BREAKING NEWS
Search

டாக்டர் ராமதாஸ், அன்புமணி, தேன்மொழிதான் இளவரசன் சாவுக்கு காரணம்! – தந்தை இளங்கோவன் புகார்

பாமகவினர் & திவ்யாவின் தாய் தேன்மொழி மீது இளவரசன் பெற்றோர் புகார்

ilavarasanfather

தர்மபுரி:  தன் மகன் இளவரசன் சாவுக்கு பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், அவர் மகன் அன்புமணி, திவ்யாவின் தாய் தேன்மொழி உள்ளிட்ட 12 பேர்தான் காரணம் என புகார் கூறியுள்ளனர் தர்மபுரி இளவரசனின் பெற்றோர்.

இளவரசனின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அவர் ரயில் அடிபட்டி இறக்கவில்லை என்பது கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகியுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையும் அதற்கு வலு சேர்த்துள்ளது.

எனவே இளவரசன் உடலை வாங்க மறுத்த பெற்றோர், மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். எனவே இளவரசன் உடல் தர்மபுரி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இளவரசனின் பெற்றோர் இளங்கோ – அம்சவேணி ஆகியோர் தர்மபுரி மாவட்ட கலெக்டர் லில்லியிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்கள்.

அந்த மனுவில் எனது மகன் சாவுக்கு பா.ம.க. தலைவர்கள், டாக்டர் ராமதாஸ். அன்புமணி, திவ்யாவின் தாய் தேன்மொழி, , தர்மபுரி முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், மாநிலத் துணைச் செயலாளர் சரவணன்,  அவர்களது வழக்குரைஞர் பாலு, செல்லன்கோட்டாய் பகுதியைச் சேர்ந்த ராஜா, முருகேசன் மற்றும் 12 பேர் தான் பொறுப்பு. மேலும் என் மகன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த புகாரை பெற்றுக் கொண்டுள்ள போலீசார், இதற்கான விசாரணை குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. புகாரையும் இன்னும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசன் கொலை செய்யப்பட்டான் – தாய் அம்சவேணி

Ilavarasan_1507692g

என் மகன் தற்கொலை செய்யவில்லை. அப்படி ஒரு மனநிலையில் அவன் இல்லை. அவன் கொல்லப்பட்டிருக்கிறான் என்பதே உண்மை என இளவரசனின் தாயார் அம்சவேணி கூறினார்.

தர்மபுரியில் இன்று இளவரசன் தாயார் அம்சவேணி நிருபர்களிடம் கூறுகையில், “நான் கடந்த 3-ந்தேதி விலையில்லா மிக்சி, கிரைண்டர் வாங்க நத்தம் காலனிக்கு சென்றேன். அன்று காலை ஏ.டி.எம். சென்டரில் இருந்து பணம் எடுத்து வர சொல்லி இளவரசனை எனது கணவர் அனுப்பினார். அவன் ரூ.2 ஆயிரம் பணத்தை வைத்து கொண்டு மீதி ரூ.7 ஆயிரத்தை எனது கணவரிடம் கொடுத்துள்ளான்.

பின்னர் நண்பர்களுடன் வெளியே செல்வதாக கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றான்.

இந்தநிலையில் நான் உறவினர் வீட்டில் இருந்த போது பகல் ஒரு மணி அளவில் எனது மகன் இறந்தது எனது உறவினர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அவர்கள் என்னிடம் தகவல் சொல்ல வில்லை. சிறிது நேரம் கழித்துதான் தகவல் சொன்னார்கள்.

நான் அவன் இறந்து கிடந்த இடத்திற்கு சென்று பார்த்தேன். அவன் தற்கொலை செய்து கொண்டது போல் தெரிய வில்லை. அவன்தான் அன்று காலையில் எங்களுக்கு நம்பிக்கை சொன்னான். நிலைமை சீக்கிரம் சரியாகிடும்மா என்றான்.

அவன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. இது கொலைதான். அவனை யாரோ கொன்று போட்டிருக்கிறார்கள்.

திவ்யா பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்ட எதையும் அவன் எடுத்துச் செல்லவில்லை. அவை வீட்டிலேயே உள்ளன. அதனை பார்த்தால் திவ்யாவின் ஞாபகம் அவனுக்கு வரும் என்பதால் நாங்கள் எங்களது சொந்த வீட்டுக்குக் கூட  போகவில்லை,” என்றார்.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *