BREAKING NEWS
Search

இளவரசன்… மரணத்தைத் தழுவுவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்!

இளவரசன்… பிணமாவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்!

Ilavarasan_1507692g
ர்மபுரி இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொண்டதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது ரயில்வே போலீஸ்.

அவன் உடலைத் தண்டவாளத்துக்கருகே போலீஸ் கண்டெடுப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு வரை, தன் வேலை, படிப்பு, திவ்யாவுடனான எதிர்காலம் என நண்பர்கள், உறவினர்களுடன் நம்பிக்கையோடு பேசிச் சென்ற அந்த இளைஞன், குடித்துவிட்டு ரயில்முன் பாய்ந்ததாக வழக்குப் புனைந்திருக்கிறார்கள்.

நியாயங்களின் வாயைக் கட்டி வைத்துவிட்டு பொய்சாட்சிகளை பேச விடும் சட்டங்கள் அல்லவா… எப்படியும் கதை புனையலாம்.

ஆனால் உண்மையில் நேற்று பிணமாவதற்கு முன் இளவரசன் என்ன செய்தான் என்பதை அங்கிருந்த தன்னார்வலர்கள் சிலர் தகவல் திரட்டி ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளனர். அவற்றின் தொகுப்பு…

ரயில் தண்டவாளம் அருகே இளவரசன் உடல் கிடந்தது என்பதால் அவர் ரயில் முன்னே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இறந்ததாகக் கூறப்படும் நேரத்தில் எந்த ரயிலும் தண்டவாளத்தைக் கடக்கவில்லை என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள், ஆரம்பத்தில். பின்னர் அமைதியாகிவிட்டது வேறு விஷயம்.

ஒரு ரயிலின் முன்னே ஆடு மாடு பாய்ந்து இறந்தால் கூட சம்பந்தப்பட்ட ரயிலின் டிரைவர் அதை அருகில் உள்ள ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் கடந்து சென்ற குர்லா எக்ஸ்பிரசின் ஓட்டுநர் அப்படி ஒரு தகவலை ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவிக்கவில்லை. தருமபுரி ரயில் நிலையத்தின் கேங்க் மேன்னாக வேலை செய்து வரும் கவுடு எனும் தொழிலாளிதான் இளவரசன் உடலைக் கண்டு ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவித்திருக்கிறார். இத்தகவல்களை தருமபுரி ஸ்டேசன் மாஸ்டரும், தொழிலாளி கவுடுவும் உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆனால், 6 மணி நேரம் கழித்து, ரயில் ஊழியர் ஒருவர் தகவல் கூறியதாகக் குறிப்பிட்டு தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார்.

3-ம் தேதி அதாவது நேற்றுமுன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் இளவரசன் தருமபுரியில்தான் இருந்திருக்கிறார். அன்று நத்தம் காலனி இளைஞர்களுடன் வழக்கம் போலவே கலகலப்பாக இருந்துள்ளார் இளவரசன்.

4-ம் தேதி இன்று காலையில் சுமார் 7 மணிக்கு அருகில் உள்ள மலையப்பன் நகருக்குச் சென்று அங்கே உள்ள தனது மாமா முருகனை, இளவரசன் சந்தித்திருக்கிறார். மாமாவிடம் தினத்தந்தியில் வந்த செய்தியினைக் காண்பித்து திவ்யா இப்படி கூறியிருக்கிறாளே இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டிருக்கிறார். இனி தனக்கு கிடைக்க இருக்கும் போலீஸ் வேலைக்கு செல்வதாகவும், மேற்கொண்டு படிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இளவரசனும் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த வழக்கில் இருந்து தான் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட பிறகு போலீஸ் வேலை கிடைப்பது உறுதி என்று இளவரசன் நம்பினார். அது வரை ஆந்திரா சித்தூருக்கு நண்பர்களுடன் சென்று வேறு வேலை பார்க்கப் போவதாக இளவரசன் தனது மாமாவிடம் சகஜமாக கூறியிருக்கிறார்.

மாமாவிடமிருந்து கிளம்பிய இளவரசன் தனது அப்பாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இளவரசன் தந்தை தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை துறையில் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் தொலைபேசியில் பேசிய இளவரசன், அப்பாவிடம் இருக்கும் பல்சர் வண்டி வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதன்படி அப்பாவைப் பார்த்து பல்சர் வண்டியினை வாங்கியிருக்கிறார். கூடவே ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட பணம் 9000-த்தை சீட்டு கட்டுவதற்காக அம்மாவிடம் கொடுத்திருப்பதையும் தந்தையிடம் கூறுகிறார்.

பல்சர் வண்டியினை அப்பாவிடம் வாங்கிக் கொண்டு தருமபுரி நகரப்பகுதியான பாரதிபுரத்தில் இருக்கும் அத்தையைப் பார்க்கப் போயிருக்கிறார். அத்தையிடம், தருமபுரி அருகே உள்ள வண்ணாம்பட்டி எனும் நகரப் பகுதியில் இருக்கும் ஒரு நண்பனைப் பார்க்கச் செல்வதாகக் கூறியிருக்கிறார். இந்த நண்பர் வன்னியர் சாதியினைச் சேர்ந்தவர். முந்தைய நாள் இரவு இவர் நத்தத்தில் இளவரசனோடு அவரது வீட்டிலேயே தங்கியிருந்தவர்.

இவரைப் பார்க்கப் போவதாகக் கூறியபோது, ‘வெளியே போகாதப்பா.. நிலைமமை சரியில்ல.. முகத்தை மறைத்துக் கொண்டு போ,’ என்றெல்லாம் கூறியிருக்கிறார்.  ஆனால் அதை மீறி நண்பனைப் பார்க்கப் போயிருக்கிறார் இளவரசன்.

அதன் பிறகு இளவரசன் எங்கு போனார் என்ற தகவல் கிடைக்கவில்லை. இளவரசன் கிளம்பிப்போன ஓரிரு மணி நேரங்களுக்குள், அவர் தந்தைக்கு தெரிந்த போலீஸ் பழனியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அதன்படி தண்டவாளம் அருகே பல்சர் வண்டி நிற்பதாகக் கூறியிருக்கிறார் கான்ஸ்டபிள். அங்கே சென்று பார்த்தபோது தனது மகன் ஓரத்தில் மண்டை பிளந்து பிணமாகக் கிடத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்.

இளவரசன் ரயிலில் பாய்ந்து அடிபட்டதற்கான பெரிய காயங்கள் அவரது உடலில் இல்லை. இடது கையில் ஒரு வெட்டுக் காயமும், தலை பிளந்தது போன்ற காயமும் இருந்தது. மூளை சிதறி இருந்தது. அவரது உடல் அருகே வாழைப்பழத் தோல் மற்றும் திறக்கப்படாத ஒரு மது பாட்டில்.  கூட இருந்த பையில் 2011-ல் அவர்களுக்கிடையே பறிமாறப்பட்ட காதல் கடிதங்கள்.

வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றபோது இளவரசன் பை எதையும் எடுத்துப் போகவில்லை என்கிறார்கள்.

இது தற்கொலை என்பதை யாரும் நம்பவில்லை. ஊர் மக்களுடைய கருத்தும் அதுவேதான். வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொண்ட இளவரசன், தனக்கு ஆறுதல் சொல்ல வந்த உறவுக்காரர்களுக்கு தைரிமாக ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

003

அப்படிப்பட்ட ஒரு இளைஞன் ரயில் முன் பாய்ந்தார் என்பது கட்டுக்கதையாகவே பார்க்கப்படுகிறது.

நேர்மையான போலீஸ் அதிகாரி என பெயரெடுத்த அஸ்ரா கார்க்தான் தர்மபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இருக்கிறார். அவர் நிச்சயம் நியாயம் செய்வார் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது.

இளவரசனின் மரணத்தை திவ்யாவின் ஊரான செல்லங்கொட்டாய் மற்றும்  பெரியார் மேட்டுப்பட்டி, அரியாகுளம் போன்ற ஊர்களில் இருக்கும் வன்னிய சாதி வெறியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் சென்று அருகாமை வட்டாரங்களில் தகவலை தெரிவித்துவிட்டு கூடவே பட்டாசையும் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இளவரசனது உடல் தருமபுரி மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கொடுமை என்ன தெரியுமா… இளவரசன் உடல் வைக்கப்பட்டிருக்கும் அதே பிணவறைக் கிடங்கில்தான் வேலைப் பார்க்கிறார் அவரது தந்தை!

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *