BREAKING NEWS
Search

பத்து வருஷம் எடுக்க வேண்டிய படத்தை இரண்டே ஆண்டுகளில் முடித்திருக்கிறார் சவுந்தர்யா! – ரஜினி பாராட்டு

பத்து வருஷம் எடுக்க வேண்டிய படத்தை இரண்டே ஆண்டுகளில் முடித்திருக்கிறார் சவுந்தர்யா! – ரஜினி பாராட்டு

rajini-vik-1

ஹைதராபாத்: ஹாலிவுட்டில் 10 ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டிய ஒரு படத்தை, இந்தியாவில் வைத்து இரண்டே ஆண்டுகளில் எடுத்துள்ள சவுந்தர்யாவைப் பாராட்டுகிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கோச்சடையான் படத்தின் தெலுங்குப் பதிப்பான விக்ரமசிம்ஹா படத்தின் அறிமுக விழா நேற்று மாலை ஹைதராபாதில் நடந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் சவுந்தர்யா, லதா ரஜினிகாந்த், தெலுங்கு திரையுலக ஜாம்பவான்கள் டி ராமாநாயுடு, இயக்குநர் – தயாரிப்பாளர் தாசரி நாராயணராவ், இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலி, நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபு, டி சுப்பராமி ரெட்டி, ரமேஷ் பிரசாத், லட்சுமி மஞ்சு, ஆதி உள்பட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் விக்ரமசிம்ஹா ட்ரைலர் திரையிடப்பட்டது. பின்னர் மேக்கிங் ஆப் விக்ரமசிம்ஹாவும் திரையிடப்பட்டது. பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது:

என்னுடைய குருவுக்கு இணையான தாசரி நாராயணராவ், ராமா நாயுடு சார், ரமேஷ் பிரசாத் சார், என் நண்பன் மோகன் பாபு, மற்றொரு நண்பன் சுப்பராமி ரெட்டி, முரளி, ராஜமவுலி, ஈராஸ் தயாரிப்பாளர்கள் அனைவருமே, இந்தப் படத்தை எடுப்பது எத்தனை கஷ்டமான விஷயம் என்பதை விளக்கினார்கள்.

எல்லாம் கடவுள் செயல்

உண்மையில் இந்தப் படத்தை எடுக்க இவ்வளவு காலம் ஆகும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஏன்னா நான் வெறும் நடிகன், தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.

என்னுடைய மற்ற படங்களோடு ஒப்பிடுகையில் இந்தப் படம் ரொம்பவே வித்தியாசமானது. நான் நடித்த ரோபோ விஞ்ஞானப் படம், சிவாஜி அரசியல் படம், சந்திரமுகி ஒரு திகில் படம். பாபா கடவுள் பத்திய படம். கடவுள் பத்தின படம் பாபா ஓடல… ஆனா பேய்ப் படம் சந்திரமுகி ஓடி ஆச்சர்யப்பட வச்சது.

ஸோ.. நான் ஒரு நடிகன்தான்… எழுத்தாளன் கூட இல்லை.

rajini-hyd4

கமல் ஹாஸன் எவ்ளோ பெரிய நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவருக்கு இந்த தொழில்நுட்பத்துல பெரிய ஈடுபாடு உண்டு. காரணம் அவர் இந்த இன்ட்ஸ்ட்ரிக்குள்ள நுழைஞ்சதே ஒரு இயக்குநராக வரவேண்டுமென்றுதான். அவர்தான் இந்த மாதிரி தொழில்நுட்ப ரீதியிலான படங்களில் நடித்திருக்க வேண்டும். ஆனா அதிலெல்லாம் நான் நடிச்சிக்கிட்டிருக்கேன். அதான் கடவுளோட மேஜிக்.

மனுசங்க நாம என்னென்னமோ திட்டம் போடறோம்.. ஆனா கடவுள் நடத்துறது வேற ஒண்ணா இருக்கு. நாம நினைக்கிற எல்லாமும் நூறு சதவீதம் நடக்கிறதில்ல. நினைச்சதுல ஏதாவது ஒண்ணு நடந்திட்டா சந்தோஷப்படறோம். நினைக்கிறது எல்லாமே நடந்துட்டா, நமக்கு அதில் சந்தோஷம் வர்றதில்லை…

கோச்சடையான் உருவான பின்னணி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராணான்னு ஒரு படம் ஆரம்பிச்சேன். நம்ம ராஜமவுலியோடு பாஹுபலி மாதிரி ஒரு படம்… அந்த அளவுக்கு பெரிசா சொல்ல முடியாது. அதுமாதிரி படம்… அப்போ என் உடம்பு சரியில்லாம போச்சு. மத்ததெல்லாம் உங்களுக்கே தெரியும். நான் உடம்பு சரியாகி வந்த பிறகு, ராணாவை ட்ராப் பண்ணிடலாமா.. வேணாமான்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன். காரணம், டாக்டர்ஸ் என்னை 2 வருஷத்துக்கு சினிமாவில் நடிக்கவே கூடாதுன்னு சொல்லிட்டாங்க.

அப்போதான் இந்த கோச்சடையான் கதை, ராணாவுக்கு முந்திய பாகம், எனக்குச் சொன்னாங்க. கதை நல்லாருக்கு சரி, இதை எப்படி எடுக்கப் போறீங்கன்னு கேட்டப்போதான், சவுந்தர்யா இந்த புது டெக்னாலஜி பத்தி சொன்னாங்க. சுல்தான் தி வாரியர் எடுத்தப்போ மோஷன் கேப்சர் டெக்னாலஜி இவ்ளோ அட்வான்சா இல்ல. ஆனா இப்போ அதைப் பயன்படுத்து கோச்சடையான் பண்ணலாம்னாங்க. எனக்கு டவுட்டுதான். ஏன்னா ஹாலிவுட்ல இந்த மாதிரி படத்துக்கு 10 வருஷம், பல நூறு கோடி ரூபா பணம் தேவை.

thalaivar-hyd-1

ஆனா சரியா ப்ளான் பண்ணா சீக்கிரம் முடிச்சிடலாம்னாங்க. கடவுள் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடிக்க சம்மதிச்சேன். சவுந்தர்யாவும் அவங்க டீமும் இந்தப் படத்தை 2 ஆண்டுகளில் திட்டமிட்ட பட்ஜெட்டில் முடிச்சிருக்காங்க.

மனைவிக்கு மரியாதை

இந்தப் படம் மூலம் நம்ம இன்டஸ்ட்ரிக்கு என் மகள் சவுந்தர்யா ஒரு புது தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தறாங்க என்பதில் பெருமை, மகிழ்ச்சி. என் மகள் ரொம்ப கடினமா இந்தப் படத்துக்கு உழைச்சிருக்கா, என் மனைவி அவளுக்கு பக்கபலமாக நின்னாங்க. இந்தப் படத்துல ஒரு பாடலும் பாடியிருக்காங்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு. நானும் கூட ஒரு பாடலில் குரல் கொடுத்திருக்கேன்.

டெபனிட்டா, இந்தப் படத்தோட வெற்றி விழாவில் என் மனைவியை கவுரவப்படுத்தணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனா என் நண்பன், சகோதரன் மோகன் பாபு அதை இப்போதே செய்து என்னை நெகிழ வைத்துவிட்டார். அவருக்கு என் நன்றி.

முதல் பத்து நிமிசம் எனக்குப் பிடிக்கல..

ரொம்ப கஷ்டப்பட்டு பல வகை உணவுகளைச் சமைக்கிறோம்.. ஆனா டேஸ்ட் நல்லால்லன்னா.. அவ்வளவும் வேஸ்ட்தான். அந்த மாதிரி, நல்லாருந்தாத்தான் நாம பட்ட கஷ்டத்துக்கு ஒரு மதிப்பு கிடைக்கும். பொதுவா நான் படம் பார்க்கும்போது, ஒரு ரசிகனாத்தான் பார்ப்பேன். நடிகன் என்பதை மறந்துவிடுவேன்.

இந்தப் படம் சென்சாரான பிறகு, அதோட 2டி வர்ஷனைப் பார்த்தேன். 3 டி பார்க்கல. முதல் பத்து நிமிடம் பார்த்த பிறகு நான் ரொம்ப அப்செட் ஆகிட்டேன்.

ஏன்னா.. இந்த மோஷன்கேப்சர்ல இப்ப உயிரோட இங்க இல்லாத என்டி ராமாராவ் போன்றவர்களை வைத்து எடுத்தால் அது சரியா இருக்கும். உயிரோடு இருக்கும் என்னை வைத்து இப்படி ஒரு படம் எடுத்திருப்பதைப் பார்த்தது என்னமோ போல்தான் இருந்தது. நேரடி ஆக்ஷன் படம் பார்க்குறதுக்கும், அனிமேஷன் படம் பார்க்கறதுக்கும் வித்தியாசம் இருக்கில்லையா…

curtainraiser-vikramasimha4 copy

ஆனா 15 நிமிடங்களுக்குப் பிறகு அந்தக் கதையோட ஒன்றிப் போய், அது அனிமேஷன் படம் என்பதையே மறந்துட்டேன். இதை ஏன் சொல்றேன்னா.. இந்தப் படத்தை நீங்கள் பாத்தாலும் முதல் 10 நிமிஷம், எனக்குத் தோன்றியதைப் போலவே உங்களுக்கும் தோன்றும்.. ஆனால் பின்னர் படத்தை அனுபவிப்பீர்கள்.

வால்ட் டிஸ்னியின் இதே போன்றதொரு அனிமேஷன் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் பணியாற்ற ஒப்புக் கொண்டபோது, அந்தப் படம் முடிய 6 அல்லது 7 ஆண்டுகள் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

மிகப் பெரிய வெற்றி

அப்போது ரஹ்மான் சொன்னார், இந்தப் படத்தை நல்ல இசை, நடனத்தோடு தரலாம் என்று. கோச்சடையான் ஒரு வீரன். மிகச் சிறந்த டான்சர். தத்துவவாதி. இந்த மூன்றையும் இணைத்துத் தந்தால் இந்தப் படம் ஒரு உணர்வுப்பூர்வமான தத்துவப் படமாக அமையும் என்ற நம்பிக்கை இருந்தது. அது இப்போது நிஜமாகியிருக்கிறது. படத்தின் கதை அத்தனை வலுவானது. கடவுள் ஆசியுடனும் உங்கள் ஆதரவுடனும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்தப் படம் உருவாக டாக்டர் முரளி மனோகரின் பங்கு மிகப் பெரியது. பல கோடி ரூபாயை எளிதாக சம்பாதிக்கும் வழி தெரிந்தும், அவர் இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. அவருக்கு ஹாலிவுட்டில் ஏகப்பட்ட நண்பர்கள் உண்டு. அவருடன் இணைந்து ஏற்கெனவே நான் ப்ளட்ஸ்டோன் என்ற ஹாலிவுட் படம் செய்திருக்கிறேன்.

rajini-hyd1

விக்ரமசிம்ஹா மாதிரி படம் எடுப்பது எத்தனை சிரமம் என்பது ராஜமவுலி ஏற்கெனவே சொல்லிவிட்டார். இந்தப் படத்தின் வெற்றியை பெரிய விழாவாக எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஒவ்வொரு முறையும் என் நடிப்பு அல்லது ஸ்டைல் என எதுவாக இருந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தி வந்துள்ளனர். இந்தப் படம் மிகவும் வித்தியாசமானது. இந்தப் படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

என்வழி ஸ்பெஷல்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *