BREAKING NEWS
Search

இளவரசனுக்கும் ரயிலுக்கும் யாதொரு பகையுமில்லை!

காதலுக்கு ஜாதி உண்டு, மதம் உண்டு… மனிதம்தானில்ல!

012

தொலைக் காட்சிகளுக்கு இளவரசன் போரடித்துவிட்டான். ஒருவேளை அங்கும் ஊடரங்கு வந்துவிட்டதோ என்னமோ… புதிய செய்திப் பொழுதுபோக்குக்கு காமிராக்களை திருப்பிக் கொண்டன அவை. மீடியா மூலம் நியாயம் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பதெல்லாம்… அதுவும் தலித்களுக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பது மூட நம்பிக்கையே.

தொலைக்காட்சி, பத்திரிகைகள் அனைத்துமே இளவரசனை தற்கொலை செய்து, அவனது சவப்பெட்டியை எப்போதும் திறக்க முடியாதபடி கடைசி ஆணி அடிக்கவே விரும்புகின்றன.

ஆனால் மனிதனாய் பிறந்த யாரும் இந்த கோரத்தை அப்படியே கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.

ஆதவன் தீட்சண்யா  எழுப்பியிருக்கும் இந்த நியாயமான சந்தேகங்களையும் காட்சி ஊடகம் மறைத்து வருகிறது. நாமாவது சொல்லிக் கொண்டிருப்போம்.. ஒன்றும் ஆகிவிடப் போவதில்லைதான்.. இருந்தாலும் எதிர்கால இளவரசன்கள் கவனத்துக்காக…

-வினோ

இளவரசனுக்கும் ரயிலுக்கும் யாதொரு பகையுமில்லை!

ilavarasan (1)

த்தம் இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்றொரு செய்தி வேகவேகமாக பரப்பப்படுகிறது. அதாவது அவரது மரணத்தை தற்கொலையாக மட்டுமே பார்க்குமாறு நம்மை யாரோ தூண்டுகிறார்கள்.

இந்த சூது புரியாமல், ‘இவ்வளவு நாளும் உறுதியாயிருந்த நீ இப்போது ஏனடா மாய்த்துக் கொண்டாய்?’, ‘தம்பி நீ தைரியமா இருந்திருக்கணும்டா…’, ‘அறியாத வயதில் எடுத்த அவசர முடிவு’ என்றெல்லாம் சென்டிமென்டாக உளறுகிறவர்களும் தங்களையறியாமலே இதை தற்கொலையாக நிறுவுகிறார்கள். சடலம் கிடக்கும் நிலையை மேலோட்டமாக பார்த்தாலேகூட நமக்கு பல்வேறு சந்தேகங்கள் வருகின்றன.

1. ஆட்டோ மோதினால்கூட ஐந்தாறு அடி தூரம் தள்ளிப்போய் விழுவோம். ஆனால் ரயிலின் முன் பாய்ந்ததாக சொல்லப்படும் இளவரசனின் சடலம் தண்டவாளத்திற்கு அருகாமையில் நாலடிக்கும் குறைவான தூரத்திலேயே விழுந்து கிடக்கிறது.

2. சடலம் கிடந்த இடம் தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம். அங்கிருந்து நான்கு கிலோமீட்டருக்கும் கூடுதலான தூரத்தில் ரயில்நிலையம் இருப்பதால், குறிப்பிட்ட அப்பகுதியில் ரயிலின் வேகம் குறைக்கப்படுவதில்லை. எனில் வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு ரயிலின் முன்புதான் இளவரசன் பாய முடியும். அவ்வாறானால் இளவரசனின் உடல் வெகுதூரத்திற்கு வீசி எறியப்பட்டிருக்கும். தவிரவும், மோதிய வேகத்தில் உருவமே உருக்குலைந்து சதைத்துண்டங்களாகி தெறித்துச் சிதறியிருக்கும்.

ஒருவேளை குறைவான வேகத்தில் வந்த ரயிலின் முன் பாய்ந்திருந்தால், தூக்கி வீசுவதற்கு பதில் மோதிய வேகத்தில் ஆளை விழுத்தாட்டி தனது அடிபாகங்களால் அரைத்து கூழாக்கிவிட்டுத்தான் போயிருக்கும். ரயிலின் எந்த பாகத்தில் ஓரமாக மோதியிருந்தாலும் ஒட்டுமொத்த முகமுமே சிதைந்திருக்கும். ஆனால் இளவரசனின் ஒருபகுதி முகத்தில் மட்டுமே காயங்கள். மண்டையின் பின்புறமாக மோதியிருந்தாலும் ஒட்டுமொத்த தலையும் சிதைந்து சேதமடைந்திருக்கும்.

3. ரயிலின் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்திருந்தாலும்கூட மல்லாந்த நிலையில் குறுக்குவாட்டாகத்தான் விழுந்திருக்க முடியும். இப்படி தண்டவாளத்துக்கு இணையாக அந்த மோரிக்கல்லின் (சிறுபாலத்தில்) ஓரத்தை அணைத்தபடி விழுவது சாத்தியமில்லை.

இளவரசனின் உடையில்கூட சிறு கசங்கலை ஏற்படுத்தாமல், உடலின் எந்த பாகத்திலும் சேதாரம் விளைவிக்காமல் முகத்தின் ஒரு பகுதியை மட்டுமே சிதைத்து மூளையை வெளியே இழுத்துச் சிதறவிட்டிருக்கிற வினோதமானதொரு ‘ரயிலில் விழுந்த தற்கொலை’யை உலகம் இதுவரை கண்டதில்லை.

4. இளவரசன் – திவ்யா விஷயத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடந்த விசயங்களை தொகுத்துப் பார்த்தால் இது தற்கொலையாக இருக்க முடியாது என்கிற முடிவுக்கு எளிதில் வந்து சேரமுடியும். ‘எனது தாய் சம்மதித்தால் எனது கணவருடன் இணைந்து வாழவே விரும்புகிறேன்’ – என்று திவ்யா தெரிவித்த கருத்தை யாராலோ ஏற்க முடியவில்லை. அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையிலேயே முதல்நாள் தெரிவித்த கருத்துக்கு மாறான நிலைப்பாட்டை மறுநாள் தெரிவிக்கிறார் திவ்யா.

அழுத்தங்கள் இல்லாத இயல்பான நிலையில் இளவரசனோடு சேர்ந்து வாழ்வதையே திவ்யா விரும்புகிறார் என்பதை இந்த இருவேறு நிலைப்பாடுகளிலிருந்து உணரமுடிகிறது. இளவரசன் உயிரோடு இருக்கும்வரை திவ்யாவிடம் இந்த ஊசலாட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதால்தான் இளவரசன் பிணமாக்கப்பட்டிருக்கிறார். எப்படி யாரால் பிணமாக்கப்பட்டார் என்பதுதான் கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறதே தவிர தற்கொலையா கொலையா என்பதல்ல.

ஆதவன் தீட்சண்யா
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *