BREAKING NEWS
Search

எம்ஜிஆர் தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும்! – தலைவர் ரஜினிகாந்த் அதிரடி

சென்னை: புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும் என்று தலைவர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து ரஜினிகாந்த் பேசியதாவது:

இது ஒரு பல்கலைக்கழக விழா என்று நினைத்தேன். ஆனால் இது கட்சி மாநாடு போல உள்ளது. இதை நான் அரசியல் மேடையாக ஆக்கக்கூடாது, இங்கு அரசியல் பேசக்கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். அந்த நினைப்பின் திரியை ஏ.சி.சண்முகம் பற்ற வைத்துவிட்டார்.

அரசியல் பேசக்கூடாது என்று அழுத்தமாக இருந்தேன். ஆனால் பேசும் அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளேன். சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறேன், மற்றவைகளை வேறு விழாக்களில் வைத்துக்கொள்வோம்.

எம்.ஜி.ஆரைப் போல சினிமா உலகில் இருந்து இன்னொருவர் அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள். ‘பேண்ட்-சர்ட் போட்டு மேக்கப் போட்டு கதாநாயகிகளுடன் டூயட் பாட நாங்கள் வரவில்லை. நீங்கள் ஏன் கரைவேட்டி கட்டி எங்கள் வேலைக்கு வருகிறீர்கள்?’ என்கிறார்கள். அய்யா நான் மற்றவர்களைப் பற்றி பேசவில்லை. என்னைப் பற்றி மட்டும் சொல்கிறேன். இந்த 67 வயதிலும் ஒரு நடிகனாக என் வேலையை நான் சரியாக செய்துகொண்டிருக்கிறேன், நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யவில்லையே?

1996-ல் இருந்து அரசியல் என்னும் நீர் என் மீதும் பட்டுவிட்டது. அதனால் அரசியல் நெளிவு சுளிவுகளை தெரிந்துகொள்ள ஆரம்பித்து வந்தேன். என் நண்பர் கருணாநிதி, அய்யா மூப்பனார், நண்பர் சோ அவர்களுடன் பழகி நானும் கொஞ்சம் அரசியல் கற்று இருக்கிறேன். எங்கெங்கே தப்பு நடக்கிறது, அதை எப்படி தடுப்பது என்று எனக்கு தெரியும். எனக்கும் மக்களுக்கு செய்யவேண்டிய கடமை இருக்கிறது. எனவேதான் அரசியலுக்கு வருகிறேன்.

நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதும் என்னை ரத்தின கம்பளத்தில் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் ஏளனம் செய்கிறார்கள். ஏன் இந்த அளவு கிண்டல், ஏளனம்? அரசியல் பாதையானது பூ மாதிரி கிடையாது என்பது எனக்கும் தெரியும், அரசியல் பாதையானது, முள்ளுகள், பாம்புகள், கற்கள் நிறைந்தது என்பது எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். இருந்தும் ஏன் ஏளனம் செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை. இந்த வயதிலும் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னால், ஏன் ஏளனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த திட்டுப்பிடி அரசியல் வேண்டாம். இதனை இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என சொல்கிறார்கள். சினிமாவில் இருந்துவரும் யாரும் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது. சினிமாவில் இருந்து அவரைப் போல யாரும் அரசியலில் ஜொலிக்க முடியாது என்கிறார்கள்.

சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆராக முடியாது. எம்.ஜி.ஆர். யுக புருஷர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம். இன்னும் நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரை போன்று யாராலும் வர முடியாது. அவரே மீண்டும் பிறந்து வந்தால் மட்டும்தான் உண்டு.

எம்.ஜி.ஆரை போல ஒருவர் வருகிறேன் என்று சொன்னால் அவனை விட பைத்தியக்காரன் யாரும் இருக்கமுடியாது.

ஆனால் எம்.ஜி.ஆர். கொடுத்த தந்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களுடைய ஆசிர்வாதம், இளைஞர்கள் பங்களிப்பு, சிறந்த தொழில்நுட்பம், நல்ல சிந்தனையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் திறமைசாலிகளை வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். போன்ற ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்.

ஆன்மிக அரசியல் என்று என்னிடம் கேட்கிறார்கள். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, சாதி-மத சார்பற்ற அறவழியில் நடப்பதுதான் ஆன்மிக அரசியல் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தூய்மைதான் ஆன்மிகம். இறை நம்பிக்கைத்தான் ஆன்மீக அரசியல்.

ஏன் திராவிட அரசியலில் இறை நம்பிக்கை இல்லையா… நேர்மை இல்லையா, சாதி சமயமற்ற அறவழி இல்லை என்கிறீர்களா?

இனிமேல்தான் ஆன்மிக அரசியலைப் பார்க்கப்போகிறீர்கள்.

அப்புறம்.. ஒரு சின்ன விஷயம்… அதுக்கு வந்து ஒரு பெரிய விவாதம். கொள்கை என்னன்னு கேட்டா தலை சுத்திடுச்சின்னு சொன்னதை கேலி பேசுறாங்க. அய்யா, நான் கடந்த டிச., 31ம் தேதி, அரசியலுக்கு வருகிறேனா, இல்லையா என்பதை தெரிவிக்கப் போவதாக கூறினேன். 29ம் தேதியே, ‘உங்கள் கொள்கை என்ன…’ என்னான்னு, கேட்கிறாங்க… இது எப்டின்னா, பொண்ண பார்க்க போகும்போது, கல்யாணத்துக்கு, எனக்கு இன்விடேஷன் வரலைன்னு சொல்ற மாதிரி. அந்த மாதிரி, ஒரு ரிப்போர்ட்டர், சின்ன பையன், என்ன இப்டியெல்லாம் இருக்காங்கன்னு எனக்கு தலை சுத்துதுன்னு சொன்னேன்.

சரி… பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், பெரிய பெரிய அரசியல் மேடைகள்ல இதப் பத்தி கிண்டல் பண்றாங்க, பேசறாங்க. அய்யா ஒண்ணு தெரிஞ்சிக்கங்க…

அய்யா, ஒண்ணு தெரிஞ்சிக்கங்க… பொது மக்கள் மத்தியில் பேசும்போது, எப்படிப் பேச வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. பொது மக்கள் உளவியல் தெரிந்து பேச வேண்டும். மாஸ் இன்டலிஜென்ஸ்னு சொல்வாங்க.

சினிமாக்காரர்களான எங்களுக்குத் தெரியும். மாதக்கணக்கில் ரூம் போட்டி கதை விவாதித்து படம் உருவாக்கி வெளியிடுவார்கள். பொதுமக்கள் அதை தியேட்டர் பார்த்துவிட்டு குப்பை என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் அதே நபரை தனியாக அழைத்து அந்தப் படத்தைப் போட்டுக் காட்டுங்கள். வாயே திறக்க மாட்டார்கள். இதுதான் மாஸ் சைக்காலஜி,” என்றார் ரஜினி.

-என்வழி




2 thoughts on “எம்ஜிஆர் தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும்! – தலைவர் ரஜினிகாந்த் அதிரடி

  1. Rajagopalan

    Yeppa..
    Honestly speaking, i didnt expect thalaivar will speak this much detail…
    Muzhu rowdy thanatha kata arambithu vitar thalaivar…

  2. Guhan Ranganathan

    Semma speech by Thalaivar.,..

    many party leaders would have lost their sleep…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *