தர் அவர்கள் சொன்னது போல, நாங்கள் செய்யவேண்டியதை நீங்கள் செய்து எங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை மூன்று, நான்கு தலைமுறைகளையும் தாண்டி இன்றைய தலைமுறையையும் கவர்ந்திருக்கிறது. என் மகளை நான் இசை பயில அமெரிக்கா அனுப்பி வைத்தேன். அவள் இசைப்பயிற்சி முடித்ததும் என்னிடம் போனில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வந்த ஒரு பாடலை டியூன் பண்ணி ‘இது யாருடைய இசை?’ என்று கேட்டாள். அந்த அளவுக்கு இந்த தலைமுறையையும் கவர்ந்தது இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.

அதன்பிறகு அவள் பயிற்சி முடிந்து வந்ததும் நேராக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அழைத்து வந்தேன். இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை எனறார், இளையராஜா. அவரே அப்படி சொல்லி விட்ட பிறகு நான் என்ன சொல்லிப் பாராட்டுவது?”, என்றார்.

கே பாலச்சந்தரும் பேசினார்.  எம்எஸ்வியுடன் இணைந்து தான் தமிழ் தெலுங்கில் பணியாற்றிய 34 படங்களின் வெற்றிகளை, அவரது காலடியில் சமர்ப்பிப்பதாகவும், எம்எஸ்விக்கு பத்ம விருது கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.

விழாவில் நெருடலாக அமைந்தது ஏவிஎம் சரவணன் பேச்சு. அவர் தனது பேச்சில், “மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் எங்களுடைய எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு கிடைக்கவில்லை என்ற மனக்குறை எங்களுக்கு உண்டு. அவருக்குப் பின் வந்த இளையராஜா, ரஹ்மானுக்கு  கிடைத்திருக்கிறது. அது அவர்கள் திறமைக்காக கிடைத்தது என்றாலும், இவர்களுக்கும் கிடைக்க வேண்டும்”, என்றார்.

-என்வழி செய்திகள்

மேலும் படங்களுக்கு…

 
One thought on “‘அம்மம்மா காற்றுவந்து ஆடை தொட்டுப் போகும்…’ – இசைஞானியின் வைகை அணை ப்ளாஷ்பேக்

  1. chozan

    உண்மையிலேயே பாராட்ட கூடிய ஒரு நிகழ்ச்சி. இதில் ரஜினியும் கமலும் மிகவும் இளமையாக இருக்கிறார்கள் அவர்களுக்கு பிறகு வந்தவர்கள்/பிறந்தவர்கள் கிழவனாக ஆகிவிட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *