BREAKING NEWS
Search

இவர்தான் நீதிபதி விஆர் கிருஷ்ணய்யர்!

இவர்தான் நீதிபதி விஆர் கிருஷ்ணய்யர்!

ARV_KRISHNA_IYER_22983f

நேற்று தன் 100வது வயதில் கொச்சியில் காலமாகிவிட்டார் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி விஆர் கிருஷ்ணய்யர்.

அவர் யார் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள… கீழ்வரும் அவரது பேட்டியைப் படியுங்கள். 98 வயதில் அவர் விகடனுக்கு அளித்த பேட்டி இது:

எப்படி இருக்கிறீர்கள்.. நீங்கள் நினைத்திருந்த முதுமை வாய்த்திருக்கிறதா?

“வயதாகி விட்டது.முதுமையின் காரணமாக பார்வை குன்றிப் போய் இருக்கிறது.நடப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும் உதவியாளர்களின் கைகளைப் பிடித்து கொண்டு தினமும் அரை மணிநேரம் நடக்கிறேன். கேட்கும் திறனை வெகுவாக இழந்து விட்டேன். முன்பு மாதிரி எழுத முடியவில்லை. நினைவுகளை மீட்டெடுப்பதில் பெரும் யுத்தமே நடக்கிறது.

1980-ல் ஓய்வு பெற்ற பிறகு முழுவதுமாக பொது சேவையில் ஈடுபட்டேன்.ஓர் எளிய‌வனின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்பதற்காக தான் இப்போது கூட நிறைய அமைப்புகளுக்கு அமைப்புகளுக்கு தலைவராக இருக்கிறேன்.உடல் தளர்ந்து விட்டதால் முற்றிலுமாக பயணம் செய்வதை நிறுத்தி கொண்டேன்.

ஏதாவது முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு மாத்திரம் இங்கிருந்தவாறே ‘வீடியோ கான்ஃபரன்சிங்’மூலம் உரை நிகழ்த்துகிறேன்.இன்றைக்கு காலையில் கூட ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் லா’ கல்லூரிக்காக ஒரு கட்டுரை எழுதி கொடுத்தேன்.

எனக்கு வயசு 98. ஆனால் நூறு நூல்களை எழுதி விட்டேன். நான் எதிர்பார்த்திருந்த முதுமை எனக்கு வாய்க்கவில்லை.. அந்த வகையில் நான் துரதிஷ்டசாலி.. ஹா ஹா” என சிரித்து கொண்டே அவருக்கு எதிராக மிக பிரண்டமாக பிரேம் செய்யப்பட்டிருந்த அவரது மனைவியின் புகைப்படத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தார்.

நீங்கள் அமைச்சராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியில் சமீபமாக‌ பகிரங்க கொலை மிரட்டல்களும் அரசியல் கொலைகளும் அரங்கேறி கொண்டிருக்கிறதே. உண்மையில் கம்யூனிஸ்ட்டுகள் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள்?’

தோழர்கள் கெட்டுப் போய் விட்டார்கள். நம்பூதிரி பாட் போன்ற தோழ‌ர்கள் வாழ்ந்த மண்ணிலா இந்த ரத்த கறை படிய வேண்டும்? எளிமையும், தியாகமும், நேர்மையும், நாணயமும் எல்லாம் எங்கே போனது?

கொலை..அடிதடி..ரத்தம்..மிரட்டல்… (குரல் தழுதழுக்கிறது..விழியோரம் கண்ணீர் கசிகிறது) இன்றைய கம்யூனிஸ்ட்டுகளின் நடத்தை மிகவும் மோசமாக இருக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது.மார்க்ஸ் இருந்தால் நொந்து கொள்வார். ஆனாலும் சிலர் அத்திப் பூ மாதிரி ஆங்காங்கே பூத்து கொண்டுதான் இருக்கிறார்கள்!”

இந்தியாவில் கொஞ்சம் நம்பகமான துறை என்றால் நீதித் துறையை தான் சொல்கிறார்கள்.ஆனால் நீதி நேர்மையை நிலைநாட்ட வேண்டிய‌ நீதிபதிகளும் லஞ்சம் வாங்கும் சம்பவங்கள் நடைபெறுகிறதே?

“(சட்டென கோபமாக) நீதிபதிகள் ஒரு போதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. பொதுமக்களின் அபரிதமான நம்பிக்கையும்,சமூக பொறுப்பையும்,அம்பேத்கர் சட்டத்தின் மீது வைத்திருந்த விசுவாசத்தையும் உணர்ந்து நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். பணத்திற்காகவும், பதவிக்காகவும் தன்நிலை கெடுதலை ஒரு போதும் ஏற்று கொள்ளமுடியாது.அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்!”

சாமன்ய மக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டமும் நீதிமன்றமும், இந்தியா குடியரசு ஆகி 62 ஆண்டுகள் ஆன பிறகும் ஏழை எளியோருக்கு இன்னமும் எட்டா கனியாகவே இருக்கிறதே?

“மருத்துவமனையும் கல்வி நிலையத்தையும் பார்த்து பயந்த மக்கள்,இன்றைக்கு கோர்ட்டையும் பார்த்து பயப்படுகிறார்கள். ஒரு சின்ன வழக்கு தொடுப்பதில் ஆரம்பித்து மனு போடுவது, வக்கீல் கட்டணம்,தீர்ப்பு வரும் வரை.. நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.

ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டின் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு சாதாரண மனிதனால் சமாளிக்க முடியாத சுமையாக இருக்கிறது.அதுவும் சுப்ரீம் கோர்ட் இந்தியாவின் 60 சதவீதற்கும் அதிகமான மக்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது.

பொது மக்களுக்கு பயன் தரக் கூடிய நீதித் துறையை அணுகுவதில் ஒரு போதும் பணம் தடையாக இருக்க கூடாது. இது வேதனையான விஷயம். இவை முற்றிலும் மாற்றப்பட வேண்டும்!”

இந்தியாவில் தீர்ப்புகளுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. பேரன் காலத்தில் வழக்கு போட்டால்,அவன் தாத்தா ஆன பிறகும் கூட தீர்ப்பு வராமல் இருக்கிறதே? இதற்காக‌ என்ன செய்யலாம்?

“ஒரு பக்கம் கோர்ட், கேஸ் எல்லாம் காஸ்ட்லியாக இருந்தாலும் மறுபக்கம் இப்படியொரு தேக்கநிலை.. மந்த நிலை! வெகு ஜனம் கோர்ட் பக்கமே வருவதில்லை. இன்னும் சில‌ர் வழக்கு மேல் வழக்கு போட்டு கொண்டே இருப்பது, மனு மேல் மனு போட்டு இழுத்தடித்துக் கொண்டே இருப்பது என திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். சில நேரங்களில் சட்டமும் நீதிபதியின் மெத்தனப் போக்கும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்து விடுகிறது.

இதனால் நீங்கள் சொன்ன மாதிரி தான் தீர்ப்பு வருகிறது. பல நேரங்களில் வழக்கு போட்டவர் இறந்தும் போயிருக்கிறார். நமது அரசியல் கட்டமைப்பு முற்றிலுமாக ஊழலால் ஸ்தம்பித்து கிடக்கிறது. வன்முறை பலுகி பெருகி விட்டது. மோசமான பாலியல் சித்ரவதைகள் நடந்த வண்ணமாகவே இருக்கிறது.

இன்னொரு பக்கம் விவாகரத்து வழக்குகளால் மூர்ச்சை நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை எல்லாம் முறையாக ஆராய்ந்து நீதி துறையில் புதிய முறையில் வழக்கை விசாரிப்பது, கிளை நீதிமன்றங்கள் என பல உருவாக்கப்பட வேண்டும்”

குற்றமே செய்யாத அப்பாவிக்கு பெரிய தண்டனை நிறைவேற்றப்படுகிறது. குற்றங்களை மட்டுமே செய்யும் அரசியல்வாதிகளும்,சமூகத்தில் செல்வாக்கானவர்களும் எப்படியோ தண்டனைகளில் இருந்து தப்பி விடுகிறார்கள்.இத்தகைய‌ முரண்பாடுகளுக்கு என்ன காரணம்?

“இது மிகவும் முக்கியமான கேள்வி. என்னுடைய வாழ்க்கையிலே நிறைய பார்த்திருக்கிறேன். குற்றம் செய்தவன் படடோபமாக நிரபராதி என விடுதலை ஆகி இருக்கிறான். ஒரு பாவமும் செய்யாத நூற்றுக்கு நூறு வீதம் குற்றமற்றவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். என் கண் எதிரே கதறி கதறி அழுதிருக்கிறார்கள். ஆனால் நீதிபதிகள் அவர்களின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை. அவர்களுக்கு இன்றும் நான் ரத்தக் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன். ‘இரு தரப்பையும் நீதிபதிகள் விசாரிக்கிறார்கள் என்பதால் உண்மைதான் வெளியே வந்திருக்கிறது. குற்றவாளி தான் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என ஒரு போதும் எண்ணி விடாதீர்கள்’ என புரட்சியாளர் லெனின் சொன்னதுதான் என்னுடைய பதிலும்!”

Arputham-Krishna Iyer

‘ராஜீவ் கொலையில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கி இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும்,பல நீதிபதிகளுக்கும்,மனித உரிமை ஆர்வலர்களுக்கும் விரிவான கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கும் எப்போது தூக்குத் தண்டனை வழங்கலாம் என மத்திய அரசு துடிப்பது போல தெரிகிறதே?

“எனக்கும் பல முறை கடிதம் எழுதி இருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் இருந்து வந்து என்னை சந்தித்து இருக்கிறார்கள்.நானும் பல நேரங்களில் அவர்களுக்கு வழி காட்டி இருக்கிறேன். சமீபத்தில் கூட ஒரு சின்ன ‘லீடு’கொடுத்தேன்.

ராஜீவ் காந்தியின் மனைவியின் பெயரென்ன? (சோனியா காந்தி என்றதும்) அவரே தெளிவாக‌ சொல்லி விட்டார். ‘அவர்களை தண்டிப்பதால் என்னுடைய கணவர் திரும்பவும் வரமாட்டார் என்று. ராஜீவ் காந்தியை யார் கொன்றார்களோ, அவர்களுக்கு நான் எதிரானவன்.

மூன்று பேரும் நீண்ட காலம் சிறையில் இருந்து விட்டார்கள்.அவர்களை இனியும் தண்டிப்பது சரியல்ல. தூக்கு தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தூக்கு தண்டனையை ஒழிக்காமல் செத்துப் போனால் நான் தோற்றுப் போனவனாக உணர்வேன்!”

முன்னால் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான நீங்களே நீண்ட காலமாக தொடர்ந்து தூக்கு தண்டனைக்காக போராடி வருகிறீர்கள். ஆனாலும் தூக்கு தண்டனையை ஒழிக்க முடியலை. இதற்கு தடையாக இருப்பது என்ன?

“மனிதர்களின் மனங்கள் தான். சமீபத்தில் கூட ஐநா சபையில் தூக்குத் தண்டனை குறித்த விவாதத்தில் இந்தியா தூக்கு தண்டனை வேண்டும் என வாக்களித்திருப்பதாக செய்திகளில் பார்த்தேன். உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தூக்கு தண்டனை எனும் கொடூரத்தை நீக்கி இருக்கும் போது, அஹிம்சையை போதித்த காந்தியின் தேசத்தில் இப்படியொரு அவல நிலை நீடிப்பது வருத்தமாக இருக்கிறது. இது காந்திக்கு இழைக்கப்படும் மாபெரும் அவமானம்!”

2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது’ என ஐநா சபையே ஒப்புக் கொள்கிறது. ஆனால் ‘இனப்படுகொலை’செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு எந்த தண்டனையும் வழங்க முடியவில்லையே?

“இலங்கையில் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் குண்டு மழைக்கு பறிபோனதை நினைத்தால் இன்னும் மனம் பதைக்கிறது. (சட்டென கோபப்பட்டு) பௌத்த சித்தாந்தம் பேசும் தேசத்தில் யுத்தமா….? போரின் துயரம் கொடுமையானது. என் இதயம் ரணமாகிப் போன‌து.

1980களில் நம்முடைய ராணுவம் அங்கே போனதும் தவறு. இப்போது அந்த நாட்டு ராணுவத்துக்கு நம்முடைய நாட்டில் பயிற்சி அளிப்பதும் தவறு. இந்தியா உலக அரங்கில் மனித உரிமை மீறலுக்காக குரல் கொடுக்க வேண்டும்.  குற்றம் யார் செய்திருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும்!”

உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?

“(சற்றும் யோசிக்காமல்) மேற்குலகில் புரட்சிகரமான சிந்தனைகளை மேடையேற்றிய புரட்சி எழுத்தாளர் பெர்னாட்ஷாவையும், இந்தியாவில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரையும் பிடிக்கும்!”

ஆனால் பெரும்பாலான‌ மக்கள் அம்பேத்கரை இன்னமும் தலித் தலைவராகத்தானே பார்க்கிறார்கள். முற்போக்கு கருத்துகளைப் பேசும் அரசியல்வாதிகள் கூட அம்பேத்கரின் மீது தீண்டாமையை கடைப்பிடிக்கிறார்களே?

“அது தவறான பார்வை. வன்மையாகக் கண்டிக்கிறேன்.டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் மிக சிறந்த சிந்தனையாளர். உலகின் பார்வையில் மிகச் சிறந்த சட்ட நூல்களில் ஒன்றாக‌ கொண்டாடப்படும் இந்திய சட்டத்தை பல்வேறு இன்னல்களுக்கும் மறுதலிப்புகளுக்கும் மத்தியில் இயற்றியவர் சட்டமேதை அம்பேத்கர். அவருடைய பெருமைகளையும், சிற‌ப்புகளையும், இந்நாட்டிற்கு ஆற்றிய தொண்டுகளையும் ஜீரணிக்க முடியாதவர்கள், அவரைத் தூற்றுகிறார்கள். அம்பேத்கரை உலகமே கொண்டாடுகிறது.. நாம் கொண்டாட வேண்டாமா?”

ஒரு அரசியல்வாதி என்ற முறையில் சொல்லுங்கள்..உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்? இப்போது இருப்பவர்களில் யாரை நேர்மையானவர் என்று நினைக்கிறீர்கள்?

“ஜவஹர்லால் நேரு.அவருக்கு பிறகு வேறு யாரும் என் கண்ணுக்கு தெரியவில்லை. இதனை சொல்வதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது!”

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உங்களுடைய நிலைப்பாடு ஆச்சர்யமாக இருக்கிறதே?

“கேரளா, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர வேண்டும்.நான் அமைச்சராக இருந்த போதும் இதையே தான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். தமிழகத்திடம் இருந்து எத்தனையோ வளங்களை கேரளா பெறுகிறது. அதனால் நீர் வளத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஏனென்றால் நாம் அனைவரும் சகோதரர்கள்.. நண்பர்கள். கேரள அரசு தமிழகத்திற்கு எந்த இடைஞ்சலும் செய்ய கூடாது. ஓகே.போதும். பேட்டியை முடித்து கொள்ளலாமா?

கடைசியாக ஒரே ஒரு கேள்வி.உண்மையை சொல்லுங்கள்.உங்களுக்கு சாதி பிடிக்குமா?

“பிடிக்காது. நான் சாதி மத இனம் மொழி என எல்லா பேதங்களுக்கும் எதிரானவன்!”

பிறகு ஏன் இன்னமும் உங்கள் பெயருக்கு பின்னால் சாதியைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்?

“ஹா..ஹா.. (சத்தமாகச் சிரித்து விட்டு.. நாக்கை மடித்து கன்னத்தைக் கிள்ளுகிறார்) இந்த கேள்விக்கு எத்தனையோ முறை பதில் சொல்லி விட்டேன். எனக்கு சாதியில் நம்பிக்கை இல்லை. வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்று சொன்னால்தான் எல்லாருக்கும் தெரியும்.

கிருஷ்ணன் என்று சொன்னால் உங்களுக்கு தெரியுமா? என் அப்பா அம்மா வைத்த பெயர் என்பதால், நானும் அப்படியே விட்டு விட்டேன். வெறும் அடையாளமே தவிர, சாதி வெறி இல்லை.!” என சிரித்து கொண்டே கைகளை உயர்த்தி டாட்டா காட்டினார் அந்த ‘பெரியார்!’

-98 வயதில் அந்தப் பெரியவர் அளித்த பேட்டி இது.

குறிப்பு: 1914 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பாலக்காடு, வைத்தியநாதபுரத்தில் பிறந்தவர் கிருஷ்ணய்யர். ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவர், தனது கடின உழைப்பால் 1952 ஆம் ஆண்டு கேரள சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957ஆம் ஆண்டு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

பின்னர் 1968ஆம் ஆண்டு கேளர உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கிருஷ்ணய்யர், 1973ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.

1999 ல் மத்திய அரசு இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

மேலும், கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார்.

-என்வழி
6 thoughts on “இவர்தான் நீதிபதி விஆர் கிருஷ்ணய்யர்!

 1. குமரன்

  உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதியாக கிருஷ்ணய்யர் அளித்த தீர்ப்புக்கள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. மனித உரிமைகள் குறித்த அவரது பார்வை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளும் வகையல் பாடத்திட்டங்களில் கொண்டுவரப்படவேண்டும்.

  நீதிபதிக்கும் நீதிமன்றத்துக்கும் கடிதம் எழுதக் கூடாது, அப்படி எழுதினால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்பது விதி, மரபு.

  ஒரு சாமானியனின் கடிதத்தை உச்சநீதிமன்றத்தில் வழக்காகப் பதிந்து விசாரணை நடத்தி, சாமானியக் குடிமகனின் உரிமையை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நிலைநாட்டிய பெருமைக்குரியவர் கிருஷ்ணய்யர்.

  ஒவ்வொரு சின்ன, பெரிய விஷயத்திலும் அவரது பார்வை நுணுக்கமானது, அவரது கருத்துக்கள் பொதுவுடமைக் கொள்கைகளை ஏற்காதவர்கலால் கூட மறுக்கமுடியாதவையாக இருக்கும்.

  இவருக்குப் பாரதரத்னா அவர் வாழ்நாளிலேயே கொடுக்கப் பட்டிருக்கவேண்டும். 100 வருடம் முழுமையாக வாழ்ந்த போதும் கொடுக்காததற்கு நாம் வெட்கித் தலை குனிய வேண்டும்.

  ஆனால் இந்தப் பாழும் தேசத்தில் கிரிக்கெட் சச்சினுக்கு இருக்கும் பிராபல்யம் மனித உரிமைக்காக வாழ்ந்து வழிகாட்டிய கிருஷ்ணய்யருக்கு இல்லாதது, நமது மக்களின் குறுகிய பார்வையையும், நமது கல்விமுறையின் குறைபாட்டையும் காட்டுகிறது.

  அப்படித்தான் இருந்தாலும், பிராபல்யத்தை வைத்து பாரத ரத்னாவை முடிவு செய்யும் நமது ஆட்சியாளர்களின் மடமையைத்தான் காட்டுகிறது.

 2. chozhan

  வெறும் ரஜினி கோசம் மட்டுமல்லாமல், இது போன்ற பதிவுக்காகத்தான் நான் தினமும் இந்த ப்ளாக்கை பார்க்கிறேன், நன்றி வினோ இந்த பதிவுக்காக.

 3. மிஸ்டர் பாவலன்

  குமரன் அவர்களே.. “குணம் நாடி, குற்றம் நாடி” என்பார் வள்ளுவர்.. அது போல் நீங்கள் குணம் மட்டும் அல்லாது, குற்றமும் நாடினால் நல்லது. பிரபலமான பத்திரிகையாளர், டாக்டர் சுவாமியின் நண்பர், திரு. J . Goprikrishnan (Daily Pioneer ) அவர்கள் எமெர்ஜென்சி போது கிருஷ்ணய்யர் சுப்ரீம் கோர்ட்டில் அதற்கு அங்கீகாரம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். டாக்டர் சுவாமி போன்ற எமெர்ஜென்சி எதிர்ப்பாளர்களின் கடும் முயற்சியால் கிருஷ்ணய்யர் பாரத் ரத்னா பெறாமல் அது தள்ளி போடப் பட்டது.. நன்றி..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 4. குமரன்

  கிருஷ்ணய்யரின் தீர்ப்புக்களில் ஒரே ஒரு தவறான தீர்ப்பு இந்திராவின் தேர்தல் செல்லாது என்று அலஹாபாத் நீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு விதித்த தற்காலிகத் தடை. இத் தடை காரணமாக இந்திரா தொடர்ந்து பிரதமராக இருந்தார். ஒருவேளை தடை உத்தரவு தரப்படா விட்டால், இந்திரா அப்போதும் பிரதமாறாகத் திடந்திருக்கக் கூடும், அல்லது சஞ்சய் காந்தி பிரதமராக நியமிக்கப் பட்டிருக்கலாம். இப்படிப் பட்ட சூழலாலும், எமெஜென்சி காலத்தில் அவருக்கு இருந்த அச்சுறுத்தல் காரணமாகவும் அப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கினார் என்று சொல்வதுண்டு.

  ஆனால், அந்த ஒரே காரணத்துக்காக கிருஷ்ணய்யருக்கு பாரத ரத்னா கொடுக்கப் படக் கூடாது என்று கூறுவது நியாயம் அல்ல.

  சுப்பிரமணியம் சுவாமிக்கும் இப்படிப்பட்ட தர்ம நியாயங்களுக்கும் சில சமயங்களில் சம்பந்தம் இருப்பதில்லை.

  கொடுங்கோலன், பல லட்சம் அப்பாவித் தமிழர்களை வான் வழித் தாக்குதலில் கொன்று குவித்த போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளன் ராஜபக்சேக்குப் பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என்று கூறும் சுப்பிரமணியம் சுவாமி பற்றிப் பேசுவது, அதுவும் கிருஷ்ணய்யர் போன்ற உன்னத மனிதர்கள் அஞ்சலியின் போது பேசுவது, மிகப் பெரும் பாவம் ஆகும்.

 5. மிஸ்டர் பாவலன்

  //ஆனால், அந்த ஒரே காரணத்துக்காக கிருஷ்ணய்யருக்கு பாரத ரத்னா கொடுக்கப் படக் கூடாது என்று கூறுவது நியாயம் அல்ல.//

  சுப்பிரமணியன் சுவாமியின் ஆட்சேபனையில் நியாயம் இருக்கிறது
  எனத் தான் நான் நினைக்கிறேன். கிருஷ்ணய்யர் பாரத ரத்னாவிற்கும்,
  ராஜபட்சேவிற்கும் எந்த முடிச்சும் இல்லை. இலங்கையுடன் இந்தியா
  நட்புறவு கொள்வது நல்லது தான் என சோ துக்ளக்கில் எழுதி வருகிறார்..

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *