அப்பாவாக என்னைத் தத்தெடுத்தார் ரஜினி! – பாலம் கல்யாணசுந்தரம்
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க.. அப்பாதான் இல்லை. எனவே உங்களை அப்பாவாக தத்தெடுக்கிறேன் என்று கூறி பாலம் கல்யாணசுந்தரத்தை அப்பாவாக்கிக் கொண்டாராம் ரஜினி.
இந்த சம்பவத்தை இன்று நடந்த பெருமாள் கோயில் உண்டசோறு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கல்யாணசுந்தரமே சொன்னார்.
இந்த விழாவில் பேசிய அவர், ‘‘நான் பொதுவாக இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. இப்படத்தின் இயக்குனர் ராஜா விழாவில் கலந்த கொள்ள வந்து கூப்பிட்டார். ஒரு முறைக்கு 10-முறை அழைத்தார். ஒருமுறை வந்து கூப்பிட்டாலே வந்து விடுவேன் என்று அவரிடம் கூறிவிட்டு விழாவிற்கு வந்தேன்.
என்னைப் பற்றி இங்கு பலர் புகழந்து பேசினார்கள்.
எனது சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் எனக்கு விருதுடன் 30 கோடி ரூபாய் பணமும் கிடைத்தது. அந்த பணத்தை அங்குள்ள தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை செய்தேன். அது நான் சம்பாதித்த பணம் அல்ல. மேலும் எனக்கு குழந்தைகள் இல்லை. ஆகவே, நான் அதை நன்கொடை செய்தேன்.
இந்த நேரத்தில் எனது அம்மா சொன்ன அறிவுரைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. அவர், ‘வாழ்க்கையில் பேராசை கூடாது. ஒரு நாளைக்கு ஒரு உயிருக்காவது உதவி செய்ய வேண்டும். சம்பாதிக்கிற பணத்தில் 10-ல் ஒரு பங்கை நல்ல காரியங்களுக்கு செலவழிக்க வேண்டும்’ என்றார். எனது அம்மா சொன்னதை நான் கடைபிடித்து வருகிறேன்.
நான் ஓய்வு பெறும்போது எனக்கு 10 லட்சம் ரூபாய் கிடைத்தது. எனக்கு குழந்தை இல்லாததால் அந்த பணத்தை நன்கொடை செய்தேன்.
இது தொடர்பாக எனக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினி, ‘எனக்கு இரு மகள்கள் உள்ளனர். அப்பா தான் இல்லை. ஆகவே, பாலம் கல்யாணசுந்தரத்தை தந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்.
குழந்தைகள் இல்லாத நான் நன்கொடை செய்தது பெரிய விஷயம் இல்லை. ஆனால், குழந்தைகள் உள்ள ஒருவர் இது போல் நன்கொடை செய்துள்ளார். ஆனால், அவர் பெயர் வெளியே தெரியவில்லை,’’ என்றார்.
பில் கிளின்டன் இந்தியா வந்தபோது அப்துல் கலாம் மற்றும் பாலம் கல்யாண சுந்தரம் ஆகிய இருவரையும் மட்டும்தான் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-என்வழி
//குழந்தைகள் இல்லாத நான் நன்கொடை செய்தது பெரிய விஷயம் இல்லை. ஆனால், குழந்தைகள் உள்ள ஒருவர் இது போல் நன்கொடை செய்துள்ளார். ஆனால், அவர் பெயர் வெளியே தெரியவில்லை,’’ என்றாார்.//
யார் அவர்?