BREAKING NEWS
Search

ஆம்… கடவுள் இருக்கிறார்!

ஆம்… கடவுள் இருக்கிறார்!


துவரை இந்த அனுபவத்தை எழுதவில்லை. பெரிதாக யாரிடமும் பிரஸ்தாபித்ததும் இல்லை. ஆனால் நிச்சயம் ஒரு நாள் எழுத வேண்டும் என்ற நினைப்பு மட்டும் நிரடிக் கொண்டே இருந்தது. இன்று அமிதாப் பற்றிய வதந்தியைப் பார்த்ததும், எழுதத் தோன்றியது. வாழ்க்கையில் நான் கடவுளை  மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு தருணம் பற்றிய சிறு கட்டுரை இது…

லைவர் சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று வந்த நேரம். ரசிகர்களுக்கு மிகுந்த நெருக்கடியான காலகட்டம் அது.

பல ஆயிரம் ரசிகர்கள் தங்கள் வேலைகளில், குடும்பத்தில் கூட கவனம் செலுத்த முடியாமல் சதா அவருக்காக பிரார்த்திக் கொண்டும், அவரைப் பற்றிப் பேசிக் கொண்டும், அவரைப் பற்றி ஏதாவது தவறான செய்தி வந்தால் துடித்துப் போய், அதற்கு விளக்கம் தேடிக் கொண்டுமிருந்த நிம்மதி தொலைந்த நாட்கள் அவை.

தலைவர் நலம் பெற வேண்டும் என்பதற்காக, ஒரு சர்வமத பிரார்த்தனைக்கு என்வழி நண்பர்கள் சார்பில் ஏற்பாடு செய்திருந்தோம். உலகளவில் உள்ள ரசிகர்கள் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை அவரவர் இடத்திலேயே பிரார்த்தனை நடத்த வேண்டும்.. முக்கிய நிகழ்வாக பரங்கிப் பேட்டை பாபாஜி கோயிலில் என்வழி நண்பர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் பங்கேற்று பிரார்த்தனை நடத்துவதாகத் திட்டம்.

சென்னையிலிருந்து நண்பர்களுடன் பரங்கிப்பேட்டைக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தோம். நமது வாகனம் புவனகிரி தாண்டி பரங்கிப் பேட்டைக்குள் நுழைந்தபோது நண்பர் கலீபாவின் மொபைலுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதை வெளியில் சொல்வதற்கு கூட அத்தனை தயக்கமாக உள்ளது. எல்லாவற்றையும் நேரில் பார்த்துக் கொண்டிருப்பதாக வேறு அதை அனுப்பிய நபர் சொல்லியிருந்தார்.

அந்த எஸ்எம்எஸ்ஸைப் படித்து முடிப்பதற்குள் கண்கலங்கிப் போனார் கலீபா. என்னிடமும் நண்பர்களிடமும் காட்டினார். பேரிடி ஒன்று தலையில் இறங்கியதைப் போல திகைத்துப் போனோம். எப்படி ரியாக்ட் செய்வது என்று கூடத் தெரியவில்லை.

“தலைவருக்கு ஒன்றும் நேர்ந்திருக்காது. அவர் மனிதர்களுள் உன்னதமானவர். நாம் மனமாற பிரார்த்திப்போம். இது பொய் என்பது உறுதியாகும்…” என்றார் உடன் வந்த தம்பி ஜான். சந்தோஷ், கணேஷ், ஆனந்த் என நண்பர்களால் இந்த கொடிய எஸ்எம்எஸ்ஸை தாங்க முடியவில்லை. உடனே நாம் போலீஸில் புகார் செய்யலாம் என்றார்கள். அப்போது தம்பி ஜான், “அவசரம் வேண்டாம்ணே… பார்க்கலாம்” என்றார்.

எஸ்எம்எஸ் வந்திருந்த நம்பரைப் பார்த்தோம். அது சிங்கப்பூர் நம்பர்தான். சரி ஆகட்டும் என அந்த எண்ணுக்கே போன் செய்தோம்.  மறுமுனையில் அந்த நபர் எடுத்துப்பேசினார். தன் பெயர் சேகர் என்றும், தலைவர் உள்ள மருத்துவமனையிலிருந்துதான் அந்த தகவலை அனுப்பியதாகவும், அங்கே பெரும் கூட்டம் கூடிவிட்டதாகவும் சொன்னார்.

சரி… அப்படியா என்று கேட்டுக் கொண்டோம். நம்ப முடியவில்லை. ஆனாலும் மனதுக்குள் பெரும் பாரத்துடன் பாபாஜி கோயிலில் நுழைந்தோம். அங்கே திரளாக வந்திருந்த ரசிகர்கள், சிதம்பரம் நிர்வாகி ரமேஷ் மற்றும் நண்பர்களைப் பார்த்ததும் கொஞ்சம் தெம்பாகிவிட்டது.

பிரார்த்தனைகள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன. கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க சிரமப்படும் நிலையிலும், உடல் கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் அவ்வளவுதூரம் எங்களுடன் வந்திருந்தான் தம்பி ராஜா. ரஜினி என்ற மனிதர் மீது அத்தனை அபிமானம் அவனுக்கு. பாரத்தை அந்த மஹாவதார் பாபாஜி மீது போட்டுவிட்டோம்.

அனைவரும் மீண்டும் வண்டிக்குள் ஏறி, பிச்சாவரம் வரை போய்விட்டு, சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம்.

அதே புவனகிரி எல்லை தாண்டி கடலூர் சாலைக்குள் வண்டி நுழைகிறது. அப்போது உடன் வந்த நண்பர் கணேஷுக்கு ஒரு போன் வருகிறது… சிங்கப்பூரிலிருந்து!

நமக்கு மிகவும் அறிமுகமான ஒரு ரசிகர் மன்ற நிர்வாகி அவர். உற்சாகத்துடன் மறுமுனையில் பேசுகிறார். அதுவும் எங்கிருந்து… தலைவர் அறைக்கு வெளியிலிருந்து, அவரைப் பார்த்தபடி!

“தலைவரைப் பார்த்துட்டேன். நல்லா இருக்கார். சாப்பிட ஆரம்பிச்சிட்டார். அவருக்கு ஒண்ணும் இல்லை. சூப்பரா ச்சும்மா சிங்கம் மாதிரி திரும்பி வரப் போறார்… எல்லார்கிட்டயும் சொல்லுங்க. அவருக்கு எதுவும் ஆகாது..” என்று உணர்ச்சி வேகத்தில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

இப்போது என்னாலும் கூட உணர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எதற்காகவும் அந்த அளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன். அப்படி ஒரு மகிழ்ச்சி!

எப்போதாவது அரிதாகப் பேசும் தம்பி ராஜா, “மாமா என் நம்பிக்கை வீண்போகலை” என்றான். அவன் முகம் முழுக்க சந்தோஷம்!

இந்த அதிசயத்தை என்னவென்று சொல்வது… இதுதான் கடவுள் மனிதனுக்கு வைக்கும் பரீட்சையா? மனிதனின் பொறுமைக்கும் நம்பிக்கைக்கும் வைக்கும் சோதனையா? என்றெல்லாம் பலவாறு எண்ணிக் கொண்டது மனம். எங்களைப் போல எத்தனையோ லட்சம் பேருடைய பிரார்த்தனைகள்…


பாபாஜி கோயில் இருக்கும் ஊருக்குள் நுழைந்தபோது எத்தனை பேரிடியான வதந்தி… பாபாஜியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, அந்த ஊரைவிட்டு வெளியில் வந்தபோது அந்த பாரத்தைப் போல பல கோடி மடங்கு சந்தோஷ செய்தி…

கடவுளை உணர இடைத்தரகர்களோ மதங்களோ சாஸ்திரங்களோ முக்கியமில்லை. உண்மை முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டதும் கூட இந்த நிகழ்வில்தான்!

-வினோ
என்வழி ஸ்பெஷல்
20 thoughts on “ஆம்… கடவுள் இருக்கிறார்!

 1. கணேசன் நா

  படிக்கும் போது எதோ ஒரு பாரம் நெஞ்சை அழுத்துகிறது. கண்கள் கலங்குகிறது.

 2. Marthu

  மறக்க முடியாத தருனம் அது…என் வாழ்க்கையில் என் குடும்பத்திற்க்குப் பிறகுநான் பெரிதும் மதிப்பது என் தலைவனைத்தான்…அந்த சமயத்தில் தினமும் மறவாது கடவுளைப்பிராத்தித்தேன்…தலைவரின் அந்த குரலை சன்நியீஸில் கேட்ட பொழுதுநான் கண் கலங்கிய போது என் மனதில் இருந்த ஒரு அழுத்தம் அது சொல்ல முடியாத வேதனை…

 3. மு. செந்தில் குமார்

  //கடவுளை உணர, உண்மை முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டதும்//

  நாம் உண்மை-யில் நிலைத்து நின்றால் நிச்சயமாக இறைவனை உணரமுடியும் – ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (அமுத மொழிகள் – மூல நூலின் ஆசிரியரிடம் சொன்னது)

  எப்பொழுதும் பொருளுக்கு(subject) ஏற்ற போட்டோ போடுவீர்கள். தலைவரின் இந்த போடவும் மனதை என்னவோ செய்கிறது.

 4. Khalifa

  வினோ அந்த ஒரு நிமிடம் இன்று நினைத்தாலும் ஐயோ…உண்மை தான் கடவுள் இருக்கிறார். தலைவரை முழுமையாக நமக்கு தந்த கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்.

  கலிபா
  வாலாசா.

 5. kabilan

  அருமையான பதிவு வினோ அண்ணா .தலைவர் வாழ்க !!!!!!!!!!!!!!!!

 6. enkaruthu

  சில காரணங்களால் என்னால் அன்று சிறப்பு வாய்ந்த பிரார்த்தனைக்கு போகமுடியவில்லை.அன்று இரவு நண்பர் கணேஷ் அவர்கள் இவருக்கு சிங்கபூர் நண்பர் சொன்ன விஷயத்தை சொன்னபொழுது சந்தோசம் தாங்கமுடியவில்லை.அதுவும் ஒரு நாள் தலைவர் பற்றி ஒரு தவறாக ஆனால் நம்பகமான இடத்தில இருந்து எனக்கு வந்த தகவலால் என் வீட்டில் இருந்த அனைத்து சாமி படங்களையும் உடைத்துவிட்டேன். பின் வேறு வழி இல்லாமல் அந்த உடைத்த சாமியிடமே மன்றாடி கேட்டேன்.ஒரு இரண்டு மணி நேரம் ஒரு நல்ல மனிதனுக்கு நீ தரும் தண்டனையா என்று புலம்பி கொண்டே இருந்த எனக்கு இப்பொழுதுதான் நான் தலைவர் வீட்டில் பேசினேன் அவர்கள் தலைவர் நலமாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்கிறார்கள் என்று வினோ சார் அவர்கள் என்னிடம் சொன்னவுடந்தான் நான் ஒரு சராசரி நிலைக்கு திரும்பினேன். வேண்டாம் அப்பா மீண்டும் அந்த தருணம்.என் கண்ணில் இவ்வளவு நீர் இருக்கு என்று அந்த ஒரு 15 நாள்தான் கண்டுகொண்டேன்.

 7. anbudan ravi

  “பல ஆயிரம் ரசிகர்கள் தங்கள் வேலைகளில், குடும்பத்தில் கூட கவனம் செலுத்த முடியாமல்”

  நிச்சயமாக….அந்த நாட்களில் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன்….கை கால் புரியவில்லை….ஏதாவது நல்ல செய்தி தலைவரைப்பற்றி வராதா என்று ஒவ்வொரு நொடியும் இணையத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். தலைவர் சிங்கப்பூரில் இருந்து நடந்து வந்த நிகழ்வை பார்த்தபின்புதான் நிம்மதியான தூக்கம்.

  வேலை நிமித்தமாக விமானத்தில் பறக்கிறோம், பல நூறு மனிதர்களை சந்திக்கிறோம்…ஆனால் அதையும் தாண்டி ஒரு நாளைக்கி ஒரு முறையாவது தலைவரை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. அந்த அளவுக்கு நம் மனதின் ஆழத்தில் பதிந்துள்ளார் தலைவர். அவருக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை தர வேண்டும்.

  அன்புடன் ரவி.

 8. பாவலன்

  ///அதுவும் ஒரு நாள் தலைவர் பற்றி ஒரு தவறாக ஆனால் நம்பகமான இடத்தில இருந்து எனக்கு வந்த தகவலால் என் வீட்டில் இருந்த அனைத்து சாமி படங்களையும் உடைத்துவிட்டேன். /// (என் கருத்து)

  சூப்பர் ஸ்டார் ரஜினி மீது `என் கருத்து’ வைத்திருக்கும் பாசம் அளவற்றது.

  அவர் பெயரை ஏனோ சொல்லமாட்டேன் என்கிறார்.

  நண்பர்களே..இந்த வலையில் எழுதும் சிலரின் கருத்துக்களை –
  குமரன், கிருஷ்ணன், கணேஷ் ஷங்கர் – மற்றவர்களுடன் பகிர்ந்து
  கொள்வதுண்டு. (நான் மிஸ்டர் / டாக்டர் பாவலன் என எங்கும்
  காட்டிக் கொள்வதில்லை. எதுக்கு அனாவசியமா தரும அடி
  வாங்கணும்??) ஆனால் ‘என் கருத்து’ எழுதுவதைப் பகிர்ந்து
  கொள்வதில் தான் ஒரு சிக்கல் இருக்கிறது.

  என்னய்யா சிக்கல்?! நண்பர்களே, அதைச் சொல்கிறேன்.

  நான் போயஸ் கார்டன் ஏரியாவில் நின்று – ‘அரசு போலீஸ் அடக்குமுறை
  செய்கிறது, அண்ணா நூலகம் மாற்றுகிறேன் எனக் குளறுபடி செய்கிறது,
  மின்கட்டணத்தை ஏற்றி மக்கள் அல்லல் படுகிறோம் – இப்படி அடித்துச்
  சொல்வது என் கருத்து” என்றால் இவை எல்லாம் ‘பாவலன் கருத்து’ (!)
  என்று பொருள் கொண்டு ஸ்பெஷல் கவனிப்போடு சிறை நிரப்ப வேண்டி
  இருக்கும். அதனால் கவனமாக quote செய்யணும். இல்லை – AK என
  அவருக்கு abbreviation கொடுக்கலாம். நன்றி.

  -பாவலன்

  -பாவலன்

 9. குமரன்

  ///கடவுளை உணர …. உண்மை முக்கியம்///

  உண்மை.
  கடவுளை உணர முடியும், காண்பது முடியாது. ஒவ்வொருவருடைய மனத்துள்ளும் உறையும் இறைவனை உணர்வால் மட்டுமே அறிய முடியும்.
  முதலில் எதிர்மறைச் செய்தியும் பின்னர் நற்செய்தியும் வருமாறு செய்வதும் கூட இறைவனை உணர வகை செய்யும் திருவிளையாடலே.

 10. enkaruthu

  நண்பர்களே இன்றுள்ள மனிதர்கள் எல்லாம் கடவுளை ஒரு அரசியல் வாதியாகத்தான் பார்கிறார்கள்.கடவுளை பார்க்க கோவிலுக்கு போனால் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கிறது.கடவுளை சீக்கிரம் பார்க்கவேண்டுமா அதற்க்கு பணம் வாங்கிகொண்டு ஸ்பெஷல் தர்சன் என்ற பெயரில் கொள்ளை(என்ன ஒரு வேடிக்கை கடவுள் என்ன first in first out என்ற முறையிலா நல்லது செய்கிறார்) .யார் தட்டில் அதிகம் காசு போடுகிறார்களோ அவருக்கு மட்டும் பூ கொடுத்து உங்கள் குடும்பம் சேமமாக வாழும் என்று அடுத்தமுறை இதே பணத்தை கறக்கவேண்டும் என்ற நோக்கில் சொல்வது.கடவுளுக்கு போட்ட பூவை கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கோவில் வாசலில் விற்கும் பூகடைகாரார்களிடம் அவர்கள் மீண்டும் விற்க அதை கொடுத்து commision வாங்குவது .

  நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் கடவுளை நாம் எங்கிருந்தாலும் சரி நேர்மையாக, உண்மையாக, அந்த பிரார்த்தனை அடுத்தவரை கெடுக்காமல் இருந்தால் அந்த பிரார்த்தனைக்கு இந்த இயற்கை எல்லாம் perfect ஆக எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இயங்க வைக்கும் நமக்கு மேல் இருக்கும் ஒரு சக்தி ஆனவர் கட்டாயம் அந்த பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்.அதற்க்கு இந்த தமிழ்நாடு மக்கள் எதையும் எதிபார்க்காமல் தலைவருக்காக பிரார்த்தனை செய்து அதனால் தலைவர் மீண்டு வந்ததே சாட்சி.

 11. enkaruthu

  பாவலன் அவர்களே இது உங்கள் சொந்த பெயரா இல்லை.நீங்கள் என்ன காரணத்துக்காக உங்கள் பெயரை மறைக்கிரீர்களோ அதே காரணம்தான் எனக்கும் . ஏற்கனவே ஒரு நண்பருக்கு நான் ஏன் என் பெயரில் போடாமல் வேறு ஒரு பெயரில் போடுகிறேன் என்பதற்கு சொல்லிவிட்டேன் .அது என்னவென்றால் நான் உண்மையை சொன்னால் சில ஜாதிவைத்தே பேசும் என் நண்பர்களுக்கு சுடும்.ஆனால் அதே ஜாதியில் தன ஜாதியை பார்க்காமல் உண்மையை மட்டுமே பேசும் சில நண்பர்களும் உண்டு.அந்த ஜாதியை சேர்ந்த நல்லவர்கள் என்ன இவன் நம் மனதை அறியாமல் பேசிவிட்டான் என்று சொல்ல கூடாது என்பதற்காகதான் இந்த புனை பெயர். நண்பர்களே நான் என்ன புனைபெயரில் மற்ற தளத்தில் வருவது போல் கெட்ட வார்த்தை பேசி சவாலுக்கு இழுக்கவா பொட்டைதனமாக என் பெயரை மாற்றி கொண்டு பின்னூட்டம் அளித்தேன் இல்லையே.இந்த ஒரு விஷயதிர்க்குக்காகதான் அனைத்து பத்திரிகையாளர்களும் தன இயற் பெயரை மாற்றி புனைபெயர் கொண்டு எழுதுகிறார்கள் என்பது என்கருத்து

 12. enkaruthu

  //AK என
  அவருக்கு abbreviation கொடுக்கலாம். நன்றி.//

  ராஜேஷ்குமார் அவர்களின் விவேக் துப்பறியும் detective நாவலை அதிகம் நீங்கள் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.ஆனால் அதே நாவலில் கிளைமாக்ஸ் பகுதியில் வருவதைபோலவே என் பெயரையும் என் நண்பன் பெயரையும் சொன்னால் வரும் என்று நினைக்கிறேன்.பாப்போம்.

 13. பாவலன்

  //ராஜேஷ்குமார் அவர்களின் விவேக் துப்பறியும் detective நாவலை அதிகம் நீங்கள் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.// (என் கருத்து)

  முன்பு படித்ததுண்டு. இப்போது அதற்கு நேரம் இல்லை.

  -பாவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *