BREAKING NEWS
Search

ஹிக்ஸ் போஸான்: கடவுளைக் (கிட்டத்தட்ட) கண்ட விஞ்ஞானிகள்!

ஹிக்ஸ் போஸான்: கடவுளைக் (கிட்டத்தட்ட) கண்ட விஞ்ஞானிகள்!

லகம் எனும் இந்த பூமி, சூரியன், ஆகாய வெளி, அதில் தெரியும் நட்சத்திரங்கள், நட்சத்திரங்களுக்கும் அப்பால் கோடி கோடி மர்மங்களை உள்ளடக்கி இயங்கும் அண்ட சராசரங்களை எல்லாம் உருவாக்கியது யார்? எப்போது? எப்படி?

இன்று நேற்றல்ல… பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் விடைதேடிக் கொண்டிருக்கும் கேள்வி இது. ஆணித்தரமான பதில் கிடைக்காத நேரத்தில், நம்மை மீறிய சக்தி… என்ற பொதுவான சமாதானத்துடன் மனிதன் வாழ்க்கையைக் கடந்து போனான்.

ஆனால் ஒரு தலைமுறை அப்படி சமாதானமடைந்தாலும் அடுத்த தலைமுறை சும்மா இருப்பதில்லையே…

இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பிரபஞ்ச உருவாக்கம் குறித்த ஆய்வுகள் தொடங்கிவிட்டன.

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy (பால்வெளி மண்டலம்).

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்ததுதான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது.

உதாரணத்துக்கு சொன்னால், ஒரு சிறிய குண்டுமணி அளவில் இருந்த யுனிவர்ஸ், பெருவெடிப்பின் போது வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது. விரிவடையும்போது அதற்குள் உருவானவைதான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன என்பதுதான் உண்மை. இதற்கெல்லாம் மூலம் அணுக்கள்.


இந்த மெகா பிரபஞ்சம் உருவானது, பிக் பேங் எனும் பெரு வெடிப்பிலிருந்துதான். அந்த வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒளியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்கள் வெற்றாக இருந்தன. அவற்றுக்கு நிறை இல்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட துகளோடு இணைந்ததும், அந்த அணுக்கள் நிறையைப் பெற்று இந்த பேரண்டம் உருவாகக் காரணமாக அமைந்தன என்கிறார்கள்.

அந்த துகள்… மகா சக்தி மிக்க, கிட்டத்தட்ட கடவுளான அந்த துகள் எது? அதுதான் ஹிக்ஸ் போஸான்!

அந்த ஹிக்ஸ் போஸான் எங்கே இருக்கிறது, எப்படி அதை வெளிக்கொணர்வது என்பதுதான் இன்றைய ஆராய்ச்சி.

அது என்ன ஹிக்ஸ் போஸான்?

இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவர் பீட்டர் ஹிக்ஸ். அந்தப் பெயரில் பாதியை ஹிக்ஸ் என்றும், இந்தத் துகள்களில் இரண்டு வகை இருக்கிறது என பல ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டின் இயற்பியல் அறிஞர் சத்யேந்திர நாத் போஸும், விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் தெரிவித்திருந்தனர். அதனால் அவர்கள் பெயரை இணைத்து ஹிக்ஸ் போஸான் என இந்தக் ‘கடவுளுக்கு’ நாமகரணம் சூட்டிவிட்டனர்!

இந்த ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் 50 ஆண்டுகளுக்கும் மேல் நடக்கின்றன. அமெரிக்காவில்தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்கா நிறுத்திவிட்டது.

இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மெகா சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.

இதற்காக 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த பெருவெடிப்பின், ஒரு மாதிரியை பூமிக்கடியில் நிகழ்த்திப் பார்க்க முடிவு செய்தனர் விஞ்ஞானிகள்.

ஜெனீவா அருகே 500 அடி ஆழத்தில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் 27 கிமீ வட்ட சுரங்கத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.

இந்த 27 கிமீ வட்டப் பாதைக்குள் (Large Hadron Collider-LHC) புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் ஒளியின் வேகத்தில் மோதவிட்டுப் பார்த்தபோது, அவற்றிலிருந்து குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், போட்டான், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என 11 பொருள்கள் சிதறின.

இவற்றுடன் புரோட்டான்களுக்குள் இருந்த ஹிக்ஸ் போஸானையொத்த துகள் ஒன்றும் 12 வதாக வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்தத் துகளின் எடை 125.3+ கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தத் துகள் 99.999% ஹிக்ஸ் போஸான்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் இன்று அறிவித்துள்ளனர்.

செர்ன் தலைமை இயக்குனர் ரோல்ப் ஹியூயர் இது பற்றி கூறுகையில், “ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் பாசன் துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வுகளுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிரபஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும்” என்றார்.

இதுவரை நடந்த ஆராய்ச்சியில் அணுவில் இருக்கும் அத்தனை துகள்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது இந்த ஹிக்ஸ் போஸான்தான். அது நேற்றைய மினி பெருவெடிப்பில் வெளிவந்திருக்கிறது. ஆனாலும் அது ஹிக்ஸ் போஸான்தானா என்பதை இன்றும் கொஞ்சமே கொஞ்சம் உறுதி செய்ய வேண்டியுள்ளது!

மகா ஆபத்தான சோதனை?

13.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த பெருவெடிப்பின் போதுதான் இந்த உலகமும் கேலக்ஸிகளும் உருவானதாக முன்பு குறிப்பிட்டிருந்தோம் அல்லவா… அப்போது கூடவே உருவானவைதான் ப்ளாக் ஹோல்கள்.

இந்த பிளாக் ஹோல்கள் ஒளி-ஒலியை மட்டுமல்ல, சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.

பெருவெடிப்பு நிகழ்ந்தபோது எப்படி ப்ளாக் ஹோல்கள் உருவாகினவோ, அதே போல, இந்த மினிபெருவெடிப்பு சோதனையின்போதும் உருவாக வாய்ப்புள்ளது. எனவே பல லட்சம் கோடி செலவில் நடக்கும் இந்த சோதனை ஆபத்தானது… இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என அச்சம் கிளப்பியிருக்கிறார்கள் இந்த சோதனைக்கு எதிரானவர்கள்.

ஆனால் அப்படியெல்லாம் நடக்காது. அதற்கு தகுந்த முன்னேற்பாடுகளுடன்தான் இருக்கிறோம் என CERN விஞ்ஞானிகள் சத்தியம் அடிக்கின்றனர்.

ஏதாவது பிரயோஜனம் உண்டா?

சரி, இது ஹிக்ஸ் போஸானாகவே இருக்கட்டும்… இதைக் கண்டுபிடித்ததில் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது என்ற நியாயமான கேள்வி இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் எழுந்திருக்கும்..

இந்த பேரண்டம் உருவாகக் காரணமே ஹிக்ஸ் போஸான்தான்.  இப்போது நம் கண்களுக்குத் தெரிந்த இயற்கை சக்தியெல்லாம் 4 சதவீதம் மட்டும்தானாம். இன்னும் தெரியாத, அல்லது பல ஆயுள்களை விழுங்கும் அளவுக்கு மர்மங்களை உள்ளடக்கிய பேரண்டத்துக்கும் பெரிதான பேரண்டங்கள் 96 சதவீதம் உள்ளனவாம். இந்த 96 சதவீதத்தில் இயற்கை என்னென்ன அதிசயங்களை, எத்தனை கோடி பூமிகளை, சூரியன்களை ஒளித்து வைத்திருக்கிறதோ என்ற பேரதியத்தை தெரிந்துகொள்ள இந்த கடவுளின் துகளான ஹிக்ஸ் போஸான்தான் முக்கிய துருப்புச் சீட்டு என்கிறார்கள் CERN விஞ்ஞானிகள்… அதாவது இந்த பேரதிசய பிரபஞ்சத்தை உருவாக்கிய துகளைக் கண்டுபிடித்துவிட்டால், தெரியாத 96 சதவீத இயற்கை சக்தியை தெரிந்து கொள்ள முடியும் அல்லவா…

ஆஹா… இந்த அதிசயங்களை நம் காலத்தில் பார்த்துவிடுவோமா!!

-எஸ்எஸ்
என்வழி ஸ்பெஷல்
9 thoughts on “ஹிக்ஸ் போஸான்: கடவுளைக் (கிட்டத்தட்ட) கண்ட விஞ்ஞானிகள்!

 1. மிஸ்டர் பாவலன்

  //அதாவது இந்த பேரதிசய பிரபஞ்சத்தை உருவாக்கிய துகளைக் கண்டுபிடித்துவிட்டால், தெரியாத 96 சதவீத இயற்கை சக்தியை தெரிந்து கொள்ள முடியும் அல்லவா…//

  -== தின கப்சா ==-
  ராமராஜனை ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்டாக களமிறக்க
  நல்ல கதை உருவாக்கி இருக்கிறது. கதாநாயகி வேடத்திற்கு
  Angelina Jolie பொருத்தமாக இருப்பார். ‘ஹிக்ஸ் போஸான்’
  (Higgs Boson) என்று பெயர் வைத்தால் தமிழில் வரிவிலக்கு
  கிடைக்காது என்பதால் ‘அதிரடி மன்னன்’ என்ற பெயர்
  பரிசீலிக்கப் பட்டு வருகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு
  SUV-ல் கதாநாயகியை வில்லன் கடத்திச் செல்ல மாட்டுவண்டியில்
  ஹீரோ மடக்கிப் பிடிக்கும் காட்சி பரபரப்பாகப் பேசப்படும்
  என கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.
  -== End====

 2. K. Jayadev Das

  இந்த செய்தியை வந்த சூட்டில் இங்கே கொடுத்த உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். இந்த மாதிரி தகவல்களை பதிவாக வெளியிடும் முன்னர் இந்த துறையில் விஷயம் தெரிந்தவர்களிடம் காண்பித்த பின்னர் வெளியிடுவது சிறந்ததாக இருக்கும். மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் அப்போதுதான் முழுமையடையும். உதாரணத்திற்கு,

  \\இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன என்பதுதான் உண்மை. \\

  என்று குறிபிட்டுள்ளீர்கள், உண்மையில் புதிதாக எந்த Galaxy -யும் உருவாக வில்லை. பேரண்டம் மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே போகிறது, Galaxy -களுக்கிடையேயான தூரமும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது உண்மை.

  இது போல ஆங்காங்கே சில டிங்கரிங் வேலை தேவைப் படுகிறது. குறை நிறைகள் இருப்பினும், இவ்வாறு ஒரு பதிவு போட்டதற்கு உங்களுக்கு ஒரு சபாஷ்.

 3. Nirmal

  பார்த்து என்ன செய்ய. இந்த உலகம் எதிர் கொண்ட பொருளாதார பின்னடைவுக்கு பெரும் காரணமே இந்த ஆராட்சி தான், இப்போது தான் பொருளாதார முன்னேறி கொண்டு வருகிறது. மிண்டும் இதன் தாக்கம் எங்கே போய் முடிய போகிறதோ. கடவுளுக்கு தான் வெளிச்சம்.

  இப்போ உள்ள நிலையில் இது ரொம்ப முக்கியம்.

 4. boopathiraj ex.army

  நல்ல அறிவியல் கட்டுரை தொடரட்டும் உங்கள் பணி
  பூபதிராஜ் ex .army
  காரைக்குடி

 5. குமரன்

  83 வயதான பீட்டர் ஹிக்ஸ் எடின்பரா பல்கலைக் கழகத்தில் ஒய்வு பெற்ற பேராசிரியர். இப்போது அப்பல்கலைக் கழகத்தில் Emeritus Professor . இவர் ஒரு நாத்திகர். தமது கண்டுபிடிப்புக்கு “கடவுளின் துகள்” என்று பெயரிட்டது இவருக்குப் பிடிக்கவில்லை என்பது சுவாரசியமான செய்தி.

  இவருக்கு இன்னமும் நோபல் பரிசு வழங்கப் படவில்லை.

  ஆனால் 2004 ஆம் ஆண்டு இவருக்கு அறிவிக்கப்பட்ட Wolf Prize in Physics ஐ வாங்க மறுத்து விட்டார். காரணம், இவர் இஸ்ரேலின் பாலஸ்தீன நடவடிக்கைகளை எதிர்க்கிறார். அந்த விருது ஜெருசலேமில் வழங்கப் பட்டது என்பதால் அதை இவர் ஏற்கவில்லை.

 6. JB

  //ஆனால் அப்படியெல்லாம் நடக்காது. அதற்கு தகுந்த முன்னேற்பாடுகளுடன்தான் இருக்கிறோம் என CERN விஞ்ஞானிகள் சத்தியம் அடிக்கின்றனர்.//

  எனக்கு இந்த ஒரு விஷயம் மட்டும்தான் பிரச்சினை. இது மதத்தாலோ விஞ்ஞானத்தின் மேல் நம்பிக்கை இல்லாததாலோ அல்ல. ஹிக்ஸ் போஸான் சக்தி எவ்வளவு என்று தெரியாத போது, அதை கட்டுப்படுத்தும் சக்தி எவ்வளவு என்று இவர்களுக்கு தெரிய முடியாது. ஒரு குறிப்பிட்ட assumption பேரில்தான் இவர்கள் முன்னேற்பாடு செய்ய முடியும்.

  ஒரு galaxyஐ உருவாக்கும் சக்தி உள்ள ஒன்றை, இவர்கள் எப்படி கட்டுப்பாடு செய்ய முடியும்? இவர்களின் சக்தியை மீறி அது போனால், அது இவர்களை மட்டும் அன்றி உலகத்தையும் பக்கத்தில் உள்ள மற்ற கோள்களையும் சேர்த்து அழித்து விடும். அப்படிப்பட்ட ஒரு சக்தியை அறியாத பிள்ளைகள் போல் வைத்து விளையாடுவது சரியா? விஞ்ஞானம் வளர்ந்து நமக்கு இன்னும் நல்ல புரிதல் வேறு வகையில் கிடைத்த பிறகு இந்த பரிசோதனைகள் செய்யலாமே?

  ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “Curiosity killed the cat” என்று. அதாவது ஆர்வக்கோளாரில் அடுப்பின் உள்ளே ஏறிக்கொண்ட பூனை, வெளியே வர முடியாமல் மடிந்ததாம். அதுதான் எனக்கு இந்த விதமான விஞ்ஞானத்தில் தோன்றுகிறது.

  உதாரணத்துக்கு, அமெரிக்கா ஜப்பானுடன் போர் தொடுக்கையில், அவர்களுக்கு அணு சக்தி எவ்வளவு பலமானது என்றோ அதன் பின்விளைவுகள் என்ன என்றோ தெரியாது. அதை பாவித்த பின்புதான் அதன் அழிவு சக்தி எவ்வளவு என்றும் அதனால் பிற்காலத்தில் ஏற்படும் பாதிப்பு என்ன என்றும் தெரிந்து கொள்ள முடிந்தது. அதில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் பல. இந்த பரிசோதனையால் ஏற்படக்கூடிய அழிவில் இருந்து யாரும் தப்பி கொள்ள முடியாது. சில பேரின் ஆர்வக்கோளாறால் எல்லோரும் மடிவது நியாயமா?

  சிந்திக்கவும்.

 7. மு. செந்தில் குமார்

  ஆஹா… இந்த அதிசயங்களை நம் காலத்தில் பார்த்துவிடுவோமா!!

  அதே ஏக்கம் தான் வருகிறது.

 8. Raj

  ஆஹா… இந்த அதிசயங்களை நம் காலத்தில் பார்த்துவிடுவோமா!!//

  அது ரொம்ப கஷ்டம். ஆனா பார்முலா ஒன்னு தான். அத கண்டுபிடிச்சா ஆண், பெண் விசயங்களையும் அறிந்து கொள்ள முடியும். நம் உடலுக்குள் நடக்கும் மர்மங்களையும் அறிந்துகொள்ள முடியும். குழந்தை பிறப்பதன் காரணம் புரியும். சொல்ல போனா எல்லோருமே இந்த பிரபஞ்சத்தில் ரோபோ மாதிரி தான், சிலதுக்கு பெர்மிசியன் இருக்கு, பலத்துக்கு பெர்மிசியன் இல்ல. இத வச்சி தான் சில போலி சாமியார்க நோகாம பணம் சம்பதிகறாங்க, சில சோம்பேறிகள் சாமியார் பேருல சுத்துறாங்க. ஆனா இண்டரெஸ்ட்டிங்கான விஷயம் இது.

 9. r.v.saravanan

  இந்த அதிசயங்களை நம் காலத்தில் பார்த்துவிடுவோமா

  பார்க்கும் ஆசை வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *