BREAKING NEWS
Search

ஆறே மாதங்களில் இத்தனை பிரமாண்டமாக லிங்கா உருவானது எப்படி? – ரஜினி சொன்ன தகவல்கள்

ஆறே மாதங்களில் இத்தனை பிரமாண்டமாக லிங்கா உருவானது எப்படி? – ரஜினி சொன்ன தகவல்கள்

IMG_9019

சென்னை:  3 ஆண்டுகளில் எடுக்க வேண்டிய பிரமாண்ட படமான லிங்காவை, ஆறே மாதங்களில் முடித்தது எப்படி என்ற தகவல்களை தலைவர் ரஜினி நேற்று வெளியிட்டார்.

லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. படத்தின் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளின் இசைத் தகடுகள் வெளியாகின. ஆனாலும் தெலுங்கு மற்றும் இந்தியில் தனி நிகழ்ச்சிகளாக இசை வெளியீடு நடக்கவிருக்கிறது.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசுகையில், “இந்த விழாவில் பலர் நிறைய விஷயங்கள் பற்றி பேசி விட்டனர். எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மீண்டும் நடிக்க முடியுமா? டான்ஸ் ஆட முடியுமா? என்றெல்லாம் ஏங்கியதுண்டு.  முன்பு மாதிரி நடிக்க முடியாது என்றே நினைச்சிக்கிட்டிருந்தேன்.

அதுக்கப்புறம் இரண்டரை வருஷம் கம்ப்ளீட்டா உடம்பு சரியில்ல. ஆக்ட் பண்றதுக்கெல்லாம் சான்ஸே இல்ல.

அதுக்கப்புறம் கோச்சடையான் படததை எப்படியாவது ரிலீஸ் பண்ணிடனும்னு நினைச்சேன். அதோட ஜானரே வேற. யாருக்கும் சரியா புரியல. அந்தப் படத்துல ஒரு சின்னக் குழந்தை மலையையே தூக்கி வெச்சிக்கிட்டு கஷ்டப்பட்டுச்சி. பாவம், அவ்வளவு பெரிய சுமையை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்திருக்கக் கூடாது.

ஈராஸ் இன்டர்நேஷனல், நண்பர் டாக்டர் முரளி மனோகர் ஆகியோர் இல்லேன்னா அந்தப் படம் ரிலீஸாகியிருக்கவே முடியாது.

அந்தப் படத்துல கொஞ்சம் பணத்தை இழந்தாலும் கூட, அந்தப் படத்தால கிடைச்ச அனுபவம் மிகப்பெரிய சொத்து. ஏன்னா இனிமே அவங்க சம்பாதிச்சுத்தான் அவங்களைக் காப்பாத்திக்க வேண்டிய அவசியமில்ல. நான் சம்பாதிச்சதை வேஸ்ட் பண்ணாம இருந்தாலே போதும்.

கோச்சடையான் படம் அவங்களுக்கு சினிமான்னா என்ன? ரசிகர்கள்னா என்ன? இன்டஸ்ட்ரின்னா என்ன? பணம்னா என்ன? நேரம்னா என்ன? இதை எல்லாத்தையும் புரிய வச்சிடுச்சி.

கோச்சடையான் முடிஞ்சதும் அடுத்த படத்துக்கு நான் ரெடி ஆகிட்டேன். இருந்தாலும் அந்தப் படத்தை ரிலீஸ் பண்ணாம அடுத்த படம் தொடங்க எனக்கு இஷ்டம் இல்ல.

என்கிட்டே நிறைய பேர் கதை சொல்லிக்கிட்டே இருந்தாங்க. நான் கேட்டேன், ஆனால் உள்ள ஏத்திக்கலை.

IMG_9564

ஏன்னா கோச்சடையான் ரிலீஸ்ல சில பிராப்ளம்ஸ் இருந்தது. அதனால அதை முதல்ல ரிலீஸ் பண்ணிடனும்னு நினைச்சேன். எப்பவுமே ஒரு பிரச்சினை வந்தா உடனே அதைச் சரி பண்ணிடனும். இல்லன்னா அது வளர்ந்து பெரிய பிரச்சினையா வந்து நிக்கும். அதனால அது எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் கூட உடனே முடிச்சிடணும்.

கோச்சடையான் ரிலீஸ் ஆன பிறகு அதை  ஒரு 20 பேர்ல பத்துப் பேராவது, என்கிட்ட அட்லீஸ்ட் கடைசில ஒரு சீன்லயாவது வருவீங்க, இல்ல முதல்ல ஒரு சீன்ல வருவீங்கன்னு எதிர்ப்பார்த்தோம்னு சொன்னாங்க.

அப்பத்தான் அடுத்த படத்தை உடனே ஆரம்பிக்கணும்னு நினைச்சேன்.

6 மாதங்களில் லிங்கா

படம் ஆரம்பிக்கிறது ரொம்ப ஈஸி. ஆனா அதை வெற்றிப் படமா கொடுக்கணுமில்ல. அதை ரசிகர்களுக்குப் பிடிச்ச மாதிரி கொடுக்கணுமில்ல, எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யணுமில்ல… அது எவ்வளவு கஷ்டமான விஷயம்?

அப்போதான் லிங்கா கதையை கேஎஸ் ரவிக்குமாரின் உதவியாளர் பொன் குமரன் சொன்னார். கேட்ட உடனே எனக்குப் பிடிச்சுப் போச்சி. இந்தப் படத்தை டைரக்ட் பண்றது யாருன்னு யோசிச்சேன். படையப்பா முடிஞ்சி நாலு வருஷம் கேப் விழுந்துடுச்சி. அதுக்கப்புறம் சந்திரமுகி வந்து ரெண்டு வருஷம் கேப் விழுந்துச்சி. அப்புறம் சிவாஜி ஒன்றரை வருஷம். எந்திரன் ரெண்டரை வருஷம் ஆச்சு. கோச்சடையான் நாலரை வருஷம்…

அதுக்கப்புறம் இப்போ இந்தப் படத்தைப் பண்ணனும்னா 3 வருஷமாவது ஆகும். ஆனா அப்படி இல்லாம, இந்தப் படத்தை ஆறே மாசத்துல முடிச்சி வெளியிடணும்னு முடிவு பண்ணேன். அதுவும் இந்த வருஷமே ரிலீஸ் ஆகணும். அப்படி ஒரு ஆள் யாருன்னு யோசிச்சப்ப என் மனசில் நின்னவர் ஒன் அன்ட் ஒன்லி கேஎஸ் ரவிக்குமார்தான். இதை ஷங்கர் சாரே ஒப்புக்குவார்.

உடனே ரவிக்குமாரை அழைச்சேன். “சரி, நான் இந்தப் படத்தைப் பண்றேன். ஆனா ஆறே மாசத்துல முடிச்சி, இந்த வருஷமே வெளியிடணும்.. ஓகேவா?” என்றேன்.

இது குடும்பக் கதையோ எமோஷனல் கதையோ கிடையாது. பீரியட் படம். பெரிய பெரிய செட் எல்லாம் போடணும். எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்கன்னு கேட்டார் ரவிக்குமார்.

ரவிக்குமார் அந்த நேரம் சுதீப்புக்கு படம் பண்ண அட்வான்ஸ் வாங்கியிருந்தார். அவரிடம் சம்மதம் வாங்க வேண்டியிருந்தது. அவர்கிட்ட சொன்னப்போ, ‘ரஜினி இத்தனை வருஷம் கழிச்சி படம் பண்றதே பெரிய விஷயம்.. நீங்க அந்தப் படத்தை முடிச்சிட்டு வாங்க’ன்னு சொல்லி அனுமதி தந்தார். அவருக்கு நன்றி.

உடனே தயாரிப்பாளர் யார்னு யோசிச்சேன். ராக்லைன் வெங்கடேஷ் பற்றி எல்லோருக்கும் தெரியும். கர்நாடகாவில் அவர் ஆபத்பாந்தவன் மாதிரி. என்ன பிரச்சினை என்றாலும் எதையும் எதிர்ப்பார்க்காமல் போய் நிற்பார். ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சமயத்தில் அவர் எவ்வளவு பெரிய உதவிகள் செய்தார்னு எனக்குத் தெரியும்.

எனக்கும் தனிப்பட்ட முறைய பலமுறை உதவியிருக்கார். நான் எப்போதுமே செஞ்ச உதவிகளை மறக்க மாட்டேன். அது எவ்ளோ சின்ன உதவியாக இருந்தாலும் சரி. வெங்கடேஷை உடனை கூப்பிட்டு, இந்தப் படத்துக்கு நீங்கதான் புரொட்யூசர். ஆறு மாசம்தான் டைம் என்றேன். உடனே, நீங்க தேதி மட்டும் கொடுங்க.. நான் பண்றேன், என்றார்.

Lingaa-audio

அப்போது ரவிக்குமார், ‘சார் எனக்கு நீங்க ஒரு கண்டிஷன் போட்டீங்க. நானும் ஒரு கண்டிஷன் வச்சிருக்கேன். இசைக்கு ஏ ஆர் ரஹ்மான், வைரமுத்து பாடல்கள், ரத்னவேலு கேமிரா, சாபு சிரில் செட்’ என்றார். இவங்க எல்லாருமே பெரிய பெரிய ஆளுங்க.. எப்படி வேலை வாங்கப் போறார்னு நினைச்சு, அதெல்லாம் உங்க டிபார்ட்மெண்ட், நான் தலையிட மாட்டேன்னு சொல்லிட்டேன்.

அப்போது ஆரம்பித்தது இந்தப் படம். 10.30 மணிக்குத்தான் முதல் ஷாட். மதியம் 3.30 மணி வரை ரெஸ்ட். என்னைச் சுத்தி 30 பேர் எப்போதும் என் உதவிக்காக இருந்தாங்க. என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டார்கள். இவர்கள் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியல.

இந்தப் படத்துக்காக கர்நாடகாவில் பர்மிஷன் பெற முடியாத பல இடங்களில் ரொம்ப கஷ்டப்பட்டு, அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுள்ளனர். அதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்னா ரொம்ப உதவினார். இந்தப் படத்துக்காக ஷூட்டிங் பண்ண லிங்கனமுக்கி அணைப் பகுதியில் 5 பேர் சேர்ந்து போகக் கூட அனுமதியில்ல. ஆனா, கர்நாடகாவுல பொறந்து, தமிழக மக்களோட இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிக்கு நாம அனுமதி கொடுக்கலேன்னா, வேற யார் அனுமதி தருவாங்க-ன்னு கேட்டு அனுமதி வாங்கினாங்க. செல்போன் கூட நுழைய முடியாத பல இடங்கள்ல இந்தப் படம் ஷூட் பண்ணாங்க.

இவ்வளவு பெரிய பட்ஜெட், டெக்னீஷியன்களை வைத்து இவ்ளோ பிரமாண்ட படத்தைப் பண்ண நிச்சயம் கேஎஸ் ரவிக்குமார் ஒருவரால் மட்டும்தான் முடியும். இவ்ளோ பெரிய படத்தை குறைந்த காலத்தில் எடுக்க முடியும்னு இந்த இன்டஸ்ட்ரிக்கு நிரூபிக்கணும்னு நினைச்சோம். எடுத்துட்டோம். படம் பார்த்தீங்கண்ணா எல்லாருக்கும் புரியும்.

பெரிய பெரிய சமையல்காரங்க இந்த சமையலைச் செஞ்சிருக்கோம். சாப்பிட்டுப் பார்த்தோம். நல்லாருக்கு. அதை உங்களுக்கும் தர்றோம். நிச்சயம் பிடிக்கும்னு நம்புறோம்.

டிசம்பர் 12-ம் தேதி ரிலீஸ் பண்றதுக்கான எல்லா வேலையும் நடந்துக்கிட்டிருக்கு,” என்றார் சூப்பர் ஸ்டார்.

என்வழி ஸ்பெஷல்
One thought on “ஆறே மாதங்களில் இத்தனை பிரமாண்டமாக லிங்கா உருவானது எப்படி? – ரஜினி சொன்ன தகவல்கள்

  1. kumaran

    தலைவர் படம் வெற்றியடைய ஆண்டவனை பிரார்த்திகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *