BREAKING NEWS
Search

நாடகங்களை நான் நம்புவதில்லை – இது கருணாநிதி பஞ்ச்!

நாடகங்களை நான் நம்புவதில்லை-சசிகலா வாக்குமூலம் குறித்து கருணாநிதி

திருச்சி: பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலாவின் கண்ணீர் வாக்குமூலம் குறித்து கருத்து கேட்டபோது, ‘நாடகங்களை நான் நம்புவதில்லை’ என்றார் திமுக தலைவர் கருணாநிதி.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் மற்றும் தீபிகாவின் திருமணம் இன்று திருச்சியில் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் திருமண விழாவில் அவர் பேசுகையில், “திருச்சி மாவட்ட கழக செயலாளர் நேருவின் மகன் அருண்-தீபிகா திருமணத்தில் காலையில் இருந்தே கட்சித் தலைவர்களும், நண்பர்களும் வாழ்த்தினார்கள். அவர்கள் வாழ்த்தோடு எனது வாழ்த்தையும் இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

நேருவை பலர் புகழ்ந்து பேசினார்கள். நானும் அவ்வாறு பேசுவது என் தம்பிகளை புகழ்வது போன்றது. நேருவும் என் தம்பிகளில் ஒருவர் ஆவார்.

திருச்சி மண்ணிற்கு பல்வேறு பெருமைகள் உண்டு. மண்ணில் தான் எனது அரசியல் வாழ்விற்கு விதை போடப்பட்டது. திருப்புமுனையையும் ஏற்படுத்தியது.

இந்த மாவட்டத்தில் இருந்த குளித்தலை தொகுதியில்தான் நான் முதன் முதலில் தி.மு.க. வேட்பாளராக நின்று வெற்றி பெற்றேன். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளேன்.

தி.மு.க.வின் வளர்ச்சி, வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை காண அடியெடுத்து கொடுத்தது திருச்சியில் நடந்த மாநாடு தான். தேர்தலில் தி.மு.க. போட்டியிடலாமா என வாக்கெடுப்பு நடந்ததே இந்த மண்ணில்தான்.

6 வது முறை…

அதன்படிதான் 1957-ம் ஆண்டு தேர்தலில் குளித்தலையில் போட்டியிட்டேன். 5 முறை நான் முதல்வராக ஆகிவிட்டேன். ஆனால் 6-வது முறையும் முதல்வர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இருந்தபோதிலும் நேரு குடும்பத்தில் 6-வது திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். இது 6-வது முறை நான் முதல்வராக வருவதை விட இதில் மகிழ்ச்சியடைகிறேன்.

6-வது முறை முதல்-அமைச்சர் என்பது வாக்காளர்களுக்கு மத்தியில் பெருகின்ற வெற்றி. அது அரசியல் வெற்றி. ஆனால் இந்த திருமண விழா லட்சியவாதிகள் மத்தியில் கிடைக்கின்ற கொள்கை வெற்றி.

எந்த திருமணம் ஆனாலும் அதை அறநெறிக்கண்ணோடு, பகுத்தறிவோடு, பழைய பண்பாட்டு நெறியோடு நடைபெறும் திருமணமா என்று தான் பார்க்க வேண்டும்.

திராவிட இயக்கம் தோன்றிய பிறகு தான் கல்யாணம் என்பது திருமணம் ஆனது. மணமக்களை ஆசீர்வதிப்பது என்பது வாழ்த்துக்களாக மாறியது. திராவிட இயக்கத்தால், பெரியாரால், அண்ணாவால் வழிகாட்டப்பட்ட நெறிமுறை களைத்தான் திராவிட இயக்கம் கொண்டாட வேண்டும்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வளர்த்த தமிழை செந்தமிழாக மாற்றியுள்ள நிலையில் அதை அழித்துவிட நினைக்கும் ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் நாம் அவர்களை வீழ்த்த வேண்டும். அந்த வகையில் நேற்று மந்திரி, இன்று சிறை என்று இருந்தாலும் திராவிட கொள்கையிலும், கழகத்தை கட்டி காப்பதிலும் உறுதி கொண்டிருக்கும் நேருவைப் போல மணமக்கள் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, கொள்கை ஆகியவற்றை காத்து வாழ வேண்டும்,” என்றார்.

நடராஜன் கைதுக்கு வருத்தம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் கருணாநிதி. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்:

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நீங்கள் பிரசாரம் செய்வது எப்போது?

அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

சங்கரன்கோவிலில் அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறதா?

பயன்படுத்தப்படுகிறது, தவறாக. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக.

பெங்களூர் கோர்ட்டில் சசிகலா அளித்த சாட்சியம் குறித்து உங்கள் கருத்து என்ன?

நான் தற்போது நாடகங்களை நம்புவதில்லை.

உங்கள் தலைமையில்தான் நடராஜனுக்கும், சசிகலாவுக்கும் திருமணம் நடந்தது. இப்போது நடராஜன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளாரே?

வருந்தத்தக்கது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித் தனியாக போட்டியிடுவதால் வாக்குகள் சிதறிவிடக் கூடிய நிலை இருப்பது தவிர்க்கப்படுமா?

எதிர்க்கட்சிகள் எல்லாம் அதைப் பற்றி யோசித்தால், நாங்களும் அதுகுறித்து யோசித்து ஒருமித்த முடிவுக்கு வரலாம்.

சங்கரன்கோவில் தேர்தலில் எதை வைத்து பிரசாரம் செய்வீர்கள்?

ஆட்சியாளர்களின் அராஜகம், அநீதி, அக்கிரமம், மக்கள் நலப்பணிகளை விட்டுவிட்டு மற்ற பணிகளில் தலையிட்டு செயல்படுவது, எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தை இருண்ட மாநிலமாக ஆக்கி உள்ளதை விளக்கி பிரசாரம் செய்வோம்.

தமிழகத்தில் அடிக்கடி அமைச்சர்கள் மாற்றப்படுவதால் டெலிபோன் டைரக்டரிகூட போட முடியாத நிலை உள்ளதே?

அது டைரக்டரி போடுபவர்களின் கவலை.

கேரள மாநிலம் கொச்சி கடலில் தமிழக மீனவர்களை இத்தாலி நாட்டு கப்பலில் வந்தவர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவீர்களா?

மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தக்க நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்றார் கருணாநிதி.

-என்வழி செய்திகள்
7 thoughts on “நாடகங்களை நான் நம்புவதில்லை – இது கருணாநிதி பஞ்ச்!

 1. குமரன்

  ///நடராஜன் கைதுக்கு வருத்தம்//

  அப்படித் தெரியவில்லை!

  முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் உள்ளர்த்தம் வைத்து அதாவது போடி வைத்துப் பேசுவதில் வல்லவர்.

  /// உங்கள் தலைமையில்தான் நடராஜனுக்கும், சசிகலாவுக்கும் திருமணம் நடந்தது. இப்போது நடராஜன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளாரே?
  …… வருந்தத்தக்கது.///

  இதைப் படித்தால்
  அவர் சொல்லும் “வருந்தத்தக்கது”
  எதற்கெல்லாம் “பொருந்தத்தக்கது”?

  அவர் தலைமையில் திருமணம் நடந்தமை,
  நடராஜனுக்கும் சசிகலாவுக்கும் திருமணம் நடந்தமை,
  (அதனால் இந்த நாடு பட்ட/ படும் பாடு)
  நடராஜன் “திடீரென்று” கைது செய்யப் பட்டமை
  (நிதானமாகக் கைது செய்யப்பட்டால் ஒருவேளை வருந்தத்தக்கதாக இருந்திருக்காதோ?)

  இப்படி பலவேறு பொருள்களை உள்ளடக்கிப் பேசியிருக்கிறார்.

 2. குமரன்

  ///கேரள மாநிலம் கொச்சி கடலில் தமிழக மீனவர்களை இத்தாலி நாட்டு கப்பலில் வந்தவர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவீர்களா?
  மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தக்க நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்றார் கருணாநிதி.///

  இதை என்னவென்று சொல்வது?

  தமிழக மீனவர்களை கருணாநிதியின் “அராஜகம், அநீதி, அக்கிரமம், ஊழல் இல்லாத நல்லாட்சியிலும்” தற்போதைய ஜெயாவின் “அராஜகம், அநீதி, அக்கிரமம், ஊழல் இல்லாத கொடுங்கோல் ஆட்சியிலும்” சிங்களக் கடற்படையினர் எண்ணிக்கையில் அடங்காத அளவுக்குச் சுட்டுக் கொன்றபோதேல்லாம் ……..

  இப்படி நமது வெளியுறவுத்துறை அமைச்சர் சிங்கள/ இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் ஒரு முறையாவது தெரிவித்திருப்பாரா?

  ஒரே ஒரு முறையாவது அப்படிச் சுட்டுக் கொன்ற சிங்களக் கப்பலை நமது ஏதாவது ஒரு துறைமுகத்துக்கு நமது கடலோரக் காவற்படை இழுத்து வந்திருக்குமா?

  ஒரே ஒரு முறையாவது அப்படிச் சுட்டுக் கொன்ற சிங்களர் மீது தமிழக அரசு கொலை வழக்குப் பதிந்திருக்குமா?

  ஆக கருணாநிதியின் நம்பிக்கை கேரளா அரசின் மீதும் கேரளா அரசியல்வாதிகள் மீதும் பரிபூரணமாக இறுக்கிறது.

  பேசாமல் தமிழ்நாட்டைக் கேரளத்துடன் இணைத்தாலாவது, நமது மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரிடம் குண்டடி பட்டுச் சாவதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று நினைக்கிறேன்.

  “உலகத் தமிழர்களின் ஒப்பற்ற உன்னதத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் இதனை முன்னின்று நடத்திதருவார் என்று நம்புகிறேன்.

 3. குமரன்

  நாங்கள் கூட கலைஞரின் கடற்கரையோர அண்ணா சமாதியில் நடந்த ஓரங்க நாடகமான “காலை சிற்றுண்டிக்குப் பின்னர், மதியச் சாப்பாட்டுக்கு முன்னரான ஆறுமணி நேர உண்ணாவிரத” நாடகத்தைப் பார்த்த பின்னர் எந்த நாடகத்தையும் நம்புவதே இல்லை.

 4. ஊர்க்குருவி.

  //அதன்படிதான் 1957-ம் ஆண்டு தேர்தலில் குளித்தலையில் போட்டியிட்டேன். 5 முறை நான் முதல்வராக ஆகிவிட்டேன். ஆனால் 6-வது முறையும் முதல்வர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்//.

  (“””யார் ஆசைப்பட்டது”””??)
  ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை(?).

  (234 சட்டமன்றத்தொகுதி அதில் 203 இடங்களை இவரோட கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து இவரோட சகவாசமே வேண்டாமென்று சுத்தம் செய்திருக்கின்றனர். இப்படி நிலவரம் இருக்கும்போது இவரை முதல்வராக்கவேண்டுமென்று யார் ஆசைப்பட்டது.)

  //இருந்தபோதிலும் நேரு குடும்பத்தில் 6-வது திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். இது 6-வது முறை நான் முதல்வராக வருவதை விட இதில் மகிழ்ச்சியடைகிறேன்.//

  (அந்த மகிழ்ச்சியுடன் தொடர்ந்து சக்கரவண்டியில் அமர்ந்து திருமணங்களை நடத்த வேண்டியதுதானே அதற்குத்தான் மக்கள் ஓய்வு தந்திருக்கின்றனர்.)

  //எந்த திருமணம் ஆனாலும் அதை அறநெறிக்கண்ணோடு!, பகுத்தறிவோடு!!, பழைய பண்பாட்டு நெறியோடு!!! நடைபெறும் திருமணமா என்று தான் பார்க்க வேண்டும்!!!!.//

  (அபச்சாரம் அபச்சாரம்! அறநெறிக்கண்ணோடுதானா மனைவி, இணைவி, துணைவிகளை, சொந்த வாழ்வில் தெரிவு செய்திருந்தார்?.

  //திராவிட இயக்கம் தோன்றிய பிறகு தான் கல்யாணம் என்பது திருமணம் ஆனது. மணமக்களை ஆசீர்வதிப்பது என்பது வாழ்த்துக்களாக மாறியது. திராவிட இயக்கத்தால், பெரியாரால், அண்ணாவால் வழிகாட்டப்பட்ட நெறிமுறை களைத்தான் திராவிட இயக்கம் கொண்டாட வேண்டும்.//

  (கல்யாணம் திருமணமானது திராவிட இயக்கத்தின் சூத்திரம் கிடையாது. கிபி 15 நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடல்களில் திருமணம் என்ற சொல் பற்றி நிறைய தகவல்கள் உண்டு. ஆசீர்வாதம் என்ற சமஸ்கிருத சொல் இன்றும் இருக்கிறது அன்றும் இருந்தது. வாழ்த்து என்ற தமிழ்ச்சொல் அன்றும் இன்று வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. பெரியாரின் புகழையும் அண்ணாவின் பிம்பத்தையும் அழிக்க கருணாநிதி திட்டமிட்டு சதிசெய்வதாக்வே படுகிறது.)

  சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வளர்த்த தமிழை செந்தமிழாக மாற்றியுள்ள நிலையில் அதை அழித்துவிட நினைக்கும் ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் நாம் அவர்களை வீழ்த்த வேண்டும். அந்த வகையில் நேற்று மந்திரி, இன்று சிறை என்று இருந்தாலும் திராவிட கொள்கையிலும், கழகத்தை கட்டி காப்பதிலும் உறுதி கொண்டிருக்கும் நேருவைப் போல மணமக்கள் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, கொள்கை ஆகியவற்றை காத்து வாழ வேண்டும்,” என்றார்.

  (தமிழை வைத்து பிழைப்பு நடத்துவது தமிழ்நாட்டில் கருணாநிதி தவிர வேறு யாருமல்ல. அதேபோல தமிழையும் தமிழர்களையும் அழிக்க நினைக்கும் காங்கிரசின் முந்தானையில் தொங்குவதும் கருணாநிதிதான். பலர் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறிவரும் நேரத்தில் நேருவும் கட்சியை விட்டு கழ்ன்றுவிடக்கூடாது என்று தந்தரமாக நேருவுக்கு புகையடித்து வாயார நா நடனம் ஆடியிருக்கிறார்.)

  // சங்கரன்கோவிலில் அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறதா?
  #பயன்படுத்தப்படுகிறது, தவறாக. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக.//

  (சென்ற ஆட்சியின்போது திருமங்கலம் இடைத்தேர்தலில் ஆட்சி இயந்திரத்தின் ஆட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு தேர்தலை சந்தித்தவர்போல பட்டப்பகலில் அப்பட்டமான சந்தற்பவாதமான கூவலை கூவி நஞ்சை கக்கியிருக்கிறது கருணாநிதியின் அழுக்கு வாய்)

  //பெங்களூர் கோர்ட்டில் சசிகலா அளித்த சாட்சியம் குறித்து உங்கள் கருத்து என்ன?
  நான் தற்போது நாடகங்களை நம்புவதில்லை. //

  (ஏனென்றால் இவரது நாடகங்கள் எதுவும் இப்போ எடுபடுவதில்லை.”உண்ணாவிரதம், மனிதசெயின்,காங்கிரசுடன் டிவோர்ஸ், பதவி விலகல்…………. ………….. ……………………,)

  //உங்கள் தலைமையில்தான் நடராஜனுக்கும், சசிகலாவுக்கும் திருமணம் நடந்தது. இப்போது நடராஜன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளாரே?//
  #வருந்தத்தக்கது.//

  (இவரது காற்றுப்பட்டாலே அது விள…….து. வருந்தத்தக்கது என்பது உண்மைதான்.)

  //சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித் தனியாக போட்டியிடுவதால் வாக்குகள் சிதறிவிடக் கூடிய நிலை இருப்பது தவிர்க்கப்படுமா?//
  #எதிர்க்கட்சிகள் எல்லாம் அதைப் பற்றி யோசித்தால், நாங்களும் அதுகுறித்து யோசித்து ஒருமித்த முடிவுக்கு வரலாம்.//

  (ஒரு முடிவுக்கு வந்து மதிமுக, தேமுதிக, கட்சிகளை தந்தரமாக இல்லாமல் செய்துவிடலாம்!!)

  //சங்கரன்கோவில் தேர்தலில் எதை வைத்து பிரசாரம் செய்வீர்கள்? //

  #ஆட்சியாளர்களின் அராஜகம், அநீதி, அக்கிரமம், மக்கள் நலப்பணிகளை விட்டுவிட்டு மற்ற பணிகளில் தலையிட்டு செயல்படுவது,//

  (மற்றப்பணிகள் என்பது திருட்டு திமுக காரர்களை சிறையில் அடைக்கக்கூட்டாது என்கிறாறா?, மற்ற் பணிகளை பார்க்க கேரளாவிலிருந்தா வருவார்கள் என்பதை ஐயன் தெளீவுபடுத்தவேண்டும். திமுக ஆட்சியில் ஐயாவிம் குடும்பம் அராஜகம் அனீதி அக்கிரமம் ஆட்சிபுரிந்தது, இப்போ அந்த அம்மா கருவிக் கொண்டு ஆடுவதற்கு காரணமே ஐயாவின் அராஜகம் அனீதி அக்கிரமம் அனைத்தையும் களையெடுப்பதற்கு என்பதை நன்குபுரிந்துகொண்டு தப்பிக்க ஐயன் போடும் தந்திரத்திட்டம்.)

  //கேரள மாநிலம் கொச்சி கடலில் தமிழக மீனவர்களை இத்தாலி நாட்டு கப்பலில் வந்தவர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவீர்களா?
  ##மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தக்க நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்றார் கருணாநிதி?//.

  (ஆமா கனிமொழியின் வழக்கு முடியும்வரை மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை அய்யனுக்கு இருந்துகொண்டேயிருக்கும்)

 5. http://koothadiveddai.blogspot.com/

  கடைசிகாலத்தில் தா(த்)தா நேரடியாக வேஷம்கட்டி குடும்ப சமேதராராக மேடையேற்றிய அனைத்து நாடகங்களும் கால் வாரிவிட்டதால் இனிமேல் அவர் எந்த அரசியல் நாடகங்களை நம்பத்தயாராகவில்லை!

 6. கோடையிடி குமார்

  அடுத்த படத்துக்கு வசனம் எழுதலியா தலீவரே!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *